சிறுவயதில் தந்தையை இழந்து ஒன்பது வயதில் கீ போர்டை பிடித்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றிய அந்தச் சிறுவன், இருபத்து ஐந்து வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, முதல் படத்திலேயே தேசிய விருதும் பெறுகிறார். அடுத்த பத்தொன்பது வருடங்கள் கழித்து திரையுலகத்தின் உச்சகட்டமாக கருதப்படும் ஆஸ்கர் விருதையும் பெறுகிறார். ஒன்றல்ல; இரண்டு விருதுகள். இதில் சிறப்பு என்னவெனில், உலகிலேயே அதிகம் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் இந்தியாவில் இருந்து தனிப்பட்ட முறையில் இதுவரை யாரும் ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை.
அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் நமக்கெல்லாம் தெரிந்த நபர்தான். நான் அவர் பெயரைத் தட்டச்சடிக்கும் முன்பே நீங்கள் கணித்துவிடுவீர்கள்... அவர் யார் என்று!
உங்கள் கணிப்பு மிகச் சரியே! ஏ.ஆர்.ரஹ்மான்தான். இத்தனை சாதனைகளுக்கு உரிய ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டுப்பாருங்கள்... `உங்கள் வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் என்ன?' என்று.
மிக எளிமையாக சொல்வார்-“எல்லா புகழும் இறைவனுக்கு” என்று.
உண்மைதான். தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவரது வெற்றிக்குப் பின்னும் இறைவனின் ஆற்றலும், ஆசியும் அவசியமாகின்றன. திறமையை மீறி பிரபஞ்சத்தை உங்கள் முன் வளைத்து தரும் சக்தி, ஆன்மிக வளத்துக்கு மட்டுமே உண்டு. அதனைச் சரியாக அணுக ஓர் உண்மையான குருவின் தூண்டுதல் தேவைப்படுகிறது.
இதையே மிக எளிமையாக `குருவருள்’ என்கிறோம். இது இருந்தால் எதுவும் சாதிக்கலாம். முன்பு இறைவனைப் பற்றிய அறிவு என்பது கொஞ்சம் மறைபொருளாக இருந்தது. இன்று அப்படியில்லை. எண்ணற்ற குருமார்கள், எத்தனையோ வகையில் இதனை வெளிப்படையாகவே விவாதித்து வருகிறார்கள்.
எனது ஆன்மிக விருப்பம் எல்லோரையும் போல் பக்தி யோகத்தில்தான் ஆரம்பித்தது. நினைத்துப் பார்த்தால் இன்று குதூகலமாக இருக்கிறது. எனது சிறுபிராயத்தில் நான் விளையாடிய விளையாட்டு, பெரும்பாலும் சாமிக்கு பூஜை செய்வதும் ஒரு சின்ன வண்டியில் சாமிப் படங்களை வைத்துக்கொண்டு, அந்த வண்டியை இழுத்து சாமிக்கு ஊர்வலம் நடத்துவதும்தான்.
இன்று உரைக்கப்பட பிரபஞ்ச அறிவை நோக்கிய ஈர்ப்பு, எனக்கு அப்போதே இருந்தது. சின்ன வயதில் என் அம்மா நிலாவையும், நட்சத்திரங்களையும் காட்டி சோறூட்டிப் பழக்கியதால், எப்போதும் வானத்தைப் பார்த்து லயிப்பதில் எனக்கு தனி ஆர்வம். எங்கள் வீட்டைச் சுற்றி தோட்டம் இருக்கும். அதன் பசுமை மடியில் படுத்துக்கொண்டு வானத்தின் நீலத்தில் எப்போதும் லயித்துக் கிடப்பேன். அப்படி ஒருநாள் ஒரு வெண்டைத் தோட்டத்தில் வானத்தைப் பார்த்தபடி தூங்கிப் போக, நான் எங்கோ தொலைந்துவிட்டேன் என்று என் குடும்பமே கதறி அழுது தேடிய கதையை இன்று நினைத்தாலும் இனிக்கிறது.
`சாமிக்கிட்ட எது கேட்டாலும் கிடைக்கும்’ என்று வளர்ந்து, ஒரு கட்டத்தில் கேட்டவை பலவும் கிடைக்காமல் போயின. விரும்பியது நடக்கவில்லை. சாமி மீது நம்பிக்கை இழந்து, விதண்டாவாதம் பேசி கொஞ்சநாட்கள் நாத்திக வேஷமும் பூண்டு திரிந்ததை இன்று நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
நமக்கு எத்தனையோ லட்சியங்கள் இருக்கும், கனவுகள் இருக்கும், தேவைகள் இருக்கும், ஆசைகள் இருக்கும். அத்தனையையும் அடைய நாம் முயற்சிக்கிறோம். அவை அனைத்தையும் அடைவதற்கு நமக்குத் தேவை மனோபலம். அதாவது, நீங்கள் விரும்புவது எதுவாகினும் அது உங்களை நோக்கி நகர்ந்து வரவேண்டும். அந்த மனோபலத்தை நீங்கள் பெருக்கிக்கொள்ள வேண்டுமெனில், இயற்கைக்கும் உங்களுக்குமான உறவில் ஓர் இணக்கம் நிகழவேண்டும்.
அப்படியான இணக்கம் ஓரளவு எனக்கும் கிடைத்தது என்றால், அது, வேதாத்திரி மகரிஷி கிடைத்தபின்தான். அவரை அறிந்தபிறகே ஆன்மிக பின்புலனில் இருக்கும் வலுவான அறிவியலையும் வாழ்வியலையும் தெளிந்துகொள்ள முடிந்தது.
உடல், உயிர், மனம்!
இதுதான் ஆன்மிக சாரம். இதன் பின்புலனை உணர்த்ததான் பக்தி யோகம், ராஜ யோகம், ஞான யோகம் எல்லாம். புறவெளியில் ஒரு சக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தச் சக்தியை உங்கள் உடலும் மனமும் கிரகிக்கும் புள்ளியில்தான் உங்களின் வாழ்வியல் இயங்குகிறது. மிக எளிமையான நியதிதான். ஆனால், இதன் அனுபவம் விளங்கவில்லை.
அப்போதுதான் வேதாத்ரி மகரிஷியின் வழியில் நின்ற ஐயா டி.கே.எஸ். சுப்ரமணியம் கிடைத்தார். என் பேராசான். தாமிர துரிய சபை எனக்கு அறிமுகமானது. ஆன்மிகம் கொஞ்சும் நெல்லையில், சேரன்மாதேவி செல்லும் வழியில், `பேட்டை' எனும் இடத்தில் அமைந்துள்ளது தாமிர துரிய சபை.
என்னை அழைத்து, அணைத்து, அரவணைத்து தாமிர துரிய சபையின் மத்தியில் உட்கார வைத்தார். எதையும் எதிர்பார்க்காமல் ‘உன் உடலையே மூச்சோடு கவனி’ என்றார்.
எங்கிருந்து அத்தனை ஆற்றல் வந்தது என்று தெரியவில்லை; உடல் முழுவதும் பெருமழைபோல் சக்தி பேரியக்கம் இறங்குவதை என்னால் உணர முடியாது. எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்துக்கும் ஆனந்தத்துக்கும் அளவேயில்லை. என் உடலும் மனமும் ஓர் இறகாய் இருப்பதுபோல் மென்மையாக உணரமுடிந்தது.
மனம் லேசான பின்னர் எனது எண்ணங்களில் உறுதி வந்தது. அப்போதே, எழுந்த எண்ணங்களில் எது எனக்கு தேவையானது எது தேவையற்றது என்றும் தரம் பிரிக்கமுடிந்தது. எனக்கு ஆச்சர்யம் தாங்கமுடியாமல் கேட்டேன்: “ஐயா, இது என்ன மந்திர சபையா?”
ஐயா சொன்னார்: “மந்திர சபையுமில்லை... தந்திர சபையுமில்லை. நீ உன் உயிரின் அறிவியலை அனுபவித்துக்கொண்டிருக்கிறாய். நம் தலை உச்சியில் ஒரு சுரப்பி இருக்கிறது. அது பீனியல் சுரப்பி. இதனை `துரியம்' என்கிறது ஆன்மிகம். இது எப்போதும் பிரபஞ்ச வெளியோடு தொடர்பில் இருக்கும். பிரபஞ்ச வெளியில் அந்த பரிபூரண சக்தியை உன்னுள் கிரகிக்க, இது ஒரு ஆன்டெனா போன்று செயல்படும். அதனை எழுச்சிப்பெறச் செய்யும் வகையில், பிரபஞ்ச சக்தி உன் உச்சியில் குவியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த துரிய சபை. இதனால், நீங்கள் சொல்வீர்களே இன்ஸ்டன்ட்... அதுபோன்ற ஓர் இன்ஸ்டன்ட் சக்தி உங்களுக்குள் பாய்கிறது’’ என்றார்.
அதுதான் அகக் கண். துரியத்தில் இருந்து எது நிகழ்த்தினாலும் விழிப்பு உணர்வோடு நிகழும் என்பதால், தவறுகள் என்பதே வாழ்க்கை யில் நிகழாது. மேலும் துரியம் என்பது நம் மன அலைச்சூழலை எப்போதும் குறைத்து வைப்பதால் பேராசை, கடுஞ்சினம், கடும் பற்று, வஞ்சம், முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை என எதுவும் நம்மை அண்டாது.
தாமிர துரிய சபையில் பெற்ற எழுச்சியை நான் எந்தக் கோயிலுக்குள் சென்றாலும் உணர்கிறேன். எல்லாக் கோயில்களும் இந்த அபரிமிதமான சக்தியை அள்ளி தந்துகொண்டிருக்கின்றன. நம்முள் சக்தி வழியும்போது மனதும் எண்ணங்களும் கூர்மையடைகின்றன. நீங்கள் விரும்பும் எதுவாகினும் அது உங்களை வந்தடையும்.
இன்றைய இளைஞர்களான நமக்கெல்லாம் தேவை இந்த ஆன்மிக எழுச்சிதான். உடல், உயிர், மனம் மூன்றையும் வலிமைப்படுத்துவோம்.
‘உடலை எஃகு போல் ஆக்கு’ என்றார் விவேகானந்தர். இருபத்து நான்கு மணிநேரம் கொண்ட ஒரு நாளில் இரண்டு மணிநேரம் இந்த உடலையும், மனதையும், உயிரையும் செம்மைப் படுத்தி வந்தால் வானம் உங்கள் வசம்தான்!
No comments:
Post a Comment