மனித வாழ்வை உயர்வடையச் செய்யும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியும், ஆன்மிக கருத்துகளை பரப்பியும், முக்தியடைந்த மகான்களுள், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியும் ஒருவர்.
ரமண மகரிஷின் உபதேசங்கள்
நான் யார்...? என்ற கேள்விக்கு விடை தேடிச் செல்கிறவர்கள், மனிதர்கள் போற்றும் மகான்களாகி விடுகின்றனர். அதேபோல தன்னை அறியும் பொருட்டு, 1896-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையை அடைந்த ரமணர், 50 ஆண்டுகளுக்கு மேல் அங்கேயே நிலைபெற்று, பக்தர்களுக்கு ஆன்மிக உபதேசங்களை அருளினார். அவரது ஜயந்தி விழா, மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரம் என்றாலும், ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய எந்த மாதத்தில் புனர்பூசம் வருமோ அன்று, அவரது ஜயந்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜயந்தி விழா, மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திர நாளான இன்று (ஜனவரி 12-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்திடும் வகையில் அவர் அருளிய உன்னத உபதேசங்கள் சிலவற்றை நினைவு கூர்வோம்...
சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சகோதரத்துவமே மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும்.
நம்மைத் திருத்திக்கொள்வதால் சமுதாயச் சீர்த்திருத்தம் தானாகவே சீர்திருத்தம் பெறும்.
மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால், வாயைமட்டும் மூடிக் கொண்டு மனம் அலை பாய்ந்துகொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.
மூச்சை நெறிப்படுத்தினால், வலையில் பிடிபடும் பறவைபோல மனம் அமைதியாகும். மனதை அடக்க இது ஒரு வழி.
எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொர் எண்ணமும் எப்போதாவது ஒரு பயனை விளைவிக்கும். எண்ணத்தின் ஆற்றல் ஒரு போதும் வீண் போகாது.
மனம் அலைபாயும்போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது.
மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம். ஒன்றாகிப்போகும்.
நான் யார்? என்பது ஒரு மந்திரமன்று. 'நான்' என்ற எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது (நம்முள்) என்பதையே அது குறிக்கிறது. மற்ற எண்ணங்களுக்கெல்லாம் மூலம் அந்த எண்ணமே.
நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு. அவரிடத்து சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும்.
குரு கட்டாயமாகத் தேவை. புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டிலிருந்து மனிதனை விடுவிக்க குருவால் மட்டுமே முடியும்.
No comments:
Post a Comment