பர்சனாலிட்டி அதாவது ஆளுமை என்பது ஒருவரது தோற்றம் மட்டும் அல்ல. பழகும் பண்பு, நாகரீகம், பொது அறிவு, இன்சொல், சுத்தம், பொறுமை இப்படி பல விஷயங்களை உள்ளடக்கியது தான் ஒருவரது ஆளுமை.
தோற்றத்தில் மட்டும் வசீகரத்தை வைத்துக்கொண்டு உள்ளுக்குள் குப்பை மலையாய் இருப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
ஒருவரது வெளிதோற்றத்தை வைத்து மட்டும் வரும் மதிப்பீடானது நிரந்தரமாக இருப்பதில்லை. ஆங்கிலத்தில் ஒரு அருமையான சொற்றொடர் உண்டு. Your personality can open any door. But only your character keeps it open என்று. எத்துனை அருமையான ஒரு வரி…
தோற்றத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருவதால் தான் பல காதல்கள் முறிந்துவிடுகிறது. பல திருமணங்கள் சில ஆண்டுகளிலேயே ஏன் சில மாதங்களிலேயே கோர்ட் படியேறிவிடுகின்றன.
வெறும் தோற்றத்தில் மட்டும் அழகை வைத்துக்கொண்டு, உள்ளுக்குள் தன்னம்பிக்கையும் தைரியமும் இன்றி காணப்படும் ஆண்கள் மண் குதிரைக்கு சமம். அதே போல தோற்றத்தில் மட்டும் அழகு இருந்து நற்குணங்கள் எவையும் இன்றி காணப்படும் பெண்கள் காகிதப் பூக்கள். எனவே நீங்கள் ஆணோ பெண்ணோ காகிதப்பூவையோ அல்லது மண் குதிரையையோ தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது.
தோற்றத்தில் நன்றாக காட்சியளிப்பவர்கள் தங்கள் ஆளுமையை மேன்மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அது கெடுவதற்குரிய எந்த செயலையும் (கோபம், பொறாமை, வக்கிர புத்தி, புகை மற்றும் மது பழக்கம் உள்ளிட்டவைகளை அறவே தவிர்க்க வேண்டும்) செய்யவேக் கூடாது. தோற்றத்தில் தாங்கள் சுமாராக இருப்பதாக கருதுபவர்கள் அது பற்றிய தாழ்வு மனப்பான்மையை விடுத்து தங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதன் மூலம் பலரை அவர்கள் தங்கள் பக்கம் ஈர்க்கமுடியும்.
ஆரம்பத்தில் நாம் அலட்சியமாக கருதி ஒதுக்கும் சிலர் (பெரும்பாலும் தோற்றத்தில் சுமாராக இருப்பதால்) நாளடைவில் நமது அன்புக்கு மிகவும் பாத்திரமாகி விடுகிறார்களே எப்படி? ஒரு கட்டத்தில் அவர்களது புற அழகை பற்றிய சிந்தனையே நமக்கு தோன்றாமல் அவர்களது ஆளுமையை அதாவது அக அழகை மட்டுமே விரும்புகிற மனிதர்களாக மாறிவிடுகின்றோமே…. எப்படி?
நமது அன்றாட வாழ்க்கையிலேயே பார்த்திருப்போம்…. அலுவலகத்திலோ அல்லது வேறு எங்காவதோ…. உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆரம்பத்தில் நாம் அலட்சியமாக கருதி ஒதுக்கும் சிலர் (பெரும்பாலும் தோற்றத்தில் சுமாராக இருப்பதால்) நாளடைவில் நமது அன்புக்கு மிகவும் பாத்திரமாகிவிடுகிறார்களே எப்படி? ஒரு கட்டத்தில் அவர்களது புற அழகை பற்றிய சிந்தனையே நமக்கு தோன்றாமல் அவர்களது ஆளுமையை அதாவது அக அழகை மட்டுமே விரும்புகிற மனிதர்களாக மாறிவிடுகின்றோமே…. எப்படி? சில சமயம் இத்தகைய ஈர்ப்பு காதலாக கூட மாறிவிடுவது உண்டு. இந்த காதல் பெரும்பாலும் உறுதியாக இருக்கும்.
So, ஒருவரைப் பற்றிய நமது மதிப்பீட்டில் அவரது ஆளுமை (Personality) என்பது மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த ஆளுமை என்பது அவரது தோற்றத்தை மட்டும் வைத்து வருவதில்லை என்பதும் புரிகிறதல்லவா…?
சரி… இந்த ஆளுமையை எப்படி வளர்த்துக்கொள்வது….?
அதற்குரிய வழிமுறைகளை விளக்குவது தான் இந்த தொடர். கவனத்துடன் படித்து வாருங்கள். கூடுமானவரை இத்தொடரில் விளக்கப்படுவற்றை பின்பற்றி வாருங்கள். அப்புறம் என்ன… நீங்கள் தான் உங்கள் அலுவலகத்தில் & சுற்றுபுறத்தில் ஒரு நிஜ ஹீரோ…!
தொடரை துவக்கும் முன் சில அடிப்படை விஷயங்கள்…
தங்கள் பர்சனாலிட்டியை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புபவர்கள் கீழே கூறிய சில அடிப்படை விஷயங்களை கடைபிடிக்கவேண்டும்.
Simple tips to improve your personality – 1
* பொது அறிவை நிச்சயம் வளர்த்துக் கொள்ளவேண்டும். நாட்டு நடப்பை தெரிந்துகொள்வது அவசியம். தினமும் ஏதாவது ஒரு செய்தித் தாளை அவசியம் படிக்கவேண்டும். ‘நான் பேப்பர்ல்லாம் படிக்கிறதே இல்லை…’ என்று சிலர் பெருமையாக கூறுவதை கேட்க்கும்போது எரிச்சலாக இருக்கும் எனக்கு. ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் ஆங்கில செய்தித் தாள்களை படிக்கலாம். அதே போல… நல்ல தொலைகாட்சி ஒன்றை தேர்ந்தெடுத்து தினமும் நியூசை பார்க்கவேண்டும்.
* தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரிஞ்சிக்காம இருக்கிறவங்க… எந்த காலத்துலயும் ஆளுமையை வளர்த்துக்கொள்ளவே முடியாது.
* உங்கள் கட்டுப்பாட்டை மீறிய விஷயங்களில் நெகட்டிவான சிந்தனைகளை தவிர்க்கவேண்டும். அதற்கு பதில் பாசிட்டிவான விஷயங்களில் உங்கள் மனதை செலுத்துங்கள்.
* உங்கள் எதிரியே ஆனாலும்… அவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அதை கண்டு சிரிக்காதீர்கள். மாறாக அவர்களுக்கு உதவ முடியுமா என்று பாருங்கள்.
* உங்களது ஆற்றலை நேரத்தை அர்த்தமற்ற பேச்சுக்களிலும் விவாதங்களிலும் ஈடுபட்டு வீணடிக்கவேண்டாம். (குறிப்பாக ஃபேஸ்புக்கில்). பிறரை பற்றி வம்பளப்பதை அறவே நிறுத்தவேண்டும் .
* மெலிதான உடற்பயிற்சி அவசியம். ஜிம்முக்கு போகலாம்… அல்லது அருகிலுள்ள பூங்காவில் தினமும் நடைபயிற்சி செய்யலாம்.
* பொறாமைப்படுவது தேவையற்றது. நமக்குள்ளயே எல்லா ஆற்றலும் இருக்கின்றன.
* ஒருவர் தங்களை பற்றி சொல்லும்போது ஆர்வமுடன் கேளுங்கள். உலகம் அத்தகையோரை அதிகம் விரும்புகிறது.
* நீங்கள் பேசுவதை பற்றியே நினைக்காமல். பிறர் பேசுவதை இன்டரப்ட் செய்யாமல் காது கொடுத்து கேளுங்கள். ஏனெனில், உங்களுக்கு தெரிந்ததை தான் நீங்கள் பேசுவீர்கள். ஆனால் கேட்பதன் மூலம் புது விஷயங்களை அதிகம் தெரிந்துகொள்ளமுடியும்.
* கடந்த கால தவறுகளை இப்போது சுமக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் கடந்த கால தவறுகளை தற்போது பெரிதுபடுத்தி பார்த்து நிகழ் கால மகிழ்ச்சியை கோட்டை விடவேண்டாம்.
* மற்றவர்களை வெறுப்பதன் மூலம் வாழ்க்கையை கழிக்காதீர்கள். இந்த வாழ்க்கை மிக மிக சிறிது.
* உங்களது மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு. மற்றவர்கள் அல்ல என்பதை உணருங்கள்.
* உங்களை தவிர உங்களை யாராலும் சிறுமைப் படுத்த முடியாது. PEOPLE WON’T BELIEVE WHAT YOU SAY. BUT THEY WILL BELIEVE WHAT YOU DO.
* இந்த உலகமும் வாழ்க்கையும் ஒரு பள்ளிக்கூடம் போல. அதில் அன்றாடம் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்படும் பிரச்னைகள் நமது பாடத்திட்டங்கள் போல. அது மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் நமது இறுதி வரைக்கும் உபயோகமாக இருக்கும்.
* அடிக்கடி வாய்விட்டு சிரியுங்கள். புன்னகை சிந்துங்கள். அது உங்கள் அழகை மேலும் அதிகப்படுத்தும். வளவளவென்ற பேச்சு சாதிப்பதைவிட ஒரு மெலிதான புன்னகை அதிகம் சாதித்துவிடும். உதாரணத்துக்கு இக்கட்டான ஒரு நேரத்துல ஐநூறு ரூபாய்க்கு சில்லறை வேணும்னு வெச்சிக்கோங்க. அதே கேட்கும்போது அதை சிரிச்சிக்கிட்டே ஒரு இன்முகத்தோட அவங்க கொடுத்துட்ட மாதிரியே நினைச்சி கேட்டுப்பாருங்க. பெரும்பாலும் உங்களுக்கு சில்லறை கிடைத்துவிடும். (அட்லீஸ்ட் வைத்துகொண்டே உங்களிடம் பொய் சொல்லமாட்டாங்க).
* உங்கள் கருத்தே சரி என்று நண்பர்களுடன் எப்போதும் விவாதம் செய்யாதீர்கள். YOU MAY WIN THE ARGUMENT. BUT WILL LOSE YOUR FRIEND.
* எப்பவும் பளிச்னு சுத்தமா இருக்கணும். யாரையாவது முக்கியமா சந்திக்கப் போறீங்களா.. முகத்தை நல்லா பளிச்னு வாஷ் பண்ணிட்டு பவுடர்ல்லாம் போட்டுக்கிட்டு ஜம்னு போங்க. அழுது வடிஞ்சிக்கிட்டு எண்ணெய் வடியுற முகத்தோட போனீங்கன்னா…. அங்கேயே நீங்க கிளீன் போல்டு.
* டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப முக்கியம். காஸ்ட்லியான ட்ரெஸ் தான் போடணும் என்பதில்லை. கந்தையானாலும் கசக்கி கட்டு என்னும் பழமொழியை போல, சுத்தமான ஆடைகள் அவசியம்.
* அலுவலகம் செல்லும் ஆண்கள்… அவர்கள் எந்த வேலை பார்ப்பதாக இருந்தாலும், தினமும் ஷூ போட்டுக்கிட்டு, நல்லா டக் இன் பண்ணிக்கிட்டு போங்க. மத்தவங்களோட ஜாலியான டீசிங் பத்தி கவலைப்படாதீங்க. உங்களை பார்க்கும் புது மனிதர்களுக்கு உங்கள் மேல் ஒரு உயர்ந்த அபிப்ராயம் வருவதற்கு இது உதவும்.
ஆளுமை வளர்ச்சியில் நம்முடைய அணுகுமுறைகளை மாற்றிகொள்வது, பிறரிடம் பழகும்போது கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் உள்ளிட்டவற்றை கடந்த பதிவில் பார்த்தோம்.
இந்த பதிவில் ஆளுமை வளர்ச்சியில் மிக மிக மிக முக்கிய பங்கை வகிக்கும் TIME MANAGEMENT பற்றி அதாவது நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பது பற்றி பார்ப்போம்.
மேலே படிப்பதற்கு முன்னர் நான் ஒன்றை சொல்லிக்கொள்ளா ஆசைப்படுகிறேன். கடந்த காலங்களில் நான் நேரத்தை நிறைய வீணடித்திருக்கிறேன். அந்த குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடே இந்த பதிவு. தற்போது ஒவ்வொரு வினாடியையும் பயனுள்ள வகையில் மட்டுமே செலவழிப்பது என்று முடிவு செய்து அதை கூடுமானவரை செயல்படுத்தியும் வருகிறேன். வீணடித்த காலத்துக்கு சேர்த்து வட்டியும் முதலுமாக உழைத்து வருகிறேன். இது தாமதமான முடிவு தான் என்றாலும் BETTER LATE THAN NEVER அல்லவா ?
நான் அறிந்த வரையில் நேரத்தை வீணடிப்பவர்களை புத்திசாலிகள், அறிஞர்கள், சாதனையாளர்கள், எல்லாவற்றுக்கும் மேல் இறைவன் – இவர்கள் எவருமே விரும்புவதில்லை. குறிப்பாக தன்னுடைய துணையோ அல்லது மனதிற்கினியவர்களோ நேரத்தை வீணடிப்பதை பெண்கள் விரும்புவதேயில்லை. நேரத்தை வீணடிப்பவரை, அதை பயனுள்ள வகையில் செலவழிக்கத் தெரியாத ஒருவனை ஒரு பெண் விரும்புகிறாள் என்றால் அந்த பெண்ணிடம் தான் ஏதோ கோளாறு இருக்கிறதென்று அர்த்தம்.
எனவே தங்களின் ஆளுமை வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் அதாவது தங்களது பர்சனாலிட்டியை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறவர்கள் முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய ஒன்று – நேரத்தை சிறிதும் வீணடிக்காமல் அதன் மதிப்புணர்ந்து சரியாக செலவழிப்பது.
இந்த உலகம் முழுதும் ஏற்றத் தாழ்வுகளோடு படைத்த இறைவன் அனைவருக்கும் சரிசமமாய் கொடுத்த ஒரே விஷயம் நேரம் ஒன்று தான். அதாவது ஏழையோ பணக்காரனோ, நோயாளியோ ஆரோக்கியமானவனோ, அமெரிக்கனோ இந்தியனோ, செருப்பு தைக்கும் தொழிலாளியோ அல்லது துபாயில் எண்ணெய்க் கிணறு உள்ள ஷேக்கோ யாராகட்டும் அனைவருக்கும் சரிசமமாக கிடைப்பது 24 மணி நேரம் தான்.
ஒரு பிரபல பொன்மொழி இருக்கிறது…
நீ ஏழையாக பிறப்பதற்கு வேண்டுமானால் விதி காரணமாக இருக்கலாம்; ஆனால் தொடர்ந்து நீ ஏழையாகவே இருப்பதற்கு இருப்பதற்கு காரணம் விதியல்ல.
இரும்புத் துண்டு உணர்த்தும் பாடம்
ரோட்டில் நடந்து செல்லும் ஒருவருக்கு ஒரு தரமான இரும்பு துண்டு கிடைக்கிறது. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி கையில் அது கிடைத்தால் அவன் செருப்பு தைக்கும்போது வைத்து தைக்க அதை ஒரு மேடை போல பயன்படுத்துவான்.
ஒரு கருமாரிடம் அது கிடைத்தால் (இரும்பு வேலை செய்பவர்) அவர் அதை வைத்து ரூ.600/- மதிப்புள்ள 3 குதிரை லாடங்கள் செய்வார்.
அது ஒரு வொர்க்ஷாப் வைத்திருப்பரிடம் கிடைத்தால் அவர் அதை வைத்து ரூ.1000/- மதிப்புள்ள குண்டூசிகள் அவரால் செய்ய முடியும்.
அதையே முகச் சவரம் செய்யும் பிளேடாக செய்தால் ரூ.4000/- மதிப்புள்ள பிளேடுகள் செய்ய முடியும்.
அதையே வாட்ச் ஸ்ப்ரிங் எனப்படும் நுண்ணிய பொருளாக செய்தால் ரூ.2,00,000/- மதிப்புள்ள ஸ்ப்ரிங்குகள் செய்யமுடியும்.
இறைவன் நமக்கு அளித்திருக்கும் நேரமும் அப்படித்தான். அதை பயன்படுத்தவேண்டிய விதத்தில் பயன்படுத்தினால் நம்மைப் போல அதிர்ஷ்டசாலி இந்த உலகில் எவரும் இருக்க முடியாது.
நேரத்தை வீணாக்குபவர்களை இறைவன் மன்னிப்பதேயில்லை
இறைவன் எவரை மன்னிக்கிறானோ இல்லையோ நேரத்தை வீணாக்குபவர்களை மன்னிப்பதேயில்லை. ஏனெனில் அந்த பரமேஸ்வரனே கால ஸ்வரூபி தான். காலம் தான் இறைவனேயன்றி வேறொன்றுமில்லை.
அப்படிப்பட்ட காலத்தை அனைவரும் பயனுள்ள வகையில் கழிக்கவேண்டியது அவசியம்.
முதலில் காலத்தை வீணடிக்கும் செயல்கள் எது அல்ல என்று தெரிந்துகொள்வோம்.
இவை நேரத்தை வீணடிக்கும் செயல்கள் அல்ல….
1) அளவான உறக்கம்
2) நம் குழந்தைகளுடன் நாம் விளையாட, பாடம் சொல்லிக்கொடுக்க செலவழிக்கும் நேரம்.
3) நம் குடும்பத்துடன் நாம் பர்சேசிங், கோவில், பொழுதுபோக்கு பூங்கா முதலியவற்றுக்காக வெளியே செல்வது
4) மாதமொருமுறை அல்லது இருமுறை நண்பர்களுடன் சினிமா பார்க்க தியேட்டர் செல்வது
5) இசை நிகழ்ச்சி, நாடகங்கள் முதலியவற்றை ரசிப்பது
6) ஆன்மீக சமய சொற்பொழிவுகளை கேட்பது
7) புதிய முயற்சிகளில் ஈடுபடுவது; அதற்காக ஏற்படும் அலைச்சல்
8) நண்பர்களுக்கோ உறவினருக்கோ உதவும்பொருட்டு நாம் செலவிடும் நேரம்
9) வீட்டில் உள்ள வயது முதிர்ந்த தாத்தா, பாட்டிகளுடன் நாம் செலவிடும் நேரம்
10) ஷட்டில் காக், கிரிக்கெட், பாட் மிண்டன், செஸ், காரம் உள்ளிட்ட மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் விளையாட்டுக்களை நண்பர்களுடன் & குடும்பத்தினருடன் விளையாடுவது.
11) அம்மாவுக்கு, மனைவிக்கு உதவியாக சமையலறையில் இருப்பது மற்றும் அவர்கள் பணிகளில் உதவுவது.
12) செய்தித் தாள்களை, வார, மாத இதழ்களை படிப்பது (ஆன்லைன் மற்றும் அச்சு இரண்டும்)
13) தரமான நூல்களை படிப்பது
14) பாட்டு, நடனம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித் திறன் வகுப்பு, தேர்வுக்கு தயாராகும் பொருட்டு செல்லும் பயிற்சி வகுப்புகள்
மேற்கூறியவற்றில் பல விஷயங்கள் நேரத்தை வீணடிப்பதோ செலவு செய்வதோ ஆகாது. இவை அனைத்தும் நேரத்தை முதலீடு செய்வதற்கு சமம்.
நேரத்தை வீணடிப்பது எது ?
1) குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து செய்யப்படும் வீண் அரட்டை
2) அரசியல், சினிமா, நடிக நடிகையர் குறித்த டீக்கடை மற்றும் திண்ணை பேச்சுக்கள்
3) இணையத்தில் நடிகர் நடிகைகளை பற்றிய கிசுகிசுக்களை தேடி தேடி படிப்பது
4) மலிவான இச்சைகளை தூண்டும் செய்திகளை இணையத்தில் படிப்பது
5) டி.வி. சீரியல் பார்ப்பது (இதையே தொழிலாக செய்துகொண்டிருப்பவர்களுக்கு)
6) கம்ப்யூட்டரில் விளையாடப்படும் கேம்ஸ்
7) எல்லாவற்றுக்கும் மேலாக ஃபேஸ்புக்கில் செலவிடப்படும் நேரம்.
என்னை பொறுத்தவரை நல்ல விஷயங்கள் எத்தனையோ இருக்க அபிமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயரில் ஃபேஸ்புக்கில் நடக்கும் துதிபாடல்கள், அர்த்தமற்ற விவாதங்கள், வீண் பேச்சுக்கள், வம்புகள், ஸ்டேட்டஸ் அப்டேட் என்ற பெயரில் நடத்தும் கேலிக்கூத்துக்கள், பிடிக்காத நடிகரின் பெயரில் கட்டவிழ்த்து விடப்படும் அநாகரீகங்கள், அருவருப்பை ஏற்படுத்தக்கூடிய கடுஞ்சொற்கள் — இதற்க்கு செலவிடப்படும் நேரம் அனைத்தும் வீணே! வீணே!!
இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பெரும்பாலான நேரத்தை அதுவும் பயனுள்ள வகையில் அவர்கள் கழிக்கவேண்டிய நேரத்தை இரத்தத்தை உறிஞ்சும் அட்டை போல ஃபேஸ்புக் உறிஞ்சிவிடுகிறது என்றால் மிகையாகாது. அது பேஸ்புக்கின் தவறல்ல. அளவுக்கு விஞ்சினால் அமுதமும் நஞ்சு தான் என்பது போல அதில் நாம் தேவையற்ற விஷயங்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் வாழ்க்கையில் பின்னோக்கி செல்வது போலத் தான். முன்னே ஓடிக்கொண்டிருந்த பலர் தற்போது பின்னோக்கி ஓடுவதால் வாழ்வில் முன்னேற துடிப்பவர்களுக்கு இது தான் சரியான தருணம்!
இப்படி சொல்வதால் நான் பேஸ்புக்கிற்கு எதிரானவன் என்றோ அது தேவையே இல்லை என்றோ அர்த்தம் அல்ல. நமது பழைய நண்பர்களை தொடர்புகொள்ள, நமது பிசினஸை செலவேயின்றி ப்ரோமோட் செய்ய, குடும்ப நிகழ்வுகளை புகைப்படங்களை நட்புடனும் சுற்றத்துடனும் பகிர்ந்துகொள்ள, அதி விரைவாக எங்கோ தொலைவில் இருப்பவருக்கும் செய்திகள் வாழ்த்துக்கள் அனுப்ப இப்படி எத்தனையோ நல்ல பயன்கள் உண்டு. ஆனால்… இதற்காக பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் எத்தனை பேர்? அற்ப விஷயங்களுக்காக பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பவர்கள் எத்தனை பேர்? நீங்களே சொல்லுங்கள்…..
லேனா அவர்கள் கூறியது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது….
உடன்பிறந்தவர்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ இந்த நேரத்தை ஒதுக்கினால் அது பாசம்.
உழைப்பிற்கு நேரம் ஒதுக்குங்கள் அது வெற்றியாக மாறும்.
சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள் அது உங்களுக்கு புல்டோசர் போன்ற சக்தியை வழங்கும்.
விளையாடுவதற்கும், உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள் இது உடல்நலமாக மாறும்.
படிக்க நேரம் ஒதுக்குங்கள் அது போட்டி மிகுந்த இந்த உலகத்தில் உங்களுக்கென்று தனி உயரத்தை (High Platform) அமைத்துத் தரும்.
இலட்சியத்திற்கென்று நேரத்தை வழங்குங்கள். அது செல்வத்தை உங்கள் காலடியில் கொண்டு கொட்டும்.
பொதுச்சேவைக்கென்றும் மற்றவர்களுக்கு உதவுவதற்கென்றும் நேரத்தை ஒதுக்குங்கள். இவை உங்களுக்கு அழியாப் புகழையும் தரும்.
(ஃபேஸ்புக்கிற்கு நேரம் ஒதுக்குங்கள். அது உங்கள் உறவுகள் மற்றும் சொந்த பந்தங்களிடமிருந்து உங்களை பிரித்து உங்கள் லட்சியப் பாதையிலிருந்தும் உங்களை அப்புறப்படுத்திவிடும்!)
ஃபேஸ்புக் என்னும் அற்புத தளத்தை தொழில்நுட்பத்தை அற்ப விஷயங்களுக்காக பயன்படுத்தி நேரத்தை வீணடிப்பவர்களை இப்படித் தான் எனக்கு சொல்ல தோன்றுகிறது.
ஆனால் இந்த நேரத்தை மட்டும் அலட்சியப்படுத்தினீ ர்களானால் (ப்ளீஸ், வேண்டாம்!) அது உங்களைக் கீழே தள்ளிக் கைகொட்டிச் சிரிக்காமல் விடாது. நமக்கு இந்த உலகில் மூன்று விஷயங்களைச் சரிவர கையாளத் தெரியவேண்டும். இந்த மூன்றையும் நன்கு கையாளத் தெரிந்தால் இவற்றைவிட நமக்கு உதவுபவை வேறு எதுவும் இல்லை. ஆனால் இவற்றைக் கையாளத் தெரியாவிட்டால் இவற்றைவிட வேறு வலுவான பகைவர்கள் வேண்டாம்.
இந்த மூவர் 1) குடும்பம், 2) பணம், 3) நேரம்
போனது போகட்டும். இனி இருக்கின்ற காலத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில்போராடி வெல்வதற்கு நாம் முயற்சிக்கவேண்டும்.
No comments:
Post a Comment