சிறந்த நிர்வாகி நாமக்கல் மருத்துவர் குழந்தைவேல் அவர்களுடன் ஒரு நேர்காணல்…. - அ. மாலதி
ஒரு மருத்துவராகத் தொடங்கிய உங்கள் வாழ்க்கையைப் பற்றி கூறவும்.
1981 – ம் ஆண்டு பொது மருத்துவத்தில் மேற்பட்டப்படிப்பு முடித்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுகள் பணியாற்றி, எனது சொந்த விருப்பத்தின் பேரில், முற்றிலும் தனியார் மருத்துவராக் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.
எனது பகுதி மக்களுக்கு, என் சுய விருப்பத்தின் அடிப்படையில் யாருடைய தலையீடும், குறுக்கீடும் இன்றி பணியாற்ற விரும்பியதின் பொருட்டு, அரசு பணியைத்துறந்தேன். வெற்றிகரமாகப் பணியாற்றி வருகிறேன்.
மருத்துவத்துறை மட்டுமின்றி நீங்கள் ஈடுபட்டு பணியாற்றிய மற்ற துறைகள் பற்றி…
மருத்துவர் என்பதை விட ஒரு சமூக ஆர்வலராகத் தான் இருக்க நான் மிகவும் விரும்பினேன். மதுவகைகளால் இருதயமும் பாதிக்கப்ப்டும், அதைச் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், சமூகத்தில் இந்த அவலங்களிலிருந்து எப்படிக் காப்பாற்றுவது என சிந்திப்பேன்.
இந்த சமூகப்பார்வை தான் “எய்ட்ஸ்” நோயின் பாதிப்பும், அதில் சிக்குண்டு தவிக்கும் மனிதர்களின் வேதனைகளும் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த சமூக அக்கறை தான் ஒரு தகுதி வாய்ந்த பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழ காரணமாக அமைந்தது.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரு சிறந்த பள்ளியையும், ஐந்து ஆண்டுகளில் ஒரு பெண்கள் கலைக்கல்லூரியையும், தோன்றச் செய்தது.
இப்பள்ளியின் (டிரினிடி மெடிரிக் மேல்நிலைப்பள்ளியின்) தனித்தன்மை என்ன?
பள்ளியை துவக்கும்போதே ஒரு மாறுபட்ட, வித்தியாசமான பள்ளியாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். நல்ல பத்து நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் உதவியுடன் ஒரு “பள்ளிப் புரட்சி” செய்துள்ளோம்.
தரமான கல்வி,
குறைந்த மாணவர் ஆசிரியர் விகிதம்
மதிய, சத்துணவு
காலையும் மாலையும் சத்தான பானங்கள்
கராதே,, வீணை, இசை, நாட்டியம், யோகா போன்ற பல கலைகள்.
மாணவர்களிடையே தலைமைப்பண்பு, பேச்சாற்றல் மற்றும் நடிப்புக்கலை ஊக்கத்தோடு வளர்க்க உதவி செய்கிறோம். இப்படி இன்னும் பல.
இந்தக் கல்வி நிறுவனத்தின் சாதனையாக எதை நினைக்கிறீர்கள்?
மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், வழக்கறிஞர்கள் – இவர்கள் மட்டுமின்றி அவர்களை நல்ல மனிதர்களாகவும் உருவாக்கினோம்.
ஏமாற்றுவதைவிட தோல்வியடைவது மிகமிகக் கௌரவமானது. என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறோம்.
கூட்டத்தோடு கூட்டமாக இருந்து குன்றிப் போகாமல், இன்றைய உலகம் புதுப்புதுச் சிந்தனைகள் வெளிப்பாடுகளின்பால் உருவாகியுள்ளது என்பதை அவர்கள் உணரச் செய்து, தனித்தன்மையுடன் சிறந்த சாதனையாளராகத் திகழக் கற்றுக் கொடுத்திருக்கிறோம்.
இந்த உலகில் வாழ்வதற்கு நம்பிக்கையும், அன்பும், விடாமுயற்சியும், தைரியமும் வேண்டும் என்பதை எங்கள் மாணவர்களுக்குப் புரிய வைத்திருக்கிறோம்.
சத்தமிடும் கூட்டத்திற்கு செவிசாய்க்காமல், சரியென்று அவனுக்கு எது படுகிறதோ அதற்காகப் போராடப் போதித்திருக்கிறோம்.
உங்கள் பள்ளி மாணவர்களின் திறமைக்குச் சான்றாக நீங்கள் எதைச் சொல்ல நினைக்கிறீர்கள்?
சமீபத்தில் எங்கள் பள்ளியின் 15-ம் ஆண்டு நினைவு மலரில் பள்ளி மாணவர்களின் அறிவுக் கூர்மைக்குச் சான்றாக வெளி வந்துள்ள கருத்துக் கவிதைகளின் தொகுப்புகளிலிருந்து சிலவற்றை தனியே தந்துள்ளேன். அவைகள் எங்கள் பள்ளி மாணவர்களின் திறமையைப் பறைசாற்றும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
உங்கள் மருத்துவமனையின் மிகப்பெரிய சாதனையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
1. “தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் “எய்ட்ஸ்” என்றாலே, மருத்துவர்கள் புறக்கணித்த அந்த கால கட்டத்திலேயே கர்ப்பம் தரித்த “எச்.ஐ.வி.” பெண்களுக்கு, மருந்து கொடுத்து, அவர்தம் வாரிசுகளுக்கு அவ்வியாதி வராமல் தடுத்து கிட்டதட்ட இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட “எச்.ஐ.வி” இல்லாத குழந்தைகளை இந்த உலகத்தில் உலவ விட்டிருக்கிறோம் என்பதை எங்கள் மருத்துவமனையின் மிகப்பெரிய சாதனையாக நான் எண்ணுகிறேன்.
இப்பங்களிப்பில் என் மனைவி – மருத்துவர் திருமதி. மல்லிகா ஆற்றிய பணியினை என் நெஞ்சு இன்றும் ஈரமாகச் சுமந்து கொண்டிருக்கிறது.
2. செயற்கைச் சுவாசக் கருவி, பேஸ்மேக்கர், டப்லர் போன்ற அதிநுட்பக் கருவிகளின் பயன்பாடுகள் எங்கள் கிராமங்களுக்கும் கொண்டு சென்றது மற்றுமொரு சிறப்பு.
உங்கள் வெற்றிக்குக் காரணங்கள் என்ன?
Be Different
Be Better
எதிலும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனது வெற்றிக்கான முதல் காரணம்.
சாதிக்க வேண்டும் என்ற வெறி.
எனக்குள் ஓர் ஆர்க்கிமிடிஸ் அல்லது ஓர் எடிசன் மறைந்திருக்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.
எனக்கு அமைந்த நல்ல நண்பர்கள்.
கடின உழைப்பும் விடாமுயற்சியும்.
நிர்வாகச் சிக்கல்கள் பற்றிய ஏதேனும் உங்கள் அனுபவம்?
பலபேர் பங்கு பெறும் நிறுவனங்களை நடத்தும்போது, பங்குதாரர்களின் மனது கோணாமல் முடிவெடுப்பது என்பது மிகவும் கடினம்.
பங்குதாரர்களிடையே, நம்பிக்கை, ஆதரவு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, கருத்துப் பரிமாற்றம், இலக்கிற்காக எந்த தியாகமும் செய்யும் மனப்பக்குவம் மிகவும் அவசியம்.
எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. ஒவ்வொருவரிடமும், நயமாகவும், சாதுர்யமாகவும் பேசி ஓர்நிலைப்படுத்தி சிக்கல்களை சீர்படுத்தி சமாளிப்பதில் நல்ல அனுபவம் பெற்றுவிட்டேன்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் திடீரென்ற பதவி விலகியபோது, சற்றும் பதற்றமின்றி, சரியான நண்பரை அமர்த்தி நிர்வாகத்தை செம்மையுடன் நடத்தி பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும், பங்குதாரர்களிடமும் நல்ல பெயரைப் பெற்றிருக்கிறேன். இப்படி எவ்வளவோ சொல்லலாம்.
“தன்னம்பிக்கை” இதழ்களில் தங்களுக்குப் பிடித்த பகுதி எது? ஏன்?
நிறுவனரின் நினைவுகள், ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது.
சாதனையாளர்களின் பேட்டி, என்னுள் ஒளிந்திருக்கும் திறமைகளைத் தட்டி எழுப்புகிறது.
சில வைரவரிகள் என் சிந்தனையில் சிக்கென இடம் பிடித்துவிடுகின்றன.
“தடங்கல் இல்லாத தடங்கள் இல்லை பள்ளம் இல்லாத பாதைகள் இல்லை”
“ஜோடிக்கண்கள் அழுதிடப்பிறந்தோம் கோடிக்கண்கள் அழுதிடப் பிரிவோம்”
“சீடன் குருவாக மாறவேண்டும் என்று எண்ணுபவரே உண்மையான குரு”
இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் கருத்துக்கள் என்ன?
பல அறிஞர்களின் கூற்றுக்களையே நான் அறிவுரையாக வைக்கிறேன்.
“வாழ்க்கை என்பது பல கியர்கள் கொண்ட ஒரு சைக்கிள் போன்றது. நம்மில் பெரும்பாலோர் நம்மிடம் இருக்கும் கியர்களை முழுவதுமாக பயன்படுத்துவதில்லை.
- சார்லஸ் ஷீல்ஸ்.
“ஒருவர் மற்ற எல்லோரையும்விட அதிக தைரியத்தையும் பெற்றிருப்பதால் வீரணாவதில்லை. மற்றவர்களை விட ஒரு சில நிமிடங்கள் அதிகமாகத் தைரியசாலியாக இருப்பதாலேயே வீரனாகிறான்.
- வால்டோ எமர்சன்
“எல்லோருக்கும் வெற்றி பெற விருப்பமிருக்கிறது. ஆனால் வெகு சிலருக்கே வெற்றி தங்களைத் தயார் செய்து கொள்ள விருப்பமிருக்கிறது”.
-வின்ஸ் லொம்பார்டி
இளம் மருத்துவர்களுக்கு உங்கள் அறிவுரை?
கடின உழைப்பு..
விடாமுயற்சி…
முகமலர்ச்சி…
இவை வெற்றியடைய படிகட்டுகள். நோயாளிகளை, மனிதநேயத்தோடு பார்க்கவேண்டும். அவர்கள் நம்மிடம் மருந்தை மட்டுமே எதிர்பார்ப்பதில்லை. அன்பையும், பாசத்தையும், தைரியத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு நோயாளிகளையும், சிகிச்சை அளிக்கும்போது அவருக்கு நம் உறவினராக இருந்தால் என்ன செய்வோமா, அதற்கும் மேலான ஈடுபாட்டுடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.
பணம் மட்டும் நோக்கமாக இல்லாமல், சமூக அக்கறையும், மனித நேயமும் கொண்டு பணிபுரிவது, குறிப்பாக மருத்துவர்களுக்கு மிகவும் அவசியம்.
நம்மைப் பார்க்கும்போதே
நம்மோடு பேசும்போதே
நம் கைப்பட்டவுடனேயே
பாதி நோய் தீர்ந்ததாக நோயாளி உணர வேண்டும் . முகத்தில் அந்தப் பரிவும், பேச்சில் நம்பிக்கையும், இருந்தால் நிச்சயம் தொழிலில் வெற்றி கிட்டும்.
“மருத்துவமனையில் நல்ல சிகிச்சையுடன் நம்பிக்கையும் கிடைக்கிறது” என்ற எண்ணத்தை நோயாளிகள் மனதில் மலரச் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment