Friday, January 15, 2016

மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?

நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன? என்பதைப் பற்றி.. கடந்த பதிவில் "மனிதனின் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன?" என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டோம். அதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படித்து விட்டு வரலாம். ஏன்னென்றால் அந்தப் பதிவிற்கும், இன்று நாம் படிக்கப் போகும் பதிவிற்கும் சம்மந்தமுண்டு... சரி இப்போது...

மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?

நண்பர்களே..... என்னுடைய முந்தைய பதிவுகளில் நான் சந்தித்த நண்பர்கள் மூலம் அறிந்து / தெரிந்து கொண்ட கருத்துகளை எழுதி விட்டு, முடிவாக என்னுடைய கருத்தோடு முடித்திருப்பேன். ஆனால், இந்தத் தலைப்பைப் பற்றி என் நண்பர்கள் பல பேரிடம் ஆலோசித்த போது, அதிகம் பேர் சொன்ன ஒரே பதில், "மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் - நம்பிக்கை துரோகம் தான்" என்று கூறினார்கள். இனி என் சொந்த கருத்துக்கள்.....தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நண்பர்களின் கருத்துக்கள் படி இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளேன். முதல் பிரிவினர் கூறியது. "நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை. அதே போல் எனக்கும் யாரும் துரோகம் செய்யவில்லை...ம்...அப்படி யாராவது செய்த கெடுதல்களையும், பழித்துப் பேசினவைகளையும், துரோகமாக எடுத்துக் கொள்ளாமல், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, அவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." ஆம். நண்பர்களே... இவர்களைப் போல நிறைய நண்பர்கள் எனக்கு உள்ளார்கள். ஆனால், நான் இந்த முதல் பிரிவினரைப் பற்றி அலசப் போவதில்லை.

இரண்டாவது பிரிவினர் கூறியது : "மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் - நம்பிக்கை துரோகம் தான்" என்று கூறினார்கள். அவர்களின் கருத்துக்கள் படி, நம்பிக்கை துரோகம் செய்வது யார்? யார்? என்று பெருவாரியாகப் பார்த்தால் (1) கூடப் பிறந்தவர்கள், (2) நண்பர்கள், (3) உறவினர்கள்/மற்றவர்கள்... ஆனால், நான் இந்த இரண்டாவது பிரிவினரைப் பற்றியும் விரிவாக அலசப் போவதில்லை. ஏன்னென்றால், இது அவரவர் குடும்பத்திற்கேற்ப, நண்பர்களுக்கேற்ப, உறவினர்களுக்கேற்ப, செய்யும் தொழிலிக்கேற்ப மாறுபடும்.

வழக்கமாக என் பதிவில் ஒரு கதை எழுதுவேன். அதற்குப் பதில் கீழே குறிச் சொற்களை மட்டும் எழுதி உள்ளேன். நீங்களே உங்களுக்கு ஏற்றவாறு கதையாக மாற்றிக் கொள்ளுங்கள்.

நல்ல நண்பர் --> (1) / (2) / (3) மீது நம்பிக்கை --> எதிர்ப் பார்ப்பு --> அவசரம் --> ஏமாற்றம் --> பொறுமையின்மை --> சின்னதாக எரிச்சல் --> பயம் --> கோபம் --> பொறாமை --> பழி வாங்கும் எண்ணம் --> பேராசை --> கெட்ட பழக்கம் (குடி, புகை, சூது, இன்னும் பல) --> மனச் சோர்வு --> கெட்ட பழக்கம் தினமும் வழக்கமாகுதல் --> அடுத்தவர்களைக் கஷ்டப்படுத்துதல் --> பொறுப்பின்மை --> பிடிவாதம் --> மதிப்பு குறைதல் (வீட்டிலும் வெளியிலும்) --> எதற்கும் கவலைப்படாமை --> பணம் குறைதல் --> பொய் பேசுதல் --> கடன் வாங்குதல் --> ஏமாற்றுதல் --> இன்னும் பல கெட்ட குணங்கள் --> உடல் நலம் குறைதல் --> திடீர் மரணம் --> குடும்பம் ???

இது தேவையா? இதைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். நான் இவர்களை மட்டும் சொல்லவில்லை. அந்தக் கெட்ட பழக்கமே இல்லாதவர்கள் கூட நாக்குக்கு அடிமையாக உள்ளார்களே... அளவுக்கு மீறி சாப்பிடுவது, கண்டதையெல்லாம் எல்லாம் சாப்பிடுவது-இவை கூட நம் உடலுக்குக் கேடு தானே. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிக கோபம், பேராசை, பொறாமை, வஞ்சகம், என்னும் பல கெட்ட குணங்கள் கூட உடலுக்குக் கேடு தானே.

நண்பர்களே... நாம் நம் மீது நம்பிக்கை வைக்காமல் பிறர் (1) / (2) / (3) மீது நம்பிக்கை வைத்து விட்டு, அவை நடக்காமல் போனால், அடுத்தவர்கள் (1) / (2) / (3) நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு நம்முடைய உடம்பை கெடுத்துக் கொள்வதில் என்ன பிரயோசனம்? நாம் நம் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கையைப் பற்றிப் பல திரைப்படப் பாடல்கள் இருந்தாலும் ஆட்டோகிராப் படத்தில் பா.விஜய் எழுதிய பாட்டைக் கேட்டுப் பாருங்கள். இப்போது ஒரு முறை எனக்காகப் படியுங்கள். 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே...
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்...!
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே... நீ மாறிவிடு...!
மலையோ அது பனியோ... நீ மோதிவிடு...!

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது...
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது...
எந்த மனித நெஞ்சுக்குள்... காயம் இல்லை சொல்லுங்கள்...?
காலப்போக்கில் காயமெல்லாம்... மறந்து போகும் மாயங்கள்...!
உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்...!
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்...!
யாருக்கில்லை போராட்டம்...? கண்ணில் என்ன நீரோட்டம்...?
ஒரு கனவு கண்டால் அதைத் தினம் முயன்றால்... ஒரு நாளில் நிஜமாகும்...

மனமே ஓ மனமே... நீ மாறிவிடு...!
மலையோ அது பனியோ... நீ மோதிவிடு...!

வாழ்க்கை கவிதை வாசிப்போம்...வானம் அளவு யோசிப்போம்...
முயற்சி என்ற ஒன்றை மட்டும்...மூச்சு போலச் சுவாசிப்போம்...
லட்சம் கனவு கண்ணோடு...லட்சியங்கள் நெஞ்சோடு...!
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு...!
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்...
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்...
தோல்வி இன்றி வரலாறா...? துக்கம் என்ன என் தோழா...?
ஒரு முடிவிருந்தால்...அதில் தெளிவிருந்தால்...அந்த வானம் வசமாகும்...

மனமே ஓ மனமே... நீ மாறிவிடு...!
மலையோ அது பனியோ... நீ மோதிவிடு...!

ஒவ்வொரு வரியும் எவ்வளவு உன்னத வரிகள்..! நண்பர்களே... நம்பிக்கை தான் வாழ்க்கை. உங்கள் உடல் தான் உங்களுக்குக் கோவில். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று நமது பெரியவர்கள் சொல்வார்கள். உங்கள் உடலை பேணி காப்பாற்றுங்கள். அதை விட மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு அறிவுரை அல்லது ஆலோசனை சொல்வதை விட நாம் அந்த அறிவுரை அல்லது ஆலோசனைகளை முதலில் பின் பற்றுவோம். ஆக, என்னைப் பொறுத்தவரை,
மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் தன் மனதிற்கும் உடம்பிற்கும் தானே தீங்கிழைத்துக் கொள்வது தான்.

அவ்வாறு துரோகம் செய்ததை எப்போது அறிவான் ? 

No comments:

Post a Comment