..மனமாற்றம் நிகழ்ந்தால்தான் வாழ்வில் முன்னேற்றம் நிகழும். மாற்றமே முன்னேற்றத்திற்கு முதல்படி.
ஒரு கவிதை விதையாகவே உள்ளது, எந்த விதமாற்றமும் இல்லை என்றால் அது செடியாக வளராது என்பது எவ்வளவு உண்மையோ இதுவும் அவ்வளவு உண்மை.
இருவிதமான மாற்றங்கள் நம்மில் நிகழ்கின்றன. ஒன்று, உடல் ரீதியான மாற்றம். மற்றொன்று, மன ரீதியான மாற்றம்.
உடல் ரீதியான மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளது. மேலும் உடல் ரீதிதான மாற்றம் நமது கட்டுப்பாட்டில் அவ்வளவாக இல்லை.
ஆனால், மன ரீதியான மாற்றம் முழுமையாக நமது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மேலும், நாம் நினைத்தால்தான் மன ரீதியான மாற்றத்தை நிகழ்த்த முடியும்.
மனதில் மாற்றம் ஏற்படு வதற்கு நீங்கள் சிறந்த கருத்துக் களை மனதில் தூவிக்கொண்டே இருக்க வேண்டும். எவ்வாறு, நிலத்தில் புதைந்த விதை, ஈரம் கிடைத்ததும் முளைத்து விடுகிறதோ அதுபோல மனத்தில் விழுந்த கருத்தும் அதற்கென உரிய நேரம் வரும்போது விழித்து விடுகிறது. அவ்வாறு மனம் விழிக்கும் போது மன மாறுதல்கள் நிகழ்கின்றன.
மேலும், அவை உங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும் மாறிவிடுகிறது. ஏனென்றால் மனதில் தோன்றும் கருத்துக் களின் வெளிப்பாடே வாழ்க்கை.
நல்ல கருத்துக்களின் விளை நிலமாக உங்கள் மனம் விளங்கும் போது வளமான வாழ்க்கை தன்னிச்சையாகவே மலர்ந்து விடுகிறது.
மனமாற்றமே வெற்றிக்கு விதை. மேலும் புதிய மாற்றங் களைத் தோற்றுவிப்பவராகவும், புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்பவராகவும், நீங்கள் விளங்க வேண்டும்.
புதிய கருத்துக்களை உள்வாங்குங்கள்
உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாக இல்லாமல், புதிய கருத்துக்களுக்கும் செவி கொடுங்கள். பழைய கருத்துக் களில் உங்களுக்கு நம்பிக்கையும் பிடிப்பும் இருப்பதால் தவறு இல்லை என்றாலும் புதிய கருத்துக்களுக்கு வழிவிடுங்கள்.
புதிய நீர் ஊறிக்கொண்டே இருப்பதால்தான் நதி நகர்ந்து கொண்டே இருக்கின்றது. அவ்வாறு புதிய நீர் உற்பத்தி ஆகவில்லை என்றால் நதி ஏது? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
ஆகவே, ஆயிரமாயிரம் கருத்து மலர்கள் மலரும் பூஞ்சோலையாக உங்கள் மனம் மாறட்டும். அதில் பல்வேறு மாறுதல்கள் மலரட்டும்.
மாறுதல்கள் மலர்வது உங்கள் மனதிற்கு ஆறுதல் அளிப்பதாகவும் செயலுக்கு வேகம் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். உங்கள் இயக்கத்தை முடக்கி விடுவதாக மாறுதல்கள் இருந்துவிடக் கூடாது. ஆகவே மாற்றம் ஆக்கமாக மலரட்டும்.
கருத்துக் கருவூலம்
பல்வேறு நூல்களைப் படிப்பதாலும், அறிஞர்களின் உரைகளைக் கேட்பதாலும் புதிய கருத்துக்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு புதிய கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும்போது அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக புதிய கருத்துக் களுக்கும் ஏற்கனவே உங்களிடம் உள்ள கருத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பாருங்கள்.
மேலும், புதிய கருத்துக்கள் உங்கள் இலட்சியத்தை அடைவதற்கு எந்த அளவுக்கு உபயோகமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் எனவும் எண்ணிப் பாருங்கள்.
பிறகு, புதிய கருத்துக்களின் செயலாக்கம் உங்களுக்கு உதவுமாயின் அவற்றைக் கடைப் பிடியுங்கள். அவ்வாறு இல்லை யெனில் அக்கருத்துக்களை தள்ளி விட்டு, ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப் படையில் செயல்படுங்கள்.
மனம் திறக்கட்டும்
எப்பொழுதும் புதிய கருத்துக் களை ஏற்றுக் கொள்ள உங்கள் மனம் திறந்த நிலையிலேயே இருக்கட்டும். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எண்ணுவதால் மனம் இறுக்க நிலைக்கு சென்று விடுகிறது. அதனால் முன்னேற்றம் தடைபடுகிறது.
ஆகவே, புத்தம் புதிய கருத்துக் கள், மாற்றுக் கருத்துகள் என எத்தகைய மாற்றத்தையும் உள் வாங்கிக்கொள்ளும் உயர்ந்த நிலையில் உங்கள் மனம் மலர்ந்திருக்க வேண்டும்.
மாற்றம் மலர்ந்தால் புதிய மார்க்கம் தென்படும். ஆகவே, தற்பொழுது நீங்கள் வாழும் வாழ்க்கை முறையை, செயல் முறையை, பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.
மேலும், இது இப்படித்தான் இருக்க வேண்டும் அது அப்படித்தான் இருக்க வேண்டும், என்னும் எதிர்பார்ப்புக்களோடு எதையும் அணுகக் கூடாது. அவை எப்படி உள்ளதோ அதற்குத் தக்கவாறு அவற்றை அணுகி உங்கள் இலட்சி யத்தை அடைவதற்குத் தக்கவாறு மாற்றிக்கொள்ள வேண்டும்.
புதியன விரும்புவோம்
நீங்கள் உண்ணும் உணவில், உடுக்கும் உடையில், அவ்வப்போது மாறுதல்களைச் செய்யுங் கள். எனக்கு இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது, என்ற மன நிலையிலிருந்து விடுபட்டு எனக்கு எதுவும் பிடிக்கும் எதன் சுவையையும் நான் விரும்பு வேன், என புதுப்புது உணவு வகை களையும் உடை வகைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
மேலும், உங்கள் அறையில் மாறுதல்களை அவ்வப்போது செய்யுங்கள். அதாவது பொருட் களின் இடத்தை மாற்றுங்கள், இவ்வாறு செய்தால் மனம் மாறுதல் களை தாங்கும் வலிமையையும், மாறுதல்களைத் தோற்றுவிக்கும் வல்லமையையும் பெறுகின்றது.
மனதில் மாற்றம் நிகழும் போது சிந்தனையில் மாற்றம் மலர்கிறது. சிந்தனை மாறும்போது செயலும் வாழ்க்கை முறையும் மாறுதல்களைச் சந்திக்கிறது. இத்தகைய மாற்றமே முன்னேற்றத்தின் முகாந்திரமாக அமைந்து விடுகிறது.
மேலும், மாற்றத்தை தோற்று விக்கும் ஆக்க சிந்தனையின் உறைவிடமாக உங்கள் மனம் திகழும்போது எந்தப் பிரச்சனையையும் சந்தித்துத் தீர்க்கும் ஆற்றல் உங்களுக்கு வருகிறது.
ஆகவே, மாற்றம் மலர்வதற்கு மனதில் வழிவிடுங்கள்.
No comments:
Post a Comment