Friday, January 15, 2016

நம் குற்றங்களைத் திருத்த...

தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால், சிறைச்சாலைகள் தேவை இல்லை... இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே எடுப்பவர் யாரும் இல்லை... பிறவியில் எவனும் பிழைகளைச் சுமந்தே வாழ்க்கையைத் தொடங்கவில்லை - பின்பு அவனிடம் வளர்ந்த குறைகளைச் சொன்னால் வார்த்தையில் அடங்கவில்லை... (படம் : நான் ஏன் பிறந்தேன்)

நல்ல பாட்டு மனச்சாட்சி... பாட்டிலே வர்ற "பொதுவில் வைத்ததாலே"ங்கிறதை நினைக்கும் போது சின்ன வயசு ஞாபகம் வருது... காசு பணம் எல்லாம் பீரோவிலே வைச்சி தான் பூட்டணும்கிற பழக்கமெல்லாம் அம்மாவுக்குக் கிடையாது... டேபிள் மேலே, சமையல்கட்டிலே, புத்தக அலமாரியிலே, ஜன்னல் ஓரத்திலே அப்படின்னு அங்கங்கே காசுகள் கெடக்கும்... அங்கங்கே காசு பணம் இறைஞ்சி கிடைக்குமே தவிர, எங்கெங்கே எவ்வளவு பணம் இருக்குதுன்னு அம்மாவுக்குக் கரெக்ட்டா தெரியும்... யார் பணம் எடுத்தாலும் அம்மாக்கிட்டே சொல்லி விட்டுத் தான் எடுக்கணும்... ஒருநாள் சமையல்கட்டிலே இருக்கிற பணத்துலே பத்து ரூபாயை காணாம்... அப்பாகிட்டே கேட்டாங்க... அவரு எடுக்கலைன்னு சொல்லிட்டார்... அப்படின்னா நாந்தான் எடுத்திருக்கணும்ன்னு என்கிட்டே கேட்டாங்க... நானும் எடுக்கலைன்னு சொல்லிட்டேன்... அம்மா என்னை விட்றதாயில்லை... ஒழுங்கா உண்மையைச் சொல்லி, நீ குற்றத்தை ஒத்துக்கிட்டா பரிசா 100 ரூபாய் தரேன்ன்னு சொன்னாங்க... ஐ... ஜாலின்னு உடனே குற்றத்தை ஒத்துக்கிட்டு 100 ரூபாயை வாங்கிட்டு வெளியே கிளம்பிட்டேன்...!

ஹேஹே... எத்தனை முறை இந்த மாதிரி பரிசு வாங்கினே...?

அப்படிக் கேளு... இரு முறை... வேலைக்குப் போய் முதல் சம்பளம் வாங்கிச் செலவழிக்கும் போது, பரிசோட அர்த்தம் புரிஞ்சது வலியுடன்...! ஆனா அந்த இரண்டாவது "ஸ்பெஷல் பரிசு" கொடுத்தது அப்பா...! ஹிஹி...

ஆக, குற்றம் செய்பவங்க குற்றங்களை ஒத்துக் கொள்பவர்களாக இருந்தால் உலகில் நீதி மன்றங்களே தேவையில்லை... மனிசங்க குற்றங்களை உணரவும் ஒத்துக் கொள்ளவும் தொடங்கி விட்டால், பிறகு நாட்டில் குற்றங்களே நடக்காமலும் போய் விடும்ன்னு சொல்றே...! குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி... இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி... தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி... தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி இல்ல... பாடம்படி பவள கொடி... உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை... உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பம் இல்லை... புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு... எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு...! (படம் : யூத்)

தப்பை தப்பில்லாம செஞ்சா தப்பில்லைங்கிறது இன்றைய மோசமான நிலை...! இப்போதெல்லாம் செய்த குற்றத்தை ஒத்துக் கொள்ளும் பழக்கம் யாரிடமே இல்லைன்னு தான் சொல்ல வேண்டியிருக்கு... சிறு குழந்தைகள் சிறு சிறு தவறுகள் செய்யும் போதே, அவர்கள் செய்தது குற்றம் தான் என்பதை உணர வேண்டும் என்பதற்காகவே கற்பனையாகச் சொல்லப்பட்டது அந்த ரூ 100 பரிசு சம்பவம்...! குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல சுகம் அடைவதேது...? குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...? அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்...(2) அரும்பிட முடியாது...! (படம் : ரத்தக் கண்ணீர்)

ஏன் முடியாது...? செஞ்சது குற்றம்ன்னு தெரிஞ்சி, உடனே திருந்தி திருத்திக்கிட்டா சரியாப் போச்சி... ஆனா தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்... தப்புச் செய்தவன் வருந்தியாகணும்... (படம் : பெற்றால் தான் பிள்ளையா...?) பல பேர் தான்மட்டும் என்ன தவறு செய்தாலும் தவறில்லை, அடுத்தவங்க சின்னத் தவறு செஞ்சா கூடத் துள்ளிக் குதித்து அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்த நினைக்கிறாங்க, இன்னும் பலபேர் ஏமாற்றுவதே தொழிலா செஞ்சிக்கிட்டு இருக்காங்க... இரண்டிற்கும் பதிலென்ன...?

கடும் விஷத்தைக் கூட விஷமுறிவிற்குப் பயன்படுத்தும் மருத்துவம் இருக்கிறது... அடித்தவனை அடித்துத் திருத்துகிற வழிமுறை வழிமொழியப்படவில்லை... முள் எடுக்க முள் பயன்படுத்துவது போல ஏமாற்றுக்காரனை ஏமாற்று மூலம் திருத்த முற்படலாமொழிய, அவனைக் கவிழ்த்து சாய்த்து விட முயற்சிக்கக் கூடாது... அவர்களை அவர்கள் வழியிலே திருத்த முற்படுவது தான் நல்ல வழி... நமது நீதி வழங்குகிற தண்டனைகள் எல்லாமே குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் முயற்சியே என்பதை நாம் மறந்து விடக் கூடாது மனச்சாட்சி... ஒரு நிகழ்ச்சி :
________________________________________
ரொட்டி வியாபாரி ஒருவர் இருந்தார்... அவரது கடையில் ரொட்டிகள் அமோகமாக விற்பனை ஆயின... அவரின் வியாபாரத்திற்கு இன்னொருவரிடமிருந்து வெண்ணை வாங்கிக் கொண்டிருந்தார்... ஒரு நாள் ரொட்டி வியாபாரிக்கு வெண்ணை வியாபாரியின் மீது சந்தேகம் வந்தது... வெண்ணை வியாபாரி தனக்கு எடை குறைவாக வெண்ணை வழங்குவதைக் கண்டுபிடித்து விட்டார்... ஒரு கிலோவை நிறுத்திப் பார்த்தால் 800 கிராம் தான் வெண்ணை இருந்தது... உடனே காவல்துறைக்குச் சொல்லி கைது செய்ய வைத்தார்... வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது... வெண்ணை வியாபாரியை நீதிபதி விசாரித்தார்... விசாரிப்பில் வெண்ணை வியாபாரி சொன்ன விளக்கமே வழக்கில் திருப்பத்தைக் கொண்டு வந்தது...!

"ஐயா, என்னிடம் எடை பார்க்கும் இயந்திரம் கிடையாது... தராசு மூலமே வெண்ணையை நிறுத்துகிறேன்... என்னிடம் எடைக்கற்களும் கிடையாது... கால்கிலோ எடைக்கு ரொட்டிக் கடைக்காரர் தயாரிக்கும் கால்கிலோ எடையுள்ள ரொட்டித் துண்டுகளையே எடைக்கற்களாக வைத்து நிறுத்துகிறேன்... நாலு ரொட்டித் துண்டுகளை வைத்து எனது வெண்ணையை வைத்து நிறுத்திப் பாருங்கள்... சரியாக இருக்கும்..." என்றார்... நிறுத்திப் பார்த்தால் சரியாக இருந்தது... எடை குறைவாக - அதாவது கால் கிலோவிற்குப் பதிலாக 200 கிராம் தந்தது வெண்ணை வியாபாரியின் குற்றமா...? ரொட்டி வியாபாரியின் குற்றமா...? அதற்கு இது சரியாகப் போய் விட்டது என்று இருவரையும் அனுப்பி வைத்தார் நீதிபதி...
________________________________________
இப்படித்தான் நம்மில் பலர் நம்மிடம் குற்றங்களை வைத்துக் கொண்டு, அடுத்தவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிக் வைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறோம்... நம்மில் குற்றங்களைத் திருத்துவதற்கு அடுத்தவர் தான் வரவேண்டுமா என்ன...?

No comments:

Post a Comment