பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான்.
தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான்.
தாகம் எடுக்கும் போதெல்லாம், அந்த தேநீர் சட்டியில் இருந்து குளிர்ச்சியான நீரைக் குடித்து கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவான்.
அவன் மிக அமைதியாக உணரும் தருணங்கள் அவை.
அவன் தொடர்ந்து வேலை செய்யத் தேவையான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தருணங்கள் அவை.
அவன் வாழ்க்கை இப்படி அமைதியாக சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் அவன் அப்படி அந்த தேனீர் சட்டியில் இருந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கையில் ஒரு வழிப்போக்கன் அவனையே உற்றுப் பார்த்தான்.
கொல்லன் அவனிடம் கேட்டான். “ஐயா என்ன பார்க்கிறீர்கள்?
உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?”
”உங்களின் தேனீர் சட்டியைப் பார்த்தேன்.
மிக வித்தியாசமாக இருக்கிறது”
கொல்லன் சொன்னான்,
“இந்த தேனீர் சட்டி மிகப் பழையது. என் தந்தை இருக்கும் வரை இதில் தான் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து குடிப்பார்.
அவருக்குப் பின் நான் இதை உபயோகித்து வருகிறேன். களைப்பும் தாகமும் ஏற்பட்டால் நான் இதிலிருக்கும் தண்ணீரைக் குடித்து சற்று இளைப்பாறுவேன்”
“அதை நான் சற்று ஆராய்ந்து பார்க்கலாமா?” என்று கேட்டான் அந்த வழிப் போக்கன்.
இந்த பழைய சட்டியை ஆராய என்ன இருக்கிறது என்று நினைத்தவனாக கொல்லன் அந்த தேனீர் சட்டியை அந்த வழிப்போக்கனிடம் தந்தான்.
வழிப் போக்கன் அந்த தேனீர் சட்டியைக் கையில் பிடித்து அதனை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தான்.
பின் சொன்னான். “ஐயா, இந்த தேனீர் சட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு புராதனப் பொருள்”
“இதற்கு முந்தைய மன்னர் பரம்பரையினர் காலத்தில் இது போன்ற ஒரே மாதிரியான மூன்று தேனீர் சட்டிகள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டன.
இரண்டு தேனீர் சட்டிகள் இன்றும் நம் அரசவையில் இருக்கிறது. மூன்றாவது தொலைந்து போய் விட்டதாகக் கருதப்பட்டு
வந்தது.
இதைப் பார்த்த பின்பு தான் இது இன்னமும் இருப்பது புரிந்தது.
இந்த சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பார்த்தால் இதன் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.”
இதைக் கேட்ட கொல்லனனுக்கும் அங்கு இருந்த அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். உடனடியாக கொல்லன் அந்த சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தான்.
பின் பார்த்த போது வழிப்போக்கன் சொன்னது போல அந்த சட்டியின் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருந்தது.
இது வரை யாரும் அப்படிப் பட்ட முத்திரை உள்ள பாண்டங்களைப் பார்த்ததில்லை.
வழிப்போக்கன் கேட்டான்,
“ஐயா இந்த அபூர்வ சட்டியை நீங்கள் விற்க விரும்பினால் நானே வாங்கிக் கொள்கிறேன். நூறு பொற்காசுகள் வரை தர நான் தயாராக இருக்கிறேன்”
கொல்லனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அக்காலத்தில் நூறு பொற்காசுகள் என்பது மிகப் பெரிய செல்வம்.
கொல்லன் தன் வாழ்நாள் எல்லாம் கடுமையாக உழைத்தாலும் அந்த அளவு செல்வத்தை சம்பாதிக்க முடியாது. கொல்லன் சம்மதித்தான்.
வழிப்போக்கன் இன்னும் சில நாட்களில் பொற்காசுகளுடன் வந்து அந்த தேனீர் சட்டியை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டு சென்றான்.
கூடியிருந்தவர்களுக்கும் நடந்ததெல்லாம் மிக ஆச்சரியமாக இருந்தது.
ஒவ்வொருவரும் அந்த தேனீர் சட்டியைக் கையில் எடுத்துப் பார்க்க விரும்பினார்கள்.
அந்த அரச முத்திரையைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால் அந்த சட்டியின் மதிப்பை இப்போது உணர்ந்திருந்த கொல்லன் எல்லோரையும் எட்ட நின்றே பார்க்கச் சொன்னான்.
அன்றிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே மாறி விட்டது.
அந்த தேனீர் சட்டியை முன்பு போல வெளியே வைக்க முடியவில்லை.
மேசை, நாற்காலி, தேனீர் சட்டி மூன்றையும் வீட்டுக்குள்ளே வைத்தான்.
வேலை முடிந்த பின் முன்பு போல நிம்மதியாக வெளியில் காற்றாட அமர்ந்து குளிர்ந்த நீரை அந்த சட்டியில் குடிக்க முடியவில்லை.
உள்ளே அமர்ந்து குடித்தால் புழுக்கமாக இருந்தது.
அந்த சட்டியைத் தூக்கி அப்படியே அதிலிருந்து தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.
சட்டியை உயரத் தூக்கும் போது கை தவறி விழுந்து உடைந்து விடுமோ என்ற பயம் வந்தது.
அவனிடம் அந்த அபூர்வ சட்டி இருக்கும் செய்தி பரவி தினமும் நிறைய பேர் அதைப் பார்க்க வந்தார்கள்.
அதற்கு அந்த வழிப்போக்கன் என்ன விலை கேட்டான் என்பதை கொல்லன் வாய் வழியாகவே அறிந்து கொள்ள பலரும் ஆசைப்பட்டார்கள்.
‘இந்தக் கொல்லன் எப்படிப்பட்ட அதிர்ஷ்டக்காரன்’ என்று அவர்கள் அவன் முன்னாலேயே வியந்தார்கள்.
இப்படி அவனுடைய தேனீர்சட்டி பிரபலமடைந்த பின் இன்னொரு பயமும் கொல்லனை ஆட்கொண்டது.
யாராவது இதைத் திருடிக் கொண்டு சென்று விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது.
பகல் முழுவதும் எப்போதும் அதன் மேல் ஒரு கண் வைத்திருந்தான்.
அவனுடைய வழக்கமான வேலைகள் எதுவும் சரியாக நடக்கவில்லை.
இரவும் திருட்டு பயம் காரணமாக அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
இப்படியே நாட்கள் சென்றன. சில நாட்களில் வருவதாகச் சொன்ன வழிப்போக்கன் மூன்று மாத காலமாகியும் வரவில்லை.
ஆனால்,
ஆட்களோ அந்த தேனீர் சட்டியைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தார்கள். அவனிடம் அது பற்றி கேட்ட வண்ணம் இருந்தார்கள்.
ஒரு நாள் வெளியூர்களில் இருந்தும் ஆட்கள் அதனைப் பார்க்க வந்து விட்டார்கள். அவனிடம் “நீ உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி தான்” என்றார்கள்.
அவனோ பொறுக்க முடியாமல் சொன்னான்.
“உண்மையில் நான் துரதிர்ஷ்டசாலி தான்.
ஒரு காலத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தபடி நிம்மதியாக நான் இருந்தேன்.
இந்த மூன்று மாதங்களாக இந்த தேனீர் சட்டி என் நிம்மதியைக் குலைத்து விட்டது.
பகலில் நிம்மதியாக வெளியே உட்கார்ந்து இதில் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.
ஒரு கணம் கூட என்னால் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை.
இதை யாராவது திருடிச் சென்று விடுவார்களா என்ற பயத்தில் இரவிலும் என்னால் தூங்க முடியவில்லை.”
ஆனால், அவர்கள் சொன்னார்கள்,
“அப்படிச் சொல்ல வேண்டாம். அந்த வழிப்போக்கன் கண்டிப்பாக வருவான். அதை விற்று நூறு பொற்காசுகளோடு நீ நிம்மதியாக இருக்கலாம்”.
அவன் சொன்னான்,
“இத்தனை நாட்கள் வராதவன் இனி வருவானா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இப்போது நூறு பொற்காசுகள் தேவையில்லை.
என் பழைய நிம்மதியான வாழ்க்கை திரும்பக் கிடைத்தால் போதும். அதற்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்”..என்று சொல்லி
மற்றவர்கள் அவனைத் தடுப்பதற்குள் அந்த சட்டியை சுத்தியலால் ஒரே போடாகக் கொல்லன் போட்டுடைத்தான்.
அந்த தேனீர் சட்டி பல துண்டுகளாக சிதறியது.
மற்றவர்கள் திகைத்துப் போய் நிற்க கொல்லனோ மாபெரும் நிம்மதியை உணர்ந்தான்.
இந்தக் கதை நமக்கு அறிவுருத்துவது,
கொல்லன் முன்பு வாழ்ந்த வாழ்க்கை எளிமையானதாக இருந்தது. அவனுக்குக் கிடைத்த வருமானம் அவன் வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இருந்தது.நிம்மதியாகவும்,ஆனந்தமாகவும் வாழ்க்கையை ஓட்டினான்.
அவனுக்குப் பெரிய கவலைகளோ, பயமோ இருக்கவில்லை.
ஆனால் அந்த தேனீர் சட்டி மிக அதிக விலை மதிப்புடையது என்று அறிந்தவுடன் எல்லாமே அவனுக்கு தலைகீழாக மாறிவிட்டது.
அவன் அது திருட்டுப் போய் விடுமோ என்ற பயத்தை உணர்ந்தான்.
பழைய வாழ்க்கையின் கவலையற்ற தன்மையை இழந்தான்.
அவனுக்காக அவனை மதிப்பது போய் அந்த தேனீர்சட்டிக்காக அவனை மனிதர்கள் மதித்தார்கள். மற்றவர்களுக்கு அவனை விட தேனீர் சட்டி மிகவும் மதிக்கத் தக்க விஷயமாக மாறி விட்டது.
எல்லோரும் அவனை அதிர்ஷ்டசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவன் மட்டுமே உள்ளுக்குள்ளே ஒரு துரதிர்ஷ்டசாலியாக இருந்தான்.
செல்வமும், புகழும் அதிகரிக்கும் போது அதனுடன் கூடவே வரும் பிரச்னைகளைச் சொல்கிறது. அவனுடைய கடைசி முடிவு மிகப் பெரிய முட்டாள்தனமாகப் பலருக்கும் தோன்றலாம்.
இக்கதை செல்வம், புகழ் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தோன்றலாம்.
ஆனால் உண்மையில் இது ஆழமாகத் தெரிவிக்கும் செய்தி வேறு.
என்றுமே மனிதனை விட அதிகமாக அவனுடைய செல்வமும், புகழும் முக்கியத்துவம் பெற்று விடுமானால் அவனால் உண்மையான நிம்மதியைக் காண முடியாது.
பிரச்னை செல்வத்திலும், புகழிலும் இல்லை.
உண்மையான பிரச்னை அவனால் அவற்றை விட்டு இருக்க முடியாத அடிமைத்தனத்தில் தான் இருக்கிறது.
இந்த அடிமைத்தனம் அவனை சின்ன சின்ன எளிமையான சந்தோஷங்களை அனுபவிக்க அனுமதிக்காது.
அடுத்தவர்களை எல்லாம் சந்தேகக் கண்ணோடே பார்க்க வைக்கும்.
அவற்றை இழந்து விடுவோமோ, மற்றவர்கள் அபகரித்து விடுவார்களோ என்கிற பயம் சதா உடன் இருக்க ஆரம்பித்து விடும்.
எப்படிப் பாதுகாப்பது என்ற கவலையும் சேர்ந்தே இருக்கும்.
அவை அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடும்.
அவன்,
எண்ணம்,
சொல்,
செயல் எல்லாவற்றையும் தீர்மானிக்க ஆரம்பித்து விடும்.
இந்த அடிமைத்தனத்தை உடைத்து எறிந்தால் ஒழிய ஒருவன் நிம்மதியடைய முடியாது என்பதைத் தான் கொல்லன் தேனீர் சட்டியை உடைத்த பின் பெற்ற நிம்மதி மூலமாக இந்தக் கதை சொல்கிறது..
ஆமாம் நண்பர்களே,
செல்வம்,சொத்து,புகழ் இவைகள் என்றும் நமக்கு நிம்மதியை கொடுக்காது.
மற்றும் இவைகள் நிலையானதும் அல்ல.
No comments:
Post a Comment