வெற்றிகரமான புதிய சிந்தனைகளை எழவிடாமல் தடுப்பது நம்முடைய அறிவு அல்ல; உணர்ச்சிகள் தான். வரலாறு, அனுபவம் போன்றவை நமக்குப் பல உணர்ச்சி பூர்வமான தடைகள் போட்டு வைத்திருக்கின்றன. அந்தத் தடையை மீறிச் சிந்திக்கும் போதுதான் நம் பார்வை வேறு திசையில் போகும். அங்கேதான் புதுமையும் பிறக்கும்.
புதிய சிந்தனைகளைத் தடுக்கும் அணைகள் என்று சொல்லத் தக்கவை மூன்று உண்டு:
நாம் செய்ய நினைப்பதற்கு முன்மாதிரிகள் ஏதாவது உண்டா என்று தேடுவது.
இதைச் செய்வது ஏன் முடியாது என்று சாக்குப் போக்குகள் எழும்போது அவற்றை ஒப்புக்கொண்டு அங்கேயே நிறுத்திவிடுவது.
ஏற்கனவே தேடிச் சலித்த இடங்களிலேயே திரும்பத் திரும்பப் புதிய ஐடியாக்களைத் தேடுவது.
முன் மாதிரிகளைத் தேடும்படலம் ஆரம்பிக்கும் போது கேட்கப்படும் முதல் கேள்வி, ‘இதற்கு முன் யாராவது இப்படிச் செய்திருக்கிறார்களா?’ என்பதுதான். இதுவரை செய்யப்படாவிட்டால் இனியும் அது முடியாத காரியம். முடியக்கூடியதாக இருந்தால், யாராவது இதற்குள் செய்திருப்பார்களே!!! முன் மாதிரிகளைத் தேடுவது என்ற அணை, நம்முடைய அடிமை மனப்பான்மையிலிருந்து எழுவது.
டாக்டர். துவாரகாநாத், டைட்டன் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர்; நுண்பொறியியல் துறைத்தலைவர்; இதற்கு முன் அவர் எச்.எம்.டி நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றிச் சொல்வார்: ஏதாவது புதுமையாகவோ, வித்தியாசமாகவோ ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு தன் மேலதிகாரிகளிடம் பேசுவார். அந்த அதிகாரிகள் ஜப்பானில் சிட்டிஸன் நிறுவனத்தில் 18 மாதங்கள் வேலை செய்துவிட்டு வந்திருப்பவர்கள். ‘ஜப்பானியர்களாலேயே ஒன்றைச் செய்ய முடியவில்லை என்றால், அது வேறு யாராலும் முடியாது. எனவே இந்த யோசனை சரிவராது’ என்று நிராகரித்து விடுவார்கள்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, கடைசியில் துவாரகாநாத் அதிகாரிகளுக்கு தெரியாமல் நேரடியாக சிட்டிஸனை அணுகினார். அவர் சொன்னதைக் கேட்ட ஜப்பானியர்கள் ‘அருமையான ஐடியா’ என்று துள்ளக் குதித்தார்கள். ‘இந்த ப்ராஜெக்டில் உங்களுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்’ என்று முன் வந்தார்கள். எனவே, முதல் அணையை உடைப்பதற்கு தேவை, ஒரு முன்னோடியின் மனநிலை. ‘முடிந்தால் இதற்கு ஒரு வழி கண்டுபிடிப்போம். இல்லாவிட்டால் நாமே ஒரு வழியை உருவாக்குவோம்’ என்ற மனநிலை.
புதிய சிந்தனை:
செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. செய்வதற்கு ஒரு ஐடியா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்! அதை கண்டுபிடிக்கும் வரை அவருக்குத் தூக்கம் வராது.
வெற்றிக்கான இரண்டாவது மனநிலை, பாசிட்டிவ் ஆகச் சிந்திப்பது. ‘ஏன் முடியாது?’ என்று பேசிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ‘எப்படியெல்லாம் செய்ய முடியும்?’ என்று யோசிப்பது.
புதிதாய் சிந்திப்போம்! புதிய சகாப்தம் படைப்போம்!!
No comments:
Post a Comment