Thursday, January 12, 2017

தோற்றவர்களின் கதை – ஓப்ரா வின்ஃப்ரே

‘ஊடக உலகின் ராணி’ என்று போற்றப்படுபவர் அவர். 25 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தியவர் அவர். அமெரிக்க கறுப்பினத்தவர்களிலேயே சுயமாக முன்னேறிய நம்பர் ஒன் கோடீஸ்வரர் அவர். அமெரிக்காவை, வாசிக்கும் தேசமாக மாற்றியதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. சுருங்கச் சொன்னால் தன்னம்பிக்கையின் மறுபெயர் ஓப்ரா வின்ஃப்ரே. வறுமை, வன்கொடுமை, இழிச்சொல் அனைத்தையும் தன்னம்பிக்கையால் வென்றவர் ஓப்ரா வின்ஃப்ரே.

ஓப்ரா வின்ஃப்ரே, அமெரிக்காவின் மிஸிஸிபி மாநிலத்தில் மிகவும் வறுமையான குடும்பத்தில் 1954-ம் ஆண்டில் பிறந்தார். கணவனால் கைவிடப்பட்ட கறுப்பினத் தாயின் வளர்ப்பில் துயரங்களின் மொத்த வலியையும் சுமந்து வளர்ந்தார். அவரது அம்மா அடுத்த வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, துணி துவைத்துக் கொடுக்கும் இல்லப் பணியாளர். துணி வாங்கக்கூட காசில்லாமல் உருளைக்கிழங்குகளைக் கட்டிவைக்கும் சாக்குப் பையை உடுத்தி வளர்ந்தார் ஓப்ரா வின்ஃப்ரே. மற்ற சிறுவர்களால் எப்போதும் கேலி செய்யப்படும் வேதனையான சூழல் அது.

படிப்பில் படுசுட்டியாக இருந்தபோதும், பள்ளிக்குத் தொடர்ச்சியாகச் செல்ல முடியாத நிலைமை. 9 வயது முதலே வீட்டிலும் வெளியிலும் சிலரின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். துன்பத்தை வெளியில் சொன்னால் வசவு, அடி,  உதை. வேதனையைப் பொறுக்க முடியாமல் 13-ம் வயதில் வீட்டைவிட்டு ஓடினார். 14 வயதில் அவருக்கு ஒரு குழந்தை பிறந்து, பின் சில நாட்களில் இறந்துவிட்டது.

இவ்வளவு துயரம் மிக்க வாழ்க்கை தனக்கு அமைந்தது பற்றிப் பின்னாட்களில் அவர் இப்படிக் கூறினார்: “வாழ்க்கையின் மிகமிக மோசமான சம்பவங்களும்கூட, நீங்கள் அச்சத்துக்குப் பதிலாக அன்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துகின்றன. அத்தனைக் கொடூரங்களை அந்தச் சின்ன வயதில் அனுபவித்ததால், அடுத்தவர்களின் வேதனையையும், வலியையும் என்னால் துல்லியமாக உணரமுடிந்தது. அதுவே, என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு அடிப்படையாய் அமைந்தது.”

14 வயதுவரை, துயரங்கள் சூழ வாழ்ந்த ஓப்ரா வின்ஃப்ரே, அதன்பின் அவரது தந்தை வெர்னான் ஓப்ரேயின் வீட்டுக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். வெர்னான் ஓப்ரே கட்டுப்பாடு மிக்கவர். படிப்பில் மட்டுமே கவனத்தைக் குவிக்குமாறு ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு அவர் நிர்ப்பந்தம் கொடுத்தார். படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியபின், வகுப்பில் சிறந்த மாணவியாக ஓப்ரா வின்ஃப்ரே தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பள்ளி மாணவத் தலைவரானார். பேச்சு, நாடகப் போட்டிகளில் பரிசுகளை வாரிக் குவித்தார்.

வானொலி நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. தனது திறன்களை அவர் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டதால் டென்னசி மாநிலப் பல்கலைக்கழகத்தில் அவருக்கு உதவித்தொகையுடன் கூடிய பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கல்லூரிப் படிப்பின்போதே பகுதிநேர வானொலி அறிவிப்பாளர் பணி வாய்ப்பும் கிடைத்தது.

வானொலி நிகழ்ச்சிகளில் தன்னைப் புடம் போட்டுக்கொண்ட அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற முயற்சித்தார். நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கரான அவரது கரிய நிறத்தையும், குண்டான உருவத்தையும் வைத்துக் கேலிபேசினர். “உனது குரலையாவது மக்கள் சகித்துக்கொள்வார்கள், உனது உருவத்தை ஏற்கமாட்டார்கள்” என்றுகூறி அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்தனர்.

அத்தனை சவால்களையும் தாண்டி, WLAC என்ற உள்ளூர் தொலைக்காட்சியில், முதல் கறுப்பினப் பெண் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார் ஓப்ரா வின்ஃப்ரே. அதுவரை, உணர்ச்சியற்ற ஜடம்போல் செய்தி வாசித்தவர்களையே பார்த்துச் சலித்திருந்த மக்களுக்கு, உயிர்துடிப்புமிக்க ஓப்ரா வின்ஃப்ரேவின் துறுதுறு செய்தி வாசிப்பு மிகவும் பிடித்துப்போனது. 1976-ம் ஆண்டில் பால்டிமோர் WJZ தொலைக்காட்சியில் மாலை 6 மணி செய்திவாசிப்பாளர் ஆனார். ‘மக்கள் மேடை’ என்ற TALK SHOW நடத்தும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. செய்தி வாசிப்பைவிடப் பேச்சரங்கத்தில் வெளுத்துக்கட்டினார் ஓப்ரா வின்ஃப்ரே.

1984-ம் ஆண்டில் சிகாகோ தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஓப்ராவின் ஈடுபாடுமிக்க பங்கேற்பு காரணமாக, விரைவில் அது சிகாகோவின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மாறிவிட்டது. ஒரே ஆண்டில் ‘ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ என்ற பெயர் மாற்றம் பெற்றதுடன் அமெரிக்கா முழுவதும் ஒருங்கிணைக்கப்பெற்ற மாபெரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக வலிமை பெற்றது. விருதுகள் அவரைத் தேடிவந்தன.       

ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின், ‘The Color Purple’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார் ஓப்ரா வின்ஃப்ரே. தனது தொலைக்காட்சி அனுபவங்களும் திரையுலகத் தொடர்புகளும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு  நிறுவனத்தைத் தொடங்கும் ஆர்வத்தை அவரிடம் உருவாக்கின. 1986-ம் ஆண்டில் ஹார்ப்போ புரொடக்‌ஷன்ஸ்  என்ற  தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஓப்ரா வின்ஃப்ரே.

1990-களில் தனது TALK SHOW-க்களை தன்னம்பிக்கை தரும் மகத்தான நிகழ்ச்சிகளாக மாற்றினார். பிரபல மனிதர்கள் தாங்கள் சந்தித்த தோல்விகளை எப்படி வெற்றிகளாக மாற்றினார்கள் என்பது அவரது நிகழ்ச்சிகளில் மிக முக்கிய அங்கமாக அமைந்தது. துயரம் மிக்க சம்பவங்களைத் தனது விருந்தினர் விவரிக்கும்போது, அவரோடு சேர்ந்து தானும் கண்ணீர் சிந்துவது, உற்சாகமான தருணங்களில் கூச்சலிட்டுக் கொண்டாடுவது என்ற அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி பாணி உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது.

வறுமையின் கொடுமையில் வாடியிருந்த தனக்கு வாழ்க்கை தந்தது வாசிப்புப் பழக்கமே என்று பலமுறை குறிப்பிட்ட அவர், தன்னம்பிக்கை தரும் புத்தகங்களை தனது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்தார். அவர் தொலைக்காட்சியில் உருவாக்கிய புக் க்ளப், அமெரிக்கர்களிடையே புத்தக வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவதில் பெரும் பங்காற்றியது.

149 நாடுகளில் ஒளிபரப்பப்பட்ட அவரது நிகழ்ச்சிகளில் பல, சுயமுன்னேற்றம், உடல் நலம், குழந்தைகள் மற்றும் மகளிர் முன்னேற்றம் போன்ற உயர்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன. 1993-ம் ஆண்டில் மைக்கேல் ஜாக்சனை அவர் பேட்டி கண்டபோது, உலகம் முழுவதும் 3 கோடியே 65 லட்சம் பேர் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர்.

உலகின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’வை  2011-ம் ஆண்டில் நிறுத்திக்கொண்டார் ஓப்ரா வின்ஃப்ரே. எனினும், தனது ஊடக நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் பிற நிகழ்ச்சிகளில் தேவைக்கேற்ப கலந்துகொள்கிறார்.

2012-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த அவர் ஆக்ரா, ஜெய்ப்பூர்  உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டபின், “இந்தியா பன்முகத் தன்மைகொண்ட அழகிய நாடு. இது பூலோக சொர்க்கம்’’ என்று பாராட்டினார்.

ஓப்ரா வின்ஃப்ரே அமரிக்காவின் மிகவும் வலிமையான மனிதர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். 2008-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமா பெற்ற வெற்றிக்கு, ஓப்ரா வின்ஃப்ரேவின் பகிரங்க ஆதரவும் ஒரு காரணம் என்று கூறப்படும் அளவுக்கு அவர் மதிக்கப்படுகிறார்.

தொலைக்காட்சி என்பது வெள்ளைத்தோல் கொண்டவர் களுக்கானது என்ற கருத்தாக்கத்தை தவிடுபொடியாக்கிய இந்த ஆப்பிரிக்க அமெரிக்கரின் சொத்து மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அவரது பிரதான இல்லம் 42 ஏக்கர் பரப்பில் உள்ள பசுஞ்சோலைக்கு மத்தியில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், 6 மாகாணங்களில் அவருக்கு வீடுகள் உள்ளன.

வறுமையும், இழிவுபடுத்தலும், துன்புறுத்தலும்  புரட்டியெடுத்த தனது ஆரம்பகால வாழ்க்கையில் தோல்விக்கு மேல் தோல்விகளைச் சந்தித்த இந்த இரும்புப் பெண்மணி கூறுகிறார்:  “தோல்வி என்ற, ஒரு விஷயமே கிடையாது. நமது வாழ்க்கையை வேறு திசைநோக்கித் திருப்பிவிடும் ஒரு சம்பவத்தைத்தான் தோல்வி என்று குறிப்பிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அது கற்றுக்கொள்ள உதவும் ஒரு வாய்ப்பு.”

வறுமையான பின்னணிகொண்ட மாணவர்களின் கல்விக்காகவும், பிற நல்ல காரியங்களுக்காகவும் கோடிக்கணக்கில் நன்கொடைகளை வாரிவழங்கும் கொடை​யாளராகவும் வலம் பெறுகிறார் ஒப்ரா வின்ஃப்ரே.

வாழ்க்கையின் ரகசியம் குறித்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர் கூறும் முக்கிய அறிவுரை இதுதான்:  “வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியம் எது தெரியுமா? அப்படி எந்த ரகசியமும் கிடையாது என்பதுதான். ஒரு குறிக்கோளை மனதில் பற்றிக்கொண்டு, விடாமுயற்சியுடன் உழைக்கும் மனஉறுதி உன்னிடம் இருந்தால் நீ நினைத்ததைச் சாதித்துவிடுவாய்.”

நன்றி -விகடன்

No comments:

Post a Comment