Friday, November 9, 2018

உன்னையறிந்தால்

ஒருவன், கிணறு ஒன்றைத் தோண்ட துவங்கினான். மாதக்கணக்கில் தோண்டியும், தண்ணீரைக் காணவில்லை.இருபது அடிகள் தோண்டியும் நீர் இருப்பதன் அறிகுறியையே காணாத போதிலும், அவன் முயற்சியைக் கைவிடவில்லை.

அந்த வழியாக சென்ற ஒரு வழிப்போக்கன், தோண்டுபவனைப் பார்த்து, “ஐயா, நான் பல நாள், நீங்கள் தோண்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அங்கு தண்ணீர் வரவில்லையே, வேறு இடத்தில் தோண்டிப் பார்க்கக் கூடாதா?”என்றான்.

அதற்கு அவன், “இல்லையில்லை. நான் என் முயற்சியைக் கைவிடமாட்டேன். இங்கு தண்ணீர் இருக்கும்” என்றான்.

சில நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் அந்த வழிப்போக்கன், அம்மனிதனைப் பார்த்து, கோபமாக, “அட, நீ என்ன முட்டாளா? இந்த இடத்தில் நிச்சயம் தண்ணீர் உனக்குகிடைக்காது. ஏன் தோண்டிக் கொண்டே இருக்கிறாய்?” என்றுகேட்க, அதற்கு அவன், “நான் முதலில் தோண்ட ஆரம்பித்தபோது, என் மனைவி எதிர்த்தாள். அவளை நான் பொருட்படுத்தவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு, என் உறவினர்கள் தடுக்கும் வகையில் அறிவுரைகள் கூறினார்கள். அவர்களையும் அலட்சியம் செய்தேன். அதன்பிறகு, கிராம மக்கள் என்னைத் தடுத்தனர். அவர்களையும் நான் பொருட்படுத்தவில்லை.

என் முயற்சிகள் எல்லாம் வீண் என்றும், எனக்கு தண்ணீர் கிடைக்காது என்றும், எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், நான் இதை நிறுத்தினால், மற்றவர்களின் விமர்சனத்தைக் கேட்க வேண்டியிருக்கும். நான் தோற்றவனாகிவிடுவேன். அதற்கு எனக்கு தைரியமில்லை. இப்போது நிறுத்தினால், என்னை அவர்கள் ‘முட்டாள்’ என்பார்கள்.

வாழ்க்கையில் என் முயற்சிகள் அனைத்தும் தண்ணீரைக் கண்டுபிடிக்கவே சரியாக இருக்கும். இதை நிறுத்தினால், என் வாழ்க்கையில் ஓர் அர்த்தமும் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னைப் பற்றியே நான் கீழ்த்தரமாக நினைத்து விடுவேனோ எனப் பயமாக உள்ளது” என்றானாம்.

நாமும் பல சமயங்களில், இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டிருப்போம் அல்லவா?நமக்கு விருப்பமே இல்லாத ஒரு தொழிலில் நாமாகவே சிக்கியிருப்போம்.நம்மால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஏனென்றால், முதலில் மனைவி அதற்கு தடை விதித்திருக்கலாம்.

இப்போது கைவிட்டால், மனைவி கூறியது சரியாகிவிடும். கோபமான மனைவியை எதிர்கொள்வதை விட, விருப்பமில்லாத தொழிலைச் செய்வது மேலானது எனத் தோன்றும். பிடிக்காத உறவு முறையில் சிக்கிக்கொண்டு, வெளிவரவும் முடியாமல் இருக்கிறோம் என்றால், எதிர்காலத்தில் தனிமையை எதிர்கொள்ள பயம். ஏதேனும் ஓர் அபிப்ராயத்தையோ, கொள்கையையோ பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உள்ளார்ந்த உண்மை.

ஏனென்றால், அதை விட்டுவிட்டால், நாம் சின்னாபின்னமாகி விடுவோம் எனும் எண்ணம். கல்லூரியில் நமக்கு பிடிக்காவிட்டாலும், நம் மனம் வேறு ஏதோ துறையை நாடிய போதும் அதில் பிடிவாதமாக தொடர்கிறோம். காரணம் நம் தந்தையின் அறிவுரைக்கு மாறாக அதில் சேர்ந்திருப்பதுதான்.

பயம் தான் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துகின்றது. அது தொழில், செல்வம், ஆரோக்யம் அல்லது உறவுமுறைகள் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நமக்கு தெரிந்த, பழக்கமான, சுகங்களை இழக்க விருப்பம் இல்லை. மாற்றத்தைக் கண்டு பயப்படுகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றி நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள பலவீனமான உருவகம் அல்லது நம் முகமூடி உடைந்துவிடுமோ என்ற பயம்.

நாம் நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவாறு நாம் இல்லை என்ற உண்மையை, எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பயம். இந்த பயம் நம் வளர்ச்சியைத் தடுக்கின்றது. முயற்சிக்கும், பிடிவாதத்திற்கும், அகங்காரத்திற்கும் வேறுபாடு தெரியாமல் செய்ய வைத்து தன்னம்பிக்கையை மட்டுமல்ல மனிதனுக்கு இயல்பாக இருக்கின்ற, இருக்க வேண்டிய நம்பிக்கையைக் கூட அழித்துவிடுகிறது.

இதை ஆழமாக ஆராய்ந்தால் தான் உண்மையைக் காண முடியும். புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கவோ, கற்கவோ வேண்டும் என்றால், நம்மை ஆட்கொண்டுள்ள பயத்திலிருந்து வெளிவர வேண்டும். பயத்தை விட்டுவிட வேண்டும் என்று காலம் காலமாக கூறி வருகின்றனர். அதற்காக ‘பாஸிட்டிவாக’ (Positive) எண்ணுவதற்கு முயற்சி செய்கிறோம்.

ஒவ்வொரு முறை நாம் ‘பாஸிட்டிவாக’ எண்ணுவதற்கு முயற்சி செய்கின்றபோதும், நமக்குள்ளிலிருந்து ஓர் ஆழமான குரல், “அதைச் செய்யாதே, அப்படி நடக்காது” என்றுகூறுகின்றது. அந்தக் குரல் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.அப்படியென்றால், மனிதன் தான் சிக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளிலிருந்து எப்படிவெளிவர முடியும்?

மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவன் எப்படி மாறமுடியும்? அதாவது,

‘பாஸிடிவ்’  எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பது மேலும், நிலைமையை மோசமாக்கும். ஒவ்வொருமுறைஒரு எதிர்மறை(நெகடிவ்) எண்ணத்திற்கு மாறாக, எதிராக, ‘பாஸிடிவ்’ எண்ணத்தை வளர்த்துக் கொள்ளும் போதும் நம் மனதோடு நாம் போராடுகிறோம். மனதுடன் அதிகமாக போராட, போராட அது மேலும் சக்தி பெறுகிறது.

கடல் அலையை எதிர்த்து செயல்படும்போது, பலமாக அடி விழுவதைப்போல ஆகிவிடும்.

இதற்கு ஒரே தீர்வு, “நாம் சிக்கிக் கொண்டோம்” என்றும், “அந்த பயம் தான் நம்மை கட்டுப்படுத்துகிறது” என்றும் உணர்ந்து, அதே உண்மையில், அப்படியே நிற்க வேண்டும். நம்மால், நம்மையே நேரடியாக பார்க்க முடியவில்லை என்றஉண்மையை, நம் முகமூடிகிழித்துவிடும் என்ற உண்மையை எதிர்கொள்ளவேண்டும்.

இதுவே மாற்றத்தின் முதற்படியும், கடைசிப்     படியுமாகும். இந்த உண்மையில் அப்படி உறைந்து போனால், மாற்றத்தில் கதவுகள் திறப்பதையும், வளர்ச்சி என்பது எளிதாக இருப்பதையும், தன்னம்பிக்கை வளர்வதையும் காண முடியும். இது பலமடங்காக நமக்கு சக்தியை அளிக்கும்.

“அதுவே  நிரந்தர வளர்ச்சியைக் கொடுக்கும்.”

No comments:

Post a Comment