பதிவின் தலைப்பில் நாம் கேட்டிருக்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இருந்தால் முதலில் கையை கொடுங்கள். வாழ்த்துக்கள்! நீங்கள் ஏற்கனவே பாதி ஜெயித்தாகிவிட்டது. இல்லையா…? உடனடியாக பதிலை தெரிந்துகொள்ளுங்கள். அதாவது நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று. உங்கள் தற்போதைய செயலே நீங்கள் எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கும். அதாவது NOT YOUR FORTUNE. ONLY YOUR PRESENT ACTION & GOALS WILL DECIDE YOUR DESTINATION.
போகும் இடம் எதுவென்று தெரியாமலே பலர் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பது தான் உண்மை.
அற்பத்தனமான ஆசைகளோ விருப்பங்களோ எந்த காலத்திலும் லட்சியமாகாது. சில இலட்சியங்கள், உண்மையில் இலட்சியங்கள் அல்ல சவக்குழிகள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு விழுந்த பின்னர் தான் புரிகிறது. எனவே, என்றும் உயர்ந்த/உன்னத விஷயங்களையே இலட்சியமாக கொள்ளவேண்டும்.
இலட்சியங்கள் என்றால் அவை எப்படி இருக்கவேண்டும்?
இதோ கவியரசு கண்ணதாசன் மிக அழகாக கூறுகிறார்.
வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்!
நாடு காக்க வேண்டும் முடிந்தால்
நன்மை செய்ய வேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால்
கிள்ளி வீச வேண்டும்!
இலட்சியங்கள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று இதை விட எவரும் விளக்கமுடியாது.
======================================================================
ரைட்மந்த்ரா தளம் துவக்கியதிலிருந்து வாழ்க்கையின் போக்கே மாறிவிட்டது. ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தம் புரிகிறது. ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியோடு உழைக்கிறேன். நண்பர் சிட்டி என்னிடம் கூறியதை போன்று இது எனக்கு ஒரு புதிய பிறவி. புதிய உலகம். இந்த புதிய உலகில் பிரச்சனைகளோ, ஏமாற்றங்களோ இல்லாமல் இல்லை. ஆனால் அதை உரிய முறையில் எதிர்கொள்ளக்கூடிய பக்குவமும், சரியான விதத்தில் அணுக வேண்டிய அணுகுமுறையும் கைவரப்பெற்றுவிட்டது. ஆகையால், விதி என்னை நோக்கி வீசும் கடினமான பந்தில் கூட சிக்ஸர் அடிக்கும் லாவகம் வந்துவிட்டது.
எப்படி இது சாத்தியமாயிற்று?
அடிக்கடி புராதன கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு, இறை தரிசனம், நல்லோர் அறிமுகம் மற்றும் நட்பு, நல்லவைகளையே நினைப்பது, பேசுவது, மற்றும் படிப்பது, பன்னிரு திருமுறை, திவ்விய பிரபந்தம் உள்ளிட்டவைகளை ஸ்ரவணம் செய்யும் (கேட்பது) வாய்ப்பு, நல்ல விஷயங்களை தேடுவது, நல்லவைகளை எதிர்பார்ப்பது, ஆன்மீக சுயமுன்னேற்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வது, நல்ல நூல்களை படிப்பது, எல்லாவற்றுக்கும் மேல்… இந்த தளத்திற்காக எழுதுவது என்று உண்மையில் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியின் அலைகள் தான்!
மேலே கூறியவற்றில் மிக முக்கியமாக நான் கருதுவது நல்ல நூல்களை தேடி பிடித்து படிப்பது. காரணம் படிக்க படிக்க தான் சிந்தனை விரிவடையும். புதுப் புது விஷயங்களை தெரிந்துகொள்ளமுடியும். அண்மையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்ற போது பல நல்ல நூல்களை வாங்கி வந்தேன். ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
நேற்று திரு.பால ஹனுமானின் தளத்திற்கு சென்றபோது கீழ்கண்ட பதிவை பார்த்தேன். அதில் கூறப்பட்டிருக்கும் ‘வெற்றிக்கு சில புத்தகங்கள்’ என்ற நூலை உடனே கடைக்கு சென்று வாங்கிவிட்டேன்.உண்மையில் நம் வாசகர்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.
படிக்கும் வழக்கம் எந்தளவு குறைந்துவருகிறது என்று கீழே உள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. என் வருத்தமும் அது தான். தங்கள் சிந்தனை செழிக்க – வாழ்வில் நல்ல மாற்றங்களை பார்க்க விரும்புகிறவர்கள் – ஃபேஸ்புக்கில் உலவும் நேரத்தை குறைத்து – நல்ல நூல்களை படிப்பதில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.
விசேஷம் என்னவென்றால் நண்பர் சிட்டி எனக்கு பரிந்துரைத்த – எனது வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய – The Secret என்ற நூல் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment