அது ஒரு வாழ்வியல் பயிற்சி வகுப்பு. பலதரப்பட்ட மனிதர்கள் அதில் பங்கு பெற வந்திருந்தனர்.
அவர்களிடையே உரையாற்ற வந்திருந்த ட்ரெயினர் தனது டேபிளுக்கு முன்பு ஒரு பெரிய கண்ணாடி ஜாரை வைத்தார். பின்னர் அதில் இரண்டு இன்ச் அளவு விட்டமுடைய கருங்கற்களை போட்டு நிரப்பினார்.
“ஜாடி இப்போது நிரம்பியிருக்கிறதா பார்த்து சொல்லுங்கள்?” என்றார்.
அனைவரும் ஜாடியை பார்த்தபோது அதில் கற்கள் மேலும் போட இடமின்றி நிரப்பப்பட்டிருந்தன.
அடுத்து சிறிய கூழாங்கற்க்களை கொஞ்சம் எடுத்து போட்டு ஜாடியை மேலும் கீழும் உலுக்கினார். கூழாங்கற்கள் முன்பு போடப்பட்ட கருங்கற்கள் இடையே இருந்த இடைவெளிக்குள் உருண்டு சென்று ஓரளவு இடத்தை அடைத்துக்கொண்டன.
இப்போது மறுபடியும் ஜாடி நிரம்பிவிட்டதா என்று கேட்டார்.
இம்முறையும் பார்வையாளர்கள் ஆமாம் என்றனர்.
இந்த முறை ட்ரெயினர் தனது கைகளில் மணலை ஒரு பிடி எடுத்து ஜாடியில் போட்டு மேலும் கீழும் உலுக்க, மிச்ச மீதியிருந்த சிறு இடைவெளியை கூட விடாமல் மணல் நிரப்பியது.
மறுபடியும் “ஜாடி நிரம்பிவிட்டதா?” என்று கேட்டார் அனைவரையும் பார்த்து.
“ஆம்… !” இப்போது தான் ஜாடி உண்மையில் நிரம்பியிருக்கிறது. இதற்கு முன்பு இரண்டு முறை நீங்கள் நிரம்பிவிட்டது என்று கூறியபோதும் என்னால் மேலும் சிலவற்றை அதில் போட முடிந்தது.
இந்த ஜாடி தான் உங்கள் வாழ்க்கை என்று வைத்துக்கொள்வோம். அதில் முதலில் நீங்கள் போட்ட பெரிய கற்கள் தான் மிக மிக முக்கியமானவை. அது தான் உங்கள் குடும்பம், குழந்தைகள், வாழ்க்கைத் துணை, அப்பா, அம்மா உள்ளிட்டோர். மற்ற எதுவும் இல்லையென்றாலும் கூட உங்கள் இவை இருந்தாலே வாழ்க்கை முழுமையடைந்தது போலத் தான்.
அடுத்து நான் போட்ட கூழாங்கற்கள் உங்கள் வேலை, உங்கள் வீடு, உங்கள் வாகனம் போன்றவை.
அடுத்து நான் போட்ட மணல், வாழ்க்கைக்கு நாம் சிறிதே சிறிது முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அற்ப விஷயங்கள்.
ஜாடியில் கடைசியில் மிச்ச மீதியிருக்கும் இடத்தில் நீங்கள் போடவேண்டிய மணலை முதலில் ஜாடியில் போட்டுவந்தால் உங்களால் கருங்கற்களையோ கூழாங்கற்களையோ பின்னர் போடவே முடியாது. வாழ்க்கையும் இது போலத்தான். சிறிய பயனற்ற அற்ப விஷயங்களில் உங்கள் நேரத்தை நீங்கள் செலவிட்டால் முக்கியத்துவம் வாய்ந்த, பயனுள்ள, நாம் புறக்கணிக்கக்கூடாத, விஷயங்களுக்கு இடமேயிருக்காது.
உங்கள் மகிழ்ச்சிக்கும் (உண்மையான!) நிம்மதிக்கும் இன்றியமையாத விஷயங்களில் மட்டுமே உங்கள் நேரத்தை செலவிடவேண்டும். அடுத்து முன்னேற்றத்துக்கு தேவையான விஷயங்களில்!
இதில் நம் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட நாம் தயங்கவே கூடாது. நாளைக்கே நமக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால்…. நமது நிறுவனம் நமது இடத்தில் வேறு ஒருவரை சுலபமாக பணியமர்த்தமுடியும். ஆனால் நம் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் அது ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆகையால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவது மிக மிக அவசியம். அப்பா…. அம்மா… மற்றும் உறவுகளின் அருமை … இருக்கும்போது தெரியாது….!
A FAMILY THAT PLAYS TOGETHER ALWAYS STAYS TOGETHER என்று கூறுவார்கள்.
உங்கள் குடும்பத்தினருடன் கழிக்க நீங்கள் ஒதுக்கும் நேரம் உண்மையில் ஆனந்தமான வாழ்க்கைக்கு மிகப் பெரிய முதலீடு.
அதே சமயம் ‘எனக்கு என் குடுப்பம் மட்டும் தான் முக்கியம். மத்ததை பத்தி கவலையில்லை’ என்று உங்கள் உலகம் – நீங்கள் உங்கள் அப்பா அம்மா குழந்தைகள் மற்றும் மனைவி – என்று மட்டும் சுருங்கி சுயநல வாழ்க்கை வாழும் விதம் அமைந்து விடக்கூடாது.
நேரத்தை வீணடிப்பவர்களையடுத்து கடவுள் வெறுப்பது சுயநலவாதிகளைத் தான்.
(“தான் உண்டு… தன் வேலை உண்டு” என்று இருப்பதற்கும் – “தான் மட்டும் உண்டு… தன் குடும்பமும் தன் வேலையும் மட்டுமே உண்டு” என்று இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு!)
என்ன சார் அப்படியும் சொல்றீங்க இப்படியும் சொல்றீங்க? என்று தானே கேட்கிறீர்கள்.
அடடா… நீங்க செய்யுற நல்ல காரியத்தை உங்க குடும்பத்தோட செஞ்சா முடிஞ்சிபோச்சு.
உதாரணத்துக்கு உங்கள் பிள்ளைகளோட பிறந்த நாளைன்னைக்கு அவங்களை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு அழைத்து சென்று அக்குழந்தைகளுக்கு உங்கள் குழந்தை மூலம் இனிப்புக்கள் தரலாம்.
உங்கள் அப்பா அம்மாவின் பிறந்த நாள் அன்று அவர்கள் கையால் கோவில்களில் அன்னதானம் செய்யலாம்.
உங்கள் திருமண நாள் மற்றும் இதர விசேஷங்களை உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து தொண்டு இல்லங்களில் வாழ்ந்துவருபவர்களுடன் கொண்டாடலாம்.
நீங்கள் பிற அறச் செயல்கள் செய்யும்போது உங்கள் மனைவியையோ கணவனையோ அழைத்து செல்லலாம்….
ஓகே? நல்லது செய்யனும்னா சேர்ந்து சந்தோஷமா செய்றதுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கு !
சுருங்கச் சொன்னால்….
உங்கள்….
* குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடுங்கள்.
* நல்ல காரியங்களை அவர்களை வைத்தே செய்யுங்கள்.
* குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
* மனைவியை வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
* அப்பா அம்மாவை மாதம் ஒரு முறை ஹோட்டலுக்கு கூட்டி சென்று அவர்களுக்கு பிரியப்பட்டதை வாங்கிக்கொடுங்கள். தம்பி தங்கைகள் மற்றும் உறவுகளுக்கு உதவுங்கள். அவர்கள் அவ்வாறு இல்லையென்றாலும் கூட.
* வீட்டை சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி குடும்பத்துடன் சிறிய எளிமையான கொண்டாட்டத்தில் ஈடுபடுங்கள். கோவில்களுக்கு குடும்பத்தோடு செல்லுங்கள்.
வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான கற்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மற்றவை ஜஸ்ட் மணல் தான். அவற்றை கொண்டு இடைவெளியை மட்டும் நிரப்பினால் போதும்.
“இல்லை…இல்லை… நான் மணலைத் தான் போடுவேன். அது தான் ஜாலியாயிருக்கு…..!!” என்று சொன்னால், எது முக்கியம் என்று காலம் புரியவைக்கும்!
No comments:
Post a Comment