Friday, August 12, 2016

ஒப்பீடு

ஒருவர் இன்னொருவருடன் ஒப்பீடு செய்வது உயர்வைத் தராது. இதோ.. ஓஷோ சொல்வதைச் செவிமடுப்போம். துறவி ஒருவர் என்னுடன் உரையாடியபோது, ஒப்பீடு ஒரு வகையில் நல்லது என்றார். மகிழ்ச்சி இல்லாத மனிதர்களைக் கண்டுகொள்வதே மகிழ்ச்சியின் இரகசியம் ஆகும் என்று விளக்கினார். ‘முடமானவனைப் பார்த்து, நடப்பவன் மகிழலாம். விழியற்றவனைப் பார்த்து, பார்க்க முடிந்தவன் மகிழ்ச்சி கொள்ளலாம். ஏழையைப் பார்த்து, ஓரளவு வசதியுள்ளவன் மனநிறைவு அடையலாம்’ என்று சொல்லிக் கொண்டே போனவரை நான் தடுத்து நிறுத்தினேன். ‘ஓர் எளிய உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஒருவன் இன்னொருவனுடன் ஒப்பீடு செய்யத் தொடங்கிவிட்டால் அவனைவிட அதிர்ஷ்டக் குறைவானவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கமாட்டான். அவனைவிட அழகு, அறிவு ஆகியவை அதிகம் உள்ளவனுடனும் வலிமையுள்ளவனுடனும் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து துயரமடைவான். நீங்கள் அவனுக்கு மகிழ்ச்சியின் ரகசியத்தைச் சொல்லவில்லை. துயரத்தின் ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறீர்கள்’ என்றேன். யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒப்பிடுவது போட்டி மனப்பான்மையை உருவாக்கும். நீ ஒரு முறை போட்டி போடத் தொடங்கிவிட்டால், அதற்கு முடிவே இல்லை!!!

ஓஷோவின் இந்த வார்த்தைகள், நம்முன் ஓயாமல் ஒலிக்கட்டும். மனத் திருப்திக்கான வழிமுறைகள் மனிதனுக்குள் இல்லாவிட்டால் மகிழ்ச்சிக்கான வாசற் கதவுகள் ஒருபோதும் திறக்காது. தொடுவானத்துக்கு அப்பால் மாயத் தோற்றமிடும் ரோஜாக்களின் கூட்டத்தைக் கனவில் கண்டு மகிழ்வதைவிட, நம் வீட்டு ஜன்னலுக்கு வெளியில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூவின் ஸ்பரிசத்தில் பரவசம் கொள்வதே வாழ்வின் புத்திசாலித்தனம்.

அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டு அமைதி இழக்காமல், நம் இயல்புகளுடன் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். வாழ்க்கை, நாம் நினைப்பதைவிட குறைவான காலம் கொண்டது.

உன்னிடம் இருப்பதோடு திருப்தி அடைவாயாக. ஒருவன் எல்லாவற்றிலும் முதல்வனாக முடியாது.

No comments:

Post a Comment