Wednesday, July 17, 2013

அணுகுமுறையை சீர்செய்ய அடிப்படை வழிகள்


எல்லா முயற்சிகளின் வெற்றிக்கும் அணுகு முறைதான் அடிப்படை என்கிறார்கள். உறவுகளின் உறுதிக்கு, தொடர்புகளைத் தக்கவைப்பதற்கு என்று எதைக் கேட்டாலும், அணுகுமுறைதான் எல்லாவற்றுக்கும் அடித்தளம் அமைக்கிறது என்கிறார்கள்.

அப்படியானால் அணுகுமுறை என்பது செயலில் ஆரம்பமாகிற விஷயமல்ல. நம் மனதில் ஆரம்பமாகிற விஷயம். எச்சரிக்கை உணர்வு காரணமாக எழுகிற சில எதிர்மறை சிந்தனைகளை கவனிக்காமல் விடுகிறபோது, அவை வளர்ந்து நம் அணுகுமுறையில் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் கலந்து விடுகின்றன.

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறது ஒரு குழந்தை. ஒரு நாள் அங்கு லிஃப்ட் வேலை செய்யவில்லை. இது,பெரியவர்களுக்குத்தான் திண்டாட்டம். குழந்தைகளுக்கோ கொண்டாட்டம். குழந்தை உற்சாகக் கூச்சலிட்டுக் கொண்டு நான்காவது மாடியிலிருந்து தன்னுடைய வீடு நோக்கி ஓடுகிறது. முதல்மாடியிலிருப்பவர் அந்தக் குழந்தையை எட்டிப் பார்த்துவிட்டு கதவை சார்த்திக் கொள்கிறார். இரண்டாவது மாடியிலிருப்பவர், “ஏய்! சத்தம்போடாதே!” என்று அதட்டுகிறார். கூச்சலைக் குறைத்துக்கொண்டு ஓட்டத்தை தொடர்கிறது குழந்தை. மூன்றாவது மாடியிலிருப்பவர், “தம்பி! ஓடாதே! மெதுவாப்போ” என்று எச்சரிக்கிறார்.

அதன்பிறகு மாடிப்படிகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் குழந்தைக்குப் பரவசம் வருவதில்லை. பயம்தான் வருகிறது. ஓடுவது தவறான விஷயம் என்று புரிந்து கொள்கிற குழந்தை, விளையாட்டை எச்சரிக்கையோடும் எதிர்மறை உணர்வோடும் அணுகினால், அச்சத்தோடு வளர்கிறது. இந்த அச்சத்துக்குக் காரணம், இரண்டு மாடிக்காரர்களின் எரிச்சல் குரலும் எச்சரிக்கை மொழியும்தான்.

குழந்தைக்கு மட்டுமல்ல, வாழ்வின் பல அருமையான அம்சங்களில்கூட நம்மில் பலருக்குள் இந்த எதிர்மறை உணர்வுகள் செயல்பட்டு அணுகுமுறையில் ஒரு பின்னடைவை ஏற்படுத்திவிடுகிறது.

நம்முடைய அணுகுமுறை மனதுக்குள் நிகழ்கிற விஷயம். அது செயலாக வெளிப்பட்டாலும்கூட அதற்கு வேர் இருப்பது நம் அபிப்பிராயங்களில்தானே!

அப்படியானால், நம் அணுகுமுறையை சீர்செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கான அடிப்படை வழிகள் சில உண்டு. என்னவென்று பார்போமே!

எதை உள்வாங்குகிறீர்கள்?

தர்மசங்கடமான ஒரு சூழலை எதிர்கொள்கிறபோது, அதிலிருந்து வெளிவரும் வரை போராட்டமாகத்தான் இருக்கும். ஆனால், எப்படியாவது வெளிவரவேண்டும் என்கிற வேகத்தில், அந்த ஒரு சிக்கலை ஓராயிரம் கோணங்களில் யோசித்திருப்பீர்கள். அந்த யோசனைகள், உங்களுக்குள் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். அந்தச் சூழலில் இருந்து வெளிவருகிறபோது, முன்னைவிட உங்கள் தெளிவும் அனுபவமும் பெருகியிருக்கும். ஆனால், அந்த சம்பவம் ஏற்படுத்திய கசப்பையும் தர்மசங்கடத்தையும் பெரிதாகக் கருதுவதன் மூலம், உங்களுக்குக் கிடைத்த தெளிவை மறந்து விடுகிறீர்கள். உங்கள் உரமும் மனபலமும் கூடுவதற்கான அம்சங்களை மட்டுமே அந்த சம்பவத்திலிருந்து நீங்கள் உள்வாங்கினால், எப்போது யோசித்தாலும் அந்தச் சம்பவம் பற்றிய நினைவுகள், உங்கள் உதடுகளில் ஒரு புன்னகையை மலரவிடுமே தவிர உங்கள் உற்சாகத்தை உலர விடாது.

எனவே, எதிலும் நல்லதைத் தேடுங்கள்:

வேப்பம் பூவிலும் தேனெடுக்கிறது தேனீ என்பார் கவிஞர் வைரமுத்து. கசப்பிலிருந்து இனிப்பெடுக்க நமக்கும் தெரியவேண்டும். நமக்குக் கடவுள் அனுப்பும் பரிசுப் பொருள், ஒரு பிரச்சினையில் சுற்றித்தான் தரப்படுகிறது என்றார் ஓர் அறிஞர். பிரச்சினைகளைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கே அந்தப் பரிசின் அருமையும் தெரிகிறது. ஒரு சிக்கலுக்கான தீர்வு அந்தச் சிக்கலிலா இருக்கிறது. அந்த சிக்கலை நீங்கள் அணுகுகிற முறையில் இருக்கிறது. பல வெற்றியாளர்களின் வரலாறுகளை நாம் வாசிக்கும்போதெல்லாம், ஒன்று நன்றாகப் புரிகிறது. அவர்கள் பிரச்சினைகளே இல்லாமல் வாழ்ந்தவர்களல்ல. ஒரு நல்ல வாய்ப்பை எதிர்கொள்கிற நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் ஒவ்வொரு பிரச்சினையையும் அவர்கள் எதிர்கொண்டு, அதில் ஜெயித்திருக்கிறார்கள். நல்ல அம்சம் என்பது, எல்லாவற்றிலும் இருக்கும் என்ற பொதுவிதியை மறப்பவர்களே தலைவிதியை நொந்து கொள்பவர்கள்.

எதிர்காலத்தை எழுதுங்கள்:

நிகழ்காலத்தில் நேர்கிற ஒரு பின்னடைவை, அங்கேயே தீர்க்கப் போகிறீர்களா, அல்லது அதையும் எதிர்காலத்திற்குத் தூக்கிச் செல்லப் போகிறீர்களா என்பது உங்கள் கைகளில் இருக்கிறது. இன்று நீங்கள் எப்படி இருந்தாலும் சரி, என்னவாக இருந்தாலும் சரி, உங்கள் எதிர்காலத் திட்டத்தை அது பாதிக்கப் போவதில்லை என்று திடமாக நம்புங்கள். நீங்கள் திட்டமிட்டுள்ள எதிர்காலத்தை எட்டிப்பிடிக்க நிகழ்காலத்தின் சிரமங்களோ உங்கள் கடந்த காலக் குறைபாடுகளோ குறுக்கிடாத அளவுக்கு உங்கள் இலக்கையும், இலக்குக்கான பயணத்தையும் நம்பிக்கையுடன் வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

நேர்மறை உணர்வுகளை மட்டுமே அனுமதியுங்கள்:

கவலை என்பது, குரங்கின் உடம்பில் இருக்கும் காயம் போன்றது. சொரிந்து கொடுப்பது சுகமாய் இருந்தாலும் சீழ்பிடிக்கும் அளவு அது பெரிய காயமாய் வளரும். இக்கட்டான ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால் சுயபச்சாதாபமும், அடுத்தவர்களின் அனுதாபமும் சுகமாக இருக்கிறதென்று நினைத்தால் அதிலேயே சிக்கி விடுவீர்கள். தொழிலில் ஏதாவது தேக்கமோ சரிவோ ஏற்பட்டால் போதும், “மார்க்கெட் மோசமாயிருக்கு போலிருக்கே! என்ன பண்றீங்க?” என்ற கேள்விகளோடு, கால்டாக்ஸி பிடித்து உங்களைத் தேடி வந்துவிடுவார்கள். “அதை ஏன் சார் கேக்கறீங்க” என்ற அங்கலாய்ப்புடன் ஆரம்பித்து அவரின் அரட்டை ஆர்வத்திற்குத் தீனி போடாதீர்கள்.

“கொஞ்சநாள் அப்படி இருந்ததுங்க! இப்ப நிலைமை சீராகி வருது” என்று மலர்ச்சியோடு தொடங்குங்கள். காத்திருக்கும் கால்டாக்ஸியில் ஏறி, அவர் கிளம்பி விடுவார்.

சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதிலிருந்து மீள முடியும் என்கிற நம்பிக்கை எவ்வளவு ஆழமாக வேர் கொள்கிறதோ, அந்த அளவுக்கு உங்கள் வெற்றி உறுதிப்படுகிறது.

எழுதிப்பார்த்தால் எளிதாகும்:

ஒரு சிக்கலை எப்படி அணுகுவதென்று நீங்கள் யோசிக்கத் தொடங்கினால் உங்கள் மனதில் ஏகப்பட்ட எண்ணங்கள் எழும். அவற்றை ஒவ்வொன்றாக ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டே வரும்போது, பிரச்சினையின் கனம் குறைந்து தீர்வின் பலம் கூடுவதை உணர்வீர்கள். இதற்கு உளவியல் அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. எழுதிப் பார்க்கும்வரை, அந்த சிக்கலின் நீளஅகலங்கள் நமக்குப் புரியாது. ஏதோ பெரிய சிக்கலாய் இருப்பதாய்த் தோன்றும். ஒரு காகிதத்தில் எழுதிவிட்டாலோ உடனே நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தோன்றும்.

அணுகுமுறை சீராகும்போது அத்தனையும் நேராகிறது என்பதுதான் உலகிலுள்ள சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் வழங்குகிற வாக்குமூலம்.

ஆமாம், அணுகுமுறை என்பது என்ன? எடை தூக்கும் போட்டியில் ஒரு பயில்வான் எப்படி செயல்படுகிறார் என்பதை கவனியுங்கள். முதலில், தான் தூக்க வேண்டிய எடையை இரண்டு கைகளாலும் தொட்டு, தூக்குவதற்கு வாகாக இருக்கிறதா என்று பார்க்கிறார். பிறகு நிமிர்கிறார். மறுபடியும் குனிந்து எடையை சற்றே அசைத்துப் பார்க்கிறார். அப்போதே, அந்த எடையைத் தூக்க எந்த அளவு ‘தம்’ பிடிக்க வேண்டும். எவ்வளவு பலத்தை பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டுவிடுகிறார். இதுதான் அணுகுமுறை.

இந்த சிக்கலைத் தீர்க்கப் போகிறோம் என்பது, முதலில் ஏற்பட வேண்டிய உறுதி. எப்போது தீர்க்கப் போகிறோம், எப்படித் தீர்க்கப் போகிறோம் என்பது, அதன் பின்னர் போடுகிற கணக்கு. அதை செயல்படுத்தும்போது எதையும் சரியான கோணத்தில் சந்திப்பீர்கள்! சாதிப்பீர்கள்

No comments:

Post a Comment