வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரைத் தோற்கடிப்பது என்பது வேறு. இதற்கிடையில் உள்ள வித்தியாசத்தைப் பலர் உணர்வதில்லை. பிறரைத் தோற்கடிப்பது சுலபம். ஆனால் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமான காரியம். இந்த இரண்டையும் ஓன்றாகக் குழப்பிக் கொண்டவர்கள் பலர்.
இன்றைக்கு நம்முடைய அரசியல்வாதிகள் பலர், பிறரைத் தோற்கடித்த விஷயத்தை பிறரது தோல்வியை தங்கள் வெற்றி விழாவாகக் கொண்டாடுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு. இரண்டும் ஓன்றாகிவிட முடியுமா? எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக நீங்கள் முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை, இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை! உதாரணம் சொல்லுகிறேன்.
பள்ளிக் கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண், தன் முப்பத்து ஒன்று வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஓரு புதிர் போட்டாள். 'அப்பா... ஒரு குட்டிக் குரங்கு... தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு... அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு... காட்டாத்து வெள்ளம்... திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது... அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது... பயங்கர வெள்ளம் கீழே... அது எப்படித் தப்பிக்கும், சொல்லு?' என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.
அரை மணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். 'அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும்... தெரியலை, நீயே சொல்லு' என்றார் மகளிடம். ';... இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை... அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?' என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள் அந்தச் சின்னப் பெண்.
அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை. ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம்தான் எங்கும் நடக்கிறது.
பிறரை வாய் மூடச் செய்வது... செயலிழக்கச் செய்வது... தோற்றுப் போகச் செய்வது... ஆளவிடாமல் தடுப்பது... முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது... இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறார்கள்.
இந்தத் தவறுதலான எண்ணத்தில் இருந்து தயவு செய்து வெளியே வாருங்கள். பிறரைத் தோற்கடிப்பது இலட்சியமல்ல... நமது வெற்றியே நமது குறிக்கோள்... என்கிற தெளிவு இருக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஓரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.
பிறரைத் தோற்கடிப்பது நமது நோக்கம் அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். ஒரு குழந்தையுடன் கடைவீதிக்குப் போகிறாள் அம்மா. அங்கு ஏதோ ஒரு தின்பண்டம் வேண்டும் என்று குழந்தை அழுதது. வாங்கித் தராமல் அம்மா பிடிவாதமாக வந்துவிட்டாள். குழந்தை முகம் வாடிவிட்டது.
உடனே அம்மாவிற்கு மனம் கேட்கவில்லை. மீண்டும் கடைவீதிக்குப் போய் குழந்தை கேட்ட தின்பண்டத்தை வாங்கி வந்து குழந்தைக்குக் கொடுக்கிறாள். அப்போது சில குழந்தைகள் மகிழ்ச்சியாக வாங்கிக்கொள்ளும்.
சில குழந்தைகளோ வம்பு செய்யும். தூக்கி எறியும். அது கேட்டபோது கிடைக்காததால், கிடைக்கிறபோது வேண்டியதில்லை என்று புறக்கணிக்கும். அம்மா கெஞ்சுவாள். தனக்குத் தராமல் துன்புறுத்திய தாயைப் பழிவாங்கும் நோக்கில் தின்னாமல் துன்புறுத்தும் பிள்ளைகளும் உண்டு. நீங்கள் எந்த வகை யோசித்ததுண்டா?
கேட்டது கிடைப்பது வெற்றி. கொஞ்சம் முன் பின்னாகக் கிடைத்தாலும் வெற்றி வெற்றிதான். ஆனால் அந்த வெற்றியை அனுபவிக்க முடியாதபடி சிறுபிள்ளைத்தனமான அகங்காரத்தால் பிறரைத் தோற்கடிப்பவர் உண்டு.
வளர்ந்த பிறகும் இந்தக் குணம் பலரை விடுவதில்லை. கணவனிடம் புடவை கேட்பார்கள்... முதலில் மறுத்துவிட்டுப் பிறகு மனம் மாறிக் கணவன் வாங்கிக் கொடுத்தால் உடுத்தமாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக மறுத்துவிடுவார்கள். அவனை மனம் நோகச் செய்து தோற்கடிப்பதில் அலாதியான மகிழ்ச்சி அடைவார்கள்.
நாம் நோக்கத்தில் தெளிவாக இருந்தால் இந்தத் தவறு நடக்காது. நமது வெற்றிதான் முக்கியம். பிறரைத் தோற்கடிப்பதில் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது? அதனால்தான் பகை வளர்கிறது. தாங்கள் வெற்றி பெறுவதற்காகப் பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சியுறும். பிறரைத் தோற்கடிப்பது வெற்றி அல்ல! நாம் வெற்றி பெறுவதே வெற்றி என்கிற துல்லியமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்! (இன்ஷாஅல்லாஹ்)
குறிப்பு: இந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களில் ஒருசில அல்லது எல்லாமே உங்களிடம் இருக்குமேயானால் நிதானமாக மனதை ஒருமைபடுத்தி ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் படித்து பாருங்கள் உங்களின் தவறு விளங்கும், அதனை திருத்திக் கொண்டு உண்மையான வெற்றியை அடைந்து கொள்ள வழிகிடைக்கும். அதுவல்லாமல் ஆழ்ந்த மற்றும் பரந்த சிந்தனையில்லாமல் படிப்பீர்களேயானால் வெற்றி அடைய முயற்சிப்பதை விட்டுவிட்டு பழைய நிலையைவிட மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment