Friday, November 9, 2018

நீங்கள் சாதனையாளரே!

“விரும்பியது கிடைக்காவிட்டால்,
கிடைத்ததை விரும்பு” – இது ஆக்கபூர்வமான சிந்தனையின் அடித்தளம்.

தொழில்:

இந்தச் சிந்தனை தொழிலுக்கு மிகவும் பொருத்தமானது. படிப்புக்கும், பார்க்கும் பணிக்கும் சம்பந்தமில்லாத நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சாதனையாளர்கள் எப்படி ஒரு செயலைச் செய்ய வேண்டுமென கீழக்கண்டவாறு வள்ளுவம் வழிகாட்டுகிறது.

இலாபம் – நட்டம் ஆராய்ந்து செய்தல்;
முதலுக்கு மோசமின்றி செயல்படுதல்;
தவறான செயல்களைச் செய்யாதிருத்தல்;

இவைகள் சுலபமாகச் செயல்படுத்தக் கூடியது தான்.

நோக்கம்:

தொழில் செய்வதன் நோக்கம் பொருளீட்டுதல்; பொருளீட்டுவதன் நோக்கம் ‘வாழ்க்கையை வாழ்வதற்கே!’ ஆனால் பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கை என ஒரு சாரார் – அதிலும் குறிப்பாக ஆட்சி மற்றும் அதிகாரப் பொறுப்பிலுள்ளோர் செயல்படுவதால் பொதுமக்களும் அவர்களது செயல்களால் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிப்பு சாதாரணமானதல்ல. இந்தப் பூவுலகில் வாழவும் வேண்டுமா? எனத் தவறான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளபடுமளவுக்கு பாதிப்பு.

காலால் நடந்தால் காத தூரம் செல்லலாம்,

கையால் நடந்தால்…??

தவறான வழியில் சேர்க்கும் பொருள், நிச்சயமாகத் துன்பத்தைத் தான் தரும்.

“பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்” – குறள் 675

பலமுறை யோசித்து, மயக்கமில்லாமல், அவசரப்படாமல் – என்ன தொழில் (பணி) செய்யப் போகிறோம்; அதனைத் தொடங்க வேண்டிய காலம்; அதைச் செயல்படுத்தும் (பணிபுரியும்) இடம்; அதற்கான கருவிகள் (இயந்திரங்கள்); இந்தத் தொழில் துவங்கத் தேவையான முதலீடும், அதனால் கிடைக்கும் வருமானமும் என்ற ஐந்தையும் ஒன்றுக்குப் பலமுறை ஆலோசித்து, முடிவு செய்து துவங்கினால், அதனால் எதிர்பார்க்குமளவு சம்பாதிப்பதுடன், அது இன்பத்தையும் தருவதாக அமையும். ஓர் உதாரணம் பார்ப்போம்.

பருக்கை:

இது ஒரு புத்தகத்தின் பெயர். மனிதன் உயிர் வாழ இறைநிலை வழங்கிய அடிப்படைத் தேவைகள் பசியும், தூக்கமும். வாழ்க்கையை இனிமையாக வாழ வழங்கியது தான் மறதி. இதில் முக்கியமானது பசி. பசியே இல்லாத நிலையை நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் பிடிப்பே இருக்காது. இந்தப் பசியைப் போக்கவும், இதர தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமே இன்று எல்லோரும் பணி / தொழில் செய்கிறோம்.

மாணவப் பருவத்தில், பகுதி நேர வேலை (Part Time Job) பார்த்துக் கொண்டு படிக்கும் பழக்கம் இப்போது பரவலாகிவிட்டது. பொருள் வசதியில்லாதவர்கள் தான் இப்பணிகளை நாடிச்செல்கின்றனர். படித்துப் பட்டம் வாங்கி நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் எதிர்நீச்சல் போடும் இவர்களின் சாய்ஸ் – பெரும்பாலும் திருமண கேட்டரிங்; காரணம் சம்பளத்துடன் சாப்பாடும் கிடைப்பது தான்.

இந்தப் பகுதிநேரப் பணியை மேற்கொண்டு பி.எச்.டி. (Ph.D.)  தமிழ் பாடத்தில்,  சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவரின் அனுபவம் தான் பருக்கை எனும் இந்த நூல்.

இதோ அவர் பேசுகிறார்:

“திருவண்ணாமலை  அருகில் அத்தனூர் கிராமம் சொந்த ஊர்; அப்பா பட்டறைத் தொழிலாளி. நான்கு குழந்தைகளில் நான் கடைக்குட்டி. படிப்பின் மீது ஆர்வம். நன்றாகவும் படிப்பேன். பள்ளிக்குப் பேருந்தில் செல்ல வசதியில்லாமல் நடந்து சென்று படித்தேன்.

மேற்கொண்டு படிக்க விரும்பியபோது வீட்டில் தடுத்தார்கள் – என் மூலமாக வரும் வருமானம் நின்றுவிடும் என்பதால். என் கனவை விட்டுக்கொடுக்க தயாராயில்லாமல், சென்னைக்கு வந்தேன்.

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் தங்க இடமும், உணவும் கிடைக்கவில்லை. கடற்கரை, பூங்கா எனப் பல இரவுகள் உறங்கினேன். எனது கஷ்டத்தைப் பார்த்த உடன் படிக்கும் மாணவன் தனது அறையில் எனக்கு இடம் கொடுத்தான்.

விடுதி ஆய்வாளர் கண்களில் படாமல் அறையில் தங்கும் போதும், விடுதி உணவைச் சாப்பிடும் போதும் மனதில் ஏற்பட்ட வலியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

எவ்வளவு காலம் தான் இப்படி மறைந்து வாழ்வது? தேவைகளைப் பூர்த்தி செய்ய பகுதிநேர வேலை பார்க்க முடிவு செய்தேன். சாப்பாடும் கிடைக்கும் என்பதால் கேட்டரிங் வேலையைத் தேர்வு செய்தேன். இது சந்தோஷம் தான். ஆனால் அனுபவிக்கும்போது தான் பல சிரமங்கள் புரிந்தது.

கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை தான். கல்லூரி மாணவன் என்றாலும், ஏஜென்டுகளைப் பொறுத்தவரை நான் கூலியாள் தான். மாட்டைவிடக் கேவலமாக விரட்டுவார்கள். ஏதாவது பேசினால், அடுத்த முறை வேலை கொடுக்கமாட்டார்கள்.

கிரிக்கெட்:

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர். சிறுபிழை என்றாலும் அவுட் தான். அம்பயர்களது தவறான கணிப்பால், இவர் பலமுறை ஆட்டமிழந்துள்ளார். மிகமிக எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.

சாதனை:

ஆனால், வாழ்க்கை எனும் விளையாட்டில் நாம் எப்படி விளையாடினாலும், இயற்கை எனும் அம்பயர் பலவிதமான வாய்ப்புகளைத் தந்து கொண்டே இருக்கும். வாய்ப்புகள் வரும்போது கட்டாயம் பயன்படுத்திச் செயல்பட்டால் சாதிக்க முடியும். மூச்சுக்காற்று நமக்குச் சொல்வது, எல்லா மனிதர்களும் சாதிக்கவே பிறந்துள்ளார்கள்.

எந்த அளவு வெயில், குளிர், மழை என்றாலும், உடலுக்குள் செல்லும் மூச்சுக்காற்று நமக்குத் தேவையான பிராண சக்தியைத் தந்து கொண்டே இருப்பதன் மூலம், நாம் எந்தச் சூழ்நிலையிலும் நமது கடமையை வேண்டா வெறுப்பாகச் செய்யக் கூடாது என்ற பாடத்தைப் போதிக்கிறது.

“செய்வன திருந்தச் செய்”  இது சாதனைக்கான தொடர்படி, என்ன செய்தாலும் சுயதிருப்தி (Self Satisfaction) முக்கியம். மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ? விமர்சனம் செய்வார்களோ? எனக் குழம்பவே கூடாது.

எண்ணித் துணிந்து செய்யும் செயல்கள் என்றும் நமக்கு ஏற்றத்தை மட்டுமே – அதாவது முன்னேற்றத்தை மட்டுமே தரும். இப்போதைய நிலைக்கு வருத்தப்படுவதால் பயன் ஏதுமில்லை. கிடைத்ததை ஏற்பதும், அதனை விரும்புவதும் மட்டுமே சாதனைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

மற்றவர்கள் நம்மை சாதனையாளர் எனப் பாராட்ட வேண்டும் எனக் காத்திருக்கக் கூடாது. உங்கள் ஈடுபாடு உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்களிடமுள்ள அபரிமிதமான, அளப்பரிய, அற்புத மனசக்தியின் மூலம் எதையும் சாதிக்க முடியும். அந்த மனசக்தி தான் ஆழ்மனம் என்பது. இதை உபயோகியுங்கள்.

ஆழ்மனக் காட்சிகள் அற்புதங்களை நிகழ்த்தும். நீங்கள் நம்புங்கள்! நீங்கள் சாதனையாளர் தான். மீண்டும் ஒருமுறை படியுங்கள். உங்களாலும் சாதிக்க முடியும். சாதிப்பதற்காகவே பிறந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment