Friday, January 15, 2016

கேள்வி = அறிவு

கேள்வி = அறிவு

கேள்வி என்பது அறிவுக்குச் சமம். மரத்தில் பழுத்துத் தொங்கும் மாங்காயை வாங்கு மாட்டி இழுத்துப் பறிப்பதைப் பார்த்திருப்பீர்கள். எத்தனை முறை வாங்கைப் பயன் படுத்துகிறோமோ அத்தனை மாங்காய் கிடைக்கும்.

வாங்கு போன்றதே கேள்வி. அதனால்தான் கேள்விக்குறிகூட வாங்கு வடிவத்தில் உள்ளது.

சாக்ரடீஸ்கூட ஏன்? எப்படி? எதற்காக? என்று கேள் என்றார். விளக்கம் பெற, அறிவு பெற, விழிப்பு பெற, உரிமை பெற வினா எழுப்பியே ஆகவேண்டும்.

குழந்தைகள் இயல்பாகவே கேள்வி கேட்கும் இயல்பும், ஆர்வமும் உடையவர்கள். அந்த ஆர்வத்தை _ இயல்பை பெரியவர்கள்தான் அறியாமையால் அடக்கி ஒடுக்கிவிடுகிறார்கள்.

குழந்தை பேசத் தொடங்கியதும் வினா எழுப்புவதை இயல்பாகக் கொண்டுள்ளது. அப்பருவத்தைத்தான் வினவத் தெரிந்த பருவம் என்பர். அதையே வெனவு தெரிந்த நாளாய், நினைவு தெரிந்த நாளாய் என்று கூறுகின்றனர். உண்மையில் சரியாகச் சொல்வதென்றால் வினவத் தெரிந்த நாளாய் என்றே சொல்ல வேண்டும்.

எல்லா குழந்தைகளுமே சளைக்காமல், சரளமாக, சரமாரியாகக் கேள்வி கேட்கும். காரணம், உலகில் எல்லாவற்றையும் முதன்முதலாகக் காணும், கேட்கும் அதற்கு அவற்றைப்பற்றி அறிய வேண்டும் என்ற ஆவல் இயல்பூக்கமாகவே வரும்.

அப்படிக் கேட்கும்போது பெரியவர்கள் சளைக்காமல், சலிக்காமல் பதில் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் பதில் சரியானதாக இருக்க வேண்டும்.

தெரியாது என்று சொன்னால் கேவலம் என்ற எண்ணத்தில் தப்புத்தப்பாய், பிழையாய், உண்மைக்கு மாறாய்ச் சொல்லக் கூடாது. பிஞ்சுகளின் உள்ளம் பசுமரம். நாம் கூறும் விளக்கம் ஆணி போன்றது. அது ஆழப்பதியும். நீண்டு நிலைக்கும். எனவே தெரிந்ததைச் சரியாகச் சொல்ல வேண்டும், தெரியாததைக் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்ல வேண்டும்.

குழந்தைகளும் பெரியவர்களிடமும், ஆசிரியர்களிடமும், மற்ற நண்பர்களிடமும் கேள்வி கேட்கத் தயங்கக் கூடாது.

கடவுளைக் கும்பிடு என்றால், எது கடவுள்? படமும், கல்லும், பொம்மையும் எப்படிக் கடவுளாகும்? தாளில் வண்ண வண்ணமாய் வரைந்தால் எப்படிக் கடவுளாகும்? அதற்குச் சக்தி எப்படி வரும்? _ கேட்க வேண்டும்.

கையில் கயிறு கட்டினால், கழுத்தில் தாயத்துக் கட்டினால், இது எதற்கு? இதனால் என்ன பயன்? இதற்கு எப்படிச் சக்தி வரும்? இது எப்படிப் பயன்தரும்? இதில் அழுக்குச் சேர்ந்தால் கேடுதானே வரும்? _ கேட்க வேண்டும்.

பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான் என்று பெரியவர்கள் சொன்னால், ஆதிசேஷன் எதன் மீது நின்று தாங்குகிறான் என்று கேட்க வேண்டும்.

அய்யப்பனுக்கு மாலை போடு என்றால், ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை எப்படிப் பிறக்கும்? என்று கேட்க வேண்டும்.

திருப்பதிக்கும், பழனிக்கும், போய்ச் சாமி கும்பிடக் கூப்பிட்டால், இங்கு இருக்கும் சாமிக்குச் சக்தியில்லையா? _ கேட்க வேண்டும்.

நம்மைப் படைப்பது கடவுள் என்றால், கடவுளைப் படைத்தது யார்? _ கேட்க வேண்டும்.

கடவுளைக் கும்பிட்டால் படிப்பு வரும் என்றால் நாம் ஏன் படிக்க வேண்டும்? அதிகமாகக் கும்பிட்டால் அதிகம் படிப்பு வருமா? _ கேட்க வேண்டும்.

எந்த ஒன்றுக்கும் காரணமும் விளக்கமும் இல்லை என்றால் அதை நம்பக் கூடாது; ஏற்கக் கூடாது.

பெரியவர்கள், ஆசிரியர்கள், முன்னோர்கள் சொன்னதால் அதை நம்பக் கூடாது. அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு என்றார்.

இளம் வயது முதல் தந்தை பெரியார் கேள்வி கேட்டதால்தான் அவர் உலகத் தலைவராய் உயர்ந்தார்;  நம்மையும் உயர்த்தினார்.

பார்ப்பான் மட்டும் எப்படி உயர்ந்தவன்?

நாம் ஏன் தாழ்ந்தவர்கள்?

அவர்களுக்கு உள்ள உரிமை ஏன் நமக்கு இல்லை? இப்படியெல்லாம் அவர் கேட்டதால்தான் நமக்கெல்லாம் கல்வி கிடைத்தது, பதவி கிடைத்தது, பகுத்தறிவு கிடைத்தது, உயர்வு வந்தது.

கேள்வி விளக்கம் தருவதோடு, உரிமை தருவதோடு, தெளிவு தருவதோடு அறிவும் தரும்.

அறிவு என்பது ஒன்றை அறிதல். அந்த அறிதல் வினா மூலமே வரும்.

ஆகையால்தான் நமக்கு எந்த அளவிற்கு அறிவு உள்ளது என்பதை அறிய வினா கேட்கிறார்கள்.

நமக்கு எது தேவையோ, எது விளங்கவில்லையோ, எது குழப்பமாக உள்ளதோ அதில் தெளிவு வேண்டின் கேள்வி கேட்க வேண்டும்.

ஒரு கேள்வி கேட்டால் அதைப்பற்றி அறிகிறோம். பல கேள்வி கேட்டால் பலதைப் பற்றி அறிகிறோம். ஆக, எவ்வளவு கேட்கிறோமோ அவ்வளவு அறிகிறோம்; அறிவு பெறுகிறோம்.

எனவே, கேள்வி = அறிவு என்பது சரிதானே! சரியென்றால் கேள்வி கேளுங்கள்; அறிவு பெறுங்கள்!

No comments:

Post a Comment