வணக்கம் நண்பர்களே... இன்று நாம் அலசப் போவது "மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் எது ?" என்பதைப் பற்றி... அதற்கு முன் : முதல் முதலாக எழுதிய இந்தப் பதிவு வெளியீடவில்லை... ஏனென்றால் பதிவின் நீளம் ! இதிலிருந்து வந்த சில பதிவுகள் தான் குணம் என்னும் குறிச்சொற்களில் (Labels) வந்த முந்தைய பதிவுகள்...
நண்பர்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் : நண்பர்களே! கீழே உள்ள பிளே பட்டனை அழுத்தவும். ஒருமுறை அழுத்தினால் பதிவை படிக்கும் போது பாடல்களைக் கவனமாகக் கேட்க முடியாதென்பதால், இருமுறை அழுத்தவும். பதிவைப் படித்து முடிப்பதற்குள் லோட் ஆகி விடும்.
https://www.youtube.com/watch?v=F_mRF8BzlxI&list=PL3F9403870919BBFD
வழக்கமாக நண்பர் :1, நண்பர் :2 என்று எழுதுவேன். அவ்வாறு எழுத முடியுமா ? ஏனென்றால் தலைப்பு அப்படி... " பிரச்சனை " அவரவர் வயதிற்கேற்ப, சூழ்நிலைகேற்ப எவ்வளவோ பிரச்சனைகள். அட... படிக்கிற குழந்தைகளிடம் பேசினால், "எனக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கு... தெரியுமா உங்களுக்கு ?" அப்படிங்கிறான் ! பிரச்சனை இல்லாத வாழ்க்கையே இல்லை. ஆனால் வாழ்க்கையே பிரச்சனை என்றால்...? அது சரியில்லை... இது சரியில்லை... அவன் அப்படி இருக்கான்... இவன் இப்படி இருக்கான்... கஷ்டம்... நஷ்டம்... கொடுமை... ஏமாற்றம்... சோதனை, வேதனை, எரிச்சல்... அப்பப்பா எழுதிக்கொண்டே போகலாம். பிரச்சனை-ஏன் ? எப்படி ? எதனால் ?
நண்பர்களே... தன்னுடைய வீட்டுப் பிரச்சனையையே தீர்வு காண முடியாதவன், தான் செய்யும் தொழிலிலோ, வேலை செய்யும் இடத்திலோ, சமூகப் பிரச்சனைகளிலோ முழுமையாகத் தீர்வு காண்பது கஷ்டம். இதனால் வீட்டில் இருந்தே அலசுவோம். இன்று கூட்டுக் குடும்பமே குறைந்து விட்டது. முதியோர் இல்லங்களும், அனாதை இல்லங்களும் பெருகி விட்டன. மனித நேயம் என்றால் என்ன ? என்றாகி விட்டது. சரி... தனிக்குடும்பம் செல்பவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா.... ம்ஹீம்... பெரும்பான்மையினர் பிரச்சனைக்குக் காரணமாகச் சொல்வது : பெரியவர்களால், பெற்றோர்களால், துணைவியால், கூடப் பிறந்தவர்களால், குழந்தைகளால், உறவினர்களால், நெருங்கிய நண்பர்களால்... இப்படி நிறையப் பேர்கள் என்று தொடந்து கொண்டே போகும். இப்படி மாறி மாறி அடுத்தவர் மீது குற்றம் சொல்லி பிரச்சனைகளை அதிகமாக்கி கொள்கிறார்கள். மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் 'இவர்களில் யாராவது ஒருத்தர்' என்று சொல்லிவிடலாமா...?
நண்பர்களே... இதற்குக் காரணம் : பணமா ? பேராசையா ? கர்வமா ? விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாததா? கோபமா ? எரிச்சலா ? தோல்வியா ? பயமா ? தன்னம்பிக்கை இல்லாமையா ? ஆர்வம் இல்லாமையா ? பழி / பலி வாங்கும் எண்ணமா ? பொறுப்பின்மையா ? பொறுமையின்மையா ? பிடிவாதமா ? துரோகமா ? மன்னிக்கும் மனப் பக்குவம் இல்லாமையா ? அகங்காரமா ? போட்டியா ? பொறாமையா ? ...ஸ்... ...ஸ்... அப்பப்பா... இன்னும் உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் யோசிங்க நண்பர்களே... மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் 'இவைகளில் ஏதாவ்து ஒன்று'என்று சொல்லிவிடலாமா...?
நமது ஐயன் நல்ல கேள்வி கேட்கிறார் நம்மிடம்... குறள் எண் 190-ல்
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
பொருள் : அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால் நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ ? நண்பர்களே... மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் 'குற்றம் காணல்' என்று சொல்லிவிடலாமா...?
இந்தக் குற்றம் காணல் எதனால் வருகிறது ? "மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டு பார்ப்பது." அப்பாடா... இப்ப தான் விசயத்திற்கே வருகிறோம் நண்பர்களே... இதில் ஒரு பலவீனம் என்னவெனில், எப்போதுமே தன்னை விட மேல்நிலையில் உள்ளவர்களுடனேயே ஒப்பிடுவது. அழகாக இருப்பவர்களுடன், பணம், நல்ல மனைவி & குழந்தைகள், ஆரோக்கியம், வீடு, வசதி... இப்படிப் பலப்பல... என்றைக்காவது ஒரு நாளாவது, வாழ்நாளிலே ஒரு தடவையாவது நம்மை விடக் கீழே உள்ளவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கிறோமா ? அப்படிச் செய்தால் தானே, மனம் திருப்தியடைந்து அடுத்த வேலையைச் செய்வதற்கு மனதிலும், உடலிலும் ஒரு உற்சாகம் வரும். "நான் அணிந்து கொள்வதற்கு எனக்குக் காலணிகள் இல்லையே என்று சலித்துக்கொண்டே இருந்தேன், கால்களே இல்லாத ஒரு நபரை பார்க்கும் வரை" என்ற வாசகத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் 'மற்றவர்களிடம் தன்னை ஒப்பிட்டு பார்ப்பது' என்று சொல்லிவிடலாமா...? இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம் நண்பர்களே...
"உன்னை மற்றவர்களோடு நீ ஒப்பிட்டுக் கொள்ளும் போது உன் சக்தி விரயமாகிறது." இதைச் சொன்னது இந்த உலகம் இதுவரை சரியாகப் பலரால் புரிஞ்சிக்காத மிகப் பெரிய மனிதர்-புத்தர். "அவன் இப்படி இருக்கான்... நான் அப்படி இல்லையே... அவனுக்கு மட்டும் அப்படி நடக்குது... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..." என்று பலவாறு புலம்பினால், பொறாமை என்கிற நெருப்பு, போட்டி போடணும்கிற வெறி - இந்த இரண்டும் வந்தவுடனே நம்ம சக்தி அதிகமாகும். ஆனா இந்தப் பொறாமை & போட்டியாலே உங்க சக்தி எல்லாம் வீணாப் போயிடும். "ஒருவன் முன்னேற வேண்டாமா...? முன்னேறுவதற்கு ஒப்பிட வேண்டாமா ? ஒப்பீடு இல்லாமல் முன்னேற முடியுமா ? பொறாமை தான், தவறே தவிர, போட்டி ஒரு போதும் தவறல்ல... போட்டி இருந்தால் தான் மனித சமூகம் முன்னேற முடியும்.'"- இப்படித் தான் பல பேர் நினைப்பதுண்டு. அதை எல்லாம் இனி மேல் மறந்து விடுங்கள் நண்பர்களே... நம்மை வளர்த்தது அப்படி ! அத்தகைய முன்னேற்றம் ஒரு தடவையோ இரண்டு தடவையோ... நிம்மதியான முன்னேற்றமும் அல்ல. பொறாமை / போட்டி என்று வாழ்ந்தவன், நிம்மதியா இருந்ததாய் அல்லது வாழ்க்கையில் முன்னேறியதாய் வரலாறே இல்லை.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது. ( குறள் எண் : 165)
பொருள் : பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம். அந்த பொறாமையே, பகைவர் கேடு செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்து விடும். இதற்கு மேல் என்ன வேண்டும்... நண்பர்களே...?
அடுத்து புத்தர் சொல்கிறார் பாருங்கள். "அப்படி ஒப்பிடுவதானால் உன்னிடமே ஒப்பிட்டுக் கொள்." எப்படி ஒரு தீர்வை சொல்லி இருக்கார் பாருங்க... நாம் செய்யும் செயல்கள் சரியில்லையா... அதற்குக் காரணம் என்ன என்பதை உங்களிடமே சோதனை செய்யுங்க... அடுத்த முறை இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்பதை யோசியுங்க... முக்கியமாகக் குழந்தைகளிடம் இந்தக் குணத்தை வளர்க்காதீர்கள். இந்தப் பதிவின் நோக்கமே அது தான். வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் சாதித்தவர்கள் எல்லாம் (எந்தத் துறையாக இருந்தாலும், ஆண்/பெண்-யாராக இருந்தாலும்) தன்னைத் தானே ஒப்பிட்டு பார்த்தவர்களாக இருப்பார்கள்... நமக்கு என்ன தெரியுமோ, எது முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்ய முயல வேண்டும். "வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கின்றனர்"-ஷிவ்கெரா. கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே... உண்மை புரியும்... ஆக என்னைப் பொறுத்தவரை...
மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் : ஒப்பிட்டுப் பார்த்தல்
உன்னை பிறரோடு நீ ஒப்பிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கணமும் உன் சக்தி விரயமாகிறது.
உன்னை உன்னோடு ஒப்பிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கணமும் உன் வளர்ச்சி நிகழ்கிறது. - புத்தர்
No comments:
Post a Comment