ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமான தனிப்பட்ட திறன்களும், செயல்பாடுகளும் கொண்ட ஆளுமைகளின் அடையாளம் ஆவர். அதனால் தனி மனிதத்திறன் என்பது மிகவும் வேறுபட்ட ஆற்றல்களும், அறிவுத் திறன்களும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும். தனி மனிதனை உருவாக்கும் பண்புகளைப் பற்றியோ, அவ்வாறு ஒவ்வொரு மனிதனை உருவாக்குவதில் குடும்பங்களின் பங்கு பற்றியோ அல்லது தனி மனிதனை அடையாளப்படுத்துவதாகக் கணக்கிடப்படும் தனி மனிதனுடைய உடல் அழகைப் பற்றியோ இல்லை இங்கு கூறப்போவது.
சக்தியுடைய தனி மனிதர்களை வார்த்தெடுக்கும் சில பண்புகள் இருக்கின்றன. தன்னம்பிக்கை, குறிக்கோள், ஒருமுகத்தன்மை, சிதறாத கவனம், முடியும் என்கிற உள்ளுணர்வு (Will Power), தளராத உற்சாகம் போன்றவை எல்லாம் தனி மனிதனுடைய ஆற்றலை வெளிப்படுத்தும் வெற்றி மனிதனின் அடையாளங்கள் ஆகும். மிகச்சிறந்த தனி மனிதனை வெளிப்படுத்துவது அவனுக்குள் இருந்து ஒளிவிடும் தன்னம்பிக்கையால் அவன் மற்றவர்களோடு பழகும்விதமே. மேற்கொண்ட செயலை செய்து முடிக்க தன்னால் முடியும், அதற்கான காரியங்களைச் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்து முடிக்கக்கூடிய திறமை தனக்கு உண்டு, செயல்படும் போது இடையிடையே குறுக்கிடும் வெற்றி தோல்விகளை சமமாகக் கருதும் மனம் தனக்கு இருக்கின்றது என்கிற மனப்பான்மை உள்ளவனுக்கு இருப்பதுதான் இந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் அடையாளம்.
ஆனால் அதே நேரத்தில் அளவுக்கதிகமாக தன்னைத்தானே நம்பிக்கொள்வதும் சில சமயங்களில் ஆபத்தில் முடியும். பல தடவை தோற்று ஓடிய குரூஸ் அரசனுக்கு கடைசியாக வெற்றி பெற முடிந்ததும், வாய் பேச முடியாத, விழித்திறனை இழந்த, காது கேட்காத ஹெலன் கெல்லர் கல்வித்துறையிலும், புத்தகங்கள் எழுதுவதிலும் புகழ் பெற்றதும், செவித்திறன் இல்லாத பீட் ஓவன் சங்கீதத்தில் பிரசித்தி பெற்றதும் உறுதியான தன்னம்பிக்கையால் தான்.
தனிமனித ஆளுமையை அடையாளப்படுத்தும் இன்னொரு குணம்தான் லட்சியம். குறிக்கோள். தீர்க்கமான குறிக்கோள் ஒன்றை கொண்டிருப்பதும், அதை உறுதியாக பசு மரத்தில் பதிந்த ஆணிபோல பதித்துக் கொள்வதும், வெற்றி ஆளுமையின் பாகம் ஆகும். படிக்க வேண்டும், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும், வீட்டையும் காரையும் வாங்க வேண்டும். இதற்கு மேல் லட்சியம் என்று எதுவும் இன்று பெரும்பாலோருக்கு கிடையாது.
வேலை கிடைப்பதைக் காட்டிலும் மாற்று லட்சியம் இல்லாதவர்கள் கிடைத்த வேலையை உந்தித்தள்ளியும், விரட்டியடித்தும் மாதங்களையும், வருடங்களையும் கடத்துகிறார்கள். லட்சியத்துக்கு உரிய படிக்கட்டாக வேலையை கருதும்போது வேலையில் நிறைவு பெற முடியும்.
உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் அவரை போற்றுவார்கள். எங்கே போக வேண்டும் என்று உறுதியான திட்டம் இருக்கும்போது நம் திறமைகள் எல்லாவற்றையும் அதை நோக்கிமற்றவர்கள் நடந்து நடந்து போட்ட பாதையில் இல்லை நாம் பயணிக்க வேண்டியது. நமக்கு என்று சொந்தமாக ஒரு பாதையை நாமே போட்டுக் கொண்டு அதில் நடக்க வேண்டும். உறுதியான குறிக்கோள் என்ற ஒன்று இருந்தால்தான் மூளையும் செயல்திறன் கொண்டதாக மாறுகிறது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
லட்சியத்துக்குரிய பயணத்தில் நம் கால்கள் பல வழிகளிலும் சென்றால் நம் ஒருமுகமான கவனத்தை நாம் இழந்துவிடுவோம். துரோணாச்சாரியார் அம்பை எய்யச் சொன்னபோது, அர்ஜூனன் தன் இலக்கை மட்டுமே குறி பார்த்து அம்பை எய்தான். அவரவர்களுடைய திறமைக்கு ஏற்றவாறு நேரத்தை நிர்வாகம் செய்து லட்சியத்தை நோக்கிப் பயணப்படுவதே சிறந்தது ஆகும்.
வாழ்க்கையில் சந்திக்கும் தோல்விகளில் சிக்கி அகப்பட்டுப் போகாமல் மனதுடைய ஆற்றலை வலிமையாக்கி, ஒரு அடி பின்னால் செல்லும்போது இரண்டு அடி முன்னோக்கி நடக்க மனதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும. மனதின் ஆற்றல் ஆளுமையை வலிமையுடையதாக்கும். சோம்பேறிக்கு எந்தத் திறமையும் கைவராது என்பது நிதர்சனமான உண்மையாகும். சோம்பேறிக்கு கல்வி மட்டும் இல்லை எந்த ஒரு முன்னேற்றமும் வாழ்க்கையில் ஏற்படாது.
தளராத உற்சாகம் இருந்தால் எல்லாவற்றையும் கைப்பற்றலாம். உற்சாகம் உள்ளவர்கள் அதை தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் இனிமையான பூவின் நறுமணத்தைப்போல பரவச் செய்துவிடுகிறார்கள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியரை வீறுகொண்டு விடுதலையுணர்வு பெற்று எழச்செய்த காந்திஜி தளராத உற்சாகத்தின் சின்னமாக இருந்தார். எதிலும் திருப்தியடையாமை, துக்கம், கோபம், வெறுப்பு, கௌரவம், அலட்சிய மனப்பான்மை, பொறாமை இவைகள் எல்லாம் சர்வசதா காலமும் வெளிப்படுத்துபவர்களை எந்த மனிதரும் நெருங்குவது இல்லை. திறந்த மனதுடன் பேசும் பேச்சு அடுத்தவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள். எல்லையில்லாத அறிவு சிறந்த ஆளுமையின் சிறப்பு அம்சம் ஆகும். நல்ல ஒரு கேட்பவராவதும், விசாலமான மனதுடையவராக இருப்பதும், அற்புதமான மனிதருடைய அடையாளம் ஆகும். மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்றால் நாம் மற்றவர்களை விரும்ப வேண்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் கண்கள், அருவிபோல மனம் திறந்த பேச்சு, மாறாத புன்னகை போன்றவையும் மகாத்மாக்களின் அடையாளங்கள் ஆகும். ஆக தன்னம்பிக்கை, லட்சியம், தளராத உற்சாகம், முடியும் என்ற நம்பிக்கை ஆகியவை பிரகாசிக்கும் தனிமனித ஆளுமை வெற்றியின் சின்னமாக ஆகிறது.
No comments:
Post a Comment