Friday, November 9, 2018

வெற்றி உங்கள் கையில்

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்

“வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்னும் எண்ணம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது.

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு “இவரின் உதவி வேண்டும். அவரிடம் சிபாரிசு பெற வேண்டும்” என்று நினைத்து, பிறரை மட்டுமே சார்ந்து வாழ்ந்து, வெற்றிக்காக காத்திருப்பவர்களும் உண்டு.

“எனக்கு நல்ல பெற்றோர் அமைந்திருந்தால், நான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பேன்”

“எனக்கு சிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தியிருந்தால், என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்”.

“புகழ்பெற்ற பள்ளியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்திருந்தால், எனக்கு சிறந்த வேலை கிடைத்திருக்கும்”.

“தரமான புத்தகங்கள் வைத்து படித்திருந்தால், நான் பல்கலைக்கழகத்தில் முதல் “ரேங்க்” எடுத்திருப்பேன்”.

“எங்கள் குடும்பத்தில் வறுமை இல்லாத நிலை அன்று இருந்திருந்தால், இன்று பெரும் கோடீஸ்வரனாக மாறியிருப்பேன்”.

என தங்களின் வாழ்க்கையை ‘மறு ஆய்வு’ செய்து, தாங்கள் தவறவிட்ட வாய்ப்புகளையும், இழந்த சூழல்களையும் எண்ணி பெருமூச்சு விடுபவர்களும் உண்டு.

“வாழ்க்கையின் வெற்றி” என்பது வெளியில் இருந்து பிறர் தரும் ஆதரவினாலும் சாதகமான சூழலினாலும் மட்டுமே நிகழ்கிறது” என்னும் கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.

உண்மையான ‘வெற்றி’ என்பது என்ன?

“As a man thinketh” என்பது புகழ்பெற்ற எழுத்தாளரான “ஜேம்ஸ் ஆலன்” எழுதிய நூலாகும். இந்த அற்புதமான நூலை “மனம் போல் வாழ்வு” என்னும் தலைப்பில் கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அந்த நூலில் “மனிதனது நினைப்புக்குத் தக்கவாறு அவனுடைய வாழ்வு அமைகிறது. மனிதன் எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும், நிலைமையும் அமைகின்றன. பூமியில் மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் வித்திலிருந்து மரம் உண்டாகிறது. அதுபோல மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் நினைப்பிலிருந்து அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகிறது” எனக் குறிப்பிடுகிறார்.

மனித மனத்திற்கும் வெற்றிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மனத்தில் உருவாகின்ற எண்ணங்கள் தான் மனிதனின் செயலை நெறிப்படுத்துவதால் அந்த எண்ணத்தை உருவாக்கும் காரணிகளைப்பற்றி தௌல்வாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 

மனதில் எண்ணங்களை உருவாக்கும் காரணிகளை 2 வகையாகப் பிரிக்கலாம். அவை

1. புறக் காரணிகள் (External Factors)

2. அகக்காரணிகள் (Internal Factors)

ஆகும்.

“புறக் காரணிகள்”  (External Factors) என்பது மனிதனின் வெளி உலகில் தோன்றும் காரணிகள் ஆகும். சரியான நட்பு, தரமான தகவல் தொடர்பு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல், இணைந்து பழகும் தன்மை, பொறுமை, அன்பை வெளிப்படுத்தும் தன்மை – போன்ற பல புற காரணிகள் (External Factors) ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இதைப்போலவே, உறவினர்கள், சகோதர – சகோதரிகள், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்ற உறவுகளும் ஒருவரின் வெற்றிக்கு பெருமளவில் துணை நின்கின்றன. பள்ளி – கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடன்பயிலும் மாணவ-மாணவிகள், நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள் என பலவிதமான புறக் காரணிகளும் ஒருவரது வெற்றிக்கு துணை நிற்கின்றன.

“அகக் காரணிகள்”  (Internal Factors) என்பது ஒருவரின் மனதில் உள்ள காரணிகள் ஆகும். இந்தக் காரணிகள் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, குறிக்கோள்கள் (Goals)> தன்னம்பிக்கை (Self Confidence)> புத்தாக்க சிந்தனை (Creativity)> முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill)> தலைமைப்பண்புகள் (Leadership Qualities)> தன் மதிப்பு (Self Esteem) போன்ற பல காரணிகளும் ஒருவரின் வெற்றிக்கு பெருமளவில் உதவுகின்றன.

‘வெற்றி’ என்பது ஒரே நாளில் கட்டி முடிக்கப்படும் கட்டிடம் அல்ல. அது நாள்தோறும் நல்ல செயல்களால் உருவாக்கப்படும்  ‘மாளிகை’ ஆகும். ஒருவர் செய்யும் செயல்களின் அடிப்படையில்தான் ஒருவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

மனித வாழ்க்கையில் பிறப்புமுதல் இறப்புவரை உள்ள காலத்தை 6 நிலைகளாக பிரித்துக் கொள்வார்கள். கருவறைப் பருவம் (Prenatal Stage)> குழந்தைப் பருவம் (Infancy Stage)> சிறுபிள்ளைப் பருவம் (Childhood Stage)> ‘டீன் ஏஜ்’ எனப்படும் குமாரப்பருவம் (Adolescence Stage)> முதிர்நிலைப் பருவம் (Adult Stage) மற்றும் முதுமைப் பருவம் (Old Stage) என்னும் இந்த நிலைகள் ஒவ்வொன்றிலும் ஒருவரின் வெற்றி அமைந்துள்ளது. எனவே வாழ்வில் எல்லா நிலைகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

“எண்ணங்களையெல்லாம்  நல்ல செயலாக்கும் ஆற்றல்தான் வெற்றியாக வளர்ச்சி பெறுகிறது” என்பது ‘வால்டேர்’ என்பவரின் கருத்து ஆகும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் எண்ணங்களை செம்மைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது வெற்றிக்கான வழியாகும்.

ஒவ்வொரு ‘வெற்றி’யும் வித்தியாசமானவை ஆகும். இதனால் வெற்றியின் தன்மைக்கு ஏற்ப, அந்த வெற்றியை அடையும் காலமும் மாறுபடுகிறது.

வெற்றியை குறுக்கு வழிகளில் பெறுவதற்கு சிலர் முயற்சி செய்வதுண்டு.

புகழ்பெற்ற ‘ஜென்’ கதை ஒன்று வெற்றியைப்பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது.

சீனாவிலுள்ள ஒரு மன்னன் உலகத்தின் வரலாறு முழுவதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினான். “உலக வரலாறு  அனைத்தையும் தெரிந்து கொண்டால் ஞானியாகிவிடலாம்” என்றும் நினைத்தான்.

அவனது அமைச்சரவையிலிருந்து அறிஞர்களையும், புலவர்களையும் அழைத்தான். உலக வரலாற்றை எழுதித் தரும்படி கட்டளையிட்டான்.

சில ஆண்டுகள் கழிந்தன.

ஆயிரக்கணக்கான பக்கங்களில் உலக வரலாற்றை எழுதிக்கொண்டு பல அறிஞர்களும், புலவர்களும் வந்தார்கள். நூற்றுக்கணக்கான குதிரை வண்டிகளில் விரிவாக எழுதப்பட்ட உலக வரலாற்றுச் சுவடிகள் கொண்டுவரப்பட்டன.

அரண்மனை மண்டபம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு வரலாற்றுச் சுவடிகள் குவிந்தன.

மன்னன் அதிர்ச்சியடைந்தான்.

“உலக   வரலாறு இவ்வளவு  பெரியதா? இவற்றை என்னால் படித்து முடிக்க முடியாது. மிகவும் சுருக்கமாக எழுதித்தாருங்கள்” என்றான் மன்னன்.

“உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளை சுருக்கமுடியாது. அதிகமாக சுருக்கினால் உண்மைகளைத் தெரியமுடியாது” என அறிஞர்கள் சொன்னார்கள்.

“எப்படியாவது  நீங்கள் சுருக்கித் தாருங்கள்” என விடாப்பிடியாக விரட்டினான்.

பயந்துபோன அறிஞர்களும், புலவர்களும் ஒரு ஜென் குருவை சந்தித்து ஆலோசனை கேட்டார்கள். ஜென் குரு மன்னனை சந்திக்க நேரில் வந்தார்.

“உலக வரலாற்றை  மிகவும் சுருக்கமாக நான் எழுதித்தருகிறேன்” என்று ஜென் குரு கூறினார்.

மறுநாள், மன்னனை சந்தித்த ஜென் குரு ஒரு ஓலையை அவனிடம் நீட்டினார். அந்த ஓலையில்“உலகில்மனிதர்கள்பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். இறந்துபோனார்கள்” என எழுதப்பட்டிருந்தது.

மன்னன் ஆச்சரியமாகப் பார்த்தான். “உலக வரலாற்றை  மிகவும் சுருக்கமாக இப்படித்தான் எழுத முடியும்” என்று சொன்னார் ஜென் குரு.

மன்னனுக்கு உண்மை புரிந்தது.

“எந்த வெற்றியைப்  பெறுவதற்கும் முறையான வழிமுறையும், தேவையான கால அவகாசமும் தேவை” என்பதை மன்னன் புரிந்து கொண்டான்.

குறுக்கு வழியில் கிடைக்கும் ‘வெற்றி’ நிரந்தரமானதல்ல என்பதையும், தெளிவானது அல்ல என்பதையும் புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெறலாம்.

No comments:

Post a Comment