Friday, July 5, 2013

உங்கள் இலக்கு என்ன ?

வாழ்க்கையில் வெற்றி சிகரத்தைத் தொடுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.அவர்கள் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கிப் பயணிக்கிறார்கள்.மற்றவர்கள் இலக்கில்லாமல் அலைகிறார்கள்.

உதாரணமாக, ‘இந்தவாட்டி எக்ஸாம் நல்லா எழுதணும்‘ என்று ஒரு மாணவன் யோசித்தால்,அது வெறும் ஆசை.இதையே ‘எல்லாப் பாடத்திலயும் 95%க்குமேல மார்க் எடுக்கணும்’ என்று லேசாக மாற்றினால்,அது ஓர் இலக்காக,அடைய வேண்டிய லட்சியமாக மாறி- விடுகிறது.

இலக்குகள்/லட்சியங்களை நிர்ணயிப்பது ஒரு கலை. ஒவ்வொரு தனி மனிதரும், நிறுவனமும், அமைப்பும், நாடும் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான நுணுக்கங்களை எளிய உதாரணங்களோடு விளக்கமாகக் கற்றுக்கொடுக்கும் ஒரு சுவாரஸ்யமான புத்தகம்,ப்ரையன் ட்ரேஸி எழுதிய ‘கோல்ஸ்!’ (Goals!).

இந்தப் புத்தகம் நாமே நமது ‘கோல்’களைத் தீர்மானிப்பதற்கான படிப்படியான வழிமுறைகளைச் சொல்லித் தருகிறது.அந்த ‘12 ஸ்டெப்ஸ்’ இங்கே சுருக்கமாக:

ஸ்டெப் 1 இலக்கை நிர்ணயிப்பதற்கு  நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்? அதைத் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2 இந்த இலக்கு அடையக்கூடியதுதான் என்று நீங்கள் முதலில் நம்பவேண்டும். அதில் உங்களுக்கு 1 சதவிகிதம் கூடச் சந்தேகம் இருக்கக்கூடாது. இது கிடைக்குமா, கிடைக்காதா என்கிற சந்தேகத்தோடு ஒரு விஷயத்தில் இறங்கினால், உங்களால் அதில் முழு ஈடுபாட்டுடன் போராடமுடியாது. ஜெயிக்கமுடியாது.

ஸ்டெப்  3 இதுவரை உங்கள் மனத்தில் இருந்த இலக்கை இப்போது காகிதத்தில் எழுதிவையுங்கள். அடிக்கடி உங்கள் கண்ணில் படுகிற ஓர் இடத்தில் ஒட்டிவையுங்கள்,அந்தச் சிந்தனை உங்கள் மனத்தில் ஆழப் பதியும்வரை விடாதீர்கள்!

ஸ்டெப் 4 இந்த இலக்கை அடையவேண்டுமென்றால், எங்கேயிருந்து ஆரம்பிக்கவேண்டும்? அந்தத் தொடக்கப் புள்ளியைத் தீர்மானியுங்கள்.

ஸ்டெப் 5 உங்களுடைய இலக்கை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டீர்கள். இப்போது,அந்த இலக்கு ஏன் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்று யோசியுங்கள்.

ஸ்டெப் 6 ஒவ்வோர் இலக்குக்கும் ‘டெட்லைன்’  நேரக்கெடு அவசியம். ‘ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பேன்’ என்பதைவிட ‘இன்னும் பத்து வருடங்களில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பேன்’ என்பது வலுவான இலக்கு இல்லையா?

ஸ்டெப் 7 இந்த இலக்கை நோக்கிய உங்களுடைய பயணப் பாதையில் என்ன மாதிரியான தடைகள் வரக்கூடும் என்று யோசியுங்கள். அவற்றை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்று தீர்மானியுங்கள்.

ஸ்டெப் 8 தடைகள் வெளியே மட்டுமல்ல,உங்களுக்குள்ளும் இருக்கலாம். உங்களிடம் ஏதாவது திறமை குறைகிறதா என்பதைக் கவனித்து சரி செய்யுங்கள்.


ஸ்டெப் 9 இலக்கை அடைய வழிகாட்டக் கூடிய நலம்விரும்பிகள் யார் யார்? யோசியுங்கள், அவர்களிடம் இலக்கைச் சொல்லி அதனை எட்டுவதற்கு உதவும்படி கேளுங்கள்.

ஸ்டெப்  10 திட்டமிடுங்கள்.  ‘இன்னும் 1 மாதத்தில் நான் பைக் ஓட்டக் கற்றுக்கொள்வேன்,அதற்கடுத்த மாதம் லோனுக்கு விண்ணப்பம் போடுவேன், மூன்றாவது மாதம் பைக் வாங்கி விடுவேன்,அந்தக் கடனை ஒரு வருடத்துக்குள் திரும்பச் செலுத்தி விடுவேன்’ … இப்படி.

ஸ்டெப்  11 உங்களுடைய இலக்கை எப்போதும் நினைத்துக்கொண்டே இருங்கள். அதை அடைந்துவிட்டால் உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை யோசித்து யோசித்துப் பரவசப்படுங்கள்.

ஸ்டெப் 12 எப்போதும் நம்பிக்கை இழக்காதீர்கள்.  இலக்குக்கான அந்தப் பாதையிலிருந்து விலகாதீர்கள்.அப்படி விலகினீர்கள் என்றால், நிஜமாகவே அது உங்கள் இலக்கு இல்லை என்று அர்த்தம்.

வழிகளை சொல்லியாகிவிட்டது.இனி,இலக்கை நிர்ணயிப்பது உங்கள் வேலை..

–நன்றி குமுதம்

Rs.120N. Chokkan    

நூலின் தலைப்பு : வெற்றிக்கு சில புத்தகங்கள்
நூலின் ஆசிரியர் : என். சொக்கன்
பதிப்பகம்         : மதி நிலையம் , சென்னை 86
மொத்த பக்கங்கள்: 184, விலை ரூ 120

வெற்றிக்கு சில புத்தகங்கள் (சுய முன்னேற்ற வகையைச் சேர்ந்த முப்பது ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகக் கட்டுரைகள், நூல் சுருக்கம், குமுதம் வார இதழில் இரண்டரை ஆண்டுகள் வெளிவந்த ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடரின் முதல் பகுதி)

புத்தகம் படிக்கும் பழக்கமே குறைந்துவரும் காலகட்டம் இது. என்னதான் பயனுள்ள விஷயங்களைப் புத்தக வடிவில் தந்தாலும், ‘அதையெல்லாம் உட்கார்ந்து படிச்சுகிட்டிருக்க முடியாதுங்க. சுருக்கமா அஞ்சு நிமிஷத்துல சொல்லுங்க சார்’ என்று கேட்கிறவர்கள் ஏராளம்.

குமுதம் இதழில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியான ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடர் இதனைச் சாதித்துக் காட்டியது. பல பிரமாதமான புத்தகங்களை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் நான்கே பக்கங்களுக்குள் அதனைச் சுருக்கமாகவும், சுவை குறையாமலும் அறிமுகப்படுத்திய விதம், லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்தது. இதைப் படித்துவிட்டு அந்தப் புத்தகங்களைத் தேடிச் சென்று முழுப்பலன் பெற்ற வாசகர்களும் ஏராளம்

அந்தத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் அறிமுகங்களை இங்கு தொகுத்து அளித்திருக்கிறோம். ஒரு அலமாரி முழுக்க நிரம்பக்கூடிய புத்தகங்களை ஒன்றிரண்டு மணி நேரத்துக்குள் படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய அபூர்வமான வாய்ப்பை இது உங்களுக்குத் தரும்!

No comments:

Post a Comment