Thursday, January 12, 2017

தோற்றவர்களின் கதை – சில்வஸ்டர் ஸ்டாலோன்!

சில்வஸ்டர் ஸ்டாலோன்!

1976-ல் தொடங்கி, கால் நூற்றாண்டு காலம் ஹாலிவுட்டைக் கலக்கிய சூப்பர் டூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன். ராக்கி, ராம்போ போன்ற கதாபாத்திரங்கள் மூலமாகக் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் அவர். கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி அவரைவைத்துப் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டனர். 

அந்த இடத்தைப் பிடிக்க அவர் நடத்திய போராட்டம் வலி நிறைந்தது. அடுக்கடுக்கான தோல்விகள் தன்னைப் புரட்டி எடுத்தபோதும், அசாத்தியமான தன்னம்பிக்கையோடு போராடித் தோல்விகளைத் தோற்கடித்த முன்னுதாரண மனிதர் அவர்.

நியூயார்க் நகரில் 1946-ம் ஆண்டு பிறந்த சில்வஸ்டர் ஸ்டாலோன், பிறவியிலேயே தனது முகத்தின் இடது கீழ் பாகத்தில் பக்கவாதத்தால் தாக்கப்பட்டவர். குழந்தையாக இருந்தபோது பேசுவதற்குச் சிரமப்பட்ட அவர், பள்ளியில் படிக்கும்போது, மற்றவர்களின் கேலிப்பொருளாக இருந்தார். தனது கோணல் முகத்தையோ, தத்திப் பேசும் பேச்சையோ கேலி செய்பவர்களை அடித்துத் துவைத்துவிடுவார். இதற்காகவே குத்துச்சண்டைப் பயிற்சியில் சிறு வயதிலேயே சேர்ந்துகொண்டார். படிப்புச் சரியாக ஏறவில்லை. ‘ரவுடி மாணவன்’ என்ற பட்டம் வேறு சேர்ந்துகொண்டது.    

முடிதிருத்தும் தொழிலாளரான ஸ்டாலோன் தந்தை, 9-வது வயதிலேயே ஸ்டாலோனை விட்டுச் சென்றுவிட்டார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஸ்டாலோன், பகுதி நேரமாகச் சலூன்களில் வேலை செய்து, தனது பள்ளிப் படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்புப் பாதியில் நின்றது. 

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. ஒவ்வொரு ஸ்டுடியோவாகப் போய் வேலை கேட்டார். ‘‘கோணலான முகத்தையும், திக்குவாயையும் வைத்துக்கொண்டு, நீ நடிகர் ஆக ஆசைப்படலாமா’’ என்று கேலிசெய்து துரத்திவிட்டனர். தான் குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாததால், வீட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார். 

சாப்பாடு போட முடியாததால், தான் வளர்த்துவந்த நாயையும் 25 டாலருக்கு விற்றார். வீடில்லாமல் நியூயார்க் துறைமுகப் பேருந்து நிலையத்தில் வாரக்கணக்கில் பசியோடு படுத்திருந்து, வறுமையின் வேதனையை அனுபவித்தார். 

‘‘வேறு வேலை தேடியிருக்கலாம். ஆனால் ஹாலிவுட் ஸ்டார் என்ற கனவு நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் எனது குறிக்கோளில் இருந்து பின்வாங்கக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்’’ என்று பின்னாட்களில் குறிப்பிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன்.

பல நாட்கள் குளிர் தாங்க முடியாமல் தவித்தார். பகல் வேளைகளில் திறந்திருக்கும் நூலகத்துக்குச் சென்றால் குளிரிலிருந்து தப்பிக்கலாம் என்பதால், அங்கிருந்த நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். எட்கர் ஆலன் போ, லியோ டால்ஸ்டாய் போன்ற எழுத்தாளர்களின் நூல்களில் மனதைப் பறிகொடுத்தார். ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் காரணமாக, திரைப்பட கதை எழுத முயற்சி செய்தார். 

அவர் எழுதிய சில திரைக்கதைகளை, சிறு தொகை கொடுத்து சில ஸ்டுடியோ ஏஜென்ட்கள் வாங்கிக் கொண்டார்கள். ‘‘எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுங்கள்’’ என்று ஸ்டாலோன் கேட்டபோது, அதே ஏஜென்ட்கள் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள். அவரது நச்சரிப்பைத் தாங்க முடியாத ஒரு ஏஜென்ட், ஒரு திரைப்படத்தில் அடிவாங்கும் ஒரு துணை நடிகர் கதாபாத்திரத்தில் அவரை நடிக்கவைத்தார். இன்னொருமுறை பிக்பாக்கெட் திருடன் கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார்.   

1975-ம் ஆண்டு உலக சாம்பியனான முகமது அலிக்கும், ஸுக் வெப்னருக்கும் இடையே நடந்த குத்துச்சண்டையை தொலைக்காட்சியில் பார்த்தார் சில்வஸ்டர் ஸ்டாலோன். தொடக்க ரவுண்டுகளில் ஸுக் வெப்னருக்கு மரண அடிகளைக் கொடுத்துத் துவைத்து எடுப்பார் முகமது அலி. ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், மெல்ல எழுந்திருந்து திரும்ப அடிப்பார் ஸுக் வெப்னர். இருந்தாலும், இறுதியில் வெற்றி பெறுவார் முகமது அலி.  

அடிமேல் அடி, மரண அடிகளை வாங்கினாலும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், விடாமல் போராடும் ஒரு சாதாரண குத்துச்சண்டை வீரன் கதாபாத்திரத்தை மனதில்வைத்து, ‘ராக்கி’ திரைப்படக் கதையை உருவாக்கினார் சில்வஸ்டர் ஸ்டாலோன். ஒரே நாளில் 20 மணி நேரம் தொடர்ச்சியாக உட்கார்ந்து, ‘ராக்கி’ திரைப் படத்தின் கதை – வசனத்தை முழுமையாக எழுதி முடித்தார். 

‘ராக்கி’ கதை – வசனத்தை எடுத்துக்கொண்டு ஸ்டுடியோ ஏஜென்ட்களையும் இயக்குநர்களையும் சந்தித்தார். இவர் கதையை விவரிக்கத் தொடங்கியதும் ஏஜென்ட்கள் ‘ஆளை விடு’ என்று ஓடத் தொடங்கினர். ‘‘படத்தில் நான்தான் கதாநாயகன்’’ என்று சில்வஸ்டர் ஸ்டாலோன் சொன்னபோது, ‘‘இந்த உருவத்தையும், குரலையும் வைத்துக்கொண்டு இப்படி நீ ஆசைப்படலாமா… இது நியாயமா?’’ என்று கிண்டல் செய்து அவரை விரட்டிவிட்டனர். 

சுமார் 1,500 இயக்குநர்களிடமும், திரைப்பட ஏஜென்ட்களிடமும் சில்வஸ்டர் ஸ்டாலோன், ராக்கி கதையைச் சொன்னார். அத்தனைப் பேரும், ‘‘இந்தக் கதையைப் படமாக எடுத்தால் ஓடாது’’ என்று சொல்லி நிராகரித்துவிட்டார்கள்.  

கடைசியாக ஒரு பட நிறுவனம் அவரது கதைக்கு 1,00,000 டாலர் பணம் தர ஒப்புக்கொண்டது. அந்தக் கதையில் கதாநாயகனாகத் தானே நடிக்க விரும்புவதாக சில்வஸ்டர் ஸ்டாலோன் சொன்னபோது… அந்த இயக்குநர், ‘‘அப்படியெல்லாம் பேராசைப்படாதே. உனக்கு கதாநாயகனுக்குரிய எந்தத் தகுதியும் இல்லை’’ என்று கூறிவிட்டார். ‘‘அப்படியென்றால் வேண்டாம்’’ என்று மறுத்துவிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன். ‘‘வேண்டுமானால் 1,25,000 டாலர் தருகிறோம். கதையை மட்டும் கொடு’’ என்று பேரம் பேசினார் இயக்குநர். ‘முடியாது’ என்று மறுத்துவிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன்.  

மற்றொரு படத் தயாரிப்பு நிறுவனம் அந்தக் கதைக்கு 2,50,000 டாலர் தரத் தயார் என்றது. ஆனால், அவர் கதாநாயகன் வாய்ப்புக் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பேரம் பேசியது. அடுத்து, அதே நிபந்தனையுடன் 3,60,000 டாலர் தரத் தயார் என்று பேரம் பேசியது. சில்வஸ்டர் ஸ்டாலோனின் நண்பர்கள் அதனை ஏற்க வலியுறுத்தினர். ஆனால், உறுதியாக மறுத்துவிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன். 

சில்வஸ்டர் ஸ்டாலோனின் உறுதியான முடிவை யாருமே மாற்ற முடியாது என்று புரிந்துகொண்ட அந்த நிறுவனம் அவருக்கு 35,000 டாலர் மட்டும் ஊதியம் தருவதாகவும், மீதித் தொகையை படத்தில் அவரது முதலீடாகக் கொள்வதாகவும், அவரே கதாநாயகனாக நடிக்கலாம் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. 

1976-ம் ஆண்டில், சில்வஸ்டர் ஸ்டாலோனின் வெறித்தனமான ஈடுபாட்டுடன் ‘ராக்கி’ திரைப்படம் 28 நாட்களில் உருவாக்கப்பட்டது. ஒரு மில்லியன் டாலர் செலவில் தயாரான ‘ராக்கி’ திரைப்படம் 225 மில்லியன் டாலர் வசூலை வாரிக் குவித்தது. ஹாலிவுட்டின் சூப்பர் டூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன்.   

சில்வஸ்டர் ஸ்டாலோன், ராக்கி கதாபாத்தி ரத்தின் மூலமாக இளைஞர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் இவை: ‘‘இந்த உலகம் வசந்தமும், வானவில்லும் நிறைந்தது எனக் கற்பனை செய்துகொள்ளாதே. இது சுயநலமும் அசிங்கமும் நிறைந்த இடம். நீ எவ்வளவு வலிமையானவனாக இருந்தாலும் இந்த உலகம் உன்னைப் பலமாக அடித்துக் கீழே தள்ளும். எத்தனை பலமான அடி வாங்கினாலும், மனம் தளராமல் உன்னால் முன்னோக்கிச் செல்ல முடியுமானால், நீ வெற்றியாளன்.’’

நன்றி-விகடன்

No comments:

Post a Comment