Friday, January 22, 2016

மனக்குழப்பம்

சாதாரணமாக நாம் எல்லோரும் 'மனக்குழப்பம்' என்றால் மனம் குழம்பிப்போய் இருப்பது எனக் கருதுகிறோம். எதனால் குழப்பம் ஏற்படுகிறது? மனத்தைக் குழப்புவது எது?  மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா?  என்னென்ன சம்பவங்கள் அல்லது சந்தர்ப்பங்களில்  மனம் குழம்புகிறது அல்லது குழப்பத்தை  உண்டாக்குகிறது?  ஒவ்வொரு முறையும் குழம்புவதற்கு அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அந்தச் சம்பவம் அல்லது சந்தர்ப்பம் காரணமா அல்லது எல்லாவகையான குழப்பத்துக்கும் ஒரே காரணமா? கேள்வி  மேல் கேள்வி கேட்டு உங்களைக் குழப்புவதிலும் ஒரு காரணம் உண்டு. 


'மனக்குழப்பம்' என்பது பல வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகிறது.  தடுமாற்றம், திகைப்பு, வெட்கம், கலக்கம், அச்சம், ஆர்வமின்மை, பலவீனம், தெளிவின்மை, அமைதியின்மை எனப் பல வடிவங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றது. மனக்குழப்பம் என்பது வெவ்வேறான வடிவங்களைப் பெற்றிருந்தாலும் நாம் கவனத்திலும் கருத்திலும் வைத்திருக்க வேண்டிய விடயம் மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா?  என்பதுதான்.  இதை நாம் தெளிவாகப புரிந்து கொள்வதற்கு முதலில் 'மனம்' என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.

மனம் என்பது நினைவுகளின் பண்டகசாலை.  நமது நாளாந்த நகர்வில் உள்வாங்கிக் கொண்ட அனைத்தையும் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கும் பண்டகசாலை. உதாரணமாகக் கூறுவதாயின் இது ஒரு கணணி (computer)போன்றது.   ஒரு கணனியில் நாம் சேகரித்து வைக்கும் தரவுகள் போன்று எமது மனமும்  தரவுகளைச்  சேகரித்து வைக்கும். மனக்குழப்பத்தை மிகவும் இலகுவாகப் புரிந்துகொள்வதற்கு எமது  மனத்திற்கும் ஒரு கணனிக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது அவசியம். அதாவது  நாம் ஒரு தரவை அல்லது பதிலை கணனியிடம் கேட்டால் அதற்குப் பொருத்தமான தரவு அல்லது பதில் ஏற்கனவே இருக்குமாயின் சரியான விடையைத் தரும். மாறாக பொருத்தமான பதில் இல்லாவிடில் 'பதில் இல்லை' என்று கூறும் அல்லது ‘கேள்வியைச் சரிபார்க்கவும்’ என்று எங்களைக் கேட்கும்.  உதாரணமாக,  ஒரு கணனியில்   ஐந்தும் எட்டும் சேர்ந்தால் பதின்மூன்று என்று பதிவு செய்திருப்போமாயின்  ஏழும்  ஆறும்  எத்தனை என்று கேட்டால் பதில் கிடைக்காது.  ஆனால் மனமானது  தான் ஏற்கனவே பதிவு செய்துள்ள விடயங்களில் இருந்து பல்வேறு தெரிவுகளைத் தந்து குழப்பிக்கொண்டிருக்கும்.  இதுவே மனக் குழப்பத்திற்கான அடிப்படையாகும்.  எப்படி?

மனக்குழப்பம் ஏற்படுவதற்கான காரணமாக அமைவது எமது மனம் எமது கேள்விக்கு இது தான் விடை என்பதைத் திட்டவட்டமாகத் தராதது தான்.  திட்டவட்டமான பதிலை மனத்தால் தரமுடியாமல் போவதற்கான காரணம் எமது கேள்விகள் ஏற்கனவே மனம் சேகரித்து வைத்திருக்கும் தகவலுடன் நேரடியான தொடர்பைப் பெறாதிருப்பது தான்.  வேறொருவகையில் கூறுவதாயின், கேள்விகள் புதிதாக இருக்கும் ஆனால் மனமோ பழைய தகவல்களிலிருந்து விடையைத் தேடும்.  இந்த நடவடிக்கையே மனக்குழப்பத்திற்குக் காரணமாக அமைகின்றது.  அதாவது நமது வாழ்க்கை புதிய கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருக்கும்.  ஆனால் மனமோ பழைய தகவல்களில் விடையைத் தேடிக்கொண்டிருக்கும். இந்த முரண்பட்ட செயற்பாடே மனக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.  இந்தக் குழப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நாம் கருத்தி கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், நமது வாழ்க்கை முன்வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் புதிய கேள்வி என்பதுதான்.  அதாவது வாழ்க்கை ஒரு பொழுதும் ஒரு கேள்வியை ஒரு முறைக்கு மேல் முன்வைப்பதில்லை என்பது தான். கேள்விகள் புதிதாக இருப்பதால்  பதில்களும் புதிதாக இருத்தல் வேண்டும்.  வாழ்க்கையின் ஒவ்வொரு  கேள்விக்கும்  பதில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருப்பது தான் மனக் குழப்பத்தை தவிர்ப்பதற்கான ஒரே வழியாகும்.

No comments:

Post a Comment