Friday, November 9, 2018

வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள்!

வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள்!

நாணயம் புக் செல்ஃப்


புத்தகத்தின் பெயர்: தி பவர் ஆஃப் மொமென்ட்ஸ் (The Power of Moments: Why Certain Experiences Have Extraordinary Impact)

ஆசிரியர்கள்: Chip Heath and Dan Heath

பதிப்பகம்: Simon & Schuster

நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில், ஒரு சில தருணங்களே நமக்குள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறோம். வாழ்வில் நிறைய விஷயங்கள் நடக்கிறபோதிலும் இதுபோன்ற தருணங்கள் மறக்க முடியாததாக ஆகிவிடுகின்றன. இவற்றில் சில தருணங்கள் எதேச்சையாக  நடந்தவையாகவும், சில தருணங்கள் அதிர்ஷ்டத்தால் நடந்தவையாகவும் இருக்கின்றன. 

இப்படி வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள் எதேச்சையாகவும் அதிர்ஷ்டத்தின் காரணமாகவும் மட்டுமே உருவாகும் தன்மைகொண்டதா என்று கேட்டால், அதுதான் இல்லை. இதுபோன்ற தருணங்களை எதேச்சை மற்றும் அதிர்ஷ்டத்திற்கு ஒதுக்கிவிடாமல், திட்டமிட்டு நம்மால் அதனை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதையும், எப்படி அதைத் திட்டமிட்டுச் செயலாக்குவது என்பதையும் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

சிப் ஹீத் மற்றும் டேன் ஹீத் என்ற இருவர் இணைந்து எழுதிய ‘சில தருணங்கள் உருவாக்கும் சக்தி’ (The Power of Moments) என்னும் புத்தகத்தில், நம் வாழ்வில் ஏற்படும் ஒரு சில அனுபவங்கள் நமக்குள்ளே ஏன் பெரும் தாக்கங்களைக் கொண்டுவருகிறது என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்கள்.  

உதாரணத்துக்கு, எங்கோ பயணிக்கும் போதோ அல்லது ஒரு மீட்டிங்கிலோ புதியதாக ஒருவரைச் சந்திக்கிறோம். ஒரு சில மணி நேரம் அவரிடம் பழகிய பின்னர் பிரிகிறோம். ஆனால், அவர் நாளடைவில் நெருங்கிய நண்பராக மாறி நமக்குப் பெரும் பக்கபலமாய் இருக்க ஆரம்பிக்கிறார். இது எப்படிச் சாத்தியம்? பயணத்தில் சந்திக்கும் அனைவரும் நண்பர்களாவதில்லை. நண்பர்களாகும் அனைவரும் பக்கபலமாய் இருப்பதில்லை அல்லவா? இதுபோன்ற விஷயங்களைப் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம். 

நம் வாழ்வில் வரையறுக்கும் பல கணங்களை (Defining Moment) நாம் எதிர்கொள்கிறோம். ஆனால், அவையெல்லாம் வெறுமனே எதேச்சையாக நடந்தவை என்றே நாம் நினைத்துக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, காதலியை முதன்முதலாகச் சந்தித்த தருணம்,  புதிதாக வந்த ஆசிரியர் நமக்கே தெரியாத ஆனால், நம்மிடம் இருக்கும் திறமை ஒன்றைக் கண்டறிந்து சொல்லும் தருணம், வாழ்க்கை என்பது நிரந்தரம் என்று எல்லோரையும் போல் நாம் நினைத்திருக்க, திடீரென்று முளைத்த ஒரு பிரச்னையால் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்று நாம் புரிந்துகொண்ட தருணம், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில் இனிமேல் ஒருநாள்கூட இருக்கக்கூடாது என்று நாம் முடிவெடுக்கும் தருணம்போன்ற எல்லாவற்றை யுமே நாம் அதிர்ஷ்டத்தால் நடந்தது அல்லது எதேச்சையாய் நடந்தது என்றே அர்த்தம் செய்துகொள்கிறோம். 

‘‘இது உண்மையா என்றால் இல்லை. இவை எதுவும் எதேச்சை யாக நடப்பது இல்லை. நம்மால் ஒரு சினிமா/டிராமாவைப்போல் ஸ்கிரிப்ட் எழுதி அவற்றை நிகழ வைக்க முடியும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள். இதுபோன்ற வரையறுக்கும் தருணங்கள்  பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றில் இருக்கும் ஒற்றுமைகள் என்ன என்பதையும், அந்த வரையறுக்கும் தருணங்களை உருவாக்குவது எப்படி என்பதையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். 

வரையறுக்கும் தருணங்கள் பலவற்றையும், புத்தகத்தின் ஆசிரியர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அவை அனைத்திலுமே சில ஒற்றுமையான விஷயங்கள் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இதனாலேயே இதுபோன்ற தருணங்களை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

எதற்காக இதுபோன்ற தருணங்கள் நமக்குத் தேவை அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்கிறீர்களா? வாழ்க்கையை வளப்படுத்த, மற்றவர்களிடம் தொடர்பு ஏற்படுத்த, நினைவிலிருந்து நீங்காத அனுபவங்களை ஏற்படுத்த, வாடிக்கையாளர், நோயாளி, பணியாளர் என நம்முடைய துறைக்கு ஏற்றாற் போல் அனைவருக்கும் சுகமான அனுபவத்தைத் தரவும்தான் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்தவித வரையறுக்கும் தருணங்களில் இருக்கும் ஒற்றுமைகள் என்னென்ன?

உயர்ந்த நிலையைத் தருபவை

நம்முடைய சாதாரண நாள்களில், சாதாரணத் தருணங் களைவிட இந்தத் தருணங்களில் கிடைக்கும் அனுபவங்கள் அதிக அளவு உயரம் கொண்டவையாக இருக்கின்றன. இந்தத் தருணங்கள் சிறப்பானவையாக அமைய, நம்முடைய உணர்வுகளைத் தொடுபவையாக அவை இருக்கவேண்டும்.

நுண்ணறிவைத் தருபவை

இந்தத் தருணங்கள் உலகம் குறித்த நம் புரிந்துகொள்ளுதல்களை மாற்றியமைப்பதாக இருக்கிறது. இந்த நிமிடம் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம் வாழ்நாள் முழுவதும் இது பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை உணர்கிறோம். இந்த நேரத்தில்தான், ‘நான் வேலையை விட்டுவிட்டுத் தொழில் ஆரம்பிக்கப்போகிறேன்...இவளைத்தான் கைப்பிடிக்கப் போகிறேன்...’ என்பது போன்ற உள்ளுணர்வுடன் கூடிய புரிந்து கொள்ளுதல்களை ஏற்படுத்து வதாக இந்தத் தருணங்கள் இருக்கின்றன.

பெருமை அளிப்பவை 

மேலும், இந்தத் தருணங்கள் நமக்குப் பெருமையளிப்பதாக இருக்கின்றன. அதாவது, சாதனைத் தருணம், துணிச்சலான தருணம் என்பது போன்ற தருணங் களை இதற்கு உதாரணமாகச் சொல்கின்றனர் ஆசிரியர்கள். இந்தப் பெருமைமிகு தருணங்களை உருவாக்க, பெருமை குறித்து நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் சாதனைகளை மைல்கல்களால் அளவிடுவதைப் போன்று எப்படி அமைத்துக்கொள்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் காலையில் அதிக தூரம் ஜாக்கிங் போய்ப் பழகுங்கள் என்று சொன்னால் கேட்காதவர்கள், ‘Couch to 5k’ (படுக்கையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர்) என்ற மைல்களை வைத்து ஜோடிக்கப்படும் திட்டங்களில் சேர்ந்து தினமும் ஜாக்கிங் போவது இதனால்தான் என்கின்றனர் ஆசிரியர்கள். 

தொடர்புகளால் வருபவை 

திருமண விழா, பட்டமளிப்பு விழா, சுற்றுலா, பார், சொற்பொழிவு, விளையாட்டுப் போட்டிகள் எனக் கூட்டம் சேர்கிற இடங்களிலெல்லாம் இந்த வரையறுக்கும் தருணங்கள் துளிரத் தயாராய் இருக்கின்றன. ஏனென்றால், இந்தத் தருணங்களை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். அது எப்படி மற்றவர்களுடன் இணையும்போது இது உருவாகிறது? பரிசோதனை முயற்சியாக தனி அறைக்குள் இருவரை அனுப்பி, 45 நிமிடங்கள் அங்கே அமரச் செய்தால், பெரும்பாலானோர் வெளியே வரும்போது நல்ல நண்பர்களாகி விடுகின்றனர். இவ்வித தனிமையான ஒருங்கிணைப்புகளே நட்பை வளர்க்கிறது. மருத்துவர் - நோயாளி,  சில்லறை விற்பனைக் கடை பணியாளர் -  வாடிக்கையாளர் போன்றவர்கள் நடுவேகூட நட்பு மலர்வதற்குக் காரணம் கூட்டமில்லாத சூழலில், அவர்கள் இருவரும் தனியே சந்திக்கும் வாய்ப்புகள் உருவாவதுதான் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

வரையறுக்கும் தருணங்கள் என்பவை பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் தருணங்களாகவும் இருக்கக்கூடும். ‘‘நெகட்டிவ் தருணங்களே, ‘நான் யாருன்னு காட்டுகிறேன்’ என்று திசைமாற்றும் தருணமாக இருக்கிறது இல்லையா?” என்று கேட்கின்றனர் ஆசிரியர்கள். 

இந்த நான்கு விஷயங்களே நம்முடைய வாழ்வில் தோன்றும் வரையறுக்கும் தருணங்களில் பெரும்பாலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லியிருக்கும் ஆசிரியர்கள், இவற்றை எப்படி உருவாக்கி வளர்த்தெடுப்பது என்பதையும் தெளிவாக உதாரணங்களுடன் சொல்லியிருக்கின்றனர். 

உயர்ந்த அனுபவங்களை எப்படி உருவாக்கிக்கொள்வது, உலகம் குறித்த புரிதலை எப்படி வளர்த்துக்கொள்வது, பெருமையளிக்கும்படி எப்படி நம் வாழ்க்கைமுறையைக் கட்டமைத்துக்கொள்வது, உறவுகளை உருவாக்கி எப்படி அவற்றை உரம்பெறச் செய்வது என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

ஒருசில தருணங்களே நம் வாழ்க்கையை வரையறுக்கிறது. அந்த வரையறுக்கும் தருணங்களை நாமே கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டி, அதற்கான வழிமுறைகளையும் விளக்கமாகச் சொல்லியுள்ள இந்தப் புத்தகத்தை, வெற்றி பெற விரும்பும் அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.

No comments:

Post a Comment