Friday, January 6, 2017

அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே!

இன்றைய உலகத்தில் மனிதகுலம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கும், ‘நீ பெரியவனா நான் பெரியவனா?’ என்ற ஈகோதான் காரணம். ஒவ்வொருவருமே அவரவர் நிலையில் பெரியவர்தான். இதை ஓர் அழகான கதையின் மூலம் விளக்குகிறார், சுவாமி விவேகானந்தர்.

ஓர் அரசன் தனது நாட்டுக்கு வரும் துறவிகளைப் பார்த்து, ‘‘துறவியாரே, உயர்ந்தவன் யார்... உலகத்தைத் துறந்து துறவியானவனா, இல்லை தன்னுடைய கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானா?’’ என்று கேட்பது வழக்கம். பலரும் அரசனின் கேள்விக்கு பதில் சொல்ல முன்வந்தார்கள். துறவிதான் உயர்ந்தவர் என்று சொன்னால், அதை நிரூபிக்கும்படி சொல்வான். தவறினால், அவர்களை இல்லறத்தில் ஈடுபடும்படி கட்டளையிடுவான். இல்லறத்தானே உயர்ந்தவன் என்றால், அதை நிரூபிக்கும்படி சொல்வான்.

தவறினால், அப்படிச் சொன்ன துறவியரையும் இல்லறத்தில் ஈடுபடும்படி கட்டளை இடுவான்.

ஒருநாள் துறவி ஒருவர் அந்த அரசனைச் சந்திக்க வந்தார். அவரிடமும் அரசன் வழக்கம்போல் தனது கேள்வியைக் கேட்டான். அதற்கு அந்தத் துறவி மற்றவர்களைப் போல் பதில் சொல்லாமல், ‘‘அவரவர் நிலையில் இருந்து தவறாமல் இருக்கும்போது, இருவரும் சமமானவர்களே’’ என்று பதில் சொன்னார். அரசன் வழக்கம்போல் அந்தத் துறவி சொன்னதை நிரூபிக்கச் சொன்னான்.

துறவியும், ‘‘நான் அதை நிரூபிக்கிறேன். ஆனால், நீங்கள் என்னுடன் வந்து, நான் வாழ்வதுபோல் சில நாள் வாழவேண்டும்’’ என்றார். அரசனும் ஒப்புக்கொள்ளவே இருவரும் பயணத்தைத் தொடங்கினர். பல தேசங்களின் வழியாக பயணம் செய்தவர்கள், கடைசியாக ஒரு தேசத்தின் தலைநகருக்கு வந்தனர். அன்றைக்கு அந்தத் தலைநகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. காரணம், அந்த தேசத்தின் இளவரசிக்கு அன்றைக்கு சுயம்வரம் நடைபெற இருந்ததுதான். அழகிலும் அறிவிலும் மிகச் சிறந்து விளங்கிய அந்த இளவரசிக்கு இதற்கு முன்பு பல முறை சுயம்வரம் நடைபெற்றது. ஆனால், சுயம்வரத்தில் பங்கேற்றவர்களில் யாரையுமே அந்த இளவரசிக்குப் பிடிக்கவில்லை. இந்த முறையாவது தன்னுடைய மகள் தகுந்த மணமகனைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அந்நாட்டு அரசர் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தார்.



சுயம்வரம் நடைபெற்ற மண்டபத்துக்கு நம்முடைய துறவியும் அரசனும் வந்து சேர்ந்தனர். சுயம்வரம் தொடங்கியது. இளவரசி சுயம்வர மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாள். வந்திருந்த யாரையுமே அவளுக்குப் பிடிக்கவில்லை. அந்தநேரம் பார்த்து தேஜஸ் நிறைந்த இளம் துறவி ஒருவர் சுயம்வர மண்டபத்துக்குள் பிரவேசித்தார். அந்த இளம் துறவியைப் பார்த்ததுமே இளவரசிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவருக்கு தன் கையில் இருந்த மாலையைச் சூட்டப்போனாள். பதறி விலகிய அந்த இளம் துறவி, ‘‘நான் சந்நியாசி. உன்னை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது’’ என்று மறுத்துவிட்டார். ஆனால், இளவரசி பிடிவாதமாக இருக்கவே, அரசர் அந்த இளம் துறவியிடம், ‘‘என் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டால் என்னுடைய தேசத்துக்கே நீங்கள் ராஜாவாக ஆகலாம்’’ என்று ஆசை வார்த்தைகள் கூறினார். அதற்கு ஒப்புக் கொள்ளாத துறவி, மண்டபத் தில் இருந்து வேகமாக வெளியேறி விட்டார். அவரையே கல்யாணம் செய்துகொள்ள விரும்பிய இளவரசி, அந்த துறவிக்குப் பின்னாலேயே செல்லத் தொடங்கிவிட்டாள்.

நம்முடைய துறவி தன்னுடன் வந்த அரசனையும் அழைத்துக்கொண்டு இளவரசிக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். அந்த இளம் துறவி பல மைல்கள் நடந்து சென்று ஒரு காட்டுக்குள் நுழைந்து, மறைந்துவிட்டார். அவரைக் காணாமல் தவித்த இளவரசி ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்துகொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

அப்போது இளவரசிக்கு அருகில் வந்த நம்முடைய துறவியும் அரசனும் அவளிடம், ‘‘பெண்ணே, வருத்தப் படாதே. நீ அரண்மனைக்குச் செல்வதுதான் நல்லது. ஆனால், இப்போது இருட்டிவிட்டதால், இன்றைய இரவை இந்த மரத்தடியில் கழித்துவிட்டு, விடிந்ததும் உன்னை அழைத்துச் சென்று உன்னுடைய அரண் மனையில் விட்டுவிடுகிறோம்’’ என்றனர். வேறு வழி இல்லாததால் இளவரசியும் சம்மதித்தாள்.

அந்த மரத்தில் இரண்டு பறவைகள் தங்களுடைய மூன்று குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தன. ‘தங்கள் மரத்தின் அடியில் வந்து தங்கி இருக்கும் மூவரும் அதிதிகள். அவர்களை உபசரிப்பது தங்களுடைய கடமை’ என்று நினைத்த ஆண் பறவை, எங்கோ சென்று எரிந்துகொண்டு இருந்த ஒரு சுள்ளியை எடுத்து வந்து அவர்களுக்கு அருகில் போட்டது. அரசனும் துறவியும் மேலும் சில சுள்ளிகளைப் போட்டு அக்னி வளர்த்து அந்த வெப்பத்தில் தங்களை வருத்திய குளிரைப் போக்கிக்கொண்டனர். பின்னும் அந்த ஆண்பறவை தன் துணையிடம், ‘‘நம்முடைய விருந்தினர்கள் பசியுடன் இருக்கிறார்கள். அவர்களை உபசரிப்பது நமது கடமை. எனவே, நான் தீயில் விழுந்துவிடுகிறேன். என்னை உண்டு அவர்கள் பசியாறட்டும்’’ என்று சொல்லியபடியே தீயில் விழுந்துவிட்டது. அரசனும் துறவியும் பதறிப்போனார்கள். பின்னர், பெண்பறவையானது தன்னையும் அவர்களுக்கு இரையாக்க நினைத்து, குஞ்சுகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தீயில் விழுந்துவிட்டது. தாய்ப் பறவையைத் தொடர்ந்து மூன்று குஞ்சுகளும் தங்கள் பெற்றோர்களைப் போலவே தங்களையும் அவர்களுக்கு இரையாக்க நினைத்து தீயில் விழுந்து விட்டன.

துறவியும், அரசனும், இளவரசியும் பறவைகளின் தியாகத்தைக் கண்டு சிலிர்த்துப் போனார்கள். அதற்குப் பிறகு அவர்களால் எப்படி பசியாறமுடியும்? அதற்கு அவர்களுக்கு எப்படி மனம் வரும்? பசியுடனே இருந்த மூவரும் பொழுது விடிந்ததும் காட்டில் இருந்து புறப்பட்டனர். 

இளவரசியை அரண்மனையில் விட்டுவிட்டுத் திரும்பும்போது,  துறவி, ‘‘அரசே, அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்தவர் என்பதை நீ இப்போது புரிந்துகொண்டிருப்பாய் என்று நம்புகிறேன். நீ இல்லறத்தானாக வாழ விரும்பினால், அந்தப் பறவைகளைப் போல் எந்த நிமிடமும் நீ மற்றவர்களுக்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும். உலகைத் துறந்து வாழ விரும்பினால், மிக அழகான இளம்பெண்ணையும், பேரரசையும் உதறிச் சென்ற அந்த இளம் துறவியைப் போல் இரு. அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே. ஆனால், ஒருவருடைய கடமை மற்றவருடைய கடமையாக ஆகாது’’ என்றார். அரசனும் புரிந்துகொண்டு அவரை வணங்கி விடைபெற்றான்.

உலகைத் திருத்த நாம் யார்?

இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்களிடம் குறைகளும் நிறைகளும் எப்போதும் இருக்கவே செய்கின்றன. அதை யாராலும் மாற்ற முடியாது. 

காரணம், அதுதான் இயல்பு. ஒருவருடைய இயல்பு எப்படியோ அப்படியே அவரை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏற்றுக்கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. அவர்களைத் திருத்துகிறேன் என்று முயற்சி செய்யக் கூடாது. அதனால் நமக்குத்தான் துன்பம் ஏற்படும். இந்த உண்மையை உணர்த்தும் வகையில் சுவாமி விவேகானந்தர் கூறி இருக்கும் கதை இது...

ஓர் ஊரில் ஏழை ஒருவன் இருந்தான். அவனுக்கு எல்லா செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்று ஆசை. எப்படியாவது ஒரு பூதத்தை வசப்படுத்தி விட்டால், தான் விரும்பும் எதையும் கொண்டு வருமாறு செய்யலாம் என்று அவன் கேள்விப்பட்டான். பூதத்தைப் பிடித்துத் தருபவரைத் தேடி அலைந்தான். கடைசியாக, சக்தி வாய்ந்த முனிவர் ஒருவரிடம் போய்ச் சேர்ந்து, அவரது உதவியை நாடினான். 

‘`பூதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?'’ என்று கேட்டார் அந்த முனிவர். அதற்கு அவன், ‘`முனிவரே, எனக்காக வேலை செய்வதற்குத்தான் பூதம் வேண்டும். தயவுசெய்து அதைப் பிடிப்பது எப்படி என்று எனக்குச் சொல்லிக் கொடுங்கள்’' என்று வேண்டினான். அதற்கு அந்த முனிவர், ‘`வீணாகக் குழம்பாமல் வீட்டுக்குப் போ’' என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

ஆனால், முனிவர் சொன்னதை அவன் கேட்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தினான். அவனுடைய வற்புறுத்தலைத் தாங்கமுடியாத முனிவர், ‘`இதோ, இந்த மந்திரத்தைப் பெற்றுக்கொள்.  இந்த மந்திரத்தை சொன்னால் பூதம் வரும், நீ சொல்கிற வேலைகளையெல்லாம் செய்யும். ஆனால், ஒரு விஷயத்தில் நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பூதங்கள் பயங்கரமானவை. அதற்கு நீ எப்போதும் வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தவறினாயோ அது உன் உயிரை வாங்கிவிடும்'’ என்ற கூறி, மந்திரத்தை உபதேசித்தார்.

நேராக ஒரு காட்டுக்குச் சென்ற அவன் அங்கு அமர்ந்து, முனிவர் கொடுத்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். நெடுநேரத்துக்குப் பிறகு ஒரு பெரிய பூதம் அவன் முன் தோன்றி, ``நான் ஒரு பூதம். உன் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டுள்ளேன். ஆனால், நீ எப்போதும் எனக்கு வேலை தந்துகொண்டே இருக்க வேண்டும். தவறினால் அடுத்த கணம் உன்னையே கொன்று விடுவேன்'’ என்று கூறியது. உடனே அந்த மனிதன், `‘எனக்கு ஓர் அரண்மனை கட்டு'’ என்றான். `‘தயார், அரண்மனை கட்டியாகி விட்டது’' என்றது பூதம். `‘பணம் கொண்டு வா'’ என்றான். `‘இதோ நீ விரும்பிய பணம்’' என்று பணத்தைக் கொடுத்தது பூதம். `‘இந்தக் காட்டை அழித்து, இங்கே ஒரு நகரத்தை உருவாக்கு'’ என்றான். அடுத்த கணமே ‘`தயார்'’ என்றது பூதம். காடு அழிந்து நகரம் உருவாகியது. 

`‘இனி என்ன?'’ என்று கேட்டது பூதம். இனிமேல் இந்த பூதத்துக்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லையே, எதைக் கொடுத்தாலும் ஒரு கணத்தில் செய்து விடுகிறதே’ என்று எண்ணிய அவனைப் பயம் பிடித்துக்கொண்டது. 
அதற்குள் அந்தப் பூதம், ‘வேலை கொடுக்கிறாயா? இல்லை  உன்னை விழுங்கட்டுமா?’ என்று உறுமியது. அந்த அப்பாவியால் அதற்கு எந்த வேலையும் கொடுக்க முடியவில்லை. அஞ்சி நடுங்கிய அவன் ஒரே ஓட்டமாக முனிவரிடம் ஓடினான். `‘சுவாமி, என்னைக் காப்பாற்றுங்கள்'’ என்று கதறினான். நடந்ததை விவரித்தான்.

அதற்குள் பூதம் அங்கேயே வந்துவிட்டது. அந்த மனிதன் நடுநடுங்கி, தன்னைக் காப்பாற்றுமாறு முனிவரிடம் கெஞ்சினான். முனிவர் அவனிடம், ‘`பயப்படாதே. நீ தப்ப நான் ஒரு வழி கூறுகிறேன். சுருண்ட வாலுடன் அதோ ஒரு நாய் நிற்கிறதே, பார்த்தாயா... வாளை உருவி அதன் வாலை வெட்டு. அதை அந்தப் பூதத்திடம் கொடுத்து நேராக்கும்படி சொல்’' என்றார். அவனும் அவ்வாறே வெட்டி, பூதத்திடம் கொடுத்து, ‘`இதை நேராக்கு’' என்றான். பூதம் சுருண்ட நாய்வாலைக் கையில் பிடித்துக்கொண்டு, நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் நிமிர்த்தியது. ஆனால் விட்ட மறுகணமே அந்த வால் சுருண்டுகொண்டது. மறுபடியும் மிகுந்த சிரமத்துடன் நிதானமாக நிமிர்த்தியது. விட்டால் பழைய கதைதான்! 

இப்படியே நாட்கணக்கில் முயன்ற பூதம் இறுதியில் களைத்துவிட்டது. அதன் பிறகு அது அந்த மனிதரைப் பார்த்து, `‘என் வாழ்நாளில் இப்படி ஒரு சங்கடத்தில் மாட்டியதில்லை. நாம் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். நீ என்னை விட்டுவிடு. நான் உனக்குக் கொடுத்த அனைத்தையும் அதற்குப் பதிலாக வைத்துக்கொள். நான் உனக்கு துன்பமும் தர மாட்டேன்'’ என்றது. அந்த மனிதன் மகிழ்ச்சியோடு பூதத்தின் உடன்பாட்டை ஏற்றுக்கொண்டான்.
இந்த உலகமும் நாயின் சுருண்ட வால்போல்தான் இருக்கிறது. அதை நிமிர்த்துவதற்காக மனிதர்கள் காலங் காலமாக முயன்று வருகிறார்கள். ஆனால், விட்டவுடனே சுருண்டு கொள்கிறது. பற்றில்லாமல் செயல் புரிவது எப்படி என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதன் கொள்கை வெறியன் ஆக மாட்டான். 

`இந்த உலகம் நாயின் சுருண்ட வால் போன்றது, அது ஒருபோதும் நேராகாது' என்று தெரிந்து கொண்டால், நாம் கொள்கை வெறியர்களாக மாற மாட்டோம். கொள்கைவெறி மட்டும் இல்லாதிருந்தால் உலகம் இப்போது இருப்பதை விட எவ்வளவோ மேன்மையுற்றிருக்கும். 

கொள்கைவெறியைத் தவிர்த்தால் மட்டுமே உங்களால் திறமையுடன் செயல்பட முடியும். சமமான மனமும், அமைதியும், ஆராய்ந்து தெளியும் குணமும், குளிர்ந்த சிந்தனையும், மிகுந்த கருணையும், அன்பும் உடையவன்தான் உலகிற்கு நன்மை செய்கிறான்; அதன்மூலம் தனக்கும் நல்லது செய்துகொள்கிறான். 

எனது நம்பிக்கை!

ஆன்மா அழிவற்றது, எல்லையற்றது, எல்லாம் வல்லது என்பதை நம்புங்கள். 

இறை நம்பிக்கையைவிடத் தன்னம்பிக்கையே முதலில் வேண்டும்.

இளைய தலைமுறையிடமே, நவீன தலைமுறையினரிடமே எனது நம்பிக்கை இருக்கிறது. அதிலிருந்தே என் தொண்டர் கள் தோன்றுவார்கள்.

அரசியல் பயன்...

சாதாரண மக்களைப் புறக்கணித்ததே நமது தேசியப் பெரும் பாவம் என்றே நான் கருதுகிறேன். பாமர மக்களுக்குச் சிறந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். உணவளிக்கப்பட்டுப் பரிபாலிக்கப்படவேண்டும்; அது வரை எந்த அரசியலும் பயன் தராது.

அறிஞன் யார்?

யார் எல்லா பெண்களையும் சொந்தத் தாயாகப் பார்க்கிறானோ...
யார் பிறர் சொத்தைத் தூசியாகக் கருதுகிறானோ...
யார் எல்லா உயிர்களையும் தன் உயிராகக் காண்கிறானோ...
அவனே அறிஞன்!

No comments:

Post a Comment