Friday, July 5, 2013

பத்து உபதேசங்கள்

காஞ்சி காமகோடி பீடத்தின் மஹா ஸ்வாமிகள் ஜகத்குருஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின்

" தசோபதேசம் " (பத்து உபதேசங்கள் )

1. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையும் நமக்கு அடுத்தவர்கட்கு உதவியும் நன்மையும் செய்யக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வதே. நாட்டிற்கு ஏழை மக்கள் தங்களுடைய உண்மையான விசுவாசமான உழைப்பால் தொண்டு செய்யமுடியும். வசதி படைத்த பணக்காரர்கள் தங்களின் செல்வத்தைக் கொண்டு ஏழை மக்களுக்கு உதவ முடியும். செல்வாக்கு படைத்தவர்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி வசதி குறைந்தவர்களாய் இருப்போரின் வசதியினை மேம்படுத்த முடியும். இங்ஙனம் நமது உள்ளத்தில் தொண்டு மனப்பான்மையினை எப்போதும் நிலைத்துள்ளதாகச் செய்ய முடியும்.
... 
2. மனிதன் ஒரு புல்லின் நுனியையும் தானாக உற்பத்தி செய்ய முடியாது. நாம் உண்ணும் உணவையோ அல்லது உடுக்கும் ஆடையையோ இறைவனுக்கு முதலில் அளிக்காமல் நாம் பயன்படுத்திக் கொண்டால் செய்நன்றி மறந்த குற்றத்திற்கு கட்டாயம் ஆளாவோம். சிறந்ததும் உயர்ந்ததும் எதுவோ அதனையே தான் இறைவனுக்கு நாம் அளிக்க வேண்டும்.

3. அன்பு இல்லாத வாழ்க்கை வீண். மனித சமுதாயம், பறவைகள், விலங்குகள் என இப்படி எல்லா ஜீவராசிகளிடமும் பிரேமையையும் அன்பையும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

4. தர்ம சிந்தனையற்றவர்களால் சேர்க்கப்பட்ட செல்வம் அவர்களின் சந்ததியர்களால் பொதுவாக அழிக்கப்படுகிறது. ஆனால் வள்ளல் தன்மை கொண்டவர்களின் குடும்பங்களோ எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்து இறை அருளின் பாத்திரமாகவே இருந்து வருகின்றன.

5. மிகுந்த சிறந்த செயலாற்றிய ஒருவர் அந்த செயலால் ஏற்பட்ட பலனின் பெருமையினை, மற்றவர்களின் புகழ் உரைகளுக்கு செவி சாய்த்தாலோ அல்லது தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டாலோ, இழந்து விடுகிறார்.

6. நிகழ்ந்த ஒன்றினை குறித்து வருத்தப்படுவது நல்லதல்ல. நன்மை எது, தீமை எது என்று நாம் பகுத்துப் பார்க்க அறிந்திருந்தால் அந்த அறிவு நம்மை மீண்டும் தீயவற்றின் குழியில் வீழ்வதினின்றும் காப்பாற்றும்.

7. நம்முடைய வாழ்வு காலத்தை நல்ல செயல்கட்காக உபயோகப்படுத்த வேண்டும். அடுத்தவர்களின் நலனுக்காக உள்ள செயல்களில் நாம் ஈடுபட்டு நம்முடைய பங்கினை செலுத்த வேண்டும். நம்முடைய சுயநல தேவைக்காக அல்லது ஆசைகளை பூர்த்திசெய்து கொள்வதைக் காட்டிலும் இது பன் மடங்கு மேலானது.

8. நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு என விதிக்கப்பட்ட கடமைகளை நாம் தவறாமல் கடைபிடிப்பதோடு இறை அன்பு நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

9. தன்னுடைய கடமையை சரிவர செய்து வருபவர் தன்னுடைய லக்ஷ்யத்தை அடைவார்.

10. நம்முடைய துயர்களுக்கும், கஷ்டங்களுக்கும் உள்ளே ஒரே தீர்வு ஞானம் ஒன்றுதான்.

No comments:

Post a Comment