Friday, August 12, 2016

பிரச்சனையைத் திருப்பிப் போடு

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அல்லது ஒவ்வொரு நிர்வாகத்திலும் மிகப்பெரிய திருப்புமுனைகள் நடந்திருக்கும். பிரம்புடன் உள்ளே நுழைந்து பார்த்தால் மூச்சு அடைத்துப் போய்விடுவோம் அந்த அளவுக்கு எளிமையாக இருக்கும்.

சில சமயம், பிரச்சனைகளை வேறொரு கோணத்தில் அணுகினாலே போதும்; பிரச்சனை சட்டென்று தீர்ந்துவிடும். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஜான் ஸ்கல்லி. அவர் ‘நீயூட்டன்’ என்ற பெயரில் உள்ளங்கை அளவு கணிப்பொறி ஒன்று (PDA) தயாரித்தார். கீ போர்டில் டைப் செய்யத் தேவையில்லாமல், நம் கையெழுத்தையே அது படித்துப் புரிந்துகொள்ளும் என்று சொல்லப்பட்டது. கடைசியில் நீயூட்டனுக்கு என்ன ஆயிற்று? பரிதாபத் தோல்வி! அந்த இயந்திரத்தால் மனிதக் கையெழுத்தை சரியாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. அன்றைய தொழில்நுட்பம் அவ்வளவுதான். இதை நம்பி 500 மில்லியன் டாலர் செலவழித்து முடிந்தபிறகு இந்தத் தோல்வி.

இதே சமயத்தில் வேறு பல நிறுவனங்களும் ‘கையால் எழுதியதைப் படிக்கும் கணிப்பொறி’ என்று தயாரிக்க முயன்றாலும், அவற்றுக்கும் தோல்விதான். மொத்தத்தில் பில்லியன் டாலர், சாக்கடையில் போய்விட்டது. இப்படித் தோல்வி அடைந்த நிறுவனங்களில் ஒன்றுதான் ‘பாம்கம்ப்யூட்டிங்’ அதன் தலைவர் ஜெஃப் ஹாக்கின்ஸ். அவர் யோசித்துப் பார்த்துவிட்டு, அடிப்படைக் கேள்வியையே தலைகீழாகப் புரட்டிப் போட்டார். ‘இதுவரை எல்லோரும் சிக்கலான மென்பொருள் எழுதி எழுதி, கணிப்பொறி எப்படிப்பட்ட எழுத்தையும் புரிந்துகொள்ளுமாறு முயற்சி செய்தார்கள்’. இதற்கு நேர்மாறாக, கணிப்பொறியால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் நாம் எழுத முயன்றால் என்ன?

பிறகு அவர்கள் கண்டுபிடித்தது ‘க்ராஃபிட்டி’ என்ற ஒரு வகை எழுத்து வடிவம். பேனாவை எடுக்காமல் ஒரே வீச்சில் ஒவ்வொரு எழுத்தையும் எழுதும் முறை அது. இதை நாம் எழுதக் கற்றுக் கொள்வதும் சுலபம்; படிப்பதும் கம்ப்யூட்டருக்கு எளிது. அப்படிப் பிறந்ததுதான் பாம்பைலட்!

பாம் பைலர் 1997ல் விற்பனைக்கு வந்தது. 2000க்குள் வருடத்துக்கு 1 பில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டித் தந்தது. பாம்பைலட்டை உருவாக்க ஆன செலவு? வெறும் 3 மில்லியன் டாலர்! இது எப்படி சாத்தியமாயிற்று? எல்லாம் ‘பிரச்சனையைத் திருப்பிப்போடு’ என்ற மந்திரம்தான்.

No comments:

Post a Comment