உங்களை உயர்த்தும் உணர்வுகள்
மனதில் எழுகிற உணர்வுகள் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருபவை. நமக்கு நன்கு தெரிந்த சராசரி உணர்வுகள்தான். கோபம், அச்சம், சந்தோஷம், பதட்டம், பிரியம் போன்றவற்றையே அதிகம் அனுபவித்திருக்கிறோம்.
இவை மட்டுமில்லாமல், நம்மை உயர்த்தக் கூடிய உன்னதமான உணர்வுகள் நம்மில் அவ்வப்போது எழுகின்றன. அவற்றின் அருமை புரியாமல் கோட்டை விட்டு விடுவதால் அந்த நுட்பமான உணர்வுகளை நாம் வளர்த்தெடுப்ப தில்லை. அவை நாம் வளர்க்க வேண்டிய உணர்வுகள் மட்டுமல்ல. நம்மை வளர்க்கக்கூடிய உணர்வுகளும் கூட…
பரவசம்
இந்த நிலைக்கு நம்மில் பலரும் அடிக்கடி ஆட்படுகிறோம். மனதுக்குள் ஆயிரம் மலர்கள் மலர்ந்து, மேனிசிலிர்க்க கண்கள் நிறைந்து பொங்கும் ஆனந்தத்தில் புதிய உணர்வைப் பெறுவது நமக்கு அடிக்கடி நிகழ்வதுதான்.
தொலைக்காட்சி பார்க்கிறீர்கள். ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யாரோ ஒரு குழந்தை பாடிப் பாராட்டைப் பெறுகிறது. பார்த்துக் கொண்டிருக்கிற உங்களுக்குக் கண்கள் நிறைகின்றன. சிலிர்ப்பு எழுகிறது என்றால் இது மிக நல்ல விஷயம். நல்ல அதிர்வுகள் எங்கே இருந்தாலும் அவற்றைப் பெறுகிற விதமாய் உங்கள் உள்ளம் பக்குவப்பட்டிருக்கிறது. இந்த குணம் வளர்ந்தால் நல்ல விஷயங்கள் உங்களை ஈர்க்கத் தொடங்கும்.
ஆனால், நம்மில் பலர், பிறர்முன் ஆனந்தத்தில் கண்ணீர் சிந்துவதையே கூச்சத்துக் குரிய விஷயமாய் நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்குகிறோம். இது பூமியைக் கீறி வெளிவரும் முளையை பலவந்தமாக உள்ளே அழுத்துவது போலத்தான்.
பரவசத்தை உணருங்கள். உணர்த்துங்கள். பரவசமான அனுபவங்களைத் தொடர்ந்து பெறுவீர்கள்.
ஈடுபாடு
உங்களுக்கு ஈடுபாடு இருக்கிற விஷயங்களுக் காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேளுங்கள். இசை உங்களுக்குப் பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். “முன்னே எல்லாம் நல்ல மியூசிக் புரோக்ராம்னா ஓடிப்போய் கேட்பேன் சார்! இப்போ எல்லாம் நேரமே இருக்கறதில்லை” என்று ஆதங்கத்தோடு செல்பவரா நீங்கள்? உடனே உங்கள் இசைத் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
எதில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறதோ அதுதான் உங்கள் எல்லைகள் தாண்டி உங்களை வளர்க்கப் போகிறது. இவ்வளவுதான் நீங்கள் என்று நீங்கள் பொதுவாகவே ஓர் எல்லை வைத்திருப்பீர்கள். ஆனால் அந்த எல்லையையும் தாண்டி உங்கள் திறமை, ரசிப்புத்தன்மை, கற்பனை ஆகியவை வளர்வது எப்போது தெரியுமா? உங்களுக்கு ஈடுபாடுள்ள துறையில் நீங்கள் ஆர்வமுடன் பங்கேற்கிற போதுதான்!! உங்கள் ஆர்வம் உரிய முறையில் வெளிப்படும் போதெல்லாம் நீங்கள் உயர்கிறீர்கள்.
நன்றியுணர்வு
ஒரு மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக குணத்தை வெளிப்படுத்தவல்லது நன்றியுணர்வு தான். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் நன்றி சொல்வது நம்மை உயர்த்திக் கொள்வதற்கு அல்ல. நம் நலனுக்கு தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவு பேர் துணை செய்கிறார்கள் என்பதை உணர்கிறபோதெல்லாம் நாம் மேலும் பலம் பொருந்தியவர்கள் ஆகிறோம்.
எத்தனையோ சம்பவங்களின் கண்ணிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது நம்முடைய வாழ்வு. ஒரு கண்ணி அறுந்தாலும் உயர்வுகள் சாத்தியமில்லை. இந்த நன்றியுணர்வு யாருக்குப் பெருகுகிறதோ, அவர்கள் எடுக்கிற காரியங்கள் எளிதில் நடந்தேறி விடுகின்றன.
No comments:
Post a Comment