Thursday, January 12, 2017

கௌரவமான பண்பு நலன்களை உருவாக்கிக்கொள்ள

 01. நீங்;கள் உண்மையாகவே நம்பத்தகுந்தவர் நேர்மையின் இருப்பிடம் என்ற சமூக முத்திரையை பெற வேண்டும், அதற்காக பாடுபடுங்கள். கெட்டவர் என்று பெயரெடுக்க ஒரு நாள் போதும், நல்லவர் என்று பெயரெடுக்க வாழ்நாளே போதாது.

02. ஏமாற்றாதீர்கள்.

03. திருடாதீர்கள், பிறரின் பொருட்களை ஒருபோதும் கேட்காமல் எடுக்காதீர்கள். அனுமதி பெறாமல் இரவல் எடுத்துச் செல்வதும்கூட ஒருவகையில் திருட்டுத்தான்.

04. நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். எவரை நண்பராகக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, எவருடைய நட்பை தவிர்க்கிறீர்கள் என்பதும் உங்கள் பண்பு நலனை வெளிப்படுத்தும்.

05. நட்பை விலை கொடுத்து வாங்காதீர்கள், அப்படிச் செய்வோரிடம் இருந்து விலகியே இருங்கள். நட்பு என்பது விற்பனைச் சரக்கல்ல.

06. உன்னதப் பண்புகள் கொண்ட மனிதர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

07. நியாயமான காரணங்களை தேர்வு செய்யுங்கள், நியாயமானதை மட்டும் செய்யுங்கள், நன்நெறியை பயிலுங்கள் அதுதான் செய்வதற்குரிய செயல்.

08. எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமாக தருவது என்ற கொள்கையில் வாழுங்கள். உதவுவதில் மற்றவருக்கு முன்னோடியாக செல்லுங்கள், அதுபோல உங்களுக்கு மற்றவர் தருவதைவிட நீங்கள் அதிகமாகவே திருப்பிக் கொடுங்கள்.

09. கொடுத்தவாக்கை நிறைவேற்றுங்கள் பிறரை ஒருபோதும் ஏமாற்றத்திற்கு ஆளாக்க வேண்டாம்.

10. அதிகாரத்தை அல்ல பொறுப்பை கேட்டுப் பெறுங்கள்.

11. பிறருக்கு உதவி செய்வதில் மகிழ்வடையுங்கள், எவருக்காவது ஏதோ ஒருவகையில் உதவி செய்ய முன் செல்லுங்கள்.

12. இரகசியம் காப்பதை கற்றுக்கொள்ளுங்கள் உங்களிடம் இரகசியமாக கூறப்பட்ட எதையும் வெளியிடாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றி இழிவாக பேசாதீர்கள் அது இழிந்த பண்பாகும்.

14. உங்கள் மனச்சாட்சியை எப்போதும் உயிர்ப்பாக வைத்திருங்கள்.

15. மனிதர்களைப்பற்றி முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டாம், எல்லா உண்மைகளையும் திரட்டிய பின்பே முடிவு செய்யுங்கள். நாம் தோற்றத்தைக் கொண்டு மற்றவர்களை ஏற்கிறோம், நிராகரிக்கிறோம் வெளித்தோற்றமே போலியாக இருக்கலாம்.

16. நீங்கள் நீங்களாகவே இருங்கள் நடிக்காதீர்கள், போலியாகக் காட்டிக்கொள்ளாதீர்கள். இதற்கு உங்கள் மறுபக்கத்தையும் காட்ட வேண்டும் என்பது பொருள் அல்ல. உங்கள் குறைகளைப் பற்றி பெருமைப்படாதீர்கள், முன்னேற முயற்சி செய்யுங்கள், ஆனால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

17. மற்றவர்களுக்கு உதவுங்கள், மற்றவர் தோல்வி கண்டால்தான் நீங்கள் வெற்றிபெற முடியும் என்று எண்ணாதீர்கள். உதவி என்றால் தானாகவே முன்சென்று உதவுவது, எதிர்ப்படும்போது செய்வதல்ல. உதவுதல் என்பது பிரதிபலன் கருதாத செயல். நட்பில் தவிர்க்க முடியாதது, பயிற்சி செய்ய வேண்டிய செயல்.

18. ஒரு தவறு செய்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்க தவறவேண்டாம். மற்றவர் தவறு செய்தால் பொறுமையை வெளிப்படுத்துங்கள். மற்றவர் செய்த அதே தவறுகளை பின்னர் நீங்களும் செய்யாதீர்கள். மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நீங்கள் தவறு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தவறுகள் இயற்கைதான், ஆனால் துன்பத்தைத் தரும்.

19. பெற்றோருக்கு பெருமை தேடித்தாருங்கள் அவர்கள் உங்களை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு செய்த அனைத்துக்கும் நன்றியுடையவர்களாக இருங்கள். நேர்மையான பெற்றோர் அமைவது மகத்தான பெருமை. நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு அவ்வாறே இருங்கள்.

20. எப்போதும் இனிய சொற்களையும் குறைந்த விவாதங்களையும் பயன்படுத்துங்கள்.

21. தயவுசெய்து, நன்றி இந்தச் சொற்களை உளப்பூர்வமாக பயன்படுத்துங்கள். அர்த்தமற்ற பகட்டு வெளிப்பாடுகளில் இருந்து வெளிப்பட்டுக் கொள்ளுங்கள்.

22. பிறர் பேசக்கேட்பதை பழகிக் கொள்ளுங்கள், மற்றவர் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர் சொல்ல வந்ததை நீங்கள் முடித்துவைக்க முயலாதீர்கள்.

23. மென்மையானவராக இருங்கள் அது வலிமையின் வெளிப்பாடு. உள்ளே பலவீனம் இருப்பவர்தான் முரட்டுத்தனம் காட்டுவார்.

24. உங்களிடமுள்ள பொருட் செல்வம் எவ்வளவு என்பதைவிட உங்கள் மதிப்பு எவ்வளவு என்பதே முக்கியமானது.

25. வதந்திகள் பரப்புவோர், வம்பளக்கும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உரையாடும்போது உங்கள் பேச்சில் பொறாமையோ, இகழ்ச்சியோ தொனிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெட்டிப்பேச்சு வீண் விதண்டாவாதங்களில் இருந்து விலகியிருங்கள். மற்றவர்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டத்தை பேசி சிரிக்காதீர்கள், அதில் மகிழ்ச்சியடையாதீர்கள், எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றவர்களை கேலி பேசாதீர்கள்.

26. சுறுசுறுப்பாக இருங்கள் செயற்பட்டுக்கொண்டே இருங்கள். அனைவருக்கும் நன்மை தரக்கூடிய சமுதாயத்தை உருவாக்குங்கள். ஒரு பொழுதுபோக்கு அல்லது சேவையை தேர்வு செய்யுங்கள் அது நின்மதி தரும்.

27. வாரத்திற்கு ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். அது உங்கள் ஆன்மாவை செழுமைப்படுத்தும்.

No comments:

Post a Comment