Friday, November 9, 2018

உழைப்பை விதையாக்கு! உயர்வை உனதாக்கு!!

அனுபவங்களைப் பாடமாக கருதுபவர்கள் மட்டுமே வாழ்க்கைத் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பார்கள். அந்த அனுபவ பாடத்தின் மூலம் வெற்றியை எட்டி நிற்பவர்.

* ஒவ்வொரு முறையும் முதல்முறையாக விற்பனை செய்கிறோம் என்கிற மனநிலையோடு நல்ல உற்பத்தி விளைபொருட்களையே விவசாயிகளுக்கு கொடுத்து அவர்கள் மனதில் ‘நம்பிக்கைக்குரியவர்’ என்கிற பெயரைப் பெற்றிருப்பவர்.

* ஒரு முயற்சி எவ்வளவு கடினமானதாகவும் இருக்கலாம். ஆனால் கடினமானது என்றால் ‘இயலாதது’ எனப் பொருள் கொள்ளக்கூடாது. மேலும் முயற்சித்தோம் என்றால் ‘நிச்சயம்’ அம்முயற்சி நமக்கு வெற்றியை பெற்றுத்தரும் என பிறருக்கு உந்துசக்தியாக இருக்கக்கூடியவர்.

* புதிய புதிய தொழில்நுட்பங்களோடு பயணப்பட்டு விதையின் தரத்தை மேம்படுத்த உறுதியாக இருந்து செயல்பட்டு வருபவர் தான் ஈரோடு, தரணி அக்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனர் திரு. கே. தரணிதரன் அவர்கள். இனி அவரோடு நாம்…
விதை நிறுவனம் அமைக்கும் எண்ணம் தோன்றக் காரணம்?

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயத்தைச் சார்ந்த தொழிலையே மேற்கொள்ள வேண்டும் என விரும்பியதால் விவசாயம் சம்பந்தமான பாடப்பிரிவினை எடுத்து 1994ம் ஆண்டு முடித்தேன். முதலில் இத்தொழிலை மிகவும் குறுகிய இடத்தில் செய்ய ஆரம்பித்தேன்.எனது மனைவியும் விவசாய பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். மேலும் 10 ஆண்டுகள் விவசாய சம்பந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவமும் இருந்தது. இதுவே விதை நிறுவனம் தொடங்கக் காரணமாக அமைந்தது. மேலும் எனது உறவினர்கள் சிலர் சொந்தத் தொழில் செய்து உயர்ந்த நிலையில் இருந்தார்கள். நான் நடுத்தர வாழ்க்கையில் பேருந்து பயணம் என்றிருந்தபோது, வாழ்க்கையில் நாமும் அடுத்த படிக்கு செல்ல வேண்டும் என விரும்பி 2004ல் விதை நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். பிறகு 2010ல் நவீன யூனிட் தொடங்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.

விவசாயக் கல்வியைக் கற்றதால் இத்தொழில் எனக்கு ஏற்புடையதாகவே அமைந்தது. விதை சம்பந்தப்பட்ட விற்பனைத் துறையில் இருந்த 10 ஆண்டுகால அனுபவத்தால், தொழில் துறையிலும் நட்பு வட்டாரம் விரிந்திருந்தது. நான் தொழில் தொடங்க எண்ணியபோது, விதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மிகவும் குறைந்த அளவில் தான் இருந்தது. எனவே நிச்சயம் இதைத் தொடங்கலாம் என உறுதியுடன் முயற்சிகள் மேற்கொண்டேன்.

படிக்கும் பொழுதே தனியாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று தான் விவசாயத் துறையைத் தேர்வு செய்தீர்களா?

எனக்கு முதலில் கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது. அதற்காக சஉப தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்றேன். ஆனால் அக்காலகட்டத்தில் எனக்கு அந்தப் பணி கிடைக்கவில்லை. மாறாக, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வியாபார உத்திகள் அனுபவமாக கிடைத்ததால் சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் வலுப்பெற்றது.

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்ததற்கும், தற்பொழுது தங்களது நிறுவனத்தில் வேலை செய்வதற்கும் உள்ள வேறுபாடு எப்படி இருக்கிறது?

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்த போது மேலதிகாரிகளின் மேற்பார்வையிலே தான் வேலை செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்பொழுது, விற்பனை விரிவாக்கம் என்றாலும், நிறுவனத்தில் மேற்பார்வை என்றாலும் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. எடுக்கும் முடிவுகள் பணியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எனவே முடிவெடுப்பதில் சுதந்திர உணர்வு இருந்தாலும், பொறுப்பும் கூடுதலாகவே இருக்கிறது.

இப்பொழுது விவசாயத்தில் இந்த விதைத் தொழிலின் பங்கு எவ்வாறு உள்ளது?

உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்களுடன் ஒப்பிடும்போது, என்ன தான் பருவ மழை பொய்த்தாலும் விதை பயன்பாட்டில் பெரிய அளவு குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் முதல் மற்றும் முதன்மையான இடுபொருள் விதையே.

விவசாயமக்களின்தேவைக்குஏற்பவிதைநிறுவனங்கள்செயல்படுவதுகுறித்து?

முதலில் விவசாயிகளின் மனநிலையைப் பொறுத்து தான் விதை நிறுவனங்களே செயல்படுகிறது. விவசாயிகள் எந்தக் காலத்தில் எதைப் பயிரிடுவார்கள் என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சில நேரத்தில் இருப்பு விதைகள் நல்ல விலைக்கும் போகலாம்; மிகவும் குறைவான விலைக்கும் போகலாம். இதை முன்கூட்டியே ஆய்வு செய்து திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினால் நல்ல இலாபம் பெறமுடியும். விற்பனை வியாபாரிகளை நாடி, தரமான, உற்பத்தி பொருட்களை அவர்களிடம் கொடுத்து முறையாக வியாபாரம் செய்தாலே நிறுவனத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்துவிடும்.

நிறுவனம்தொடங்கும்பொழுதுஏற்பட்டஇடர்பாடுகள்குறித்து?

எனது மகள் இரண்டாம் வகுப்பு படித்த பொழுது ஏழுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இடமாற்றம் பெற்றாள். அந்த அளவிற்கு என் பணியில் இடமாற்றம் அலைச்சல் அதிகம் இருந்தது. ஒரு கட்டத்தில் என் தாயிடமும், மனைவியிடமும் இந்த வேலை வேண்டாம் என்றும், புதிதாக தொழிலைத் தொடங்க போகிறேன் என்றும் கூறினேன். அவர்களும் எனது வேலைப்பளுவைப் பார்த்து ஆறுதலாகவே பேசி வந்தார்கள். இதைப்பற்றி எனது தந்தையிடம் தெரிவிக்கவில்லை. ஆறுமாதத்திற்குப் பிறகு அவர் தெரிந்துகொண்டு மிகவும் வருத்தமடைந்தார்.

ஆனால் வேலையை விட்டுவிட்டால் குடும்ப நிலை எப்படி இருக்கும் என்றும், ஆரம்பிக்கும் தொழில் நல்ல முறையில் அமையாவிட்டால் எப்படி இருக்கும் என்றும் மிகுந்த குழப்பம் அடைந்தேன். அச்சமயம் திரு. பாஸ்கரன் என்பவரைச் சந்தித்தேன். அவர் பாங்க் ஆஃப் பரோடாவில் வங்கி மேலாளராகப் பணியாற்றி வந்தார். அவர் தான் தொழில் தொடங்க ஒரு உந்துதலாக இருந்தார்.பிறகு தொழில் ஆரம்பித்து அதை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் நம்பிக்கையுடன் ஈடுபட்டேன்.

நிறுவனம்தொடங்கியபிறகு, வெற்றிஅடைவோம்என்றஎண்ணம்எப்பொழுதுஏற்பட்டது?

நான் தொழில் தொடங்கிய 2004ம் ஆண்டில் விதை நிறுவனங்கள் குறைவாகத்தான் இருந்தது. அப்பொழுது வியாபாரத் துறையில் இருந்த நுணுக்கங்களைப் பற்றியும் கற்றுக் கொண்டேன். எனது நண்பர் ஒருவருக்கு 100 டன் பொருளை உற்பத்தி செய்து வைத்து தொழிலில் ஒரு முன்னோட்டம் செய்யும் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். அப்போதைய வேளாண்மை துணை இயக்குனர் திரு. முத்துசாமி என்பவர் வியாபார உத்தியைச் சொல்லிக் கொடுத்ததோடல்லாமல், புதிய முகவர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். புதிய முகவர்களின் அறிமுகத்தால் உற்பத்தியில் நல்ல இலாபம் பெற்றேன். அப்பொழுதுதே வெற்றி வெகுதூரம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். பொதுவாக, சந்தையில் என்ன பொருள் நன்றாக போகும் என்பதைக் கருத்தில் கொண்டு முயற்சியை மேற்கொண்டு செயல்படத் தொடங்கினாலே வெற்றி அடையலாம்.

விவசாயமக்களிடம்நம்பகத்தன்மையைஎப்படிபெறமுடிந்தது?

ஒரு வருடத்திற்கு மூன்று பருவம், ஐந்து வருடத்திற்கு 15 பருவம். ஐந்து வருடங்களாவது, நல்ல முறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தினால் தான் நல்ல தயாரிப்பாளர்கள் என்று விவசாயிகள் நம்புவார்கள். எந்த ஒரு தொழிலும் பொறுமையுடன் உண்மையும் இருந்தால்

வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை தானாக வந்துவிடும்.

தமிழகம் தவிர பிறமாநிலங்களுக்கு முதலில் 100 கிலோ என்றஅளவில் மட்டுமே விதை விற்பனை செய்து வந்தேன். அங்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு பெற்ற பிறகு டன் கணக்கில் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய நிறுவனங்களின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்குத் தேவை தரம் வாய்ந்த விளைபொருள்கள்.

உங்களின்மேலாண்மைக்குபள்ளிக்கல்விஎந்தவகையில்துணைபுரிந்தது?

என்னுடைய சொந்த ஊர் ராஜபாளையம். அப்பா ராணுவத்தில் ஓய்வு பெற்றவர். அம்மா பள்ளி ஆசிரியர் என்று குடும்பப் பின்னணி இருந்த போதிலும் எங்களது அடிப்படைத் தொழில் விவசாயம் சார்ந்தது தான். நான் பயின்றது நல்லமநாயக்கன் பட்டி என்ற கிராமத்திலுள்ள அரசுப்பள்ளி. அப்பள்ளியில் தமிழாசிரியர் மிகவும் நன்றாக பாடம் நடத்துவார்.கண்டிப்பும் கொண்டவர். அவரைப் பார்த்தபொழுது எனக்கும் தமிழாசிரியராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பிறகு, எங்கள் ஊரில் திரு. விவேகானந்தர் வங்கியில் விவசாய அதிகாரியாக இருந்தார். அவரைப் பார்த்து தான் என்னை விவசாயக் கல்லூரியில் படிக்க அனுப்பினார் எனது தந்தை.

கிராமப்புறவிவசாயத்திலிருந்துகிடைக்கும்நன்மைகள்?

நான் வளர்ந்த பகுதி ‘வானம் பார்த்த பூமி’ என்பதால் விளைச்சலைப் பற்றிய அறிவு கிடைக்கப் பெற்றேன். சில நேரங்களில் விதைத்த அளவு கூட உற்பத்தியாய் வராத நிலையும் இருந்திருக்கிறது. ஆனால் விதைகளை எப்பொழுதும் இருப்புகளாக வைத்திருக்க வேண்டும். உற்பத்தி சரியாக இல்லை என்றாலும், மீண்டும் எப்படி விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்ற உத்திகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். விளைச்சலின் போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி என்பதைக் கண்கூடாக கண்டதினால் தான் ஏற்றத்தாழ்வுகளின் போதும், வேறு பிரச்சனைகளை அணுகும்போதும் சரியாக சமாளிக்கும் மனநிலையைப் பெற்றுள்ளேன்.

தொழிலில்என்றும்முன்னிலைபெறத்தேவையானதகுதிகள்பற்றி?

 விதை உற்பத்தி என்பது மிகவும் உன்னதமான தொழில். இத்தொழிலில் படிப்படியாகத் தான் முன்னேறமுடியும். ஐந்து ஆண்டுகள் பொறுமையாக, வருகின்ற ஏற்றத்தாழ்வுகளை முறையாக சமாளித்து, நல்ல உற்பத்தி விளைபொருள்களை விவசாயிகளுக்கு கொடுத்தால் தான் தொழில் தொடர்ந்து நிற்க முடியும்.

 சொந்த மாநிலத்திலிருந்து பிறமாநிலங்களுக்கு விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டிய முறைகள் குறித்து?

ஒரு நிறுவனத்திற்கு முதன்முறையில் ஒரு பொருளை விற்பனை செய்யும் அதே மனநிலையில் அந்த நிறுவனத்திற்கு மீண்டும் தொடர்ந்து அனுப்பும் பொழுதும் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதுவே முதல் ஆர்டர் என்ற நோக்கிலே தான் உற்பத்திகளை பெருக்கிக் கொண்டிருக்கிறேன். பொதுவாகவே, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு மதிப்புகள் அதிகம். எனவே அதையும் கருத்தில் கொண்டு உற்பத்தியின் தரத்தில் எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் தான் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறேன். இப்படி தரம் வாய்ந்த பொருள்களை கொடுப்பதால் தான் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். தொடர்ந்து ஆதரவும் கிடைக்கப் பெறும். எந்தப் பொருளானாலும் தரமானதாக இருந்தால் அதற்கு எப்பொழுதும் வரவேற்பு இருக்கும்.

 உங்களின்அடுத்தஇலக்கு?

 எதிர்கால இலக்கு என்றால், தொடர்ந்து கிடைக்கப்பெறும் ஆதரவுகளை அடுத்த உற்பத்தியில் முதலீடு செய்வது தான். தரத்தில் என்றும் குறைவைக்கக்கூடாது என்பதில் கவனமுடன் செயல்பட்டு வருகிறேன். தரம் நிரந்தரமாக அமைய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த மிகவும் கவனம் செலுத்தி வருவேன்.

உங்களதுவாழ்க்கைத்துணைபற்றி?

தொழிலில் கவனம் செலுத்த வந்துவிட்டால் எப்படியும் குடும்பத்தோடு செலவிடும் நேரம் குறைவாகத் தான் இருக்கும். தொழில் தொடங்கிய காலத்தில் நேரம் முழுவதும் பயணிக்கத் தான் சரியாக இருந்தது. காரணம், தொழிலை கவனிப்பது, விற்பனையைப் பார்ப்பது, விளைநிலத்திற்குச் செல்வது என்று எல்லாவற்றையும் நேரடி பார்வையாக செய்ய வேண்டியிருந்தது. இப்படி நாள்தோறும் பயணம் மேற்கொண்டாலும் இன்று வரை விற்பனைப் பகுதியை நான் தான் கவனித்து வருகிறேன்

பணிச்சுமையின் பொழுது குடும்பத்தை கவனிக்க முடியாத சூழ்நிலைகளில் அவர் தான் முழுவதுமாக எனது பொறுப்புகளையும் சேர்த்து குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார். எனக்கும் என்றும் ஆதரவாகவே இருந்துவந்தார். எப்பொழுதும் ஊக்கம் அளித்து என்னை சுறுசுறுப்புடன் பணிபுரியச் செய்தவர் அவர்.

குடும்பப்பின்னணி…

அம்மா திருமதி.சீனியம்மாள், பள்ளி ஆசிரியை. மேலும் அவரின் நிதி மேலாண்மையே பின்னாளில் எனக்கும் பழக்கமானது. தந்தையார் திரு. கிருஷ்ணசாமி நாயக்கர். மிகவும் சுதந்திரத்துடன் கூடிய புரிதலைப் பழக்கினார். எனது தங்கையும், அவரின் கணவரும் சாத்தூரில் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். மனைவி திருமகள்ஜோதி, வேளாண்மை அலுவலர். எனக்கு அமிர்தவர்ஷினி, அவந்திகாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள்.

நண்பர்கள்உதவிகுறித்து…

படித்த துறையிலே தொழில் செய்வதால், தொழில் துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இன்று வரையிலும் அவர்களுடனான நட்பு நல்ல நிலையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது; என்றும் தொடரும்

தொழில்தொடங்கத்தேவையானபண்புகள்?

எந்த ஒரு தொழிலைச் செய்வதாக இருந்தாலும் எளிதாக இருக்க வேண்டும், விரைவில் முன்னேறவேண்டும் என்று தொடங்குதல் கூடாது.எவ்வளவு தோல்விகள் வந்தாலும் அவைகளை நன்றாக சமாளிக்கும் திறன்களையும், எதிர்கொள்ளும் மனநிலையையும் பெற்றிருத்தல் வேண்டும். பிரச்சனைகளை சமாளிக்கும் அனுபவங்கள் தான் சிறந்த தொழில் நிறுவனர்களை உருவாக்கும். நேர்மையான உழைப்பு, தரமான உற்பத்திப் பொருள், உழைக்கும் திறன் இருந்தாலே தொழிலில் வெற்றி அடைவது உறுதி.

படித்ததில்பிடித்தது…

எனக்கு சிறுவயதிலிருந்தே தமிழ் மீது அதிக ஆர்வம் இருந்து வருகிறது. பொது அறிவு சார்ந்த புத்தகங்களை நான் படிப்பதோடு மட்டுமல்லாமல் எனது குழந்தைகளையும் படிக்க ஊக்குவிப்பேன். நமது வளரும் தலைமுறைகள் பாடப்புத்தகத்தோடு நில்லாமல், அன்றாட நாட்டு நடப்புகளையும் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.

என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்கள் திருக்குறளும், பாரதியார் எழுதிய புத்தகங்களும் தான். திருக்குறளில் என்றும் என் நினைவில் நிற்பது,

வெள்ளத் தனைய மலர்நீட்டர் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு

 என்ற குறள். உழைப்பிற்கு ஏற்றவாறு உயர்வு கிடைக்கப்பெறும் என்பது உண்மை. வயதிற்கு ஏற்றாற்போல் மனநிலையை மாற்றிக் கொண்டாலே வாழ்வின் வெற்றியை பெறலாம்.

உங்கள்பயணம்என்பது…

 “கடக்க வேண்டிய தூரத்தை நோக்கி

என் பயணம் சென்று கொண்டே இருக்கும்”

 பாடுபடாமலேயேவெற்றிக்குஆசைப்படுவதுஎன்பது…

 விதைக்காமலே விளைச்சலுக்கு ஆசைப்படுவதைப் போன்றது தான்.

இலக்குஎன்பதுஎப்படிப்பட்டதாகஇருக்கவேண்டும்?

குறுகிய தூர இலக்குகளில் குறிவைத்து தோல்வி அடையும் விரக்தியைத் தவிர்ப்பதற்காக, தொலைதூர இலக்குகளில் குறிவைக்க வேண்டும் என்பார் நோபிள். அவர் கருத்தையே பதிலாக்குகிறேன்.

உங்கள்பார்வையில்துணிச்சல்…

ஆழம் தெரியாமல் காலைவிடுவது துணிச்சல் அல்ல…அளந்தறிந்து அதைக் கடப்பது தான் துணிச்சல்.

வெற்றி யாருக்கு எளிதாகும்…

கொழுந்து விட்டெறியும் நம்பிக்கை
பேரன்பு
தூய்மை
இம்மூன்றுடன் விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருப்பவர்களுக்கு வெற்றி எளிதாகும்.

தன்னம்பிக்கை…

ஒவ்வொருவரையும் ஆட்கொண்டு வழிநடத்திச் செல்வது.

No comments:

Post a Comment