Friday, November 9, 2018

மனதில் உறுதி வேண்டும்

நம் வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகளினால் மனம் மிகவும் கனமாகி மன அழுத்திற்கு ஆளாகிறார்கள். தாங்க முடியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கின்ற தயக்கம், எந்த செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல் இவை அனைத்தும் மன அழுத்தின் அறிகுறிகளாகும்.

நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் சரி தைரியத்தையும் விடாமுயற்சியையும் கைவிடாதீர்கள். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் மிக அற்புதமான திட்டத்தை வைத்திருக்கிறார். அதை முறையே நடத்துவதற்கான வழி முறையும் அவருக்கு தெரியும். தேவையில்லாமல் நாம் அவரை நிந்திக்க வேண்டாம். சந்தோசமாக இருக்கும் போது நம் கைப்பிடித்துக் கொண்டு மிகவும் நல்ல முறையில் நடத்தி வந்த கடவுளுக்கு துன்பப்படும் போது அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான வழியும் தெரியும். எனவே நமக்கு வரும் கஷ்டங்களை நுண்ணோக்கி வைத்து பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டு விட்டு வேறு வழியைத் தேடவும்.

தற்பொழுது நாம் படும் கஷ்டத்திற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். இந்த கஷ்டங்கள் நம்மை மிகப்பெரிய கஷ்டத்திலிருந்து தடுத்து நம்மை காப்பாற்றி சிறு துன்பம் மட்டும் கொடுத்திருக்கலாம். ஆனால் நமக்கு இதுவே மிகப்பெரும் பாராமாக இருக்கலாம் அப்படியே பாராமாக இருந்தாலும் கடவுள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வெகுவிரைவில் தருவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கவலை நாளையத் துயரங்களை அழிப்பதில்லை

இன்றைய வலிமையை அழித்துவிடும் – என்பதை மறந்து விடாதீர்கள்.

எவ்வளவு சிரமங்கள் வந்தாலும், எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் நாம் நினைத்து எதிர்மாறாக நடந்தாலும், எடுத்த காரியம் நடக்கவில்லை என்றாலும் துவண்டு விடாதீர்கள். ஏன் அடுத்த விநாடியிலேயே மாறலாம். எனவே ஒரே அடியாக மனதிற்கு அதிக சந்தோஷத்தையும் அதிக துக்கத்தையும் மனதில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். மனதை ஆல்பா நிலையிலே வைத்திருக்கவும். சந்தோஷம் எவ்வளவு வந்தாலும் வரவேற்புடன் ஏற்றுக்கொள்கின்ற நம்மால் சிறு தோல்வி வந்தாலும் ஏற்க மறுக்கின்றன. எனவே நம் மனது பக்குவப்பட வேண்டும். முதலில் இவை கடினமாக இருக்கும். பிறகு நம் மனது எல்லாவற்றையும் சமமாக பார்க்கின்ற பக்குவ நிலைக்கு வந்து விடும். இதுவே ஆல்பா நிலையாகும்.

எந்த ஒரு வேலையும் தொடர்ந்து முயல்வோர்களின் விடாமுயற்சி வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்ப்படுத்துகிறது. இருந்தாலும் சில சமயங்களில் நமக்கு வெறுப்பும், அழுகையும் ஏற்படும்.

“முடியும் வரை முயற்சி செய்

உன்னால் முடியும் வரை அல்ல

நீ நினைத்த செயல்

முடியும் வரை”

முயற்சி செய்து தோற்கும் செயல்களை தோல்வியாக கருதக்கூடாது முதல் முயற்சியில் கிடைத்த வேலை, முதல் பயிற்சியில் தேர்ச்சி போன்றவை சில நேரங்களில் ஆபத்தானவை. ஏனென்றால் அவர்களால் அந்த தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் அவர்களுக்கு முயற்சி செய்யும் எண்ணமே இருக்காது. நம்மால் மட்டும் தாங்கிக் கொள்ள முடியுமா என கேட்கலாம். சாதனை படைப்பவர்களிடம் மட்டுமே கடவுள் பல பெரும் பொறுப்புகளை ஒப்படைத்து இருக்கிறார். ஏனென்றால் கடவுள் உங்களை கண்மூடித்தனமாக நம்புகிறார். அப்படி கடவுளை நம்புகிறவர்களில் நீங்களும் ஒருவர் என பெரு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள்.

பல பேர் கொடும் வார்த்தைகளால் நம் மனதை காயப்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் நாம் பொறுமையுடன் இருக்கவும்.  இதனால் நீங்கள் கெட்டுப் போவதும் இல்லை; உங்கள் நிலை தாழ்ந்து போவதும் இல்லை. மேலும் வாழ்வில் யாரையும் அதிக அளவு நம்பாதீர்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். நீதிக்கு புறம்பாக நடக்காதீர்கள். நீங்கள் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் சத்தியத்தை கடைபிடியுங்கள். நம் நாட்டு கலாச்சாரத்தோடு வாழப் பழகுங்கள். முடிந்தால் அதை பிறருக்கு கூறுங்கள்.

கடவுளைத் தவிர யாரும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை உணருங்கள். எனவே எந்த ஒரு செயல் செய்வதற்கும் பிறரை நம்பி இருக்காதீர்கள். அவர்களால் வரமுடியாவிட்டால் தைரியமாக தாங்களே சென்று வெற்றிகரமாக செய்து முடியுங்கள்.

சில சமயம் நாம் எவ்வளவு மன உறுதியுடன் இருந்தாலும் சில சம்பவங்களால் நம் மன உறுதியையும் சுக்கு நூறாக வெடிக்கின்ற நிலை ஏற்படலாம். மனம் வெறுத்தும் போகலாம். எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். எதற்கும் ஒரு நாள் உண்டு எல்லோருக்கும் வாழ்வு உண்டு என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் வியத்தகு செயலினால் நாளை உலகமே உங்களை போற்றி புகழாரம் சூட்டலாம். முயற்சி செய்யுங்கள் அதை விரும்பி செய்யுங்கள்.

லட்சியத்தில் ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்னா, லட்சியத்தை தவிர மற்ற எல்லா சந்தோஷத்தையும் நாம் தியாகம் பண்ணியே தீரனும். அதுதான் அதனுடைய விலை. லட்சியவாதிகள் அனைவரும் அதிகப்படியான நேரங்கள் உழைத்தவர்களாக இருப்பார்கள். அதாவது மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் இவர்களை விழித்திருந்து உழைத்திருப்பார்கள்.

 யாரையும் தெரியாமல் கூட சபிக்காதீர்கள், மனசார வாழ்த்துங்கள். மற்றவர்களை மனசார வாழ்த்தும் போதெல்லாம், இறைவனும் உங்களை ஆசிர்வதிக்கின்றார். நமக்கு இடையூறு செய்பவர்கள் நம் வாழ்க்கை ஓட்டத்தை தடுத்து நிறுத்த நினைப்பவர்களிடம் மல்லுக்கு நிற்கக்கூடாது. வீண் வாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை விட நம் இலட்சியப் பாதையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் எதிரிகள் தான் உங்கள் எதிர்காலத்தை காட்டுகிறார்கள். அவர்கள் தான் உங்கள் சிகரத்தின் காவலாளிகள்.

வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிற எவரும் செய்ய வேண்டிய முதல் காரியம் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து பிரமித்து நின்று விடக்கூடாது. தோல்வியில் துவண்டு விழவும் கூடாது.

நம் மனதை உறுதியோடு வைத்துக் கொள்வதற்கான சில வழிகள். இவைகள் நம் வாழ்வை வளமாக்கி வெற்றிப்படியில் நிற்க வைக்கும்.

நாளை நமக்காக

காத்து இருக்கிறது

சோர்வை அகற்றி

நம்பிக்கை வளர்ப்போம்

1. செயல்களை முறையாக திட்டமிட வேண்டும்

2. இப்பொழுதே செயலில் ஈடுபட வேண்டும்

3. ஆழமாக சுவாசியுங்கள, இதனால் உடலும் மனமும் தளர்வு அடைவதை உணரலாம்

4. நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லாம் நன்மைக்கே என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள்

5. முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்

6. இசை கேளுங்கள் (அ) பாடுங்கள் எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு

7. கடவுளை நம்புங்கள்

8. வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம். பழகிப் பார்த்து முடிவு செய்யவும்

9. குறைவாக பேசுங்கள் அதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ளுங்கள்

10. பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். அதேபோல் உங்களுடைய நேரத்தை பிறர் வீணாக்க ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்

11. உங்களுக்கு ஒன்றை பற்றி தெரியாவிட்டால், உண்மையை சொல்லிவிடுங்கள் தெரியும் என்று நடிக்காதீர்கள்

12. வெற்றி பெற்றால் எல்லோருடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்

“மண்ணில் பிறப்பது ஒரு முறை

வாழ்வது ஒரு முறை

சாதிப்போம் பல முறை

வாழ்த்தட்டும் தலைமுறை”

No comments:

Post a Comment