Thursday, January 12, 2017

பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்!

‘இன்னும், ஏழு நிமிஷத்துல, அங்கே இருப்பேன்…’ என்று உங்களை யார் சொல்லச் சொன்னது? அப்புறம் ஏன் அரைமணி நேரம் கழித்து, உரியவர்களை அடைந்து, ‘சாரி… இவ்வளவு நேரம் ஆகும்ன்னு நினைக்கவே இல்ல; மன்னிச்சுடுங்க…’ என, அசடு வழியச் சொன்னது!

மன்னிப்பு என்பது மிகப்பெரிய வார்த்தை; ஒன்றுமில்லாததற்கெல்லாம், அதை எதற்காக பலமுறை பயன்படுத்த வேண்டும்!

‘இதோ புறப்பட்டுட்டேன்; வழியில எவ்வளவு நேரம் ஆகும்ன்னு சொல்ல முடியலை. போக்குவரத்து நெரிசலை பொறுத்து, சரியா வந்துடுறேன்…’ என்று, பொத்தாம் பொதுவாகச் சொல்ல வேண்டுமே தவிர, ஏதோ ஜப்பானிய ரயில் போல தங்களை நினைத்து, நேரத்தை சொல்லி, பின், அவதியுறக் கூடாது.

இப்படி நேரத்தை சொல்லிவிட்டு வாகனம் ஓட்டும் போது, ‘ஐயோ நேரமாச்சே… தாமதமாயிடுச்சே… சொன்னபடி போக முடியாது போலிருக்கிறதே; நம்மைப் பத்தி என்ன நெனைப்பாங்க…’ என்றெல்லாம் சிந்தித்து, ரத்த அழுத்தத்தை தேவையின்றி உயர்த்திக் கொள்வோரைப் பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது.

இந்த அணுகுமுறையில், வேறு ஒரு ஆபத்தும் உள்ளது. ‘சீக்கிரம் ஓட்டுப்பா… என்னப்பா இப்படி மாட்டு வண்டி மாதிரி ஓட்டுறே…’ என்று வாகனம் ஓட்டுபவரையும், அவதிக்கு உள்ளாக்குபவர்கள் உண்டு.

இவர்களே ஓட்டுவதாகவும் வைத்துக் கொள்வோம். இது, சாலை விபத்தில் கொண்டு போய், ‘முடிக்கிற’ செயலாகவும் ஆகி விட வாய்ப்பு உள்ளதே. இந்த நெருக்கடியை யார் தந்தது? நாமே ஏற்படுத்தி கொண்டது தானே! இது, தேவை தானா?

‘பனிரெண்டு மணியிலிருந்து 12:15க்குள்ள வர்றேன்…’ என்று தான் ஒருவரிடம் சொல்ல வேண்டுமே தவிர, ‘சரியா, ‘டாண்’னு, 12:00 மணிக்கு நான் உங்க வீட்ல இருப்பேன்’னு சொல்வதெல்லாம் தேவையற்ற பந்தா!

உங்களை, அவர்கள், 12:00 மணிக்கு வரச் சொல்கின்றனர் என்றால், நம் இலக்கை, 11:45 மணி ஆக ஆக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, மானசீக இலக்கு, 12:00 அல்ல. காரணம், 12:00 மணி என நிர்ணயித்தால், 12:15 ஆகி விடவே, வாய்ப்பு அதிகம்.

வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், நாம், ‘மிஸ்டர் பங்சுவலில்’ இருந்து, ‘மிஸ்ட் ப்ரீ பங்சுவல்’ ஆக மாறிவிடவே முயற்சி செய்ய வேண்டும். இந்த ரகத்திற்கு நாம் மாறிவிட்டால், நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் எதுவும் உயராது என்பதுடன், நம் மதிப்பும், மற்றவர்கள் மத்தியில் வெகுவாக உயரும்.

Doing in time is Saving time என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. உரிய நேரத்தில் செய்யப்படும் பணி, நமக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தி தரும். மின் கட்டணத்தை கடைசி நாளில் கட்டப் போனால், ஏகப்பட்ட கூட்டம். இரு தினங்கள் முன்னதாக கட்டினால், வரிசையில், நாம் முன்னதாகவே நான்காவது ஆள்!

‘பத்து நாட்களில் வேலையை முடித்துக் தருகிறேன்…’ என்று சொல்லுமுன், ஒரு பணியை ஏற்றுக் கொள்ளுமுன், வலுவாக சிந்திக்க வேண்டும். ஒரு வார வேலைக்கு தான், பத்து நாட்கள் அவகாசம் கேட்க வேண்டுமே தவிர, பத்து நாட்கள் வேலைக்கு, பத்து நாட்கள் கேட்கவே கூடாது. காரணம், நாம் எதிர்பாராத வகையில், குறுக்கீடுகள் வந்து விடும் என்பதோடு, அப்பணி, நம் கணிப்பிற்கு மேலாக, கடினமான ஒன்றாக அமைந்து விடவும் வாய்ப்பு உண்டு.
திருமண தேதி முடிவானதுமே, பயணச் சீட்டு எடுத்து விடுவது நல்லது. போவதா, வேண்டாமா என்கிற மன போராட்டத்தை, பயணச் சீட்டு எடுத்த பின் வைத்துக் கொள்ளலாம். பின், ரத்து செய்தால், சொத்தா பறி போய் விடும்!

இந்த மன போராட்டத்தை, திருமண தேதி வரை வைத்துக் கொள்வது தான், பெரும்பாலானோரின் பாணியாக இருக்கிறது. கடைசி நிமிடத்தில் போவது என்று ஒரு வழியாக முடிவெடுத்தால், பின், எந்த வாகனத்திலும் இடம் கிடைப்பது இல்லை. ஆக, திருமணத்தில் கலந்து கொள்வதா, இல்லையா என்று முடிவு செய்கிற உரிமை, நம் கையை விட்டு பறிபோய், ரயில்வே மற்றும் பேருந்துக்காரர்களின் கைக்கு, மாறி விடுகிறது.

எந்த ஒரு நேர ஒப்புதலுக்கும் முன்பாக, அதன் தன்மை, ஆழ அகலங்களை, சில நிமிடங்களை ஒதுக்கி, சிந்திக்க வேண்டும்.

எவ்வளவு நேரம், நாள், காலம் ஆகும் என்று மனம் கணிக்கிறதோ, அதைவிட அதிகமான கால அளவையே, பிறரிடம் சொல்ல வேண்டும்.

இதற்கு முன்பாகவே முடிக்கிற போது, செல்கிற போது, ‘அட பரவாயில்லையே… அசத்தி விட்டீர்களே…’ என்கிற பாராட்டு கிடைக்கும்.
பாராட்டா, பதற்றமா நீங்களே முடிவு செய்யுங்கள்!

No comments:

Post a Comment