எப்போதும் மகிழ்ச்சி, சந்தோஷம் நிறைந்து வாழ...
இது இந்த கால கட்டத்துக்கு தேவையான ஒரு பதிவு தான்.
நாம் அனைவரும் எப்போதும் சந்தோஷம் நிறைந்து குதூகலத்துடன் வாழ விரும்புகிறோம். ஆனால் எப்போதும் சோகம் தேய்ந்த முகத்துடனும் கவலையுடனுமே நமது வாழ் நாள்கள் ஓடுகின்றன.
நாம் பேருந்தில் செல்லும் போதோ, தெருவில் நடக்கும் போதோ, உணவகத்தில் இருக்கும் போதோ சுற்றிலும் உள்ளவர்களை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். அனைவரும் ஏதோ ஒன்றை இழந்தது போல் வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
என்ன செய்வது கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கலையில் நாம் கை தேர்ந்தவர்களாகி விட்டோம். பல நாட்கள், பல வருடங்கள், பல பிறவிகளின் பழக்கம்! அவ்வளவு சீக்கிரம் அகலுமா? மேலும் நமது உலகமும் சந்தோஷத்திற்கு எதிராகவே செயல் படுகிறது. கல கலப்பாக சிரித்து விளையாடி மகிழும் பள்ளி, கல்லூரி மாணவன் கண்டிக்கப் படுகிறான். விரக்திப் பார்வை பார்த்தவாறு புத்தகமும் கையுமாக இருக்கும் மாணவன் போற்றப் படுகிறான்.
ஆனால் உண்மை என்னவெனில் இந்த சந்தோஷம், ஆனந்தம், குதூகலம் மற்றும் உற்சாகம் அனைத்தும் நமது உள்ளத்தில் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் நாம் தான் எப்போதும் துக்கம் என்னும் உணர்வையே தேர்ந்தெடுத்து விடாப் பிடியாக பின் பற்றி வருகிறோம்.
நீங்கள் இந்தக் கதையை எப்போதோ கேள்விப் பட்டிருக்கக் கூடும்:
ஏதோ ஒரு ஊரில் ஒரு பேராசிரியர் தனது மாணவர்கள் அனைவரையும் அழைத்தார். ஒரு வெள்ளைத் தாளை காண்பித்தார். அந்த தாளின் மையத்தில் ஒரு சிறிய கரும்புள்ளி வைக்கப் பட்டிருந்தது. தாளை காண்பித்து அதில் என்ன தெரிகிறது என மாணவர்களை கேட்டார். ஒரு ஆள் விடாமல் அனைவரும் ஒரு கரும் புள்ளி தெரிவதாக சொன்னார்கள்.
பேராசிரியர் சிறிது மௌனத்திற்கு பிறகு சொன்னார் "எனது அன்பு மாணவர்களே, இந்த தாளில் வெண்மையான மிகப் பெரிய பகுதி உள்ளது. ஆனால் நாம் அதை விட்டு விட்டு கரும்புள்ளியில் மட்டுமே கவனம் கொள்கிறோம். இது தான் மனதின் இயல்பு. வாழ்க்கையில் எவ்வளவோ சந்தோஷமான விஷயங்கள் இருந்தாலும், சின்ன சின்ன எதிர் மறையான நெருடல்களிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம். அதையே நினைத்து மனம் வருந்தி நேர விரையம் செய்கிறோம்."
அதற்காக ஒரு பிரச்சனை வரும் போது அதனை கண்டு கொள்ளாமல் ஜாலியாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை. அந்த பிரச்சனையை சந்திக்க வேண்டும். அதனை வெற்றிகரமாக தீர்க்க வேண்டும். அதனை வெற்றி கொள்ளும் போது ஒரு சந்தோஷம் ஒரு திருப்தி ஏற்படுகிறதல்லவா, அதில் நிலை கொள்ள வேண்டும்.
ஆனால் நாம் எப்போதும் எதிர் மறையான எண்ணங்களையே நினைத்து வருந்தி வாழ்ந்தால் அது ஒரு பழக்கமாகவே மாறி விடுகிறது.மேலும் மேலும் கவலைகளை உற்பத்தி செய்கிறோம்.
நாம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களை ச்ந்திக்காமலில்லை. சந்திக்கிறோம். ஆனால் எவ்வளவு நேரம் அந்த சந்தோஷத்தில் நிலை கொள்கிறோம் என்பதில் தான் விஷயம் உள்ளது.
சரி, இதற்கு மாறாக எப்போதும் மகிழ்ச்சியாக குதூகலமாக வாழ முடியுமா? கண்டிப்பாக முடியும். ஏனென்றால் சந்தோஷமானாலும், துக்கமானாலும் அந்த உணர்வு நமது உள்ளே இருந்து தான் வெளிப்படுகிறது. அதாவது அந்த உணர்வு ஏற்கனவே அங்கு உள்ளது. புறச் சூழ்நிலைகள் வெறும் கருவிகளே.
இந்த கருவிகளை தவிர்த்து நாமே வேண்டிய உணர்வுகளை உற்பத்தி செய்ய முடிந்தால் பிரச்சனை முடிந்தது.
உண்மையான ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் நாம் இழந்த நிலையில் உள்ளோம்.
நமது மனதை துக்கதின் பிடியிலிருந்து அகற்றி சந்தோஷத்தில் லயிக்க வைக்க தியானம் மிகச் சிறந்த, மிக எளிய வழியாகும்.
தியானம் நமது வாழ்க்கையை ஒழுங்கு செய்யவல்லது, நமது நேர்மறை சக்தியை பெருக்க வல்லது, சந்தோஷத்தையும் பேரானந்தத்தையும் தர வல்லது.
சொல்லப் போனால் அது நாம் கற்பனை செய்வதை விட மிகுந்த மகிழ்ச்சியை தரக் கூடியது.
தியானிப்போம். வளமாக வாழ்வோம். வாழ்க வையகம்.!வாழ்க வளமுடன்..!
No comments:
Post a Comment