Thursday, January 12, 2017

சிறுநீரகக் கற்கள் தீர்வு என்ன?

உடலின்மிக முக்கியமான  துப்புரவுத் தொழிற்சாலை, சிறுநீரகம். ரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கழிவுகளைப் பிரித்து வெளியேற்றும் மகத்தான பணியைச் செய்து, உடலின் ஆரோக்கியம் காக்கும் அற்புத சேவகர்கள் இவை. சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவது ஒரு பெரிய பிரச்னை. நமது ஆரோக்கியத்தை அசைத்துப்பார்த்து, இயல்பு வாழ்வைப் பாதிக்கும் இந்தப் பிரச்னை, சராசரியாக 10-ல் ஒருவருக்கு ஏற்படுகிறது. ஆண்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

உடலில், அளவுக்கு அதிகமாக இருக்கும் கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் போன்றவை சிறுநீர் வழியாக வெளியேற வேண்டியது அவசியம். இவை, ஏதாவது ஒரு காரணத்தால் வெளியேறாமல், சிறுநீரகத்திலோ சிறுநீரகப் பாதையிலோ தொடர்ந்து தேங்கும்போது, அந்தப் படிமங்கள் கற்களாக உருவாகின்றன. பொதுவாக, 20 – 50 வயதுகளில் இருப்பவர்களுக்குத்தான் சிறுநீரகக் கற்கள் பிரச்னை ஏற்படுகிறது. மேலும்,  சிறுநீரகக் கற்கள் இந்தக் குறிப்பிட்ட காரணத்தால் மட்டும்தான் வருகின்றன என்று சொல்ல முடியாது.

சிறுநீரகக் கற்கள் திடீரென ஓரிரு நாட்களில் வந்துவிடுபவை கிடையாது. சராசரியாக, ஒரு வருட காலத்தில் சிறுநீரகத்தில் சிறுகச்சிறுக சேர்ந்துதான் கற்களாக உருவாகின்றன. சிறுநீரகக் கற்களில் பல வகை உள்ளன. கால்சிய கற்கள், யூரிக் அமிலக் கற்கள், சிஸ்டின் கற்கள், ஸ்ட்ரூவைட் கற்கள் பொதுவாகக் காணப்படுகின்றன. கற்களின் வகையைப் பொறுத்து, வலி மற்றும் சிகிச்சை சில நேரங்களில் மாறக்கூடும். 

அறிகுறிகள்

ஆரம்பக்கட்டத்தில் பெரும்பாலும் வலி இருக்காது. கற்கள் கொஞ்சம் பெரிதான பிறகுதான் வலி ஆரம்பிக்கும். கீழ் முதுகுப்பகுதியில் இருந்து வலி ஆரம்பிக்கும். நோயாளிகள் வயிற்றின் பக்கவாட்டில் கையைவைத்து வலிக்கிறது எனத் துடிப்பார்கள். இது ஒரு முக்கியமான அறிகுறி. சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலி மிகவும் கொடுமையானது. சிறுநீரகத்தில் கற்கள் சேரும்போது, அந்த இடத்தில் இருக்கும் தசைகள் தானாகவே கற்களை வெளியேற்ற முயற்சிக்கும். இந்த நடைமுறையின் காரணமாகத்தான் கடுமையான வலி ஏற்படுகிறது. சிறுநீரகக் கற்கள் வந்தவர்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்படும். சிலர், எந்த நேரமும் வாந்தி வரும் உணர்வுடனேயே இருப்பார்கள். சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரிச்சல் ஏற்படும். ஒரு சிலர் சிறுநீர் கழிக்கவே மிகவும் சிரமப்படுவார்கள். வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த அறிகுறிகள் வேறுபடும். எனவே, இதில் ஏதாவது ஓர் அறிகுறி தொடர்ந்து இருக்கிறது என்றாலே விழிப்புஉணர்வுடன் இருப்பது நல்லது.

கற்கள் அளவு

சிறுநீரகக் கற்களை மூன்று வகையாகப் பிரிக்க முடியும். 5 மி.மீக்கு கீழ் இருப்பவை சிறிய கற்கள். 5-8 மி.மீ இருப்பவை நடுத்தர அளவிலான கற்கள். 1 செ.மீ-க்கு மேல் இருப்பவை பெரிய கற்கள்.

சிகிச்சைகள்

கற்களின் அளவு, அவை எங்கே இருக்கின்றன என்பதைப் பொறுத்து, சிகிச்சை முடிவு செய்யப்படும். மிகச்சிறிய கற்களாக இருந்தால், மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வதுடன், தண்ணீரை அதிக அளவில் அருந்ததுவதன் மூலமுமே கற்களை அகற்றலாம். ஒருவேளை, வெளியே வரவில்லை எனில், அறுவைசிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும்.

சிறு மற்றும் நடுத்தரக் கற்கள்

5 – 8 மி.மீ கற்கள் இருந்தால், சிறுநீர்ப் பாதையில் ஏதேனும் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதிக்கப்படும். தொற்று எதுவும் இல்லை எனில், சிறுநீர்ப் பாதையைக் கொஞ்சம் விரிவடையவைப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். பின்னர், நோயாளி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த முறையில் 5 மி.மீ-க்கும் குறைவான கற்கள், 80 சதவிகிதம் வெளியே வந்துவிடும்.  5 – 8 மி.மீ அளவிலான கற்கள் எனில், 70 சதவிகிதம் வரை வெளியே வர வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு சிறிய கற்களாக இருந்தாலும், இந்த சிகிச்சை முறையில் வெளியே வராது. 
இவர்களுக்கு, அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. பிறந்ததில் இருந்தே ஒரே சிறுநீரகத்துடன் வாழ்பவர்கள், விமானஓட்டிகள் போன்றோருக்கு, சிறிய கற்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 லித்தோட்ரிப்சி

1.5 செ.மீ-க்குக் கீழ் உள்ள கற்களுக்கு லித்தோட்ரிப்சி சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த முறையில் காலையில் மருத்துவமனைக்கு வந்தால், மாலை வீட்டுக்குச் சென்றுவிடலாம். வலி தெரியாமல் இருக்க, மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்ட பிறகு, பிரத்யேகக் கருவி வழியாக, சிறுநீரகக் கற்கள் மீது அதிர்ச்சி அலைகள் (Shock waves) செலுத்தப்படும். இதில், சிறுநீரகக் கல், சிறுசிறு கற்களாக உடையும். இவை, சிறுநீர்ப் பாதை வழியாக வெளியே வரவேண்டும் என்பதால், அந்த இடத்தில் தற்காலிகமாக ஒரு ஸ்டென்ட் பொறுத்தப்படும். ஒருவேளை கற்கள் உடைந்து, ஏதாவது ஒரு பெரிய துண்டு சிறுநீரகத்தில் தங்கிவிட்டாலோ அல்லது சிறுநீரகப் பாதையில் சிக்கிவிட்டாலோ, 10 நாட்கள் கழித்து இதே சிகிச்சையை மீண்டும் செய்துகொள்ள வேண்டியது இருக்கும்.

பெர்குயுட்டேனியஸ் நெஃப்ரோலித்தோடோமி (Percutaneous nephrolithotomy)

சிறு துளை மூலம் செய்யப்படும் அறுவைசிகிச்சை இது. இந்த முறையில், முதுகுப் பக்கம் ஒரு செ.மீ அளவுக்கு சிறு துளை போட்டு, அதன் வழியாக ஒரு குழாயை விட்டு, சிறுநீரகத்தில் கற்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதை, டெலஸ்கோப் வழியாகப் பார்ப்பார்கள். பின்னர், கருவிகளின் துணைகொண்டு கற்களை மருத்துவர்கள் உடைத்து வெளியே எடுப்பார்கள். இந்த முறையில், குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது மருத்துவமனையில் தங்க வேண்டியது இருக்கும்.

ரிஜிட் யூரிடெரோஸ்கோப்பி (Rigid Ureteroscopy)

சிலருக்கு, சிறுநீரகப் பாதையில் கற்கள் தங்கிவிடும். பிறப்புறுப்பு வழியாக ஒரு குழாயை செலுத்தி,  டெலஸ்கோப் வழியாகக் கட்டிகளின் இருப்பிடம் அறிந்து, லேசர் மூலம் கற்கள்  உடைக்கப்பட்டு எடுக்கப்படும். இந்த முறையில், சிறுநீர்ப்பை மற்றும் அதில் இருந்து சிறுநீர் வெளியேறும் குழாயில் உள்ள கற்களை மட்டுமே எடுக்க முடியும்.

ஃபிளெக்சிபிள் யூரிடெரோஸ்கோப்பி (Flexible Ureteroscopy)

ரிஜிட் யூரிடெரோஸ்கோப்பி போலதான். ஆனால், இந்தக் கருவியானது சிறுநீரகம் வரை செல்லக்கூடியது என்பதுதான் வித்தியாசம். இந்த சிகிச்சையில், பிறப்புறுப்பு வழியாகக் கருவியைச் செலுத்தி, லேசர் பயன்படுத்தி கல் உடைக்கப்பட்டு வெளியே எடுக்கப்படும்.

மீண்டும் வரலாம் – எச்சரிக்கை!

சிகிச்சை மூலம் கல்லை அகற்றினாலும், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் உருவாவ தற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு முறை சிறுநீரகக் கற்கள் வந்து அகற்றிய பின்னர், 50 சதவிகிதம் பேருக்கு, அடுத்த ஐந்து ஆண்டு களுக்குள் மீண்டும் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. 70 சதவிகிதம் பேருக்கு 10 வருடங்களுக்குள் சிறுநீரகக் கற்கள் மீண்டும் உருவாகின்றன.

தண்ணீர் குடியுங்கள்!

நமது உடலில் அளவுக்கு அதிகமான, தேவையற்ற தாதுஉப்புகள் தேங்கும்போது, போதுமான தண்ணீர் அருந்துவதன் மூலம் சிறுநீர் வழியாக அதை வெளியேற்றலாம். கூடுமானவரை வீடுகளில் கொதிக்கவைத்து,  வடிகட்டி, ஆறவைத்த தண்ணீரைத் தேவையான அளவு பருகுங்கள். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில்தான் தண்ணீர் அருந்த வேண்டும்.

சிறுநீரகக் கற்கள் உருவாக 8 காரணங்கள்

1. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை. குறிப்பாக, கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பு.

2. உடலில் கால்சியம் அளவு அதிகமாக இருப்பது. உணவு, மாத்திரைகள் மூலம் அதிகப்படியான கால்சியம் எடுத்துக்கொள்வது. 

3. உடலில் கால்சியம் அளவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பாராதைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பது.

4. உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது. குறிப்பாக, படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள்.

5. கர்ப்பக் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகமான தாதுஉப்புகள், உடலில் தேங்குதல்.

6. உடல்பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் சீரம் மற்றும் ஆக்ஸலேட் அளவுகள் அதிகமாக இருப்பது.

7. சிறுநீரகப் பாதையில் ஏற்படும் அடைப்புகள்.

8. வயதான ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி வீங்குதல்.

எப்படிக் கண்டறிவது?

எளிய ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதில், வழக்கத்தைவிடவும் மிக அதிக அளவில் வெள்ளை அணுக்கள் இருக்கும். கால்சியம், யூரிக் அமிலம் உள்ளிட்டவை எவ்வளவு இருக்கின்றன என்பதைப் பொறுத்து, என்ன கற்கள் என்பதை அறியலாம்.

சிறுநீர்ப் பரிசோதனையில் கழிவு எவ்வளவு வெளிவருகின்றன என்பதைக் கண்டறியலாம்.

அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம் 90 சதவிகிதம் வரை கற்களைக் கண்டறிய முடியும்.

சிறுநீரகத்திலும் சிறுநீரகப் பாதையிலும் கற்கள் வரும் என்பதால், சிலருக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் கற்கள் தெரியாது. இவர்களுக்கு, சி.டி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை தேவைப்படும்.

சிறுநீரகக் கற்கள் தடுக்க… தவிர்க்க!

எலுமிச்சையில், பொட்டாசியம் சிட்ரேட் நிறைந்துள்ளது. எலுமிச்சையை, தொடர்ந்து ஜூஸ் போன்ற ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்புக் குறையும்.

ரெட் மீட் எனப்படும் ஆடு, மாட்டிறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

சீஸ், பனீர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து அதிக அளவு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கேரட், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவது, சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்.

உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

தினமும் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.

No comments:

Post a Comment