நாம் எல்லோரும் ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம் . ஆனால், எல்லோருக்கும் வெற்றி கிடைக்கிறதா ? இல்லையே . வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கும் பண்பும் வேண்டும் . தோல்வி தான் வெற்றியின் முதல் படி . அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்தால் , எப்பிடி செய்தால் வெற்றி பெறலாம் என்பதனை நாம் சிந்திக்கின்றோமா ?
ம்ம்ம் நாம் வெற்றி பெற என்ன வழிகள் உண்டு ? எப்பிடி நடந்தால் வெற்றி கிடைக்கும் ? வெற்றி பெறுவதற்க்கு என்ன வழிகள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .
நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது. நாம் நமது தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும் , அதை திருத்திக் கொள்வதற்க்கான பலனும் தான் வெற்றிக்கான வழிகள் ஆகும் .எமக்கு வெற்றியைவிட தோல்விதான் அதிகப் படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது. காலத்தை வீணாக்காமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும் . வெற்றிக்கான வழிகளை கண்டறிய வேண்டும் .வெற்றிக்கான வழிகளை விடாமுயற்சி, சோம்பலின்மை, தகவல் தொடர்புத்திறன், அறிவுத்திறன் போன்ற தகுதிகள் பல்வேறு விகிதத்தில் ஒன்று கலந்து வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொடுக்கின்றன.
புதிய புதிய தகவல்களை தேடி கொண்டு இருக்க வேண்டும் . நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று இருப்பது பெரிய விடயமல்ல . அதனை எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது என்பது தான் முக்கியமான விடயம் . அதாவது சிறந்த நடிகர் என்ற பட்டம் மட்டும் ஒரு நடிகருக்கு போதாது . அதனை அவர் காலா , காலமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் .
வெற்றிபெற விரும்புகிறவர்களுக்கு முக்கியமான இன்னொரு பண்பு, புதிய மனிதர்களையும் புதிய சூழல்களையும் தயக்கமில்லாமல் எதிர்கொள்வது. பக்கத்தில் யாராவது புதிதாகக்குடியேற வந்தால் , அவர்களாக வந்து அறிமுகம் செய்துகொள்ளும்வரை காத்திருக்காமல், நீங்களாகச் சென்று அறிமுகம் செய்து கொள்வதில் தொடங்கி, முற்றிலும் அந்நியமான சூழலில் ஏற்படும் வாய்ப்புகளைக் கூச்சமில்லாமல் எதிர்கொண்டு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதுவரை எத்தனையோ நிலைகளுக்கு இது பொருந்தும்.
பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது. இதனை மனதில் கொள்ள வேண்டும் .
வெற்றிக்கான வழிகளாக வள்ளுவர் கூறுகிறார் . எண்ணத்தில் உறுதி, விடாமுயற்சி ,வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும். காலம் நீடித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்று சொல்கின்றார் .
நீங்கள் வெற்றி பெற இதனையும் கவனத்தில் கொள்ளுங்கள் .
எல்லோரிடனும் அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள், இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள், நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள், ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள், ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள் , ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள், ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள், எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள், உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள், இனிய சொற்களை மற்றவர்களுடன் பேசும் போது பேசுங்கள் .
இவை தான் உங்களை வெற்றி பாதைக்கு இட்டு செல்லும் வழிகள் ஆகும் . இவற்றை கடைப்பிடித்து வெற்றி பெறுங்கள் . வாழ்வில் வெற்றி , வாழ்க்கைக்கு வெற்றி , புதிய வசந்தத்தின் வெற்றி என உங்கள் வாழ்வில் என்றுமே வெற்றி தான் இருக்க வேண்டும் .
என்றும் வெற்றி, எப்போதும் வெற்றி , எல்லோருக்கும் வெற்றி தான் கிடைக்க வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்
No comments:
Post a Comment