Friday, March 21, 2014

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...

கடவுள் என்றவொரு கதாபாத்திரம் இந்த உலகில் இருக்கிறதா என்ற கேள்வியை நாம் அனைவரும் அடிக்கடி கடந்து சென்றிருப்போம். சில நேரங்களில், கடவுளின் இருப்பை நம்பலாம் மற்றும் சில நேரங்களில், கடவுளின் இருப்பை கட்டுக்கதை என்றோ, மாயை என்றோ, பொய்மை என்றோ கடுமையாக மறுக்கலாம். எதன் அடிப்படையில் கடவுளைப் பற்றி இவ்வாறு மாற்றி மாற்றி சிந்திக்கிறோம்? கடவுள் ஏன் நம்மால் அடைய முடியாதவராகவும், அதே நேரத்தில் இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டளிப்பவராகவும் மற்றும் வியக்கத்தக்கவராகவும், அதே நேரத்தில் தொலை தூரத்தில் இருப்பவராகவும் இருக்க வேண்டும்? 

கடவுளை படைப்பாளராகவோ, சர்வலோகத்தின் உன்னத ஆட்சியாளராகவோ, காப்பானாகவோ கருதினால், உலகெங்கும் உள்ள கணக்கில்லா மக்கள் துன்பத்திலும், துயரத்திலும் உழலுவதின் உள்ளார்ந்த ரகசியம் என்னவோ? மேய்ப்பனாக இருப்பின் சொந்த படைப்புகளை துயரத்தில் இருந்து மீட்க மறுப்பதன் காரணம் என்னவோ? நம்பிக்கையற்றிருக்கும் தன் குழந்தைகளை கையறு நிலையிலிருந்து விடுதலை செய்யாமையின் சூட்சுமத்தின் காரணம் என்னவோ? அவனே அனைவரையும் படைத்திருந்தால், உலக மக்கள் தாங்கொணாத்துயரில் சிக்கித் தவிப்பதை பார்த்து மகிழ விரும்புவானா? வேதனையிலிருந்தும், பாவத்திலிருந்தும், மீளாத் துயரிலிருந்தும் மீட்டு காத்தருளும் தருணம் எப்போது பிறக்கும்? விடையளிப்பவர் எவருமின்றி இப்படி வினாக்கள் பற்பல. மேற்கண்ட வினாக்களுக்கு பதிலளிக்கவோ, நாம் மனதில் குடிகொண்டுள்ள ஆர்வமிகுதிக்கு விளக்கம் அளிக்கவோ, விடையில்லா புதிர்களை தீர்க்கவோ, கடவுளைச் சுற்றியுள்ள மாயைகளை களையவோ எவரையும் கடவுள் சொர்க்கத்திலிருந்தோ, வானிலிருந்தோ நேரடியாக அனுப்பவில்லை. மாறாக, சொந்த அறிவிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் இக்கேள்விகளுக்கு பதில் தேடத் தன் மக்களை அவரவர் போக்கிற்கு விட்டுவிட்டான். எல்லாவற்றிக்கும் மேலான ஒரு சக்தியின் இருப்பை மறுதலித்தல் என்பது மேலோட்டமான சிந்தனையாக இருக்கும். பரந்த அண்டவெளி, அறிவான மனித இனம், கணக்கிலா படைப்புகள், ஆற்றலை அள்ளித்தரும் ஆதவன், உலகம் அமைய அடிப்படையான நீர் மற்றும் இவை எல்லவாற்றிக்கும் மேலான பற்பல உயிர்கள் போன்றவை திடிரெனத் தோன்றிவிடவில்லை. இப்படிப்பட்ட அற்புதப் படைப்பும், அவற்றின் சுழற்சியும், இருப்பும் ஒவ்வொரு நாளும் தடையின்றி, தவறின்றி நடைபெறுவதென்பது தற்செயலாகத் தோன்றியதொரு அதிசயம் இல்லை. ஒரு பரந்த அர்த்தத்தில் பார்க்கையில், கடவுளே இறுதியானவனாகவும், முற்று முகவரியாகவும், மூலாதாரமானவனாகவும், கழிநனியாகவும், குறைபாடற்ற ஆனால் வரையறுக்கப்படாதனாகவும் அறியப்படுகிறான். கடவுள் எல்லா வழிகளிலும் முழுநிறைவுடைய பொருளாகவும் சாத்தியப்படும் படியும் உள்ளான். சர்வ வல்லமை படைத்த இறைவன் எங்கும் எப்போதும் நீக்கமற நிறைந்தவனாகவும், இவ்வுலகில் உள்ளோர்க்கெல்லாம் குறையாத இரக்கமுள்ளவனாகவும் உள்ளான். அவனுடைய செயல்களும் வழிகளும் பலமுள்ளவையாக இருப்பதாலும், வெல்ல முடியாதவனாகவும், எப்பேர் செய்தாலும் தடுத்த நிறுத்த முடியாதவனாகவும் இருப்பதாலும் தான், அவ்வபோதும் எப்பொழுதும், நம்மால் கட்டுபடுத்த முடியாத கடவுளின் செயல்களை, படைப்புகளை "எல்லாம் அவன் வழி" என்றும் விழிக்கிறோம். 

இறை நம்பிக்கையாளர்கள் இறைவனை சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஏற்றுக் கொள்வதும் நடைபெறுகிறது. இறைவன் இல்லை என்ற இயல்பு நிலையை இறை நம்பிக்கையாளர்களுக்கு சுட்டிக்காட்டவும், உண்மைநிலையை நிருபிக்கவும் ஆதாரங்களை இறை மறுப்பாளர்கள் தேடுகிறார்கள். "என்னை அப்படியே நம்பு" என்றுரைப்பது பகுத்தறிவுக்கு எட்டாதவொன்றாகவும், இயங்கியல் தத்துவத்திற்கு எதிரானதாகவும் இருப்பதாலும், எவரையும் இறைவனை ஏற்றுக் கொள்ள வைக்க எந்த விதத்திலும் உதவாத வாதமாகவே இருக்கும். 

இக்கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கும் பணிகளுக்கு இடையில் உயிர்கள் அடிக்கடி உட்கொள்ளப்படுவதால், இந்தக் கேள்வி பெரும் சிக்கலான ஒன்றாகும். ஓரிரவு சிந்தித்து, விடியற்காலை அல்லது ஓரிரு நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் தேடுதலின் பலனாகவோ பதில் கிடைக்ககூடிய வினாவல்ல இது. இறைவன் என்பவன் உண்மை அல்லது முழுமுதற்பொய் என ஏற்றுக்கொள்ளுவது மிக எளிதல்ல. ஆனால் பரந்த நோக்குடையது மற்றும் சிக்கலானது. நம்பிக்கையுடன் தேடுங்கள், தேடிக்கொண்டே இருங்கள். உங்களுக்கு தெரியாது கடவுள் உங்கள் வாயிற்கதவை எப்போது தட்டுவான் என்பது. தேடுங்கள் தேடுங்கள் கிடைக்கும் வரை தேடுங்கள்.

No comments:

Post a Comment