பல தொழில் முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி கண்டு, விரக்தியின் விளிம்புக்குப் பலமுறை சென்றவர் அவர். தொடர் தோல்விகளில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எழுந்துவந்த கதை இது…
ஐ போன், ஐ பேட், ஐ புக், ஐ மாக் கம்ப்யூட்டர் போன்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் இன்று உலகெங்கும் அதிகம் விரும்பி வாங்கப்படும் உயர்தர எலெக்ட்ரானிக் பொருட்கள் என்பது உங்களுக்குத்
தெரிந்திருக்கும். அவற்றைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தை வெற்றியின் உச்சிக்குக்கொண்டு சென்றவர் அதன் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ். 2011-ம் ஆண்டில், புற்றுநோய் காரணமாக தனது 56 வயதிலேயே அவர் மறைந்தபோது அவரது சொத்து மதிப்பு 2,12,000 கோடி ரூபாய். இவை எல்லாம் வெளியில் தெரிந்த வெற்றிச் சித்திரங்கள். அதிகம் பேசப்படாத மற்றொரு பக்கம் இருக்கிறது.
வறுமை காரணமாக கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தான் கனவுகண்டு, தனது நண்பனுடன் உழைத்து உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அவமானகரமான முறையில் வெளியில் துரத்தப்பட்டவர் அவர். பல தொழில் முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி கண்டு, விரக்தியின் விளிம்புக்குப் பலமுறை சென்றவர் அவர். தொடர் தோல்விகளில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எழுந்துவந்த கதை இது…
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 1955-ம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்தவுடன், பால் தம்பதியருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். முழுமையான அன்புடன் வளர்க்கப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். எனினும், தான் தத்துக் கொடுக்கப் பட்டவன் என்ற மன உளைச்சல் அவருக்குள் தொடர்ந்து இருந்து வந்தது உண்மை.
பள்ளிப் படிப்பின்போதே எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்த சில மாதங்களில், ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கல்லூரிப் படிப்பு கசந்தது. சுதந்திரச் சிந்தனையை விரும்பிய அவருக்குக் கட்டுப்பாடான கல்வி முறைக்குள் இருக்க முடியவில்லை. கட்டணம் செலுத்தத் தனது பெற்றோர் படும் சிரமத்தை உணர்ந்த அவர், கல்லூரிப் படிப்பைவிட்டு வெளியேறினார்.
வீட்டுக்கும் செல்ல இயலாமல், விடுதியும் பிடிக்காமல், பல நாட்கள் தனது நண்பர்களின் அறைகளில் மாறி மாறித் தங்கினார். உணவுக்குக் காசில்லாதபோதெல்லாம், 10 கிலோ மீட்டர் நடந்துசென்று ஹரே கிருஷ்ணா கோயிலில் வழங்கப்பட்ட இலவச உணவை வாங்கிச் சாப்பிட்டதாக அவரே பின்னாட்களில் தெரிவித்திருக்கிறார்.
கல்லூரியைவிட்டு வெளியேறிய இந்த நாட்களில்தான் ஓவிய எழுத்துப் பயிற்சி வகுப்பில் தன்னால் சேர முடிந்தது என்றும், அந்தப் பயிற்சியால்தான் பிற்காலத்தில் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களைத் தன்னால் சேர்க்க முடிந்தது என்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டார்.
1974-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஹிப்பிபோல் முடி வளர்த்து, நாடோடி போன்ற மனநிலையோடு இந்தியா வந்த அவர், ஆன்மிகத் தேடலில் இறங்கினார். லுங்கியைக் கட்டிக்கொண்டு இமயமலை அடிவாரத்துக்குப் பலமுறை பேருந்துப் பயணம் போய் வந்தார். பஞ்சை பராரிபோல் வாழ்ந்து திரிந்த இந்தக் காலகட்டத்தில் இவருக்கு வயிற்றோட்டம், தோல் வியாதி எனப் பல அவஸ்தைகள். மேலும் இமயமலையில் இருந்து திரும்பிவரும் வழியில் வரலாறு காணாத கடும் புயல் மழை. உயிர்பிழைத்தால் போதும் என்ற யதார்த்த சூழலில் ஆன்மிகத் தேடல் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். சாமியார்களிடம் அறிவைத் தேடுவதைவிட தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற அறிவியலாளர்களிடம் அறிவைத் தேடுவதே சரியானது என்ற படிப்பினையைத் தான் பெற்றதாக ஜாப்ஸ் தெரிவித்தார்.
எனினும், இந்தியப் பயணத்தின் மூலமாக எதையும் தாங்கும் வலிமையான மனப்பாங்கை அவர் வளர்த்துக்கொண்டார். ‘மன வலிமையைப் பெறுவதற்கு இந்தியாவுக்குப் போய்வா’ என்று பின்னாட்களில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்குக்கு அவர் அறிவுரை கொடுத்ததும், மார்க் ஜக்கர்பர்க்கும் அதேபோன்ற பயணம் மேற்கொண்டதும் பலரும் அறிந்த செய்தி.
அமெரிக்கா திரும்பிய ஸ்டீவ் ஜாப்ஸ், வீடியோ கேம் தயாரித்துவந்த அட்டாரி நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் வேலையில் சேர்ந்தார். தனது நண்பர் ஸ்டீபன் வாஸ்னிக்கை சந்தித்து, நாம் இணைந்து செயல்பட்டால் வளர்ந்துவரும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் சாதனை படைக்கலாம் என்று கூறினார்.
ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய இருவரும் திட்டமிட்டனர். ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் கார் நிறுத்தும் இடத்தைத் தங்கள் தொழில்நுட்பக் கூடமாக மாற்றினர். ஸ்டீபன் வாஸ்னிக்கின் அபாரமான தொழில்நுட்ப அறிவும், ஸ்டீவ் ஜாப்ஸின் தொழில்முனைப்பும் இணைந்து ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் உருவாகக் காரணமாக இருந்தன.
இருப்பினும், அதனை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க இருவரிடமும் பணம் இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் அசரவில்லை. வீடியோ கேம் கணினிகளை விற்றுவந்த பைட் ஷாப் என்ற கடை உரிமையாளரைச் சந்தித்து, தங்களது ஆப்பிள் 1 மேசைக் கணினியின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். “50 கணினிகளை நீங்கள் தயாரித்துக் கொண்டுவந்தால் தலா 12,000 ரூபாய் விலையில் வாங்கிக்கொள்கிறேன்” என்று உரிமையாளர் சொன்னபோது, அதனை வணிக ஒப்பந்தமாக எழுதிக் கையெழுத்துப் போட்டு வாங்கிக்கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இந்த ஒப்பந்தத்தை எடுத்துச்சென்று, க்ரேமர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் பேசினார் ஜாப்ஸ். “என்னிடம் விற்பனை ஒப்பந்தம் இருக்கிறது, ஒரு மாதக் கடன் நிபந்தனையுடன் எலெக்ட்ரானிக்ஸ் மூலப்பொருட்களை கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்தார். க்ரேமர் எலெக்ட்ரானிக்ஸ் விற்பனை மேலாளர், ஸ்டீவ் ஜாப்ஸின் மன உறுதியைப் பார்த்து வியந்து எலெக்ட்ரானிக்ஸ் மூலப் பொருட்களைக் கொடுத்து உதவினார். ஸ்டீவ் ஜாப்ஸும், ஸ்டீபன் வாஸ்னிக்கும் இரவு பகலாக உழைத்து, ஒரே மாதத்தில் 50 மேசைக் கணினிகளை சப்ளைசெய்து முதல் லாபத்தைச் சுவைத்தனர்.
அடுத்து, கலர் மானிட்டர், ஒருங்கிணைந்த விசைப்பலகை போன்றவற்றோடு கூடிய ஆப்பிள் 2 மேசைக் கணினியை அதிக அளவில் தயாரித்து விற்க முடிவு செய்தனர். வங்கிகள் இவர்களை நம்பி கடன் தர மறுத்தன. இதுபோன்ற தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்துவந்த மைக் மற்குலாவைச் சென்று சந்தித்து தங்களது கனவுத் திட்டத்தை விவரித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். மைக் மற்குலா இசைவு தெரிவித்தார். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி கிடைத்தது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீபன் வாஸ்னிக், மைக் மற்குலா மூவரையும் பங்குதாரர்களாகக் கொண்ட ஆப்பிள் இங்க் நிறுவனம் 1976-ல் பதிவு செய்யப்பட்டது.
1977-ல் வெளிவந்த ஆப்பிள் 2 மேசைக் கணினிகள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. ஆப்பிள் நிறுவனம், 1980-ல் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டபோது முதலீடுகள் குவிந்தன. மொத்த பங்குச் சந்தையும் ஆப்பிள் பக்கம் திரும்பியது. பெப்சிகோலா கம்பெனியில் துணைத் தலைவராக இருந்த ஜான் ஸ்கல்லியைச் சந்தித்த ஸ்டீவ் ஜாப்ஸ், அவரை ஆப்பிள் நிறுவனத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். ஜான் ஸ்கல்லி தயங்கியபோது, “எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அந்தச் சர்க்கரை கலந்த தண்ணீரை விற்கப் போகிறாயா அல்லது எங்களுடன் சேர்ந்து உலகை மாற்றும் உன்னதப் பணிக்கு வருகிறாயா?” என்று ஸ்டீவ் ஜாப்ஸ் கிடுக்கிப்பிடி போட்டார். ஆப்பிள் நிறுவனத்தில் சி.இ.ஓ ஆக இணைந்தார் ஜான் ஸ்கல்லி.
ஆப்பிள் நிறுவனத்தில் நிதி குவிந்தபோதும் வேறுவகையான சிக்கல்கள் தலைதூக்கின. வியாபாரப் போட்டி பெரிதாகியது. ஐ.பி.எம் நிறுவனம் கம்ப்யூட்டர் தயாரிக்கத் தொடங்கி, பெர்சனல் கம்ப்யூட்டர்களைப் பிரபலமாக்கி பந்தயத்தில் முந்திச் சென்றது. பெரிய விளம்பரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் லிசா கம்ப்யூட்டர்கள் தோல்வியைத் தழுவின.
கிராஃபிக்ஸ் நுட்பத்துடன் கூடிய மாக் கம்ப்யூட்டர்கள் தயாரிப்புப் பிரிவு, ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆப்பிள் 2 கம்ப்யூட்டர்கள் பிரபலமான அளவுக்கு மாக் கம்ப்யூட்டர்கள் பிரபலமாகவில்லை. எனினும், சந்தைத் தேவைக்கும் அதிகமாக மாக் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப் பட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டுப்பாட்டில் மாக் கம்ப்யூட்டர் தயாரிப்புப் பிரிவு இருந்த காரணத்தால் சி.இ.ஓ ஜான் ஸ்கல்லியால் அதனைக் கேள்வி கேட்க முடியவில்லை.
தோல்விகளுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டபோது அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறுமாறு ஜான் ஸ்கல்லிக்கு சொல்லி அனுப்பினார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், நிர்வாகக்குழு வேறு மாதிரி முடிவு எடுத்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறுமாறு நிர்பந்தித்தது. தனது நண்பர்கள் அனைவரும் எதிரிகளாக மாறி, தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே தன்னை வெளியேற்றியபோது ஸ்டீவ் ஜாப்ஸ் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். 21 வயதில் தொழில் முனைவோர். 23 வயதில் கோடீஸ்வரர். 25 வயதில் மிகப் பிரபலமான மனிதர். 30 வயதில் தனது நிறுவனத்திலிருந்தே துரத்தியடிக்கப்பட்ட தோல்வியாளர்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உரையின்போது அந்த துயரமான நாட்களைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்: “அப்போது அதனை நான் எதிர்பார்க்கவில்லை என்பதால், அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். ஆனால், அதுதான் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் உணர்ந்தேன். வெற்றியாளரின் கனத்த இதயத்துக்குப் பதில், தொடங்குபவரின் மென்மையான இதயம் எனக்குக் கிடைத்தது. பரபரப்பிலேயே ஓடிக்கொண்டிருந்த நான் மிகவும் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலம் அதுதான்.’’
ஆப்பிளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், தொழில் வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு நெக்ஸ்ட் என்ற புதிய கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். அதேபோன்று கணினி வரைகலை நிறுவனமான பிக்சர் நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை வாங்கி அதன் தலைவரானார். இவை இரண்டுமே அவரது வெற்றிகரமான முடிவுகளாக அமைந்தன. பிக்சர் நிறுவனத்தை பின்னாட்களில் 50,000 கோடி ரூபாய்க்கு டிஸ்னி நிறுவனம் வாங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றத்துக்குப் பின்னர் சிறிதுகாலம் வளர்ச்சி பெற்ற ஆப்பிள் நிறுவனம், 1990-க்குப் பின்னர் பெரும் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறக் காரணமாகக் கருதப்பட்ட ஜான் ஸ்கல்லி 1993-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
வரலாறு சுழன்றது. ஆப்பிள் நிறுவனத்தின் மாக் கம்ப்யூட்டருக்கு, நெக்ஸ்ட் நிறுவன மென்பொருளை உபயோகிப்பது என்று 1996-ல் முடிவானது. நெக்ஸ்ட் நிறுவனத்தைப் பெரும் தொகை கொடுத்து ஆப்பிள் நிறுவனம் வாங்கிக்கொண்டது. நெக்ஸ்ட் நிறுவனத் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவன ஆலோசகரானார். பின்னர், ஆப்பிள் நிறுவனத்தின் முடிசூடா மன்னரானார்.
சவால்களை எதிர்கொண்டு ஆப்பிள் நிறுவனத்துக்குப் புதுரத்தம் பாய்ச்சும் புதிய பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. ஐ போன், ஐ பாட், ஐ புக் என விதவிதமான, வெற்றிகரமான தயாரிப்புகளை ஊக்குவித்து வெளியிடச் செய்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை உன்னத இடத்துக்கு இட்டுச் சென்றார். ஆப்பிள் நிறுவனத்தை 30 லட்சம் கோடி ரூபாய் பெருமானம் உள்ள ராட்சச நிறுவனமாக மாற்றிக் காட்டினார்.
தனது தொழில் துறை சவால்களுக்கு இடையே ஸ்டீவ் ஜாப்ஸ், மற்றொரு போராட்டமும் நடத்திக்கொண்டிருந்தார். 2003-ம் ஆண்டிலேயே அவருக்கு கேன்சர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரணத்துடன் அவர் நடத்திய நீண்ட போராட்டம், 2011-ம் ஆண்டு அவரது 56-வது வயதில் முடிவுக்கு வந்தது.
தனது வாழ்நாளில் பிறப்பு முதல் இறப்புவரை, தோல்விகளைத் தாங்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கப் பழகிய ஸ்டீவ் ஜாப்ஸ், இளைஞர்களுக்குச் சொல்லிய முக்கிய அறிவுரை: “வாழ்க்கை சில வேளைகளில் உங்கள் தலையில் செங்கல்லைக் கொண்டு தாக்கும். மனம் தளராதீர்கள். நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக்க வேண்டாம்.”
சுசி திருஞானம்
நன்றி- விகடன்
No comments:
Post a Comment