மஹாபாரதம் கதை - சுருக்கமாகவும் - விரிவாகவும் - 1
மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.
குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.
மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்
சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.
இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.
சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.
அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.
இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.
திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்; பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.
திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன்(தருமர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச "பாண்டவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன். குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.
திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.
பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே (யுதிஷ்டிரனுக்கே) முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தை பாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்துபேரும் திரௌபதியை மணக்கின்றனர்.
பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.
சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை)யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.
இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து; தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.
போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான். பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.
பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.
மஹாபாரதம் விரிவாக பகுதி - 1
கதாபாத்திரங்களும் உறவு முறையும்:
பாண்டு: பஞ்ச பாண்டவர்களின் தந்தையார் ஆவார். பாண்டுவிற்கு இரு மனைவியர். முதல் மனைவி குந்திதேவி. இரண்டாவது மனைவியின் பெயர் மாத்ரி. குந்தி இவருடைய முதல் மனைவியாவார். பாண்டு விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகா வேத வியாசருடன் கூடிப் பிறந்தவர். வேதவியாசருடன் அம்பாலிகா கூடிய போது முனிவரது தோற்றங்கண்டு வெளிறிப் போனமையால் பாண்டுவும் வெளிறிய தோற்றத்திற் பிறந்தார். பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் விருப்பம் உடையவன். ஒரு முறை வேட்டைக்குச் செல்லும் போது இணை மான்களில் ஒரு மானைக் கொன்று விடுகிறான்.
குந்தி: பஞ்ச பாண்டவர்களில் யுதிஷ்டிரன்(தருமர்), பீமன், அர்ஜுனன் ஆகிய மூவரின் தாயார் அவார். அத்துடன் கர்ணனை பெற்றெடுத்த கன்னித்தாயுமாவாள். இவர் பாண்டுவின் முதல் மனைவியாவார். மேலும் கிருஷ்ணனின் தந்தையாகிய வாசுதேவனின் சகோதரியுமாவார். சூரசேனனின் மகளாகிய பிரீதா என்ற இயற்பெயருடைய இவர் குந்திபோஜ மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற பெயர் பெற்றார்.
சாந்தனு: மகாபாரதக் கதையில் வரும் அஸ்தினாபுரத்தின் அரசன் ஆவார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் வீட்டுமர் (பீஷ்மர்) எனும் மகனும், சத்யவதி எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் கௌரவரின் மூதாதையான சித்ராங்கதன் எனும் மகனும், பாண்டவரின் முதாதையான விசித்திரவீரியன் எனும் மகனும் இவருக்கு உள்ளனர். சாந்தனு இறந்த பின் சத்யவதி பீஷ்மரின் துணையோடு நாட்டை ஆண்டு வந்தாள்.
வீடுமர் அல்லது பீஷ்மர்: மகாபாரதத்தின் தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் சாந்தனுவிற்கும் கங்கைக்கும் மூத்த மகனாகப்பிறந்தார். சாந்தனு துஷ்யந்தனுக்கும், பரதனுக்கும் அடுத்த அரசன் ஆவார். பீஷமர் அரசியலை தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் இருந்தும் வேதங்களை வசிஷ்டரிடம் இருந்தும் வில்வித்தையை பரசுராமரிடம் இருந்தும் கற்றுக்கொண்டார்.
தன் தந்தை, சத்தியவதி பால் கொண்ட விருப்பினை நனவாக்க, பிரமச்சாரியாக வாழ்ந்தது மட்டுமன்றி, அரசாட்சியையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் போதே மரணம் என்ற வரமாகும்.
போரின் போது சிகண்டி என்பானை முன்னிறுத்தி பாண்டவ சேனை சண்டையிட, பீஷ்மரோ அவன் முற்பிறப்பில் தன்னை கொல்வேன் என்று வஞ்சினமுரைத்த பெண்ணென்றுணர்ந்து, பெண்ணை கொல்லல் அறமாகது என்று தன்னுடலில் அம்பு தாக்கவும் திரும்பத்தாக்காமல் இருந்தார். ஆயினும் தன் தந்தையிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல், தன் உயிரை நீக்க விரும்பிய போதே உயிர்நீத்தார்.
மகாபாரதப் போருக்குப் பின்னர் தருமனுக்கு நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹச்ர நாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.
வசிட்டர்: (வசிஷ்டர்) மாமுனிவர் (மகரிசி, மகா இருடி) ஏழு புகழ்பெற்ற இருடிகளுள் (ரிசிகளுள்) ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் இருக்கு வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இருக்கு வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் இருக்கு 7.33 இல், பத்து அரசர்களின் மாபெரும்போர் என்னும் நிகச்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மாந்தகுலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இத்வே என்பர். இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்ஃகிதை (Vasishta Samhita). இவரது மனையாளின் பெயர் அருந்ததி. தேவலோகப் பசுக்களான காமதேனு மற்றும் நந்தினி, இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் கௌசிகர் இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் பிரம்ம இருடி விசுவாமித்ரர் என்று பெயர் பெற்றார்.
பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர்: என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.
விதுரன்: அஸ்தினாபுரத்தின் அரசிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோரின் பணிப்பெண்ணின் மகன் ஆவார். இவர் எம தர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இவர் வியாசருக்கும் அப்பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் சகோதரன் முறை ஆவார். விதுரன் அவர்களுக்கு அமைச்சராக இருந்தார்.
அம்பிகா: காசி மன்னனின் மகளும் அஸ்தினாபுரத்து மன்னன் விசித்திரவீரியனின் மனைவியும் ஆவார். இவரும் இவருடைய சகோதரிகளான அம்பா, அம்பலிகா ஆகியோரும் தங்களுடைய சுயம்வரத்தின்போது பீஷ்மரால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களை சத்யவதியிடம் விசித்திரவீரியனின் திருமணத்திற்காக ஒப்படைத்தார்.
விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது மற்றொரு மகனான வியாசரிடம் அம்பிகாவை அனுப்பி வைத்தார். அப்பொது அச்சத்தினால் அம்பிகா தனது கண்களை மூடிக்கொண்டதால் அவர்களுக்கு பிறந்த திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தார். இவரின் புதல்வர்களே கௌரவர்கள் எனப்படுகின்றனர்.
இரண்டாம் முறை அம்பிகா செல்லாமல் தனது வேலைக்காரியை அனுப்பினாள். அவர்களுக்கு பிறந்தவரே விதுரன் ஆவார்.
சகுனி: கௌரவர்களின் தாயான காந்தாரியின் தம்பி ஆவார். இவர் தனது மருமகனான துரியோதனனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் பாண்டவர்களுடன் சூதாடி அவர்களுடைய நாட்டை தனது மருமகனுக்கு வென்று கொடுத்தார். இவர் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனால் கொல்லப் பட்டார்.
மாதுரி: மாதுரா அரசின் இளவரசியும் பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். பாண்டு அத்தினாபுரம் செல்லும் வழியில் மாத்ரா அரசின் சாலியன் என்னும் அரசனைச் சந்தித்தான். பின்னர் இருவரும் நண்பர்கள் ஆயினர். பின்னர் சாலியன் மாதுரியைப் பாண்டுவுக்குக் மணமுடித்து வைத்தான்.
நகுலன்: பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் சகாதேவனும் இரட்டையர்கள் ஆவர். நகுலனும் சகாதேவனும் குதிரைகளையும் பசுக்களையும் காக்கும் வரம் பெற்று விளங்கினர். நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார்.
தருமன்: பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர். குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர். இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரசுத்தம் ஆகியவற்றின் அரசர். இவர் அறிவியல்,மதம் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவராய் திகழ்ந்தவர். தருமரின் தந்தை பிராமணர் ஒருவரால் சபிக்கப்பட்டார். அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். ஒரு காலத்தில் குந்தி (தருமரின் தாய்) துருவாச முனிவரிடம் வரம் வேண்டியிருந்தாள். அதை இப்போது தனபதியிடம் தெரிவித்தாள். அதன்படி அவள் இறைவனிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு பிறந்த பிள்ளை தான் தருமர்.
எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. [1]
வீமன் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர். இவர் காட்டில் வசித்த பொழுது இடும்பி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் கடோற்கஜன். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பார்பாரிகன் இவரது பேரன்.
அருச்சுனன் அல்லது அர்ஜூனன்: பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவன். கிருஷ்ணரின் நண்பன். சிறந்த வில் வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், பாண்டவர், மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன். பகவத் கீதையானது, குருட்சேத்திரப் போரின் முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.
இவனுக்கு வழங்கும் வேறு பெயர்கள் ஆவன:
விஜயன்
தனஞ்செயன்
காண்டீபன்
சகாதேவன்: பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர்.
பாண்டவர் ஐவரில் சகாதேவனே இளையவர் ஆவார். மேலும் அவர்களில் சகாதேவனே புத்திக்கூர்மை மிக்கவர். தன்னுடைய சகோதரன் நகுலனைப் போல் வாள் வீச்சில் சிறந்தவராக விளங்கினார்.
இவர் மகத நாட்டு மன்னனான ஜராசந்தனின் மகளை மணந்து கொண்டார். இவரது மச்சினனின் பெயரும் சகாதேவன் ஆகும்.
துரியோதனன்: கௌரவர்களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை கர்ணன் உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் குருட்டு அரசனான திருதராஷ்டிரனதும், காந்தாரியினதும் மூத்த மகன். பீமனால் தொடை பிளந்து கொல்லப்படுகிறான்.
துச்சாதனன்:. இந்த இதிகாசத்தின்படி, கண்பார்வையற்ற மன்னனான திருதராட்டிரனுக்கும், அவனது மனைவியான காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவனே இவன்.
துச்சாதனன் பிறப்பு
காந்தாரி கர்ப்பமுற்றாளாயினும் அது நீண்டகாலம் நீடித்துச் சென்றதேயன்றிப் பிள்ளை பிறக்கவில்லை. வெறுப்புற்ற காந்தாரி தனது வயிற்றில் அடித்துக்கொண்டாள். திருதராட்டிரனின் தம்பியான பாண்டுவின் மனைவி ஏற்கெனவே மூன்று பிள்ளைகளைப் பெற்றிருந்ததும் அவளுக்குப் பொறாமையை ஊட்டியிருந்தது.
அவள் வயிற்றில் அடித்துக்கொண்டதனால் அவள் வயிற்றிலிருந்து சாம்பல் நிறமான தசைப் பிண்டம் ஒன்று அவள் வயிற்றிலிருந்து வெளிவந்தது. காந்தாரி மிகுந்த துயருற்றாள். அவளுக்கு நூறு புதல்வர்கள் பிறப்பார்கள் என வாழ்த்திய பெரியவரான வியாசரிடம் அவள் முறையிட்டாள். வியாசர் அப் பிண்டத்தை நூறு பாகங்களாகப் பிரித்து, நெய் நிறைந்த பானைகளிலே இட்டு மூடி அவற்றை மண்ணிலே புதைத்து வைத்தார்.
ஓராண்டின் பின் முதல் பானை திறக்கப்பட்டபோது அதிலிருந்து துரியோதனன் வெளிப்பட்டான். இரண்டாவது பானையில் இருந்து வெளிவந்தவனே துச்சாதனன் ஆவான். துச்சாதனன் துரியோதனன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தான். அவனுடன் இணைந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் பல திட்டங்களையும் தீட்டினான்.
துகிலுரிப்பு
பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமன் துரியோதனன் ஆகியோரின் சதிவலையில் வீழ்ந்து தனது பொருளெல்லாம் சூதிலே தோற்றான். பின்னர் தனது தம்பியரையும், மனைவியான திரௌபதி (பாஞ்சாலி)யையும் கூடப் பணயம் வைத்துச் சூதாடினான் அவர்களையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து, துரியோதனன் ஆணைப்படி திரௌபதியை அவைக்கு இழுத்துவந்த துச்சாதனன், அவளது சேலையை உரிய முற்பட்டான். கண்ணனுடைய சக்தியால் இழுக்க இழுக்கத் பாஞ்சாலியின் சேலை நீண்டுகொண்டே இருந்தது.
இதனால் பாஞ்சாலி காப்பாற்றப்பட்டாலும் சினம் கொண்ட அவள், துச்சாதனனின் இரத்தத்தைக் கூந்தலில் தடவினாலன்றித் தனது கலைந்த கூந்தலை முடிப்பதில்லை எனச் சபதம் எடுத்தாள். பீமனும் அவனது நெஞ்சைப் பிளந்து இரத்தத்தைக் குடிப்பேன் எனச் சூழுரைத்தான்.
யுயுத்சு திருதராஷ்டிரனுக்கும் அவரின் அரண்மனைப் பணிப்பெண் ஒருவருக்கும் பிறந்த மகன் ஆவார். இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன் முறை கொண்டவர்.
பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர் அணியில் சேர்ந்தார். போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர் இவர் ஒருவரே ஆவார்.
துச்சலை: துரியோதனின் சகோதரி. இவளது கணவன் பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான். இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான். குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன் துச்சலையின் பேரன் போர் புரிந்தான். துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல் சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
திரௌபதி: பஞ்ச பாண்டவர்களின் மனைவி. சூதாட்டத்தில் தருமர் தன் நாடு முதல் அனைத்தையும் இழந்த நிலையில் இறுதியாக அவரின் மனைவியான திரெளபதியை வைத்து சூதாடினார். ஆயினும் அங்கே சகுனியின் கபட ஆட்டத்தால் தருமர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக திரெளபதி கௌரவர்களுக்குச் சொந்தமானார். இதன் போது கௌரவர்கள் திரெளபதியை சபையிலே துகிலுரிந்து அவமானப்படுத்த நினைத்தபோதும் அது கிருஷ்ணரின் உதவியால் கைகூடாமல் போனது.
இடும்பி: இடும்பனின் உடன்பிறந்தவள். காட்டுவாசியான இவள் பீமனை விரும்பினாள். பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவனே கடோத்கஜன்.
பாண்டவர்களின் வனவாச காலத்தில் இடும்பன் இடும்பியைப் பாண்டவர்களைக் கொன்று இறைச்சியாக்கி வருமாறு அனுப்புகிறான். பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி அவனை விரும்புகிறாள். ஓர் அழகியான பெண்ணாக மாறி பீமனை அணுகுகிறாள். நீண்ட நேரம் இடும்பி திரும்பி வராததால் இடும்பன் பீமனைக் கொல்ல வருகிறான். பீமனுக்கும் இடும்பனுக்கும் நடந்த சண்டையில் இடும்பன் கொல்லப்படுகிறான். பின்னர் இடும்பி பீமனைத் திருமணம் செய்கிறாள். இவர்களுக்குக் கடோத்கஜன் பிறக்கிறான். வனவாசத்தின் பின்னர் இடும்பியும் பீமனும் மீண்டும் சந்தித்தார்களா என்பது பற்றித் தெரியவில்லை.
ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் இடும்பியை வழிபடுவோர் உள்ளனர்.
கடோற்கஜன்: இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்தவன். இராட்சசிக்குப் பிறந்தவனாகையால் மந்திர வலிமைகள் உடையவனாக இருந்தான். இவனது தலை பானை போலிருந்ததால் கடோற்கஜன் என்ற பெயர் பெற்றான். இவனது மனைவி அகிலாவதி. நாககன்னியான அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தே அவளைத் திருமணம் செய்தான். கடோற்கஜன் தனது தந்தையைப் போலவே கதாயுதத்தால் போரிட்டான். கர்ணனால் பாரதப் போரில் கொல்லப்பட்டான்.
அகிலாவதி: ஒரு நாக கன்னிகை. பீமனின் மகனான கடோற்கஜனைத் திருமணம் செய்தாள். அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்குப் பதிலளித்தே அவளைக் கடோற்கஜன் மணம் புரிந்தான்.
அகிலாவதியின் மகனே பார்பரிகா. பார்பரிகாவுக்கு இவள் தோற்கும் பக்கத்துடன் சேர்ந்து போரிடப் பழக்கினாள். பார்பரிகா பாரதப்போரின் பதினான்காம் நாளில் கௌரவருடன் இணைந்து போரிடத் தொடங்கி பீமன், காடோற்கஜன், அருச்சுனன் ஆகியோரையும் வென்றான். கிருஷ்ணனால் கொல்லப்பட்டான்.
இவர் வசுதேவருக்கும் உரோகிணி தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.
உத்தரை: விராடனின் மகள். உத்தரனின் சகோதரி. அர்ச்சுனனின் மகனான அபிமன்யுவை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள். பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தை பின்னர் அஸ்தினாபுர அரசனானான்.
உலுப்பி அல்லது உலூப்பி: அருச்சுனனின் பல மனைவிகளில் ஒருத்தியாவாள். அருச்சுனன் மணிப்பூரில் இருந்தபோது, நாக கன்னிகை உலுப்பி அவன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனை மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்கு அரவான் என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.
அருச்சுனன் மற்றும் சித்திராங்கதாவின் மகன் பாப்புருவாகனனின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள்.
பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள்.
சித்திராங்கதை (அல்லது சித்திராங்கதா): அர்ஜுனனின் மனைவிகளுள் ஒருவர் ஆவார். அர்ஜுனன் தனது வனவாசத்தின் போது இந்தியாவின் பலபகுதிகளில் சுற்றித் திரிந்தார். அப்போது அவர் இமயமலைக்கு கிழக்கே உள்ள மணிப்பூர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவர் மணிப்பூர் மன்னனின் மகளான சித்திராங்கதையைச் சந்தித்தார்.
அருச்சுனன் அவரை மணம் செய்து கொள்ள விரும்பி மன்னரை வேண்டினார். அதற்கு அவர் அவ்வூர் வழக்கப்படி சித்திராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும் அவர்களை அருச்சுனனோடு அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார். அருச்சுனன் சித்திராங்கதையையும் அவள் குழந்தைகளையும் கூட்டிச்செல்வதில்லை என்று உறுதிகொடுத்து மணமுடித்துக் கொண்டார். இவர்களுக்கு பாப்புருவாகனன் என்ற மகன் பிறந்தான். அவனே மணிப்பூர் அரசின் வாரிசு ஆவான்.
அபிமன்யு: அர்ஜுனனுக்கும் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் பிறந்த மகன் ஆவார். அபிமன்யு தனது இளமைப்பருவத்தை தனது தாயின் ஊரான துவாரகையில் கழித்தான். இவர் தனது தந்தையான அர்ஜுனனிடம் போர்ப்பயிற்சி பெற்றான். பின்னர் இவனுக்கும் விராட மன்னனின் புதல்வி உத்தரைக்கும் திருமணம் நடந்தது. இவர் இந்திரனுடைய பேரன் ஆகையால் நிறைய வரங்கள் பெற்றிருந்தான். மிகச்சிறந்த வீரனாகவும் திகழ்ந்தான்.
குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாவது நாளில் கௌரவர்கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று போர் புரிந்த அபிமன்யு அதில் உயிரிழந்தான்.
அரவான்: இரவன், இராவத் மற்றும் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன் மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன்.
அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.
மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது.
தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.
தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும்.
தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
அரவான் இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார் (இங்கு அவரது பெயர் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது). சாவகப் பகுதியின் முக்கிய தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இவற்றில் நாகருடன் அரவானுக்கு தொடர்பு இல்லை. மேலும் சில சாவக மரபுகளில் அரவானும் கிருஷ்ணரின் மகளாகிய திதிசரியும் திருமணம் செய்துகொள்வதாகவும், தவறாக அடையாளம் காணப்படுவதால் அரவானுக்கு மரணம் நேர்வதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் சாவகத்தின் பாரம்பரிய நாடகக்கலைகளான வயாங் (குறிப்பாக வையாங்க் குளிட் என்ற நிழல்-பொம்மலாட்ட) முறையில் சொல்லப்படுகின்றன.
பாப்புருவாகனன் அல்லது பப்ருவாகனன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் அருச்சுனனிற்கும் மணிப்பூர் இளவரசி சித்திராங்கதைக்கும் பிறந்த மகனாவான்.
அருச்சுனன்தனது வனவாசத்தின் போது இந்தியாவின் பலபகுதிகளில் சுற்றித் திரிந்தான். அப்போது அவன் இமயமலைக்கு கிழக்கே உள்ள மணிப்பூர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவன் மணிப்பூர் மன்னனின் மகளான சித்ராங்கதையைச் சந்தித்தான். அருச்சுனன் அவளை மணம் செய்து கொள்ள விரும்பி மன்னரை வேண்டினான். அதற்கு அவர் அவ்வூர் வழக்கப்படி சித்ராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும் அவர்களை அருச்சுனனோடு அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார். அர்ஜுனன் சித்ராங்கதையையும் அவள் குழந்தைகளையும் கூட்டிச்செல்வதில்லை என்று உறுதிகொடுத்து மணமுடித்துக் கொண்டார். அவர்களுக்குப் பிறந்த பாப்புருவாகனனை மன்னர் தனது வளர்ப்பு மகனாக வரித்துக் கொண்டு முடி சூட்டினார்.பல வளங்களுடனும் அதிகாரத்துடனும் கூடிய அழகிய அரண்மனையில் சிறப்பாக ஆண்டு வந்தான்.
பின்னாளில் அருச்சினன் அசுவமேத வேள்வி நடத்த குதிரையுடன் மணிப்பூர் வரும்போது தனது மகன் பாப்புருவாகனனாலேயே அம்பெய்து கொல்லப்படுகிறான். இது பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சகோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்தினால் நிகழ்கிறது. தனது தந்தையை தானே கொன்றதை எண்ணி வருந்தி தற்கொலை செய்யவிருக்கையில் பாப்புருவாகனனுக்கு அருச்சுனனின் மற்றொரு மனைவி நாக அரசி உலுப்பி மாணிக்கம் ஒன்றை வழங்க, அதனைக் கொண்டு அருச்சுனனை உயிர்ப்பிக்கிறான் பாப்புருவாகனன்.பின்னர் தனது தந்தையுடன் அஸ்தினாபுரம் திரும்புகிறான்.
பர்பரிகன்: இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் பீமனின் மகன் கடோற்கஜனுக்கும் யாதவ அரசன் மூருவின் மகள் மௌர்விக்கும் பிறந்தவனாவான். யட்சனான பர்பரிகன் மனிதனாக மறுபிறவி எடுத்தவன். பாண்டவர்கள் பக்கம் போராட விரும்பினாலும் தோற்கும் கட்சிக்கே ஆதரவு என்ற தனது கொள்கையால் கௌரவர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.
இராசத்தானில் பர்பரிகன் குருச்சேத்திரப் போரில் தனது தாத்தாக்களான பாண்டவர்கள் வெற்றி காண பலி கொடுக்கப்பட்டான் என நம்பப்படுகிறது. இந்தச் செய்கையால் கிருஷ்ணர் அவனைத் தெய்வமாக்குகிறார். அங்கு பர்பரிகன் கதுஷ்யாம்ஜி என வழிபடப்படுகிறார்.
கர்ணன்: பண்டைய இந்தியாவிலிருந்து இருக்கும் மகாபாரதம் இதிகாசத்தில் மையக் கதாப்பாத்திரங்களில் ஒருவர். அவர் அங்கா நாட்டின் அரசராக இருந்தார் (இன்று அது பாகல்பூர் ஆகும்). கர்ணன், கிருஷ்ணா மற்றும் பீஷ்மா உள்ளிட்ட நிபுணர்களால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார் என்பதை மகரிஷி வேத் வைஸ்யாவின் உரையில் விளங்குகின்றது. அவர் சூர்யா (சூரியக் கடவுள்) மற்றும் குந்திதேவி ஆகியோரின் மகனாவார். அவர் குந்தி தேவிக்கு மகனாக, அவருக்கும் பாண்டுவுக்கும் திருமணம் நடைபெறும் முன்னரே பிறந்தார். அவர் துரியோதனனின் மிக நெருங்கிய நண்பராக விவரிக்கப்படுகின்றார்.
கர்ணன் அவருக்குப் பதிலாக பாண்டவாக்களை (அவரது சகோதரர்கள்) எதிர்த்து குருக்ஷேத்ரா போரில் சண்டையிட்டார். கர்ணன் அவரது வாழ்க்கை முழுவதும் துரதிஷ்டத்திற்கு எதிராகப் போராடினார் மற்றும் அவர் அனைத்து சூழ்நிலைகளிலும் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். அவரது இந்த வீரம் மற்றும் பெருந்தன்மைக்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றார். கர்ணல் நகரை கர்ணன் நிறுவியதாக நம்பப்படுகின்றது.
துரோணர்: கௌரவர், பாண்டவர்களுடைய ஆசான் ஆவார். இவர் போர்க்கலைகளில் மிகவும் தேர்ந்தவர் ஆவார். இவர் பாரத்துவாச (பரத்வாஜ) முனிவரின் புதல்வர் ஆவார். இவருடைய மனைவி சதாநந்தரின் மகள் கிரிபி. அசுவத்தாமன் இவர்களுக்குப் பிறந்த மகன் ஆவான்.
இவர் அசுவத்தாமனுக்குப் பால்வேண்டிப் பசு கேட்கத் தன் பால்ய நண்பன் துருபதனிடம் சென்றார். துருபதன் மறுக்கவே, என் மாணாக்கனைக் கொண்டு உன்னைக் கட்டிக்கொண்டுவரச் செய்வேன்" என சூளுரைத்தார். பின்னர் பீஷ்மர், பாண்டு மக்களுக்கு வில்வித்தை பயிற்றுவித்து, அருச்சுனனைக் கொண்டு துருபதனை கட்டிக் கொணர்ந்தார். பிரம்மனிடம் இருந்து இந்திரனுக்குக் கிட்டிய தங்கக் கவசத்தைத் தாமே வாங்கித் துரியோதனனுக்குத் தந்தவர். ஏகலைவனிடம் அவனது குருதட்சணையாக அவன் கட்டை விரலை பெற்றவர். இவர் பாரதப் போரின் 15ம்நாளில் திட்டத்துய்மன் என்பவனால் கொல்லப்பட்டார்.
அம்பா: காசி அரசனின் மூத்த மகளாவாள். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகள் ஆவர். இவர்களுக்குச் சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த மன்னர்களையும், [இளவரசர்]]களையும் தோற்கடித்து, இம் மூன்று பெண்களையும், பீஷ்மர் அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை அஸ்தினாபுரத்து மன்னனான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்காக சத்யவதியிடம் ஒப்படைத்தார்.
அம்பா வேறொருவனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததால் விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது தங்கைகள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பியவனை நாடிச் சென்றாள். அவளைப் பீஷ்மர் கூட்டிச் சென்றதனால் அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். பீஷ்மரிடம் திரும்பி வந்த அம்பா, தன்னை மணந்து கொள்ளூமாறு பீஷ்மரை வற்புறுத்தினாள். மணமுடிப்பதில்லை என விரதம் பூண்டிருந்த பீஷ்மரும் அவளை மணம்செய்ய மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட அம்பா, அடுத்த பிறவியிலாவது பீஷ்மரைக் கொல்வது எனச் சபதம் செய்து இறந்துவிட்டாள். அவள் அடுத்த பிறவியில் துருபதனுக்கு மகனாகப் பிறந்தாள் என மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர் சிகண்டி என்பதாகும். மகாபாரதப் போரில் பீஷ்மர் இறந்ததில் முக்கிய பங்கு வகித்தவன் இவனாவான்.
வேத வியாசர்: மகா பாரதக் கதையை எழுதியவர். மகாபாரதக் கதையிலும் வருபவர். சத்யவதியினதும் பராசரரதும் மகன் ஆவார். வியாசருடைய பல சாதனைகளில் முக்கியமானவை ஆறு. அவையாவன:
• வேதங்களையும் உபநிடதங்களையும் பல சாகைகளாகப்பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தினார். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
• உபநிடதங்களிலுள்ள தத்துவ போதனைகளையெல்லாம் ஒரே நூலில் 555 சூத்திரங்களாக இயற்றி அவைகளை இந்து சமய வேதாந்தத்தின் அடிப்படை ஆதார நூலாகும்படிச் செய்தார்.
• பாரதத்தின் மிகப் பழைய கலாசாரமனைத்தையும் உட்கருவாக்கி, ‘அறம்’ என்ற சொல்லின் நெளிவு சுளுவுகள் பாமர மக்களுக்கும் விளங்கும்படி ஒரு நீண்ட வம்சாவளிக் கதையாகவும் பிரதிபலிக்கும்படி உலகிலேயே மிகப்பெரிய நூலான மகாபாரதத்தை இயற்றினார்.
• அவர் இயற்றிய 17 புராணங்கள் இந்துசமயத்தின் அத்தனை கதைகளுக்கும் தெய்வ வரலாறுகளுக்கும் இன்றும் நமக்கு ஆதாரமாகவும் கருச்செல்வங்களாகவும் உள்ளன.
• பதினெட்டாவது புராணமாக ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றி பக்தி யென்ற தத்துவத்திற்கே அதை ஒரு வேதமாக்கியிருக்கிறர். மற்ற புராணங்களில் எவ்வளவு சொல்லப் பட்டிருந்தாலும் பாகவதம் இருந்திரா விட்டால் ‘பக்தி’ என்ற தத்துவத்திற்கு பாரத தேசத்தில் இவ்வளவு மஹிமை ஏற்பட்டிருக்குமா என்பது சர்ச்சைக்குரியது.
• பகவத் கீதையை எழுதியவரும் அவரே. ஆண்டவனின் வாயிலிருந்து அவர் கேட்டதை எழுதியதாகவே வைத்துக்கொண்டாலும், இந்து சமயத்தின் தர்ம-நியாய நுணுக்கங்களை யெல்லாம் ஒன்றுசேர்த்து அதுவே வேதத்திற்கு ஈடாகப் பேசப்படும் அளவிற்கு அதை நமக்கு முன் கொண்டு நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கடைசியாக, பகவத் கீதையை மகாபாரதத்தின் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக்கி, இன்றும் கீதைக்காக மகாபாரதமா, மகாபாரதத்திற்காக கீதையா, என்று வியக்கும்படி செய்திருக்கிறார்.
சாத்தியகி: மகாபாரதத்தின் கதை மாந்தர்களுள் ஒருவன். யுயுதனன் என்றும் அழைக்கப்படும் இவன், கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு வீரனாவான்.
சாத்யகி, கண்ணனிடமும், அருச்சுனனிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். சாத்யகியும், அருச்சுனனும் துரோணரிடம் ஒன்றாகப் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கில், சாத்தியகி பாண்டவர்களை ஆதரித்தான். கண்ணன் பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் தூது சென்ற போது சாத்தியகியும் உடன் சென்றிருந்தான்.
பாரதப் போரில் கலந்துகொண்ட யாதவ குல வீரர்களுள் சாத்தியகியும், கிருதவர்மனும் முக்கியமானவர்கள். எனினும், இருவரும் எதிர்த் தரப்புகளில் சேர்ந்து போரிட்டனர். சாத்தியகி பண்டவர்களுடன் சேர்ந்து போரிட, கிருதவர்மன் கௌரவர்கள் பக்கம் நின்றான்.
சஞ்சயன்: மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டி மற்றும் ஆலோசகன். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது தூரப்பார்வை திறமையால் கண்பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரிக்கிறான். பகவத் கீதையும் இவன் மூலமே மொழியப்படுகிறது.
மன்னனின் நூறு மைந்தர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் பீமனால் கொல்லப்பட்டதை கூறுகின்ற கடினமான கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். தனது விவரிப்பில் உள்ளதை உள்ளபடியே விவரிப்பதிலும், கௌரவர்கள் தோற்கடுக்கப்படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையை தயங்காது கூறுவதிலும் சிறப்பு பெற்றவர்.
விராடன்: ஒரு அரசனாவான். துரியோதனன் ஆகியோரிடம் சூதாட்டத்தில் தோற்று மறைந்து வாழ்ந்த காலத்தில், பாண்டவர்கள் இவனது அரசவையில் ஒரு ஆண்டுக்காலம் வாழ்ந்தனர். இவன் சுதேஷ்னா என்பவளை மணந்து கொண்டான். இளவரசன் உத்தரனும், இளவரசி உத்தரையும் இவனது மக்களாவர். பாரதப் போரின்போது இவன், துரோணரால் கொல்லப்பட்டான்.
கிருபர் அல்லது கிருபாச்சாரியார்: அஸ்தினாபுரம் அரசவையில் ராசகுருவாக இருந்தவர். சரத்வான் மற்றும் ஜனபதி தம்பதியினருக்குப் பிறந்தவர். இவரது இரட்டையரான உடன்பிறப்பு கிருபி அந்நாட்டு தளபதி துரோணரின் மனைவியாவார்.
குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் போரிட்டவர். போரின் முடிவில் பரீட்சித்து மாமன்னரின் அரசகுருவாக பணியாற்றுகிறார். இறவாதவர்கள் எனக் கருதப்படும் எண்மரில் ஒருவர்
அசுவத்தாமன், துரோணாச்சாரியாருடைய மகனாவான். இவன் இந்துக்களின் ஐதீகத்தின்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். மகாபாரதப் போர் நடந்துகொண்டிருந்த போது, அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட வதந்தியை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் திருஷ்டத்யும்னனின் வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.
போரின் முடிவில் கௌவுரவர் பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன்.தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற திருஷ்டத்யும்னன்|திருஷ்டத்யும்னனை இரவில் தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் பாண்டவ கடைகளையும் அதே இரவில் கொன்றான்.
ஏகலைவன்: சிறந்த வில்லாளன்; பிறப்பினால் ஒரு வேடன். துரோணரிடம் வில்வித்தை கற்கச் சென்றபோது கல்வி மறுக்கப்பட்டான். பின்னர் அவரது உருவத்தை அமைத்துத் தானே வித்தை கற்றான். பின்னர் துரோணரிடம் சென்றபோது அவர் குருதட்சணையாக அவனது வலக்கைப் பெருவிரலை வெட்டிப் பெற்றார்.
கிருதவர்மன்: கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன். மகாபாரதம் தவிர விஷ்ணுபுராணம்,பாகவதம் மற்றும் அரிவம்சம் பழங்கதைகளிலும் இவன் பேசப்படுகிறான்.
குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் தனது நாராயணி சேனையுடன் சேர்ந்து போரிட்டவன். போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் எஞ்சியிருந்தவர்கள் மூவரில் ஒருவன். அசுவத்தாமன் பழிக்குப் பழியாக இரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன், சிகண்டி, பாஞ்சாலியின் ஐந்து சிறுவர்கள் என படுகொலை செய்த அநீதிக்கு துணை நின்றவன். போரின் முடிவில் நாடு திரும்பி ஆண்டுவந்தபோது தனது யாதவ குலத்தைச் சேர்ந்த மற்றொரு மன்னனான சாத்யகியால் கொல்லப்பட்டான்.
ஜராசந்தன்: மகாபாரதத்தின் கதைமாந்தர்களில் ஒருவனாவான். மகாபாரதத்தின்படி இவன் மகத நாட்டின் அரசனாக இருந்தவன். இந்த் இதிகாசத்தின் இன்னொரு பாத்திரமும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவனுமான கண்ணனுக்கு எதிரியாக இருந்த இவன் இறுதியில் பீமனால் கொல்லப்பட்டான்.
மயாசுரன்: தனதாட்சியில் மூன்று பறக்கும் நகரங்களை வடிவமைத்து ஆண்டு வந்தான். அவை திரிபுரம் என அழைக்கப்பட்டது. திரிபுரம் செல்வச் செழிப்பில், அதிகாரத்தில் ஏழுலகிலும் சிறந்து விளங்கியது. ஆயினும் அவனது அட்டூழியங்களுக்காக அவனுக்கு வரமருளிய சிவபெருமானே அவனுடன் போரிட்டு திரிபுரம் எரித்தார். ஆயினும் திரிபுரமெரித்த சிவனே ஐங்கரனை நினைக்காதமையால் அவரது தேரச்சு முறிந்தது. அவ்விடமே அச்சிறுப்பாக்கம் என வழங்கப்படலாயிற்று.
துர்வாசர்: இந்து தொன்மவியலில் அத்திரி முனிவருக்கும் அனுசூயாவிற்கும் பிறந்த மாமுனிவர்.உருத்திரனின் மறு அவதாரமோவென்ற அளவு முன்கோபமுடையவர். மற்ற முனிவர்களைப் போலன்றி அவர் சாபமிடும்போதெல்லாம் அவரது தவவலிமை கூடும். அவரது சாபங்களால் பாதிப்படைந்தோர் பலர்.இதனால் அவர் எங்கு சென்றாலும் மிகுந்த பயம் கலந்த மதிப்புடன் நடத்தப்பட்டார்.காளிதாசரின் சாகுந்தலத்தில் சகுந்தலையை தனது காதலனை மறக்க சபித்தவர் இவர்.
ஜராசந்தன்: மகாபாரதத்தின்படி இவன் மகத நாட்டின் அரசனாக இருந்தவன். இந்த் இதிகாசத்தின் இன்னொரு பாத்திரமும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவனுமான கண்ணனுக்கு எதிரியாக இருந்த இவன் இறுதியில் பீமனால் கொல்லப்பட்டான்.
மாயா ராஷ்ட்ரா என்ற தனது தலைநகரைக் கட்டினான். இராவணனின் அழகிய மனைவி மண்டோதரியின் தந்தையாவான்.
திரிபுரம்
மயாசுரன் தனதாட்சியில் மூன்று பறக்கும் நகரங்களை வடிவமைத்து ஆண்டு வந்தான். அவை திரிபுரம் என அழைக்கப்பட்டது. திரிபுரம் செல்வச் செழிப்பில், அதிகாரத்தில் ஏழுலகிலும் சிறந்து விளங்கியது. ஆயினும் அவனது அட்டூழியங்களுக்காக அவனுக்கு வரமருளிய சிவபெருமானே அவனுடன் போரிட்டு திரிபுரம் எரித்தார். ஆயினும் திரிபுரமெரித்த சிவனே ஐங்கரனை நினைக்காதமையால் அவரது தேரச்சு முறிந்தது. அவ்விடமே அச்சிறுப்பாக்கம் என வழங்கப்படலாயிற்று.
பஞ்ச பாண்டவர்கள்
தருமன் மகாபாரதத்தில் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர்.குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரசுத்தம் ஆகியவற்றின் அரசர்.இவர் அறிவியல்,மதம் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவராய் திகழ்ந்தவர். தருமரின் தந்தை பிராமணர் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். ஒரு காலத்தில் குந்தி (தருமரின் தாய்) துருவாச முனிவரிடம் வரம் வேண்டியிருந்தாள். அதை இப்போது தன பதியிடம் தெரிவித்தாள். அதன்படி அவள் இறைவனிடம் பிள்ளை வரம் வேண்டினாள்.அவ்வாறு பிறந்த பிள்ளை தான் தருமர்.
திருதராஷ்டிரனின் நூறு மகன்கள் கௌரவர் எனப்படுவர். இவர்கள், "குரு வம்சத்தச் சேர்ந்த சந்திர குலத்தவர் பார்வதியாம் மலைமகள் சிவபெருமானை எண்ணித் தவம் இயற்றியபோது, அம்மையின் கரங்களுக்கு வளையணிவித்ததால் இப்பெயர் பெற்றனர்; கவரைகள் என அழைக்கப்படலாயினர். தற்காலத்தே இவரை வளையக்கார கவரைகள் என அழைக்கப்படுகின்றனர்."(அபிதான சிந்தாமணி)
திருதராட்டிரன் (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் வரும் அத்தினாபுரத்தின் மன்னனான விசித்திரவீரியனின் முதல் மனைவி அம்பிகாவின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். காந்தாரி இவரது மனைவி ஆவார். அவருக்கு நூறு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இவரது மகன்களே கௌரவர்கள் ஆவர்.
காந்தாரி: காந்தார நாட்டு (இன்றைய காந்தகார்) மன்னனான சுபலனின் மகள் ஆவார். இவரை குருவம்சத்தைச் சேர்ந்த திருதராஷ்டிரன் மணந்து கொண்டார்.
திருதராஷ்டிரன் பிறவிக்குருடர் ஆகையால் பதிபக்தியின் காரணமாக காந்தாரியும் தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார். காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். இவர்களது மகன்களே கௌரவர் எனப்பட்டனர்.
இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள் பெற்று இருந்தார். தனது மகன்களைக் கொன்ற காரணத்தால் இவர் கிருஷ்ணனை சபித்தார். இதுவே கிருஷ்ணரின் யாதவ வம்சத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது.
இவர்களுள் மூத்தவர் துரியோதனன், இரண்டாமவர் துச்சாதனன். இவர்களது மாமன் சகுனியாவார். கௌரவர்களுக்கும் அவர்களது சிற்றப்பன் பாண்டுவின் மகன்களான பாண்டவர்களுக்கும் நடைபெற்ற குருச்சேத்திரப் போர் மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வாகும். அப்போரின் இறுதியில் கௌரவர்கள் அழிக்கப்பட்டனர்.
அத்தினாபுரம்: (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த கௌரவர்களின் அரசு மற்றும் தலைநகரம் ஆகும். பாண்டவர்களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கௌவுரவர்களுக்கும் குருச்சேத்திரப் போர் நடைபெற்றது.
அஸ்தினாபுரத்தினை ஆண்ட பரத குல மன்னர்களின் பட்டியல் பின்வருமாறு:
சாந்தனு
சித்ராங்கதன்
விசித்திரவீரியன் - சித்ராங்கதனின் தம்பி
பாண்டு - அம்பலிகாவின் மகன் (விசித்திரவீரியனின் இரண்டாம் மனைவி
திருதராட்டிரன் - - அம்பிகாவின் மகன் (விசித்திரவீரியனின் முதல் மனைவி)
தருமர் - குந்தியின் மகன்
பரிக்சித் - அபிமன்யுவுக்கும் உத்தரைக்கும் பிறந்த மகன்
ஜனமேஜயன் - பரிக்சித்தின் மகன்
பேரரசன் சனமேசயன்: (சமஸ்கிருதம்: जनमेजय) இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் பரீட்சித்து மன்னனின் மகனும், மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களுள் ஒருவனான அருச்சுனனின் கொள்ளுப்பேரனும் ஆவான். பரீட்சித்து மன்னன் இறந்த பின்னர் குரு வம்சத்தின் வாரிசாக இவன் அரியணையில் அமர்ந்தான். வியாச முனிவரின் மாணவனான வைசம்பாயனரால் பாரதக்கதை இவனுக்குச் சொல்லப்பட்டது என்பதனால் இவன் முக்கியத்துவம் பெறுகிறான்.
மகாபாரதத்தில், சனமேசயனுக்கு ஆறு தம்பியர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள், காக்சசேனன், உக்கிரசேனன், சித்திரசேனன், இந்திரசேனன், சுசேனன், நாக்கியசேனன் என்போராவர். மகாபாரதத்தின் தொடக்கப் பகுதிகளில் சனமேசயனின் வாழ்க்கை தொடர்பான பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் தக்சசீலத்தைக் கைப்பற்றியதும், தக்சகன் என்னும் நாகத்துடனான சண்டையும் அடங்குகின்றன. இவனது தந்தையான பரீட்சித்துவின் இறப்புக்குத் தக்சகன் காரணமாக இருந்ததால், அவன் நாக இனத்தையே அழிப்பதில் குறியாக இருந்தான்.
அதற்காக சர்ப்ப சத்ரா என்ற வேள்வியை நடத்த ஏற்பாடுகள் செய்கிறான். நாக அரசன் தக்சகனை கொல்கிறான். அவனது அமைச்சரும் ஞானியுமான அஸ்திகா அவனது வெறித்தனமான பாம்புகள் அழிப்பை தடுக்கிறார். அப்போது அங்கு வரும் வியாசர், , ஒரு சாபத்தினை நிறைவேற்றவேண்டி ஒருவர் இயற்றிய செயலுக்காக, அந்த இனத்தவரையே அழிப்பது அறமாகாது என்றும் பாண்டவர் வழித்தோன்றலுக்கு இது அழகல்ல எனவும் எடுத்துச் சொல்ல, வேள்வியை கைவிடுகிறான். தனது முன்தாதையர்கள் பற்றி அறிய விரும்பிய சனமேசயனுக்கு, வியாசர் தனது சீடர் வைசம்பாயனரிடம் மகாபாரதக்கதையை அதே வேள்வி நடக்கவிருந்த இடத்தில் சொல்லப்பணிக்கிறார்.
மஹாபாரதம் - விரிவாக பகுதி -1
SUNDAY, 27 JANUARY 2013 03:03 ADMINISTRATOR E-mail Print PDF
உலகம் போற்றும் இதிகாசங்கள் ராமாயாணமும், மகாபாரதமும்.
இராமாயணத்தைவிட மகாபாரதம் பெரியது. ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட இதில் மனித வாழ்வில் எழும் சிக்கல்களும் உண்டு...அதைத் தீர்க்கும் வழிகளும் உண்டு.
இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு என்று கூறப்படுகிறது. மகாபாரதப்போரில் ஈடுபட்ட வீரர்கள் எண்ணிக்கை முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுனூறு. பதினெட்டு நாட்கள் போருக்குப்பின்...10 பேர் தவிர..அனைவரும் மாண்டனர்..
இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதை படிக்க வேண்டும் என்பதில்லை. அனைவரும் படிக்கலாம். தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு...அற்றதை விட்டு விடலாம்.
இப்பதிவின் நோக்கமே ..எளிமையாக...மகாபாரதக் கதையை சொல்ல வேண்டும் என்பதுதான். அனைத்து பதிவர்கள் ஆதரவையும்...அனைத்து..தமிழ் திரட்டிகளின் ஆதரவையும் வேண்டுகிறோம்...
உள்ளே புகுமுன்....
பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர். வேதங்களை தொகுத்தளித்தவர். இவர்தான் மகாபாரதம் என்ற புண்ணியக் கதையைக் கொடுத்தவர்.
பாரதத்தை எப்படி உலகுக்கு அளிப்பது என வியாசர் சிந்தித்தார். பிரம்மனை தியானித்தார். பிரம்மன் நேரில் காட்சிக் கொடுத்ததும். அவரிடம்..'பகவானே. இதை எழுதுகிறவர் பூமியில் யாரும் இல்லையே!'என்றார்.
பிரம்மனும்..'உம்முடைய நூலை எழுத..கணபதியை தியானம் செய்யவும்' என்று கூறிச் சென்றார்..
வியாசர் கணபதியை தியானிக்க..கணபதி தோன்றினார். வியாசர் அவரிடம். 'பாரதத்தை நான் சொல்லச் சொல்ல. நீர் எழுத வேண்டும்" என்ற வேண்டுகோளை வைத்தார்.
வினாயகரும்..ஒப்புக்கொண்டு 'சரி...ஆனால் நான் எழுதும் போது என் எழுதுகோல் நிற்காது..எழுதிக்கொண்டே போகும். இதற்கு சம்மதித்தால் எழுதுகிறேன்' என்றார்.
இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட வியாசர் பொருளை உணர்ந்துக் கொண்டுதான் நீர் எழுத வேண்டும் என்றார்.
வினாயகரும் சம்மதிக்க..வியாசர் சொல்ல ஆரம்பித்தார். ஆங்காங்கு பொருள் விளங்காமல் முடிச்சுகளை வைத்து அவர் சொல்லிக் கொண்டு போக பொருள் அறிய கணேசன் தயங்கிய நேரத்தில்..மற்ற ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்து வியாசர் சொன்னார்...
அத்தியாயம்-1
இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த "மகாபிஷக்" என்ற மன்னன் இவ்வுலகை ஆண்டு வந்தான். அவனது புண்ணியச் செயல்களால், அவன் இறந்ததும் தேவலோகம் அடந்தான். தேவர்களுடன் சேர்ந்து அவன் பிரம்ம தேவரை வணங்கச் சென்றான். அப்போது கங்கை நதி. கங்காதேவி வடிவில் அங்குத் தோன்றினாள்.
கங்காதேவியின் ஆடை காற்றில் சற்றே விலக..அதைக்கண்ட தேவர்களும். ரிஷிகளும். நாணத்தால் தலைக் குனிய.. மோக வயப்பட்ட மகாபிஷக் மட்டும். அவளையே சற்றும் நாணமின்றி நோக்கினான்.
இச் சம்பவத்தால். கடும் கோபம் அடைந்த பிரம்மன். மகாபிஷக்கை 'பூ உலகில் மனிதனாகப் பிறந்து. கங்காதேவியால் விருப்பத்தகாத சிலவற்றை சந்தித்து. துன்புற்றுப் பின் சில வருஷங்கள் கழித்து. நல்லுலகை அடைவாயாக'என சபித்தார்.
பின் அவன் "பிரதீப" மன்னனின் மகனாகப் பிறந்தான்.
பிரம்மதேவர் அவையில் தன்னை நோக்கிய மகாபிஷக்கை கங்காதேவியும் கண்டு காதல் கொண்டாள். அவள் திரும்பி வரும்போது. அஷ்ட வசுக்களை சந்தித்தாள். அவர்கள் மனக்கவலையில் இருந்தனர்.
'தேவி..வசிஷ்டருக்கு சினம் வரும்படி நடந்துக் கொண்டதால் அவர் எங்களை மனிதர்களாக பிறக்க சபித்து விட்டார். ஆகவே..எங்களுக்கு பூமியில் நீங்கள் தாயாகி எங்களை பெற்றெடுக்க வேண்டும்'என வேண்டினர்.
'உங்களை மண்ணுலகில் பெற்றெடுக்க நான் தயார்..ஆனால். அதற்கு நீங்கள் விரும்பும் தந்தை யார்' என கங்காதேவி கேட்டாள்.
'தாயே! பிரதீப மன்னன் மண்ணுலகில் புகழுடன் திகழ்கிறான். அவனுக்கு சந்தனு என்ற மகன் பிறந்து. நாடாளப்போகிறான்.அவனே எங்கள் தந்தையாக விரும்புகிறோம். என்றனர் வசுக்கள். இதைக்கேட்டு..கங்காதேவியும் மகிழ்ந்தாள்.
மீண்டும்..வசுக்கள்..'வசிஷ்டரின் சாபம் நீண்டகாலம் கூடாது. ஆகவே நாங்கள் பிறந்ததும். உடனே எங்களை தண்ணீரில் எறிந்து. ஆயுளை முடித்து விட வேண்டும்' என்றனர்.
'உங்கள் கோரிக்கைக்கு ஒரு நிபந்தனை. புத்திரப்பேறு கருதி. ஒரு மகனை மன்னரிடம் விட்டுவிட்டு. மற்றவர்களை...நீங்கள் சொல்வது போல செய்கிறேன்' என வாக்களித்தாள் கங்கை. வசுக்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.
அத்தியாயம்-2...சந்தனு
பிரதீப மன்னன் கங்கைக்கரையில் தியானத்தில் இருந்தான். அப்போது கங்காதேவி, நீரிலிருந்து கரையேறி மன்னன் முன் நின்றாள்' மன்னா. உங்களுக்கு பிறக்கப் போகும் மகனுக்கு. மனைவியாக விரும்புகிறேன்' என்றாள். மன்னனும், 'அவ்வாறே ஆகட்டும்..' என்றான்.
பிரதிபனின் மனைவிக்கு ஒரு மகன் பிறந்தான். அது பிரம்ம தேவன் சாபப்படி பிறந்த மகாபிஷக் ஆகும். அவனுக்கு சந்தனு எனப் பெயரிட்டனர். சந்தனு...வாலிபப்பருவம் அடைந்ததும்...அனைத்துக் கலைகளிலும் வல்லவன் ஆனான். ஒரு நாள் மன்னன் அவனை அழைத்து, 'மகனே! முன்னர் ஒரு பெண் என் முன்னே தோன்றினாள். தேவலோகத்துப் பெண்ணான அவள்; என் மருமகளாக விரும்புவதாகக் கூறினாள். அவள் உன்னிடம் வரும் போது, அவள் யார் என்று கேட்காதே! அவளை அப்படியே ஏற்றுக்கொள்! இது என் கட்டளை' என்றான்.
பின்னர், பிரதீபன்..அவனுக்கு முடி சூட்டி விட்டு, காட்டுக்குச் சென்று தவம் மேற்கொண்டான்'. வேட்டையாடுவதில் விருப்பம் கொண்ட சந்தனு, ஒரு நாள் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, ஒரு அழகிய பெண் நேரில் வருவதைப் பார்த்தான். இருவரும் ஒருவர் இதயத்துள் ஒருவர் புகுந்து ஆனந்தம் அடைந்தனர்.
சந்தனு 'நீ யாராயிருந்தாலும், உன்னை மணக்க விரும்புகிறேன்' என்றான். அந்த பெண்...கங்காதேவி. அவள் தன் நிபந்தனைகளை அவனிடம் தெரிவித்தாள். தன்னைப் பற்றி ஏதும் கேட்கக் கூடாது. தன் செயல்களில் தலையிடக் கூடாது. நல்லதாய் இருந்தாலும், தீதாயிருந்தாலும் தன் போக்கில் விடவேண்டும். அவ்வாறு நடந்துக் கொண்டால். அவனது மனையியாக சம்மதம் என்றாள்.
காம வயப்பட்டிருந்த சந்தனு, அந்த நிபந்தனைகளை ஏற்றான்.திருமணம் நடந்தது. தேவசுகம் கண்டான் மன்னன். பல ஆண்டுகள் கழித்து, அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். உடன், அக்குழந்தையை கங்கையில் வீசும்படிச் சொல்ல, திடுக்கிட்ட மன்னனுக்கு நிபந்தனைகள் ஞாபகம் வர அப்படியே செய்தான். இது போல தொடர்ந்து ஏழு குழந்தைகளை செய்தான். எட்டாவது குழந்தை பிறந்த போது. பொறுமை இழந்த மன்னன்.'இதைக் கொல்லாதே நீ யார்? ஏன் இப்படி செய்கிறாய்? இக் குழந்தையாவது கொல்லாதே!' என்றான்.
உடன்..கங்காதேவி, 'மன்னா. இம்மகனைக் கொல்லமாட்டேன். ஆனால், நிபந்தனைப் படி நடக்காமல். என்னை யார்? எனக் கேட்டதால் இனி உன்னுடன் வாழ மாட்டேன். ஆனால். நான் யார் என்பதை சொல்கிறேன்' என்றாள்.
'நான் ஜன்கு மகரிஷியின் மகள்.என் பெயர் கங்காதேவி. தேவர்களுக்கு உதவவே. நான் உன்னுடன் இருந்தேன். நமக்குக் குழந்தைகளாக பிறந்த இவர்கள். புகழ் வாய்ந்த எட்டு வசுக்கள். வசிஷ்டரின் சாபத்தால். இங்கு வந்து பிறந்தனர். உம்மைத் தந்தையாகவும், என்னை தாயாகவும் அடைய விரும்பினர். அவர் விருப்பமும் நிறைவேறியது. சாப விமோசனமும் அடைந்தனர். எட்டாவது மகனான இவன், பெரிய மகானாக திகழ்வான். இவனைப் பெற்ற என் கடமை முடிந்தது. எனக்கு விடை தருக' என்றாள்.
கங்காதேவியின் பேச்சைக் கேட்ட சந்தனு. 'ஜன்கு மகரிஷியின் மகளே! புண்ணிய புருஷர்களான வசுக்களுக்கு வசிஷ்டர் ஏன் சாபம் இட்டார்? இவன் மட்டும் ஏன் மண்ணுலகில் வாழ வேண்டும். அனைத்தையும் விளக்கமாக சொல்' என்றான்.
கங்காதேவி..கூறத் தொடங்கினாள்.
தேவவிரதன்....அத்தியாயம்-3
'மன்னா..வருணனின் புதல்வனான வசிஷ்டர் முனிவர்களில் சிறந்தவர். மேருமலைச் சாரலில் தவம் செய்துக் கொண்டிருந்தார். அவரிடம் நந்தினி என்ற பசு ஒன்று இருந்தது. ஒரு நாள் தேவர்களாகிய இந்த எட்டு வசுக்களும் தத்தம் மனையியருடன் அங்கு வந்தனர். அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி நந்தினியைக் கண்டு. தனக்கு அது வேண்டும் என்றாள். மனைவியின்..கருத்தை அறிந்த பிரபாசன்..'இது வசிஷ்ட மகரிஷிக்கு சொந்தமானது. இது தெய்வத்தன்மை வாய்ந்தது. இதன் பாலைப்பருகும் மனிதர்கள் இளமைக் குன்றாமல், அழகு குறையாது..நீண்ட நாள் வாழ்வார்கள்' என்றான்.
உடனே அவன் மனைவி மண்ணுலகில் எனக்கு ஜிதவதி என்ற தோழி இருக்கிறாள். அவள் அழகும், இளமையும் கெடாமலிருக்க. இப்பசுவை அவளுக்குத் தர விரும்புகிறேன்'என்றாள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற பிரபாசன். மற்ற வசுக்களுடன் காமதேனுவை கன்றுடன் பிடித்துக் கொண்டு வந்தான். வசிஷ்டர் ஆசிரமத்திற்கு வந்து பார்த்த போது பசுவும். கன்றும் களவாடப்பட்டிருப்பதைக் கண்டார்.
என் பசுவையும், கன்றையும் களவாடிய வசுக்கள். மண்ணில் மானிடராகப் பிறக்கட்டும் என சபித்தார். வசிஷ்டரின் சாபத்தை அறிந்த வசுக்கள் ஓடோடி வந்து. பசுவையும்,கன்றையும் திருப்பிக் கொடுத்து விட்டு அவர் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினர். பிரபாசனைத் தவிர மற்றவர்கள் உடனே சாப விமோசனம் அடைவர். பிரபாசன் மட்டும் நீண்ட காலம் மண்ணுலகில் வாழ்வான். அவன் பெண் இன்பத்தைத் துறப்பான். சந்ததியின்றி திகழ்வான். சாத்திரங்களில் வல்லவனாக திகழ்வான், எல்லோருக்கும் நன்மை செய்வான்' என்றார் வசிஷ்டர்.
வசிஷ்டரின் சாபத்தை சொன்ன கங்காதேவி. 'பிரபாசன் என்னும் வசுவாகிய இவனை. நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். பெரியவன் ஆனதும் தங்களிடம் ஒப்படைக்கிறேன். நானும் தாங்கள் அழைக்கும் போது வருகிறேன் என்று கூறிவிட்டு மறைந்தாள். தேவவிரதன் என்றும், காங்கேயன் என்றும் பெயர் கொண்ட அவன் மேலான குணங்களுடன் வளர்ந்தான். மனைவியையும், மகனையும் இழந்த சந்தனு பெரிதும் துன்ப வேதனையுற்றான்.
பின், மீண்டும் நாட்டாட்சியில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தான். அஸ்தினாபுரத்தை தலைநகராய்க் கொண்டு அனைவரும் போற்றும் விதமாய் அரசாண்டான். இந்திரனுக்கு இணையானவனாகவும், சத்தியம் தவறாதவனாகவும், விருப்பு. வெறுப்பு அற்றவனாகவும். வேகத்தில் வாயுக்கு இணையாகவும், சினத்தில் எமனுக்கு இணையாகவும். அறநெறி ஒன்றையே வாழும் நெறியாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தான்
4.மகனைக் கண்ட மன்னன்
சந்தனு, காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது. கங்கை நதியைக் கண்டான். இந்த நதியில் நீர் ஏன் குறைவாக ஓடுகிறது. பெருக்கெடுத்து ஓடவில்லையே என்று எண்ணியபடியே நின்றான். அப்போது ஒரு வாலிபன், தன் அம்பு செலுத்தும் திறமையால் கங்கை நீரை தடுத்து நிறுத்துவதைக் கண்டான். உடன் கங்காதேவியை அழைத்தான். கங்காதேவி, தன் மகனை கைகளில் பிடித்தபடி, மன்னர் முன் தோன்றினாள்.
மன்னா. இவன் தான் நமது எட்டாவது மகன். இவன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன். வசிஷ்டரின் வேதங்களையும், வேத அங்கங்களையும் கற்றவன். தேவேந்திரனுக்கு இணையான இவனை. இனி உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறிவிட்டு கங்காதேவி மறைந்தாள். தன் மகனுக்கு சந்தனு இளவரசு பட்டம் சூட்டினான். தன் மகனுடன். நான்கு ஆண்டுகள் கழித்த நிலையில். மன்னன் யமுனை கரைக்கு சென்ற போது; ஒரு அழகிய பெண்ணைக் கண்டான். பெண்ணே. நீ யார்? யாருடைய மகள்? என்ன செய்கிறாய்?' என்றான். அதற்கு அவள், நான் செம்படவப் பெண். என் தந்தை செம்படவர்களின் அரசன். நான் ஆற்றில் ஓடம் ஓட்டுகிறேன்' என்றாள்.
அவள் அழகில் மயங்கிய அரசன். அவளுடன் வாழ விரும்பி. அப்பெண்ணின் தந்தையைக் காணச்சென்றான். செம்படவன். மன்னனை நோக்கி' இவளை உங்களுக்கு மணம் முடிக்க ஒரு நிபந்தனை. அதை நிறைவேற்றுவதாக இருந்தால்; மணம் முடித்துத் தருகிறேன் என்றான். அந்த நிபந்தனை என்ன? நிறைவேற்ற முடியாததாக இருந்தால் வாக்கு தரமாட்டேன். என்றான் மன்னன்.
மன்னா. என் மகளுக்கு பிறக்கும். மகனே. உன் நாட்டை ஆள வேண்டும் என்றான் செம்படவன். நிபந்தனையை ஏற்க மறுத்த மன்னன் ஊர் திரும்பினான். ஆனாலும் அவனால் அப்பெண்ணை மறக்க முடியவில்லை.உடலும் உள்ளமும் சோர்ந்து காணப்பட்டான். தந்தையின் போக்கைக் கண்ட தேவவிரதன். அவனிடம் போய். தந்தையே தங்களின் துயரத்துக்கான காரணம் என்ன? என்றான்.
மகனிடம் தன் நிலைக்கான காரணத்தைச் சொல்ல; நாணிய மன்னன், மறைமுகமாக மகனே! இக்குல வாரிசாக நீ ஒருவனே இருக்கிறாய். யாக்கை நிலையாமை என்பதை நீ அறிவாயா? நாளை திடீரென உனக்கு ஏதேனும் நேர்ந்தால்? நம் குலம் சந்ததி அற்றுப் போகும். ஒரு மகன் இறந்தால். குலத்திற்கு அழிவு என சாத்திரங்கள் கூறுகின்றன. அதனால் சந்ததி எண்ணி மனம் ஏங்குகிறேன் என்றான். செம்படவப் பெண் பற்றிக் கூறவில்லை.
மன்னன் ஏதோ மறைக்கிறான் என தேவவிரதன் உணர்ந்தான். மன்னனின். தேரோட்டியைக் கேட்டால், உண்மை அறியலாம் என. தேரோட்டியைக் கூப்பிட்டு விவரம் கேட்டான். தேரோட்டி உங்கள் தந்தை ஒரு செம்படவப் பெண்ணை விரும்புகிறார். அவளை மணந்தால்; அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு முடி சூட்டப் படவேண்டும் என்று நிபந்தனை போடுகிறார்கள். அதற்கு மன்னன் இணங்கவில்லை. அந்தப் பெண்ணையும் அவரால் மறக்க முடியவில்லை என்றான்.
5.பீஷ்மர்
தந்தையை எண்ணி. சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன் பின் எப்படியாவது அந்த பெண்ணை தன் தந்தைக்கு மணமுடிக்க எண்ணினான். யமுனைக் கரையை நோக்கி விரைந்தான். செம்படவ அரசன் தேவவிரதனை மிக்க மரியாதையுடன் அழைத்துச் சென்றான். தேவவிரதன் தான் வந்த நோக்கத்தைச் சொன்னான். செம்படவ மன்னனோ தன் நிபந்தனையை மீண்டும் வலியுறுத்தினான் என் மகளுக்குப் பிறக்கும் மகனே... சந்தனுக்குப் பின் அரசுரிமை பெறவேண்டும் என்றான். உடனே தேவவிரதன் இவளுக்குப் பிறக்கும் மகனே அரசுரிமை ஏற்பான் வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று உறுதியாகக் கூறினான். நீங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும்'என்றான்.
செம்படவ அரசன் தேவவிரதனே! அரச குலத்தில் பிறந்தவன் கூறாததை நீர் கூறினீர். .நீர் சொல்வதை உம்மால் காப்பாற்ற இயலும். நீங்கள் சத்தியம் தவறாதவர் என்பதில்.எனக்கு துளியும் சந்தேகம் கிடையாது. ஆனால் உமக்கு உண்டாகும் சந்ததிப் பற்றி. எனக்கு சந்தேகம் உண்டு நீங்கள் இப்போது தரும் வாக்குறுதியை உம் சந்ததியினர் மீறலாம் இல்லையா? என வினவினான்.
உடன் தேவவிரதன் கூறுகிறான்...
செம்படவ அரசே! எனது சபதத்தை கேளுங்கள் இங்குள்ள புலனாகாத பூதங்களும் பலர் அறிய வீற்றிருப்போரும் இந்த சபதத்தை கேட்கட்டும் அரசுரிமையை சற்றுமுன் துறந்து விட்டேன். சந்ததியையும் துறக்க நான் மேற்கொள்ளும் சபததைக் கேளுங்கள் இன்று முதல் நான் பிரமசரிய விரதத்தை மேற்கொள்கிறேன். நான் பொய் சொன்னதில்லை. என் உயிர் உள்ளவரை புத்திர உற்பத்தி செய்யேன். இது சத்தியம். என் தந்தைக்காக இந்த தியாகம் செய்கிறேன். இனியாவது சந்தேகம் இல்லாமல் உம் மகளை என் தந்தைக்கு திருமணம் செய்து கொடுங்கள்' என்றார்
தேவவிரதனின் இந்த சபதத்தைக் கேட்டு செயற்கரிய சபதம் செய்த அவன் மன உறுதியை அனைவரும் புகழ்ந்தனர். அனைவரும் அவரை பீஷ்மர் (யாவரும் அஞ்சத்தக்க சபதம் மேர்கொண்டவர்) எனப் போற்றினர்.
6. அம்பை..அம்பிகை..அம்பாலிகை..
பெரியோர்கள் ஆசியோடு செம்படவப் பெண் சத்தியவதியை அழைத்துக்கொண்டு சந்தனுவிடம் வந்தார் பீஷ்மர். அவரின் சபதத்தை கேள்விப்பட்டு சந்தனு வருத்தமுற்றான். பின் மகனுக்கு ஒரு வரம் அளித்தான் "இம்மண்ணுலகில் எவ்வளவு காலம் நீ உயிருடன் இருக்க விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வாழ்வாய். எமன் உன்னை அணுகமாட்டான்" என்றான்.
சத்தியவதி உண்மையில் சேதி நாட்டு அரசனான உபரிசரஸ் என்னும் மன்னனின் மகள். செம்படவ அரசனால் வளர்க்கப்பட்டவள்.
சந்தனுவிற்கும், அவளுக்கும் முதலில் சித்திராங்கதன் என்னும் மகன் பிறந்தான். பின் விசித்திரவீரியன் பிறந்தான். சந்தனு மரணம் அடைந்ததும் பீஷ்மர் சித்திராங்கதனை அரசனாக்கினார். ஒருசமயம் அவன் கந்தர்வ நாட்டு அரசனுடன் போர் செய்ய நேர்ந்தது. அந்த கந்தர்வ அரசன் பெயரும் சித்திராங்கதன்" உன் பெயரை மாற்றிக்கொள்" என்றான் கந்தர்வ மன்னன். இல்லாவிட்டால் போரிட வா" என சவால் விட்டான்.போரில் சந்தனுவின் மகன் மரணம் அடைந்தான்.
பீஷ்மர் அடுத்து..விசித்திரவீரனை அரசனாக்கினார். அவனுக்கு மணம் முடிக்க எண்ணினார். அந்த சமயம் காசி நாட்டு மன்னன் அவனது மூன்று மகளுக்கும் சுயம்வரம் நடத்துவது அறிந்து பீஷ்மர் காசியை அடைந்தார். சுயம்வரத்தில் பல அரசர்கள் கூடியிருந்தனர். அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்பது அவர்களது பெயர். பீஷ்மரின் வயது கண்டு அவர்கள் விலகினர். சில மன்னர்கள் பீஷ்மரை பார்த்து "நரை கூடிய கிழப்பருவத்தில் திருமண ஆசையா...உன் பிரம்மசரிய விரதம் என்னவாயிற்று" என்று சிரித்தனர்.
பீஷ்மர் கடும் கோபம் அடைந்தார். மூன்று பெண்களையும் பலவந்தமாக தேரில் ஏற்றிக்கொண்டு வந்தார். மன்னர்கள் முறையடிக்கப் பார்த்து தோற்றனர். ஆயினும், சௌபல நாட்டு மன்னன் சால்வன். கடும் போர் செய்து தோற்று ஓடினான்.
பின்..பீஷ்மர் மூன்று பெண்களையும் தன் மகள் போல..மருமகள்கள் போல அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் வந்தார். அப்பெண்களை விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அப்பெண்களில் மூத்தவள் அம்பை..'என் மனம் சௌபல நாட்டு மன்னன் சால்வனிடம் சென்றுவிட்டது.அவனையே மணாளனாக அடைவேன் என்றாள்.
உடன் பீஷ்மரும் பெண்ணே! உன் மனம் அவனை நாடினால் தடையேதும் இல்லை இப்பொழுதே நீ அவனிடம் செல்லலாம் என்றார். அம்பையும்..சௌபல நாடு நோக்கி சென்றாள்.
7. அம்பையின் தவம்
சால்வனை சந்தித்த அம்பை மன்னா..நாம் முன்னரே உள்ளத்தால் கலந்துள்ளோம் . இப்போது முறைப்படி மணம் செய்துக்கொள்வோம் என்றாள். அதற்கு சால்வன் 'பெண்ணே..மன்னர் பலர் இருந்த அவையிலிருந்து பலந்தமாக பீஷ்மர் உன்னைக் கவர்ந்து சென்றார். மற்றவரால் கவரப்பட்டு. பின் அவர் வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன். நீ திரும்ப செல் என்றான்.
சால்வனின் இந்த முடிவினால் என்ன செய்வது என்று அறியாத அம்பை மீண்டும் அஸ்தினாபுரம் சென்றாள்..பீஷ்மரை நோக்கி சுயம்வர மண்டபத்திலிருந்து என்னை கவர்ந்து வந்த நீரே தர்மசாத்திரப் படிஎன்னை மணம் புரிய வேண்டும் என்றாள். ஆனால், பீஷ்மரோ நான் பிரமசரிய விரதம் பூண்டுள்ளேன் எனக்கூறி மறுத்தார்.
மாறி மாறி கண்ணீருடன் சால்வனிடமும், பீஷ்மரிடமும் முறையிட்டபடியே ஆறு வருடங்களைக் கழித்தாள் அம்பை. பின் இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்..கட்டை விரலை ஊன்றி நின்று கடுந் தவம் செய்தாள். பன்னிரெண்டு ஆண்டுகள். முருகப்பெருமான் அவளுக்குக் காட்சி அளித்து அழகிய மாலை ஒன்றை கொடுத்து "இனி உன் துன்பம் தொலையும்" அழகிய இந்த தாமரை மாலையை அணிபவனால் பீஷ்மர் மரணமடைவார் என்று கூறி மறைந்தார்.
பின் அம்பை பல அரசர்களிடம் சென்று இந்த மாலை அணிபவர் பீஷ்மரைக் கொல்லும் வல்லமை பெறுவார். யார் பீஷ்மரைக் கொல்கிறார்களோ அவருக்கு நான் மனைவி ஆவேன். யாராவது இம்மாலையை வாங்கிக் கொள்ளுங்கள்' என வேண்டினாள். பீஷ்மரின் பேராற்றலுக்கு பயந்து யாரும் முன் வரா நிலையில் ஆண்டுகள் பல கடந்தன. ஆனாலும் அம்பை தன் முயற்சியைக் கைவிடவில்லை. பாஞ்சால அரசன் துருபதனை சந்தித்து துயரக்கடலில் மூழ்கி யுள்ள என்னை கை தூக்கி விடுங்கள்' என்றாள்.
அவனும்..பீஷ்மருடன் போராடும் ஆற்றல் எனக்கில்லை என்று ஒதுங்கினான். இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அம்மாலையை அம்மன்னனின் மாளிகையில் போட்டுவிட்டு "பெண்ணே!மாலை எடுத்துச் செல்" என்று கூறிய மன்னனின் வார்த்தைகளையும் புறக்கணித்து வெளியேறினாள் அம்பை.
துருபதனும் அம்மாலையை காத்து வந்தான். அம்பை பின் ஒரு காட்டிற்குச் சென்று. அங்கு தவமிருந்த ஒரு முனிவரை சந்தித்தாள். அவர் அவளை பரசுராமரைப் பார்க்கச் சொன்னார். அம்பையும் பரசுராமரை சந்தித்து. தன் நிலமையை சொன்னாள். பரசுராமர் பீஷ்மரை சந்தித்து. அம்பையை மணக்கச்சொல்ல பீஷ்மர் இணங்கவில்லை. ஆகவே இருவருக்குள் போர் மூண்டது.
இருவரும் வல்லமை மிக்கவர்கள் ஆனதால்..யார் வெற்றிப் பெறுவார்..எனக் கூற இயலாத நிலையில். பரசுராமர் விலகிச் சென்றார். மீண்டும் தோல்வியுற்ற அம்பை, சிவனை நோக்கி தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி அளித்து "பெண்ணே! உன் கோரிக்கை இப்பிறவியில் நிறைவேறாது. அடுத்த பிறவியில் அது நடக்கும். உன்னைக் காரணமாகக் கொண்டு பீஷ்மருக்கு மரணம் எற்படும்" என்றார்
8- சிகண்டி
மறுபிறவி எடுக்க நினைத்த அம்பை உடனே தீயில் விழுந்து மாண்டு போனாள். துருபதனின் மகளாக பிறந்தாள். சிகண்டி என்ற பெயர் தாங்கினாள். ஒருநாள் அரண்மணை வாயிலில் மாட்டப்பட்டிருந்த அந்த அழகிய தாமரை மாலையைக் கண்டு அதை எடுத்து அணிந்துக் கொண்டாள். இதை அறிந்த துருபதன் பீஷ்மருக்கு பயந்து. தன் மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினான்.
பின் சிகண்டி தவ வாழ்க்கை மேற்கொண்டாள். இஷிகர் என்னும் முனிவருக்கு பணிவிடை செய்யும் போது அம்முனிவர் கங்கை ஆற்றின் உற்பத்தி இடத்தில் விபஜனம் என்னும் விழா நடை பெறப்போகிறது. அதற்கு வரும் "தும்புரு என்னும் மன்னனுக்கு பணிவிடை செய்தால். உன் எண்ணம் ஈடேறும்" என்றார்.
சிகண்டி அங்குப் போனாள். அங்கு பல கந்தர்வர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் சிகண்டியைப் பார்த்து நாம் இருவரும் உருவத்தை மாற்றிக் கொள்ளலாமா? அதாவது உன் பெண் வடிவத்தை எனக்குத் தா. நான் என் ஆண் வடிவத்தை உனக்குத் தருகிறேன்' என்றான். சிகண்டியும், அதற்கு சம்மதித்து ஆணாக மாறினாள்.
பின் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு நிகரற்ற வீரனாக திகழ்ந்தாள். பாஞ்சாலத்திற்கு திரும்பச் சென்று. தந்தை. துருபதனை சந்தித்து நடந்த விஷயங்களைக் கூறி இனி பீஷ்மருக்கு பயப்பட வேண்டாம் என்றாள். துருபதனும்..மகிழ்ந்து அவனை(ளை) ஏற்றுக்கொண்டான்.
9. சத்யவதியின் கதை:
அம்பை வெளியேறியபின் பீஷ்மர்; விசித்திரவீரியனுக்கு அம்பிகை, அம்பாலிகையை மணம் செய்வித்தார். இவர்களுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த விசித்திரவீரியன் காச நோயால் இறந்தான்.
நாட்கள் சில சென்றதும் சத்யவதி பீஷ்மரிடம் 'மகனே! உன் தம்பி மக்கள் பேறின்றி இறந்தான். சந்தனுவின் குலம் தழைக்க வேண்டும். தருமசாத்திரம் தெரிந்தவன் நீ புத்திரர் இல்லா குலம் எப்படி தழைக்கும். ஆகவே நீ அம்பிகை அம்பாலிகையுடன் கூடிப் புத்திர சந்ததியை உண்டாக்கு..' என்றாள்.
ஆனால் பீஷ்மரோ "அன்னையே! நீங்கள் உரைத்தது மேலான தர்மமே...ஆனாலும் என் சபதத்தை நான் மீறமாட்டேன்" என உறுதியாக உரைத்தார். அதற்கு சத்யவதி "ஆபத்துக் காலங்களில்..சாத்திரம் பார்க்க வேண்டியதில்லை..நெருக்கடியான நேரங்களில் ..தர்மத்தில் இருந்து..விலகுதல் பாவம் இல்லை. ஆகவே நான் சொல்வது போல செய்"' என்றாள்.
ஆனால் பீஷ்மரோ "அன்னையே. நம் குலம் தழைக்க. வேறு ஏதேனும் யோசியுங்கள். என்றார். பின் சத்யவதி பீஷ்மரிடம். தன் கதையைக் கூறலானாள். "கங்கை மைந்தனே! இன்று ஒரு உண்மையை உன்னிடம் தெரிவிக்கிறேன். அது ரகசியமாகவே இருக்கட்டும். முன்பு வசு என்ற மன்னனின் வீரியத்தை. ஒரு மீன் தன் வயிற்றில் கர்ப்பமாக தாங்கியிருந்தது. அந்த மீன் வயிற்றில் வளர்ந்தவள் நான்தான். ஒருநாள் ஒரு செம்படவன் அம்மீனை தன் வீட்டிற்கு கொண்டுபோனான். அங்கு நான் பிறந்தேன். அவர் பின் என்னை தன் மகளாய் வளர்த்தார். நானும் வளர்ந்து கன்னிப்பருவம் எய்தினேன். யமுனை ஆற்றில் பரிசல் ஓட்ட ஆரம்பித்தேன்.
அப்போது ஒரு நாள். பராசர முனிவர் என் படகில் ஏறினார். என்னைப் பார்த்து காமவயப் பட்டார். ஆனால் நானோ பயந்தேன். அப்போது அவர் 'நான் செம்படவப் பெண் இல்லை என்று உணர்த்தினார். உடன் நான் இந்த பகல் நேரத்திலா என்றேன். அவர் உடனே சூரியனை மறைத்து இருளாக்கினார்.
என் உடலில் மீன் நாற்றம் வீசுகிறதே. என்றேன்..உடன் என் உடலில் நறுமணம் வீச வைத்தார். இந்த நதிக்கரையிலேயே. நீ கர்ப்பம் அடைந்து. குழந்தை பிறந்து மீண்டும் கன்னியாகி விடுவாய் என்றார். பின். அவர் என்னைச் சேர்ந்து ஒரு மகனை உண்டாக்கிவிட்டார்.
எனக்குப் பிறந்த அந்த மகன். 'த்வைபாயனன்' என்றழைக்கப்பட்டான். அவன் யோக சக்தியால். மகரிஷி ஆனான். வேதங்களை நான்காக வகுத்தான். அதனால் வேதவியாசன் என்ற பெயர் பெற்றான். நீ சம்மதித்தால் நான் அவனுக்கு கட்டளை இடுகிறேன் உடன் அந்த மகரிஷி இங்கு தோன்றி அம்பிகை, அம்பாலிகைக்கு புத்திர பாக்கியம் அளிப்பான்' என்றாள்.
10 - வியாசர் வந்தார்
பீஷ்மரும்..குலத்துக்கு அனுகூலம் என்பதாலும், தர்மசாத்திரத்திற்கு இதனால் கேடில்லை என்பதாலும். சத்யவதி கூறியதற்கு தடையேதும் சொல்லவில்லை. உடனே சத்யவதி வியாசரை நினைக்க மகரிஷி தாய் முன்னே தோன்றினார்.
அன்னையே..என்னை அழைத்தது ஏன்? என அவர் வினவ. சத்யவதியும். 'தவத்தோனே நீ எனக்கு மூத்த மகனாய் உண்டாக்கப்பட்டிருக்கிறாய். விசித்திர வீரியன் எனது இளைய மகன். பீஷ்மரும் உனக்கு அண்ணனாவார். பீஷ்மர். குல சந்ததி விருத்திக்கு. அவரது பிரமசரிய விரதத்தால் உதவ முடியாதவராக இருக்கிறார். ஆகவே நீ என் கோரிக்கையை ஏற்று. உன் இளைய சகோதரனின் மனைவி யர்தேவமகளிர் போன்றவர்கள். அவர்களிடம் நீ சந்ததியை உருவாக்க வேண்டும் என்றாள்.
அதற்கு வியாசர், தாயே!. புத்திரதானத்தை சாத்திரங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் நான் சந்ததியைத் தர வேண்டுமென்றால். அம்மகளிர் இருவரும் என் விகாரத் தோற்றத்தைக் கண்டு. அருவருப்புக் கொள்ளக்கூடாது. என் உடலிலிருந்து வீசும் துர்நாற்றத்தைப் பொருட்படுத்தக் கூடாது. அப்படி அம்பிகை என்னுடன் கூடுவாளாயின். அவளுக்குப் பிறக்கும் மகன். நூறு மகன்களைப் பெறுவான்' என்று கூறினார்.
சத்யவதி, அம்பிகையை அழைத்து நீ ஒரு மகானுடன் கூடிப் புத்திரனைப் பெற வேண்டும். இது அரச தர்மம்தான். மறுக்காதே என்றாள்.அம்பிகையும் நாட்டின் நலன் கருதி. இதற்கு சம்மதித்தாள். அன்றிரவு. வியாசர் அம்பிகையின் அறையில் நுழைந்தார். அவரது, செம்பட்டையான சடை முடி, விகாரமான தோற்றம், நாற்றம். எல்லாம் பார்த்து. அம்பிகை கண்களை மூடிக்கொண்டாள். அச்சம் காரணமாக கண்களைத் திறக்கவே இல்லை. வியாசர் அம்பிகையுடன் கலந்தார்.
பின் தாயிடம் வந்தவர் 'தாயே! வீரமிக்க மகன் பிறப்பான். ஆனால். அம்பிகை கண்களை மூடிக்கொண்டிருந்த படியால், பிறக்கும் மகன் குருடனாய் இருப்பான் என்றார். மகனே, குரு வம்சத்தில் குருடனாக இருப்பவன் அரசாள தகுதியற்றவன். அதனால் சிறந்த மகனை அம்பாலிகையுடன் கூடி பெற்றுத்தர வேண்டும் என்றாள். சத்யவதி.
வியாசர் கூறியபடி..அம்பிகைக்கு ஒரு குருட்டுக் குழந்தை பிறந்தது. அதுவே..'திருதிராட்டினன்'. பின்..வியாசரை அழைத்தாள் சத்யவதி.வியாசரும் அம்பாலிகையுடன் சேர்ந்தார். ஆனால் அம்பாலிகை வியாசரின் கோரத்தோற்றம் கண்டு பயந்து..உடல் வெளுத்தாள். உடன் வியாசர்.'.உனக்குப் பிறக்கும் மகனும் வெண்மை நிறத்துடன் இருப்பான். பாண்டு அவன் பெயர். அவனுக்கு 5 பிள்ளைகள் பிறப்பர்' என்றார். அம்பிகையும் அதுபோல மகனை பெற்றெடுத்தாள்.
இரு குழந்தைகளும். குறைபாடுடன் இருந்ததால். 'அம்பிகைக்கு இன்னொரு மகனைத் தர வேண்டும்' என சத்யவதி வேண்டினாள். ஆனால் அம்பிகை அவருடன் மீண்டும் சேர மனமில்லாது ஒரு பணிப்பெண்ணை அனுப்பினாள். பணிப்பெண்ணும் வியாசரும். மன மகிழ்சியுடன் கூடினர். பின் வியாசர். 'பணிப்பெண்ணின் அடிமைத் தன்மை நீங்கியது என்றும், அவளுக்கு பிறக்கும் குழந்தை. சிறந்த ஞானியாய் விளங்குவான் என்றும் கூறி. அவன் பெயர் விதுரன் என்று சொல்லி மறைந்தார்.
வியாசர் மூலமாக..அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகியோருக்கு..திருதிராட்டினன், பாண்டு, விதுரன் ஆகியோர் பிறந்தனர்.
11 - சகோதரர்கள் திருமணம்
திருதராட்டிரன், பாண்டு, விதுரர் மூவரையும். பீஷ்மர் தந்தை போல் இருந்து கவனித்துக் கொண்டார். போர் பயிற்சிகளையும்,சாத்திரக் கல்வியையும் அளித்தார். அரசு காரியங்களை பீஷ்மரே கவனித்துக் கொண்டதால். நாட்டில் நல்லாட்சியும், அமைதியும் நிலவியது.
மைந்தர்கள் மூவரும் மணப்பருவம் அடைய பீஷ்மர் திருதராட்டினனுக்கு காந்நார நாட்டு மன்னன் சுபவனுடைய மகளான காந்தாரியை மணமுடித்து வைத்தார். கணவன் குருடனாக இருந்ததால், காந்தாரியும்...வாழ்நாள் முழுவதும் கண்களை துணியால் கட்டிக்கொண்டு தானும் குருடு போலவே இருந்தாள். (காந்தாரியின் இவ்விரதம்...பீஷ்மரின் விரதம் போன்றது). காந்தாரியின் பத்து சகோதரிகளும் திருதராட்டிரனை மணந்துக் கொண்டனர். கௌரவ வம்ச அழிவுக்குக் காரணமான சகுனி. காந்தாரியின் சகோதரன் ஆவான்.
யது வம்சத்தில் சூரசேனன் என்னும் மன்னன் இருந்தான். அவனுக்கு பிரிதா, என்ற மகளும், வசுதேவன் என்னும் மகனும் பிறந்தனர். (இந்த வசுதேவனே...கிருஷ்ணனின் தந்தை ஆகும்) சூரசேனன் தன் மகளை குந்திராஜனுக்கு, வளர்ப்பு மகனாகக் கொடுத்தான். இதனால் பிரிதாவிற்கு. குந்தி என்ற பெயர் உண்டானது. ஒரு சமயம்....மகரிஷி துர்வாசருக்கு...குந்தி பணிவிடை செய்ய...அதனால் மனம் மகிழ்ந்த ரிஷி..அவளுக்கு ஒரு மந்திரத்தை அருளினார். அதை உச்சரித்தால்...வேண்டிய தெய்வம் தோன்றி அருள் பாலிக்கும் என்றார்.
மந்திரத்தை சோதிக்க எண்ணிய குந்தி...ஒருநாள் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை ஓத...சூரியனும் தோன்றி..அவளுக்கு மகப்பேறு அளித்தான். இந் நிகழ்ச்சிக்குப்பின் அஞ்சி அக்குழந்தையை..ஒரு பெட்டியில் வைத்து கங்கை ஆற்றில் விட்டு விட்டாள் குந்தி. பின் சூரிய பகவான் அருளால் மீண்டும் கன்னியானாள். இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது.. ஆற்றில் விடப்பட்ட குழந்தையே பின்னர் கர்ணன் என புகழப்பட்டவன்.
கண்பார்வை இல்லாததால்..திருதராட்டிரன் அரசாளும் தகுதியை இழந்தான். பின் பீஷ்மர் பாண்டுவை அரியணையில் அமர்த்தி. அவனுக்கு முடி சூட்னார். திருதிராட்டிரன் பெயரளவில் மன்னனாய் இருந்தான். பாண்டுவிற்கு...மணம் முடித்து வைக்க நினைத்தார் பீஷ்மர். குந்தியின் சுயம்வரத்தில்..குந்தி பாண்டுவிற்கு மாலை சூட்டினாள்.
சில காலத்திற்குப் பிறகு. மந்திர நாட்டு மன்னன் மகளும், சல்லியனின் தங்கையுமான மாத்ரி என்பவள் பாண்டுவிற்கு இரண்டாம் மனைவி ஆனாள். விதுரர். தேவகன் என்னும் மன்னனின் மகளை மணம் புரிந்தார். இவ்வாறு..மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் நிறைவேறியது.
12 - பாண்டவர்..கௌரவர் பிறப்பு
அரியணை ஏறிய பாண்டு அஸ்தினாபுரத்திற்கு அடங்கா மன்னர்களை அடக்கி அவர்களை கப்பம் கட்ட வைத்தான். நாட்டில் நல்லாட்சி செய்தான். பாண்டுவின் செயல்களை மக்கள் பாராட்ட பீஷ்மரும் மகிழ்ந்தார். ஒருநாள் வேட்டையாட பாண்டு தன் மனைவியர். பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்றான். அங்கு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த இரு மான்கள் மீது சற்றும் யோசனையின்றி அம்பு செலுத்தினான். ஆண்மானாக இருந்த கிந்தமர் என்னும் முனிவர் பாண்டுவிற்கு இல்லற ”இன்பத்தை விரும்பிப் பாண்டு மனைவியுடன் கூடும் போது இறப்பான்" என சாபமிட்டார். இதனால்..மகப்பேறு இல்லாமல் போகுமே என பாண்டு கவலையுற்றான்.
மன்னனின் கலக்கம் கண்ட குந்தி..தனது இளமைப்பருவத்தில்..துர்வாசர் அருளிய மந்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டாள். அதைக் கேட்டு பாண்டு மகிழ்ந்தான். பின் குந்தி, தர்மதேவதையை எண்ணி மந்திரத்தை ஓத யுதிஷ்டிரனை (தருமரை) பெற்றாள். வாயு பகவான் அருளால் பீமன் பிறந்தான்..தேவேந்திரன் அருளால் அர்ச்சுனன் பிறந்தான்.
பாண்டுவின் விருப்பப்படி. மாத்ரிக்கு மந்திரத்தை உபதேசிக்க மாத்ரியும் அம்மந்திரத்தை. இரட்டையர்களான அசுவனி தேவர்களை எண்ணி ஜபித்தாள். அதனால் நகுலன்,சகாதேவன்பிறந்தனர். ஐந்து அருமைப் புதல்வரை பாண்டு அடைந்தான்.
அஸ்தினாபுரத்தில் திருதிராட்டினன்; பாண்டு அடைந்த சாபத்தை எண்ணி. அவனுக்கு மகப்பேறு இல்லை என மகிழ்வுடன் இருந்தான். நாடாளும் உரிமை தன் சந்ததிக்கே என்றிருந்தான். அப்போது பாண்டு மகப்பேறு அடைந்த விஷயத்தை அறிந்தான். அப்போது காந்தாரியும் கருத்தரித்திருந்தாள். குந்திக்கு குழந்தைகள் பெற்ற செய்தி அறிந்து. ஆத்திரத்தில் தன் வயிற்றில் அடித்துக் கொண்டாள். அதன் விளைவாக. மாமிச பிண்டம் வெளிப்பட்டது. வியாசர் அருளால்...அதிலிருந்து நாளொன்றுக்கு ஒருவர் வீதம் நூறு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நூற்றொருவரைப் பெற நூற்றொரு நாட்கள் ஆயிற்று. காட்டில் பீமன் பிறந்த அன்று அஸ்தினாபுரத்தில் துரியோதனன் பிறந்தான்.
துரியோதனன், பேராசையும். பிடிவாதமும் உடையவனாக வளர்ந்தான். அவனை அடுத்து பிறந்த துச்சாதனன் தீமையில் அண்னனை மிஞ்சினான். கடைசி தம்பியான விகர்ணன் தவிர அனைவரும் கொடியவர்களே. காட்டில் வாழ்ந்து வந்த பாண்டவர் ஐவரும்; ரிஷிகளிடம் கல்வி கற்று அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டனர்.
இந்நிலையில், ஒரு நாள் காமவயப்பட்டு. பாண்டு மாத்ரியை அணுகிய போது. பண்டைய சாபத்தால். உயிரிழந்தான். மாத்ரியும் உடன் அவனுடன் இறந்தால். குந்தியும் பாண்டவர்களும் பீஷ்மரிடம் வந்தனர். திருதிராட்டினனும். அன்புள்ளவன் போல நடந்துக் கொண்டான். சத்யவதியும், அம்பிகையும், அம்பாலிகையும் தவத்தை நாடிச் சென்றனர். குரு வம்சத்திற்குரிய மன்னனை நியமிக்கும் பொறுப்பு பீஷ்மரிடம் வந்தது.
13 - கர்ணன் முடி சூட்டப்பட்டான்
ஆரம்பத்தில் பாண்டவர்கள், கௌரவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தனர். பலப்பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர். துரியோதனன் எல்லாவற்றிலும் தானே முதலில் வர வேண்டும் என நினைத்தான். ஆனால் அர்ச்சுனனும், பீமனுமே சிறந்து காணப்பட்டனர். பீமனது ஆற்றல் துரியோதனனுக்கு. அச்சத்தையும். பொறாமையையும் கொடுத்தது. அதுவே காலப்போக்கில் பாண்டவர் அனைவரையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளியது. தானே அரசராக வேண்டும் என துரியோதனன் எண்ணினான். ஆனால்; யுதிஷ்டிரனே இளவரசுப் பதவிக்கு உரியவன் ஆனான். மனம் வெதும்பிய துரியோதனன் பாண்டவர்களை ஒழிக்க வழி தேடினான்.
ஒரு சமயம் ஆற்றங்கரையில் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது பீமனுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்தான் துரியோதனன். அதனால் மயக்க முற்றான் பீமன். துரியோதனன் உடனே அவன் கை, கால்களைக் கட்டி ஆற்றில் எறிந்தான். விளையாட்டு முடிந்து திரும்பியதில் பீமன் இல்லாது கண்டு குந்தி கவலையுற்றாள். துரியோதனன் மீது சந்தேகப்பட்டவள் விதுரரிடம் அதை தெரிவித்தாள். சந்தேகத்தை வெளிக்காட்டவேண்டாம் என்றும். தெரிந்தால் பல இன்னல்கள் விளையும் என விதுரர் எச்சரித்தார்.
ஆற்றில் தூக்கி எறியப்பட்ட பீமன் மீது பல விஷப்பாம்புகள் ஏறி கடித்தன. விஷம். விஷத்தை முறித்தது. பீமன் எழுந்தான். பாம்புகளை உதறித் தள்ளினான். பீமனின் ஆற்றலைக் கண்ட வாசுகி. அவனுக்கு அமிழ்தத்தை அளித்தது. புதுப்பொலிவுடன் பீமன் வீடு திரும்பினான்.
பீஷ்மர் அனைவருக்கும் விற்பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். கிருபாசாரியாரும், துரோணாசாரியாரும். அப்பொறுப்பை ஏற்றனர். அனைவரும் வில்வித்தையில் வீரர் ஆயினர். ஆயினும் அர்ச்சுனன் தலை சிறந்து விளங்கினான். ஒரு மரம் அடர்ந்த கிளைகள். அவற்றின் ஒன்றில் ஒரு குருவி அதைக் குறி வைத்து அம்பு எய்த வேண்டும். இச் சோதனையில் சீடர்கள். மரம் தெரிகிறது. கிளை தெரிகிறது. இலை தெரிகிறது என்றனர். ஆனால் அர்ச்சுனன் மட்டும் குருவி தெரிகிறது என்றான். அதை நோக்கி அம்பெய்தினான். அர்ச்சுனனின் அறிவுக் கூர்மையை உணர்ந்த ஆசாரியார் அவனுக்கு வில் வித்தையில் எல்லா நுட்பங்களையும் கற்றுத் தந்தார்.
குந்திக்கு சூரியன் அருளால் பிறந்த குழந்தையை பெட்டியில் வைத்து கங்கையில் இட்டாள் அல்லவா? அந்த பெட்டியை. திருதராட்டிரனின் தேர்ப்பாகன் கண்டெடுத்தான். மகப்பேறற்ற அவன்..அக்குழந்தையை எடுத்து வளர்த்தான். அவனே கர்ணனாவான். கௌரவர், பாண்டவருடன் சேர்ந்து வில்வித்தையைக் கற்றான் கர்ணன். அர்ச்சுனனுக்கு சமமாக அவன் திகழ்ந்ததால் துரியோதனனுக்கு அவனிடம் நட்பு ஏற்பட்டது.
ஒரு சமயம் போட்டிகள் நடைப்பெற்றன. போட்டியைக்காண அனைவரும் வந்திருந்தனர். துரோணரின் கட்டளைப்படி பீமனும், துரியோதனனும் கதை யுத்தத்தில் ஈடுபட்டனர். போட்டி நீண்ட நேரம் நடைப் பெற்ற படியால். கடைசியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். விளையாட்டு. வினையாவதை உணர்ந்த துரோணர் போட்டியை நிறுத்தினார்.
அடுத்து. விற்போட்டி. அர்ச்சுனன் தன் திறமையைக் காட்டினான். உடன் கர்ணன். அவனை தன்னுடன் போட்டியிட அழைத்தான். ஆனால் கிருபாசாரியார். கர்ணனை அவமானப்படுத்தும் வகையில். 'தேர்ப்பாகன் மகன் அரசகுமாரனான அர்ச்சுனனுடன் போரிட தகுதியற்றவன் என்றார். பிறப்பால் தான் இழிந்தவன் என்ற பேச்ச்க் கேட்டு கர்ணன் நாணி தலை குனிந்தான். நண்பனுக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்க விரும்பிய துரியோதனன் அங்கேயே கர்ணனை அங்க நாட்டுக்கு அதிபதியாக முடிசூட்டினான்.
14- துரோணர் கேட்ட குருதட்சணை
துரியோதனின் அன்பைக் கண்டு. கர்ணன் மகிழ்ந்தான். இனி எப்போதும் துரியோதனனை விட்டுப் பிரிவதில்லை என விரதம் மேற்கொண்டான். கர்ணன் தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்று அறிந்த பீமன் அர்ச்சுனனுடன் போட்டியிட உனக்கு என்ன தகுதி இருக்கிறது' என ஏசினான்.
உடன் கோபம் அடைந்த துரியோதனன் பீமனை நோக்கி பிறப்புப் பற்றி பேசுகிறாயா? நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது. துரோணர், கிருபர் ஆகியோர் பிறப்பு பற்றி யாராவது ஆராய்வர்களா? பீமா..உன் தந்தையின் பிறப்பையும், என் தந்தையின் பிறப்பையும் எண்ணிப்பார். பிறப்பில் பெருமை இல்லை செய்யும் தொழிலில் தான் இருக்கிறது. உண்மையில் அர்ச்சுனனிடம் வீரம் இருக்குமேயானால் கர்ணனிடம் மோதி பார்க்கட்டும். என்றான். ஆனால் போட்டி தொடரவில்லை.
பயிற்சியும்,போட்டியும் முடிந்தபின். குருவான துரோணருக்கு. அரசகுமாரர்கள் குருதட்சணை தர விரும்பினர். ஆனால் துரோணர் எதிர்ப்பார்த்த தட்சணை வேறு. பழம் பகை ஒன்றை தீர்த்துக் கொள்ள விரும்பினார்.
அவரது இளமைக்காலத்தில் அவரது தந்தையான பரத்துவாச முனிவரிடம் பல விதக் கலைகளைக் கற்று வந்தார். அந்த சமயம் பாஞ்சால நாட்டு மன்னன் புருஷதனின் மகன் துருபதனும் பரத்துவாசரிடம் பயின்று வந்தான். நாள் ஆக. ஆக இருவரின் நட்பும் நெருக்கமாக. தான் மன்னனாக ஆனதும் நாட்டில் பாதியை துரோணருக்கு கொடுப்பதாக. துருபதன் வாக்களித்தான்.
பின் துருபதன் மன்னனாக ஆனான். அந்த சமயம் துரோணர் வறுமையில் வாடினார். துருபதனைக் காண அவர் சென்றபோது துருபதன் அவரை அலட்சியப் படுத்தினான். அரசனுக்கும், ஆண்டிக்கும் நட்பா என்றான். துரோணரை அவமானப்படுத்தினான். துரோணர் அவனை பழிவாங்க காத்திருந்தார்.
இப்போது அதற்கான நேரம் வந்ததாக எண்ணினார். தன் மாணவர்களை நோக்கி 'பாஞ்சால நாட்டு மன்னனை சிறை எடுத்து கொண்டு வருக. அதுவே நான் விரும்பும் குருதட்சணை' என்றார்.
துரியோதனன் படை கொண்டு துருபதனிடம் போரிட்டு தோற்று திரும்பினான். பின் அர்ச்சுனன் சென்று அவனை வென்று சிறைப் படுத்தி துரோணர் முன் நிறுத்தினான்.
துரோணர் துருபதனை நோக்கி' செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நின்றாயே இப்போது உன் நிலையைப் பார். செல்வம் நில்லாது. என உணர். ஆணவத்தை விட்டு அடக்கத்தை கடைப்பிடி. உன் நாட்டின் பாதியை எடுத்துக் கொண்டு மறு பாதியை உனக்குத் தருகிறேன். நம் நட்பைத் தொடரலாம்' என்று கூறி அவனை ஆரத் தழுவி நாட்டுக்கு அனுப்பினார்.
ஆனால் துருபதன் மனம் மாறவில்லை. துரோணரிடம் முன்னைவிட பல மடங்கு கோபம் கொண்டான். அவரைக் கொல்ல மாபெரும் வீரனை மகனாகப் பெற வேண்டும் என உறுதி பூண்டான். பெரும் வேள்வி செய்தான். அந்த வேள்வியிலிருந்து அவனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் தோன்றினர். எதிர்காலத்தில் துரோணரை அழிக்கப் பிறந்த அந்த மகன் பெயர் 'திட்டத்துய்மன்'. மகளின் பெயர் 'திரௌபதி'.
தன் மகளை பார்த்தனுக்கு மணம் முடிக்க சரியான காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தான் துருபதன்.
15 - துரியோதனின் சதி
திருதிராட்டிரன் பார்வையற்றவனாய் இருந்த காடணத்தினால் குருகுலத்து ஆட்சியை பாண்டுவே நடத்தி வந்தான் என்பதால். பாண்டு புத்திரர்களிடம் மக்களுக்கு நாட்டம் அதிகம் இருந்தது. இச்சமயத்தில் அஸ்தினாபுரத்து அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டன. அரசகுமாரர்களில் யுதிஷ்டிரர் மூத்தவர் ஆனபடியால். இளவரசர் பட்டத்துக்கு அவரே உரியவர் ஆனார். பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர் யுதிஷ்டிரரை இளவரசர் ஆக்கினர்.
இவர் சத்தியத்திற்கும், பொறுமைக்கும். இருப்பிடமாக இருந்தார். அவரது தம்பிகளும் நாட்டின் எல்லை விரிவடைய உதவினர். பாண்டவர்கள் உயர்வு கண்டு துரியோதனன் மனம் புழுங்கினான். விரைவில் யுதிஷ்டிரர் நாட்டுக்கு மன்னன் ஆகிவிடுவாரோ என எண்னினான். தன் மனக்குமுறலை சகுனியிடமும், துச்சாதனனிடமும், கர்ணனிடமும் வெளிப்படுத்தினான். அதற்கு சகுனி, 'பாண்டவர்களை சூதில் வெல்லலாம்' என்றான். நீண்ட யோசனைக்குப் பிறகு..எப்படியாவது பாண்டவர்களை அஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்ற தீர்மானித்தனர்.
துரியோதனன் தன் தந்தையிடம் சென்று. 'தந்தையே. யுதிஷ்டிரனை. இளவரசனாக நியமித்து தவறு செய்து விட்டீர். அதனால் பாண்டவர் இப்போது ஆட்சியுரிமைக்கு முயல்கின்றனர். ஆகவே என்மீதும், தம்பியர் மீதும் உங்களுக்கு அக்கறை இருக்குமேயாயின், பாண்டவர்களை சிறிது காலமாவது வேறு இடம் செல்லக் கூறுங்கள்' என்றான்.
அவன் மேலும் கூறினான். 'கதா யுத்தத்தில் என்னை பீமன் தாக்கிய போதும், எங்கள் சார்பில் யாரும் பேசவில்லை. பாட்டனாரும், துரோணரும், கிருபரும் கூட மனம் மாறி பாண்டவர் பக்கம் போனாலும் போவார்கள். விதுரர். பாண்டவர் பக்கமே. இப்போதே. பாண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அதன் பின் மக்களை நம் பக்கம் திருப்பி நம் ஆட்சியை நிலை பெறச் செய்யலாம்' என்றான். மகனைப்பற்றி நன்கு அறிந்த திருதிராட்டிரன். அவனுக்கு பல நீதிகளைக் கூறி 'உனது துரோக எண்ணத்தை விட்டுவிடு' என்று அறிவுரை கூறினான்.
எந்த நீதியும். துரியோதனன் காதில் விழவில்லை. கடைசியில் மகன் மீது இருந்த பாசத்தால் பாண்டவர்களை வாரணாவதம் அனுப்ப ஒப்புக்கொண்டான். துரியோதனன் மூளை குறுக்கு வழியில் வேலை செய்ய ஆரம்பித்தது. அவன் நாட்டில் சிறந்த சிற்பியும். அமைச்சனும் ஆன புரோசனனைக் கொண்டு வாரணாவதத்தில் ரகசியமாக அரக்கு மாளிகை ஒன்றை அமைக்க தீர்மானித்தான்.
அது எளிதில் தீப்பற்றி எறியக்கூடியதாய் இருக்க வேண்டும். அதில் குந்தியையும்.பாண்டவர்களையும் தங்கச் செய்து. அவர்கள் தூங்கும் போது அம்மாளிகையை தீயிட்டு கொளுத்தி அவர்களை சாம்பலாக்க வேண்டும் என்று தீர்மானித்து, புரோசனனைக் கூப்பிட்டு வேண்டிய பொருள்களைக் கொடுத்து.. அரக்கு மாளிகை அமைக்க வாரணாவதம் அனுப்பினான்.
16- அரக்கு மாளிகை எரிந்தது
திருதராட்டிரன் யுதிஷ்டிரரை அழைத்து 'வாழ்வதற்கு ஏற்ற இடம் வாரணாவதம். நீ உன் தாய், தம்பிகளுடன் சென்று, சில காலம் தங்கி விடு' என்றார். புத்திசாலியான யுதிஷ்டிரருக்கு அவரது எண்ணம் புரிந்தது. பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரிடம் ஆசி பெற்று அவர்கள் செல்லலாயினர்.
பாண்டவர்களுடன் விதுரர். நெடுந்தூரம் சென்றார். துரியோதனின் நோக்கத்தை மறைமுகமாக 'காடு தீப் பற்றி எரியும் போது எலிகள் பூமிக்குள் உள்ள வளையில் புகுந்து தப்பிவிடும்" என்றார். இந்த எச்சரிக்கையை பாண்டவர்கள் புரிந்துக் கொண்டனர். பின் விதுரர் நகரம் திரும்பிவிட்டார்.
வாரணாவதத்து மக்கள் பாண்டவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். புரோசனன் அவர்களை அணுகி தான் அமைத்திருக்கும் அரக்கு மாளிகையில் தங்குமாறு வேண்டினான். பாண்டவர்கள் ஏதும் அறியாதவர்கள் போல அங்கு தங்கினர். அந்த மாளிகை அரக்கு, மெழுகு போன்ற பொருள்கள் கொண்டு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.
துரியோதனன் எண்னத்தைப் புரிந்துக்கொண்ட பீமன் 'இப்போதே அஸ்தினாபுரம் சென்று. துரியோதனனுடன் போர் புரிய வேண்டும் என துடித்தான். 'துரியோதனனின் சூழ்ச்சியை முறியடிப்போம் பொறுமையாய் இரு' என யுதிஷ்டிரர் கூறினார்.
பகலில் வேட்டையாடச் செல்வது போல மாளிகையைச் சுற்றி ரகசிய வழிகளை அடையாளம் கண்டுகொண்டார்கள் அவர்கள். விதுரர். பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு ஒருவனை அனுப்பினார். பகல் நேரத்தில். புரோசனனை அழைத்துக் கொண்டு. காட்டுக்கு அவர்கள் செல்லும் போது அந்த ஆள். மாளிகையிலிருந்து வெளியேற சுரங்கம் ஒன்றை அமைத்தான்.
குந்தியும்,பாண்டவர்களும் தூங்கும் போது இரவில் அரக்கு மாளிகையை தீயிட புரோசனன் எண்னினான். குந்தியைக் காண ஒரு வேட்டுவச்சி. தனது. ஐந்து மகன்களுடன் வந்தாள். அவர்களுடன் விருந்து உண்டு. அங்கேயே அன்றிரவு தங்கினாள் வேடுவச்சி.
பீமன் நள்ளிரவில் தாயையும், சகோதரர்களையும். சுரங்க வழியாக சென்றுவிடுமாறு கூறிவிட்டு. மாளிகையின் அனைத்து பகுதிகளிலும் தீ வைத்து விட்டு.. தப்பினான். பாண்டவர்கள் குந்தியுடன் சுரங்கம் வழியே வெளியேறி ஒரு காட்டை அடைந்தனர். விதுரரால் அனுப்பப்பட்ட ஒரு படகோட்டி அவர்கள் கங்கையைக் கடக்க உதவினான். பாண்டவர்கள் முன் பின் தெரியாத ஒரு நாட்டை அடைந்தனர்.
இதற்கிடையே அரக்கு மாளிகை எரிந்து ஏழு சடலங்களையும் கண்டவர்கள் குந்தி, பாண்டவர்கள், புரோசனன் ஆகியோர் இறந்தனர் என எண்ணினர். பீஷ்மரும் இது கேட்டு பெரிதும் துக்கம் அடைந்தார். திருதராட்டிரனும் துயருற்றவன் போல நடித்தான். பாண்டவர்களுக்கு ஈமச் சடங்குகளை செய்து முடித்தனர்.
17 - கடோத்கஜன் பிறந்தான்
வாராணாவதத்து மாளிகையிலிருந்து தப்பியவர்கள் காட்டில் அலைந்து திரிந்தனர். மேலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் குந்தி இருந்தாள். பீமன் அனைவருக்கும் தண்ணீர் கொண்டுவர தேடிச் சென்றான். அவன் தண்ணீரைக் கொண்டு வந்த போது தாயும் சகோதரர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் பீமன் அவர்களுக்கு காவல் காத்து விழித்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் தங்கியிருந்த காடு இடிம்பன் என்னும் அரக்கனுக்கு சொந்தமானதாகும். இடிம்பன் காட்டில் மனித வாடை வீசுவது அறிந்து. அவர்களைக் கொன்று தனக்கு உணவாக எடுத்து வரும்படி தன் தங்கை இடிம்பைக்கு கட்டளை இட்டான். அழகிய பெண் வேடம் போட்டு வந்த இடிம்பை அங்கு பீமனைக் கண்டு. அவன் மேல் காதல் கொண்டாள். பீமனோ தன் தாய் சகோதரர் அனுமதி இல்லாமல் அவளை மணக்க முடியாது என்றான்.
நேரமானபடியால் தங்கையைத் தேடி இடிம்பன் அங்கே வந்தான்.பீமனைக் கண்டதும் அவனுடன் கடுமையாக மோதினான். அதில் இடிம்பன் மாண்டான்.
இடிம்பி. பீமனுடன் சென்று குந்தியிடம் பீமன் மீது தனக்குள்ள காதலை தெரிவித்தாள். பின் குந்தி மற்ற சகோதரர்கள் சம்மதிக்க. பீமன் அவளை மணந்தான். அவர்களுக்கு கடோத்கஜன் என்ற மா வீரன் பிறந்தான். பின்னால் நடக்கும் பாரதப்போரில் இவனுக்கு பெரும் பங்கு உண்டு.
பின் பீமன் இடிம்பியிடம் தன்னைவிட்டு சிலகாலம் அவள் பிரிந்திருக்க வேண்டும் என்று கூற அவளும் அவ்வாறே மகனை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.
இந்நிலையில் அவர்கள் முன் வியாசர் ஒரு நாள் தோன்றி கஷ்டங்களை சிறிது காலம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவரையும் தவ வேடம் தாங்கிய பிராமணர்கள் போல ஏகசக்கர நகரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும். நல்ல காலம் பிறக்கும் என்றும் நல்லாசி கூறினார்.
பின் பாண்டவர்கள் அந்தணர் வேடம் தாங்கி ஒரு பிராமணர் வீட்டில் தங்கினர். பகலில் வெளியே சென்று பிட்சை ஏற்று கிடைத்ததை உண்டனர். ஆனால் அவர்கள் கோலத்தைக் கண்ட ஊரார் இவர்கள் ஏதோ காரணத்துக்காக இப்படி இருக்கிறார்கள் என அறிந்து தாராளமாகவே பிட்சை இட்டனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டில் ஒரு நாள். அழு குரல் கேட்க. அந்த ஊர் மக்கள் பகன் என்னும் அசுரனால் துன்புறுவதாகவும். அந்த ஊரில் ஒவ்வொருநாள் ஒரு வீட்டிலிருந்து உணவும் நரபலியும் கொடுக்க வேண்டும் என்றும் அறிந்தனர். அன்று அந்த வீட்டிலிருந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குந்தி வண்டியில் உணவுடன் பீமனை அனுப்புவதாகக் கூறி அவளை அனுப்பினாள். பீமன் சென்று. பகாசூரனை அழித்து வண்டியில் அவன் உடலைப் போட்டு ஊர்வலமாக வந்தான்.
எகசக்கர நகரம் பகாசூரனின் கொடுமையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
18 - திரௌபதியின் சுயம்வரம்
மாறு வேடத்துடன் ஏகசக்கர நகரத்தில் தங்கியிருந்த பாண்டவர்களுக்குப் பாஞ்சாலத்தில் நடைபெற உள்ள திரௌபதியின் சுயம்வரம் பற்றி செய்தி கிடைத்தது. உடன் அவர்கள் பாஞ்சால தலைநகரமான காம்பிலியாவிற்கு செல்ல நினைத்தனர். அப்போது அவர்கள் முன் வியாசர் தோன்றி 'உங்களுக்கு நல்ல காலம் வருகிறது. அந்த நகரத்திற்கு செல்லுங்கள்' என ஆசி கூறி சென்றார். குந்தியும் பாண்டவர்களும் பாஞ்சாலம் சென்று ஒரு குயவன் வீட்டில் தங்கினர்.
சுயம்வரத்தன்று. பல நாட்டு மன்னர்கள் வந்திருந்தனர். பாண்டவர்கள் அந்தணர்களுக்கான இடத்தில் தனித் தனியாக அமர்ந்தனர். கண்ணனும், பலராமனும் அவையில் இருந்தனர். திரௌபதி. மாலையுடன். தேவதை போல மண்டபத்திற்குள் வந்தாள். சுயம்வரம் பற்றி திட்டத்துய்மன் விளக்கினான்.
'அரசர்களே! இதோ வில்லும் அம்புகளும் உள்ளன. துவாரத்துடன் கூடிய சக்கரம் மேலே சுழன்றுக் கொண்டிருக்கிறது. அதற்கும் மேலே மீன் வடிவத்தில் ஒரு இலக்கு இருக்கிறது. அதன் நிழல் கீழே உள்ள தண்ணீரில் உள்ளது. இந்த நிழலைப் பார்த்தவாறு. மேலே உள்ள மீன் இலக்கை சுழலும் சக்கரத்தின் துவாரம் வழியே. அம்பை செலுத்தி வீழ்த்த வேண்டும். அப்படி வீழ்த்துவோர்க்கு திரௌபதி மாலையிடுவாள்' என்றான்.
பல அரசர்கள் முயன்று தோற்றனர். தோற்றவர் பட்டியலில். ஜராசந்தன், சிசுபாலன், சல்லியன், கர்ணன், துரியோதனன். ஆகியோர் அடங்குவர். மன்னர்கள் யாரும் வெற்றிப் பெறாததால் திட்டத்துய்மன் நிபந்தனையை தளர்த்தினான். 'போட்டியில் மன்னர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். துருபதன் உள்ளத்தில் அர்ச்சுனன் கலந்துக் கொள்ளமாட்டானா என்ற ஏக்கம் இருந்தது.(பாண்டவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பது அவன் நம்பிக்கை)
அப்போது அந்தணர் கூட்டத்திலிருந்து ஒரு அந்தணன் எழுந்து நின்றான். கண்ணன் உடன் அவன் அர்ச்சுனன் என்பதை தெரிந்து கொண்டார். அந்த வாலிபன் நேராக வந்து மீன் வடிவ இலக்கை வீழ்த்த திரௌபதி அவனுக்கு மாலையிட்டாள். திரௌபதியுடன் பாண்டவர்கள் வீடு திரும்பினர். தாங்கள் கொண்டுவந்த பிட்சைப் பற்றி வீட்டினுள் இருந்த குந்தியின் காதில் விழுமாறு கூறினர்.
குந்தியும் கொண்டுவந்ததை ஐவரும் பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்றாள். குந்தி வெளியே வந்து பார்த்த போதுதான் திரௌபதியைக் கண்டாள். மனக்குழப்பம் அடைந்தாள். யுடிஷ்டிரர்' அர்ச்சுனனே திரௌபதியை மணக்கட்டும்' என்றார். ஆனால் தாய் சொல்லை தட்டாத அர்ச்சுனன் 'திரௌபதி ஐவருக்கும் உரியவள்' என்றான். தாயின் சொல்லையும் ஊழ்வினையின் பயனையும் எண்ணி அனைவரும் இதற்கு உடன்பட குழப்பம் தீர்ந்தது.
19 - இந்திரபிரஸ்தம்
திரௌபதி விவகாரத்தில் பாண்டவர் குழப்பம் தீர்ந்தாலும் துருபதன் யாரோ ஒரு வாலிபன் பந்தயத்தில் வென்று. திரௌபதியை அழைத்துச் சென்றுவிட்டானே என கலக்கம் அடைந்து திட்டத்துய்மனை அவர்கள் பின்னே அவர்கள் யார் என அறிந்து வர அனுப்பினான். சுயம்வரத்தில் வென்றவன் அர்ச்சுனன் என்பதை அறிந்து மகிழ்ந்தவன் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்தான். ஆனாலும் ஐவரும் திரௌபதியை மணப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை.
இச்சிக்கலை தீர்க்க வியாசர் தோன்றி 'திரௌபதி ஐவரை மணத்தல் தெய்வக்கட்டளை. அவர்கள் ஐவரும் தெய்வாம்சம் கொண்டவர்கள். முற்பிறவியில் திரௌபதி. நல்ல கணவன் வேண்டும் என தவம் இருந்து சிவனை. ஐந்து முறை வேண்டினாள். அந்த வினைப்பயன் இப்பிறவியில் நிறைவேறுகிறது. இதனால் இவள் கற்புக்கு மாசு இல்லை. என துருபதனிடம் கூற. அவனும் சமாதானமடைந்தான்.
இதனிடையே..பாண்டவர் உயிருடன் இருப்பதை அஸ்தினாபுரத்தில் அனைவரும் அறிந்தனர். மேலும். அவர்கள் திரௌபதியை மணந்த செய்தியையும் கேட்டு. பொறாமை அடைந்தான் துரியோதனன். திருதிராட்டினனுக்கோ..இது ஒரு பேரிடியாய் இருந்தது.
பீஷ்மர், விதுரர்..கருத்துக்கு ஏற்ப..பாண்டவர்களுக்கு பாதி ராஜ்யம் அளிக்க திருதிராட்டினன் சம்மதித்தான். விதுரர்..பாண்டவர்களை அழைத்துவர பாஞ்சாலம் சென்றார்.
அஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்கள் பீஷ்மரையும் திருதிராட்டினனையும் வணங்கி ஆசி பெற்றனர். திருதிராட்டினன் யுதிஷ்டிரனுக்கு பாதி ராஜ்யம் அளித்து மன்னனாக முடி சூட்டினான். காண்டப்பிரஸ்தம். அவர்களுக்கு..ஒதுக்கப்பட்டது. பாகப்பிரிவினை சரியாக இல்லையெனினும் பாண்டவர் இதை ஏற்றனர்.
பாண்டவர்களும் கௌரவர்களும் ஒற்றுமையாக இருக்க திருதிராட்டினன் ஆசி கூறினான். காண்டப்பிரஸ்தம் அடைந்தனர் பாண்டவர்கள். தேவேந்திரன் கட்டளைப்படி விசுவகர்மா என்னும் தேவசிற்பி மிகச் சிறந்த ஒரு நகரத்தை இவர்களுக்கு உருவாக்கினான். அதுவே இந்திரபிரஸ்தம் எனப்பட்டது. பாண்டவர்கள்..இந்திரபிரஸ்தத்தில் இருந்து நாட்டை நன்கு ஆட்சிபுரிந்தனர். இதனிடையே நாரதர் திரௌபதி விஷயத்தில் பாண்டவர்களிடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தினார்.
பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருவர் என்ற முறையில் திரௌபதியுடன் வாழவேண்டும் அப்படியிருக்கும் போது நால்வரின் குறுக்கீடோ இன்னலோ இருக்கக்கூடாது. இந்த உடன்பாட்டை மீறுவோர் ஓராண்டு நாட்டைவிட்டு விலக வேண்டும் என்பதே அந்த உடன்பாடு.
20-அர்ச்சுனன்-சுபத்திரை திருமணம்
ஒரு சமயம் யுதிஷ்டிரரும், திரௌபதியும் ஒரு மண்டபத்தில் தனித்து இருந்த போது நள்ளிரவில் ஒரு அந்தணன் என் பசுக்களை யாரோ களவாடிவிட்டார்கள் 'என் கூவியவாறு அம்மண்டபம் நோக்கி ஒட அவனை தடுத்த அர்ச்சுனன் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் திருடர்களைப் பிடித்து பசுக்களை மீட்டு அந்தணனிடம் ஒப்படத்தான்.
யுதிஷ்டிரரும், திரௌபதியும் இருந்த மண்டபத்தருகே சென்றபின் உடன்படிக்கையை மீறிவிட்டதாக அர்ச்சுனன் எண்ணினான். யுதிஷ்டிரர் தடுத்தும் ஒரு ஆண்டு நாட்டைவிட்டு விலகி இருக்க தீர்மானித்தான். புண்ணியதலங்கள் பலவற்றிற்குச் சென்றான். தென்திசை வந்து கோதாவரியிலும், காவிரியிலும் புனித நீராடினான். பின், துவாரகை சென்று பிரபாசா என்னும் தலத்தை அடைந்தான். கிருஷ்ணரின் தங்கை சுபத்திரையை மணக்கும் ஆசை அவனுக்கு இருந்தது. அதற்கு பலராமன் சம்மதிக்காவிடினும். கண்ணன் உதவி புரிய முன் வந்தார்.
துறவிபோல அர்ச்சுனன் வேடம் பூண்டு வர பலராமன் துறவியை வணங்கி சுபத்திரையை அவருக்கு பணிவிடை செய்ய பணித்தான். வந்திருப்பது அர்ச்சுனன் என்பதை அறிந்த அவளும் அவன் மீது காதல் கொண்டாள். இதை அறிந்த பலராமர். அர்ச்சுனனுடன் போரிட முயல கண்ணன் பலராமன் சினத்தை தணித்தார். அர்ச்சுனன் சுபத்திரை திருமணம் இனிதே முடிய அர்ச்சுனன் இந்திரபிரஸ்தம் திரும்பினான்.
சில காலத்திற்குப்பின் சுபத்திரை அபிமன்யுவை பெற்றாள். திரௌபதி தன் ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து பிள்ளைகளைப் பெற்றாள்.
யமுனை நதிக்கரையில் காண்டவ வனம் ஒன்று இருந்தது. இந்த பயங்கர காட்டில் இரக்கமில்லா அரக்கர்களும் கொடிய விலங்குகளும், விஷப்பாம்புகளும் இருந்தன. அக்கினித்தேவன் அக்காட்டை அழிக்க நினைத்து தோற்றான். அவன் அர்ச்சுனனிடமும் கண்ணனிடம் வந்து முறையிட்டான். காட்டை அழிக்க தேவையான கருவிகளையும் அவர்களுக்கு அளித்தான். அர்ச்சுனனுக்கு நான்கு வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட தெய்வீக தேர் கிடைத்தது. அதில் வானரக் கொடி பறந்தது. மேலும் காண்டீபம் என்னும் புகழ் வாய்ந்த வில்லும் இரண்டு அம்பறாத்தூணிகளும் கிடைத்தன.
கண்ணனுக்கு சுதர்சனம் என்ற சக்கர ஆயுதமும் கௌமோதகி என்னும் கதாயுதமும் கிடைத்தன. இவற்றின் உதவியால் .காண்டவ வனம் தீப் பற்றி எரிந்தது.அக்காட்டில் இருந்த தீயவை அழிந்தன.அக்கினித்தேவன் மகிழ்ந்தான்.
(ஆதி பருவம் முற்றிற்று இனி சபாபருவம்)
21.ஜராசந்தன் மறைவு
காண்டவவனம் தீப்பற்றி எரிந்து சாம்பல் ஆனாலும் மயன் என்னும் அசுர சிற்பி மட்டும் தப்பிப்பிழைத்தான். அவன் அர்ச்சுனனுக்கு தகுந்த கைமாறு செய்ய விரும்பினான். அர்ச்சுனனும் கண்ணனும் செய்யும் உதவிக்கு கைமாற்றாக எதுவும் ஏற்பதில்லை என்றனர். மயன் யுதிஷ்டிரரை அணுகி "தான் ஒரு அசுர சிற்பி என்றும். தன்னால் உலகமே வியக்கும் ஒரு சபையை நிறுவ முடியும் என்றும் அதை இந்திரபிரஸ்தத்தில் அமைக்க அனுமதி தர வேண்டும் என்றும் வேண்டினான்.அனுமதி கிடைத்தது.
மயன் இமயமலைக்கு அப்பால் சென்று பொன்னையும், மணியையும் இரத்தினங்களையும் கொண்டு வந்து சபா மண்டபம் அமைத்தான். சுவர்களும், தூண்களும் தங்கத்தால் அமைக்கப்பட்டன. அவற்றுள் இரத்தினங்கள் பதிக்கப்பெற்றன. பளிங்குகற்களால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. தடாகங்களில் தங்கத்தாமரை மலர்கள் சுற்றிலும் செய்குன்றுகளும் நீர்வீழ்ச்சிகளும் காணப்பட்டன. தரை இருக்குமிடம், நீரிருக்குமிடம் போலவும் .நீர் இருக்குமிடம் தரை போலவும் அமைத்திருந்தான்.பார்த்தவர்கள் அனைவரும் வியந்தனர்.
அம்மண்டபத்தை பார்வையிட்ட நாரதர் "மூவுலகிலும் இதற்கு இணையான மண்டபத்தை பார்க்கவில்லை" என்றார். மேலும் யுத்ஷ்டிரரிடம் இராஜசூய யாகம் செய்யச்சொன்னார். இராஜசூய யாகம் செய்ய சில தகுதிகள் வேண்டும் பிறநாட்டு மன்னர் அந்த மன்னனின் தலைமையை ஏற்கவேண்டும். அதனால் கிருஷ்ணன் யுதிஷ்டிரரிடம் "மகத நாட்டு மன்னன் ஜராசந்தன். உன் தலைமையை ஏற்கமாட்டான். அவன் ஏற்கனவே 86 நாட்டு அரசர்களை வென்று சிறைப்படுத்தியிருக்கிறான். மேலும் 14 பேரை சிறைப்படுத்தி அவர்களைக்கொல்வதே அவன் திட்டம். நீ அவனை வென்றால் சக்கரவர்த்தி ஆகலாம் " என்றார்.
மாயாவியான ஜராசந்தனைக் கொல்ல பீமனை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இரு வீரர்களும் கடுமையாக மோதினர். பீமன் ஜராசந்தனை .பனைமட்டையை கிழித்தெறிவதுபோல இறண்டாக கிழித்தெறிந்தான். மாயக்காரனான ஜராசந்தன் மீண்டும் உயிர் பெற்று போர்புரிந்தான். பீமன் களைப்புற்று என்ன செய்வது என அறியாது திகைத்தான். கண்ணன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து கால்மாடு தலைமாடாகப் போடுமாறு செய்கை செய்தார். (மாடு- பக்கம் ) .பீமனும் அவ்வாறே செய்ய ஜராசந்தன் அழிந்தான். சிறையில் இருந்த மன்னர்கள் விடுதலை அடைந்தனர். யுதிஷ்டிரர் மன்னாதி மன்னனாக ஆனான்.
22 - ராஜசூயயாகம்
சக்கரவர்த்தியாகிவிட்ட யுதிஷ்டிரர் தலைமையை எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஏற்றனர். தம்பியர் நால்வரும் நான்கு திக்குகளிலும் சென்று மன்னர்களின் நட்பைப் பெற்றனர். மாமுனிவர்களும் .பீஷ்மரும் துரோணரும், கௌரவரும், இந்திரபிரஸ்தம் வந்தனர். கண்ணபிரானிடம் வெறுப்பு கொண்டிருந்த சிசுபாலனும் வந்திருந்தான். இந்திரபிரஸ்தம் ஒரு சொர்க்கலோகம் போல திகழ்ந்தது.
நாரதர் சொன்னாற்போல ராஜசூயயாகம் இனிதே நடந்தது. துரியோதனன் மனதில் பொறாமைத் தீ வளர்ந்தது. வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது. பீஷ்மர் மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து கண்ணனுக்கு முதல் மரியாதை என்று தீர்மானிக்க. அதன்படி சகாதேவன் கண்ணனுக்கு பாத பூஜை செய்தான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன் தன் அதிருப்தியைக் காட்ட கண்ணனை பலவாறு இகழ்ந்தான். ஆத்திரத்தில் பீஷ்மரையும், யுதிஷ்டிரரையும் புண்படுத்தினான். ஆடு மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் இடையன் என்றும் கண்ணனை ஏசினான். கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்றான்.(கங்கையில் பலரும் நீராடுவதால் கங்கையை பொதுமகள் என்று ஏசினான்)
குந்தியின் மந்திர சக்தியால் யமதர்மனை நினைத்து பெற்ற மகன் யுதிஷ்டிரர் என்பதால் அவரும் சிசுபாலனின் தாக்குதலுக்கு ஆளானார். சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனைக் கொல்லும் காலம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்து வீழ்த்தியது. அவன் மேனியிலிருந்து ஒரு ஒளி புறப்பட்டு கண்ணனின் பாதங்களில் வந்து சேர்ந்தது. சிசுபாலன் சாப விமோசனம் பெற்றான்.
23 - சகுனியும்...துரியோதனனும்..
ராஜசூயயாகம் முடிந்தபின் துரியோதனன் பொறாமையால் மனம் புழங்கினான். பாண்டவர் ஆட்சியிருக்கும் வரை என் ஆட்சியும் ஒரு ஆட்சியா? அர்ச்சுனனின் காண்டீபம் என்ற வில்லும், பீமனின் கதாயுதமும் என்னை இகழ்ச்சி ஆக்கிவிடும் போல இருக்கிறது. ராஜசூயயாகத்திற்கு எவ்வளவு மன்னர்கள் வந்தனர் எவ்வளவு பரிசுகளை கொண்டுவந்து கொட்டினார்கள் அந்த தர்மனிடம் அப்படி என்ன இருக்கிறது? என்று பொறாமைத் தீ கொழிந்துவிட்டு எரிய ஏங்கினான்.
பாண்டவர் வாழ்வை அழித்துவிட வேண்டும்..என தன் மாமனாகிய சகுனியை சரண் அடைந்தான்.
மாமனே! அவர்கள் செய்த யாகத்தை மறக்கமுடிய வில்லை அங்கு வந்த பொருட்குவியலைப் பற்றிக்கூட எனக்கு கவலையில்லை. ஆனால் அவ்வேள்வியில் என்னை கேலி செய்தனர். எள்ளி நகையாடினர் என்றெல்லாம் சொல்லி என் தந்தையை பொறாமை கொள்ளச் செய் என்றான்.
உடன் சகுனி 'நீ ஒப்பற்ற தெய்வமண்டபம் ஒன்று செய். அதன் அழகைக் காண பாண்டவரை அழைப்போம். மெல்லப் பேசிக்கொண்டே சூதாட்டம் ஆட தர்மனை சம்மதிக்க வைப்போம். என் சூதாட்டத்தின் திறமையை நீ அறிவாய். அதன் மூலம் அவர்களை உனக்கு அடிமை ஆக்குவேன்' என்றான். இருவரும் திருதிராட்டினனிடம் சென்று உரைத்தனர். ஆனால் அவன் சம்மதிக்கவில்லை.ஆனால் சகுனி சொல்கிறான்..
'உன் மகன் நன்கு சிந்திக்கிறான் ஆனால் பேசும்போதுதான் தடுமாறுகிறான். அவன் நீதியை இயல்பாகவே அறிந்துள்ளான். அரச நீதியில் தலை சிறந்து விளங்குகிறான். பிற மன்னர்களின் செல்வமும் புகழும் வளர்வதுதான் ஒரு மன்னனுக்கு ஆபத்து. அந்த பாண்டவர் வேள்வியில் நம்மை கேலி செய்தனர். மாதரும் நகைத்திட்டாள் சூரியன் இருக்கையில் மின்மினிப் பூச்சிகளைத் தொழுவது போல ஆயிரம் பலம் கொண்ட உன் மகன் இருக்கையில் அவனுக்கு வேள்வியில் முக்கியத்துவம் இல்லாமல் கண்ணனுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.'
இதைக் கேட்ட திருதிராட்டினன் "என் பிள்ளையை நாசம் செய்ய சகுனியே நீ பேயாய் வந்திருக்கிறாய்.சகோதரர்களிடையே பகை ஏன்? பாண்டவர்கள் இவன் செய்த பிழை எல்லாம் பொறுத்தனர். பொறுமையாக உள்ளனர். அவர்கள் இவனைப் பார்த்து சிரித்ததாக அற்பத்தனமாய் பேசுகிறாய் .துரியோதனன் தரை எது தண்ணீர் எது என தடுமாறியது கண்டு நங்கை நகைத்தாள் இது தவறா? தவறி விழுபவரைக் கண்டு நகைப்பது மனிதர்கள் மரபல்லவா? என்றான்.
துரியோதனன் தன் தந்தையின் பேச்சைக் கேட்டு கடும் சினம் கொண்டான். இறுதியாக தந்தையிடம் 'நான் வாதாட விரும்பவில்லை. நீ ஒரு வார்த்தை சொல்லி பாண்டவர்களை இங்கு வரவழைப்பாயாக ஒரு சூதாட்டத்தில் அவர்கள் சொத்துக்களை நாம் கவர்ந்து விடலாம் இதுவே என் இறுதி முடிவு' என்றிட்டான்.
24- தருமபுத்திரர் முடிவு
துரியோதனன் பேச்சைக்கேட்டு திருதிராட்டினன் துயரத்துடன் சொன்னான் 'மகனே உன் செயலை வீரர்கள் ஒரு போதும் செய்யார். உலகில் பிறர் செல்வத்தைக்கவர விரும்புவோர் பதரினும் பதராவர்.வஞ்சனையால் பிறர் பொருளைக் கவரக்கூடாது. இதெல்லாம் உனக்குத் தெரியவில்லை. பாண்டவரும் எனக்கு உயிராவர். உன் எண்ணத்தை மாற்றிக்கொள்'
ஆனால் .துரியோதனன் மனம் மாறவில்லை..'வெற்றிதான் என் குறிக்கோள் அது வரும் வழி நல்வழியா...தீய வழியா என்ற கவலை எனக்கில்லை.என் மாமன் சகுனி சூதாட்டத்தில் நாட்டைக் கவர்ந்து தருவான் தந்தையே நீ அவர்களை இங்கு அழைக்கவில்லையெனில் என் உயிரை இங்கேயே போக்கிக்கொள்வேன்'என்றான்.
'விதி மகனே விதி இதைத்தவிர வேறு என்ன சொல்ல உன் கொள்கைப்படியே பாண்டவர்களை அழைக்கிறேன்' என்றான் திருதிராட்டினன். தந்தையின் அனுமதி கிடைத்ததும்...துரியோதனன் ஒரு அற்புதமான மண்டபத்தை அமைத்தான். திருதிராட்டினன் விதுரரை அழைத்து 'நீ பாண்டவர்களை சந்தித்து .துரியோதனன் அமைத்திடும் மண்டபத்தைக் கண்டு களிக்க திரௌபதியுடன் வருமாறு நான் அழைத்ததாக கூறுவாயாக பேசும்போதே சகுனியின் திட்டத்தையும் குறிப்பால் உணர்த்துவாயாக' என்றான்.
விதுரரும் துயரத்துடன் இந்திரபிரஸ்தம் சென்று பாண்டவரை சந்தித்து 'அஸ்தினாபுரத்தில் துரியோதனன் அமைத்துள்ள மண்டபத்தைக் காண வருமாறு வேந்தன் அழைத்தான்.சகுனியின் யோசனைப்படி துரியோதனன் விருந்துக்கும் ஏற்பாடு செய்துள்ளான் விருந்துக்குப்பின் ..சூதாடும் எண்ணமும் உண்டு 'என்றார். இதைக்கேட்டு தருமர் மனம் கலங்கினார்.'துரியோதனன் நமக்கு நன்மை நினைப்பவன் இல்லை. முன்பு எங்களை கொல்லக் கருதினான். இப்போது சூதாட்டமா? இது தகாத செயலல்லவா? என்றார்.
துரியோதனனிடம் சூதாட்டத்தின் தீமைப் பற்றி எடுத்துக் கூறியும் அவன் மாறவில்லை. திருதிராட்டினனும் கூறினான் பயனில்லை என்றார் விதுரர். தருமரோ' தந்தை மண்டபம் காண அழைத்துள்ளார். சிறிய தந்தை நீங்கள் வந்து அழைத்துள்ளீர்கள். எது நேரிடினும் அங்கு செல்வதே முறையாகும்' என்றார்.
இதைக்கேட்ட பீமன் அர்ச்சுனனை நோக்கி ' அந்தத் தந்தையும் மகனும் செய்யும் சூழ்ச்சியை முறியடிப்போம் அழிவு காலம் வரும் வரை ஒரு சிறிய கிருமியைக் கூட உலகில் யாரும் அழிக்க முடியாது. இப்போது அவர்களின் அழியும் காலம் வந்துவிட்டது. எனவே அவர்களுடன் போரிடுவோம். அவர்கள் செய்யும் தீமையை எத்த்னைக் காலம்தான் பொறுப்பது? ' என்றான்.
விஜயனும் மற்ற தம்பிகளும் இது போலவே உரைக்க..தம்பியரின் மனநிலையை உணர்ந்த தருமர் புன்னகையுடன் 'முன்பு துரியோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் தீமையும்..நாளை நடக்க இருப்பதும் நான் அறிவேன் சங்கிலித் தொடர் போல விதியின் வழியே இது.நம்மால் ஆவது ஒன்றுமில்லை தந்தையின் கட்டளைப்படி இராமபிரான் காட்டுக்கு சென்றது போல நாமும் நம் தந்தையின் கட்டளைப்படி நடப்போம்' என்றார்.
25-சூதாட்டம் தொடங்கியது
தம்பிகள் கோபம் தணிந்து தருமரின் அறிவுரைப்படி அனைவரும் அஸ்தினாபுரம் அடைந்தனர். அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களைக் காண சந்திகள்,வீதிகள், சாலைகள் என எத்திசை நோக்கினும் மக்கள் சூழ்ந்தனர். அவர்கள் அரண்மனை அடைந்து திருதிராட்டினனையும், பீஷ்மரையும், கிருபாசாரியாரையும், துரோணாசாரியாரையும் அவர் மகன் அசுவத்தாமனனையும் கர்ணனையும், துரியோதனனையும் உள்ளன்போடு வாழ்த்தி வணங்கினர். மாயச் சகுனியை மகிழ்வுடன் தழுவினர். குந்தியும், திரௌபதியும் அனைவருடனும் அளவளாவினர்.
அவை கூடியது..அப்போது சகுனி தருமரை நோக்கி 'தருமரே உமது குலப்பெருமையை உயர்த்தியுள்ளீர் இப்போது சூதாட்டத்தில் உங்கள் ஆற்றலைக் காண்போமா?' என்றார். தருமரோ 'சதி செய்து என்னை சூதுக்கு அழைத்தீர் இதில் பெருமையுண்டா..? அறம் உண்டா? வீரம் உண்டா? எங்கள் நல்வாழ்வை நீ விரும்பவில்லை என நான் அறிவேன். இச்சூதாட்டம் மூலம் எங்களை அழிக்க நினைக்கிறாய்' என்றார்.
உடன் சகுனி சிரித்தான். 'உன்னை மாமன்னன் என்று அழைத்து விட்டேன். பண்டை மன்னர்கள் சூதாடவில்லையா அச்சம் கொள்ளாதே நீ சூதாட்டத்தில் வெல்வாய் வெற்றி பெறுவது உன் இயல்பு வா ஆடுவோம் 'என்றான். தருமர் பதிலுக்கு 'சான்றோர் சூதாட்டத்தை விஷம் என கண்டித்துள்ளனர் ஆதலின் இந்த சூதினை வேண்டேன் என்னை வஞ்சித்து என் செல்வத்தைக்கொள்வோர் எனக்கு துன்பம் தருபவர் அல்லர், நான்கு வேதங்களையே அழித்தவர் ஆவர் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் வேண்டாம் சூது' என்றார்.
மன்னர் பலர் கூடியுள்ள இம்மாபெரும் சபையில் மறுத்து பேசுதல் அழகோ வல்லவனே வெல்வான் அல்லாதவன் தோற்றிடுவான். வருவதானால் வா மனத்துணிவில்லையெனில் செல்'என்றான் சகுனி. விதியின் வலிமையை உணர்ந்த தருமர் 'மதியினும் விதி பெரிது. பிறர் செய்யும் கர்மப்பயனும் நம்மை வந்து அடைவதுண்டு. ஆகவே விதி இச்செயலுக்கு என்னை தூண்டுமானால் அதைத்தடுக்க என்னால் முடியுமா?'என்று சூதுக்கு இணங்கினார்.
சூதாட்டம் தொடங்கியது. தாயம் உருட்டப்பட்டது. விதுரரைப்போன்றோர் மௌனியானார். 'பந்தயம் என்ன?'என்றார் தருமர். 'அளவிலா செல்வம் என்னிடம் உண்டு. ஒரு மடங்கு நீ வைத்தால் ஒன்பது மடங்கு நான் வைப்பேன்'என்றான் துரியோதனன். 'ஒருவர் ஆடப் பணயம்' வேறொருவர் வைப்பதா 'என்றார் தருமர்.
'மாமன் ஆடப் பணயம் மருமகன் வைக்கக்கூடாதா ?இதில் என்னததவறு ?'என எதிவாதம் புரிந்தான் சகுனி. பரபரப்பான ஆட்டத்தில் படிப்படியாக ஏராளமான பொருட்களை இழந்தார் தருமர். மாடிழந்தார் மந்தை மந்தையாக ஆடிழந்தார்.. ஆளிழந்து விட்டார்.. நாடிழைக்கவில்லை தருமா.நாட்டை வைத்து ஆடு. என்று தூண்டினான் சகுனி
26.- விதுரரின் அறிவுரை
சூதாட்டத்தை நிறுத்த விதுரர் எவ்வளவோ முயன்றார். 'சந்தர குலத்திலே பிறந்த நாமா இந்த தீய செயலைச் செய்வது. இன்று பாண்டவர் பொறுமை காக்கின்றனர். குலம் அழிவெய்த விதி துரியோதனனைப் படைத்துள்ளது. குலம் முழுவதும் துரியோதனன் என்னும் மூடனுக்காக அழிய வேண்டுமா? என்றவர் திருதிராட்டிரனை நோக்கி 'சூதாட்டத்தில் துரியோதனன் வெற்றிக்கண்டு மகிழ்கிறாய். கற்ற கல்வியும் கேள்வியும் கடலிற் காயம் கரைத்தது போல் ஆயிற்றே வீட்டுக்குள்ளேயே நரியையும் விஷப்பாம்பையும் பிள்ளைகளாய் வளர்த்திட்டோம். சாகும் வயதில் தம்பி மக்கள் பொருளை விரும்புகிறாயா 'நாட்டைத் தா' எனக் கேட்டிருந்தால் தந்திருப்பார்களே அப்படியிருக்க சூதாட்டத்தை நிறுத்துவாயாக'என வேண்டினார்.
விதுரரின் கூற்றைக்கேட்டு துரியோதனன் நெஞ்சம் கொதித்தது. கண்களில் தீப்பொறி புருவங்கள் துடித்தன. சினத்தின் விளிம்புக்கே சென்றான். நன்றி கெட்ட விதுரா. .நாணயமற்ற விதுரா. தின்ற உப்பினுக்கே. நாசம் தேடும் விதுரா.. எங்கள் அழிவைத்தேடும் நீ இன்பம் எங்கு உண்டோ அங்கே செல்'என்று விதுரரை ஏசினான்.
ஆனால் விதுரரோ சிறிதும் குழம்பாமல் தெளிவாகக்கூறினார் 'நான் எங்கு சென்றாலென்ன அழிவுப்பாதையிலிருந்து உன்னைத்தடுக்கப்பார்த்தேன். ஆனால் பொல்லாத விதி என்னை வென்றுவிட்டது. என் அறிவுரை எடுபடாது உன்னிடம்..நெடும் பச்சை மரம் போல வளர்ந்து விட்டாய். இங்கு யாரும் உனக்கு அறிவுரை கூறார். உன் அவையில் நல்லோர் இருப்பது தகாது. உன் இஷ்டம் போல் செய்'என்று கூறி இருக்கையில் அமர்ந்தார்.
இது வேளை சகுனி .'நீ இழப்பதெல்லாம் மீண்டும் வரும். காயுருட்டலாமா, ?என்றார். தருமர் நிலை தடுமாற..'நாட்டை இழந்த நீ இனி என்ன இருக்கிறது என எண்ணாதே. உன் தம்பிகளை பணயமாக வைத்து இழந்தது அனைத்தையும் மீட்டுக்கொள் என்றான் சகுனி. அவையோர் கண்ணீர்விட்டனர். கர்ணன் மகிழ்ந்தான், துரியோதனனோ..'தம்பிமாரைவைத்து நீ ஆடி வென்றிடின். இழந்த பொருட்களை மீண்டுமளிப்போம். 'என்றான்.
.பீமன் அடிபட்ட நாகம் போலக் காணப்பட்டான். பார்த்தன் முகக்களையிழந்தான்.நகுலனோ நினைவிழந்தான். முற்றுணர்ந்த சகாதேவன் ஊமையானான். பீஷ்மர் நெருப்பில் வீ ழ்ந்தாற்போல்துடித்தார். விதுரர் பெரும் துன்பமுற்றார்.
27-சூதாட்டத்தில் அனைவரையும் இழத்தல்
ஆட்டம் தொடர்ந்தது.சகாதேவனைப் பணயம் வைத்தார் தருமர். இழந்தார். பின் நகுலனையும் இழந்தார். இருவரையும் இழந்ததும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல 'நகுலனும். சகாதேவனும். வேறொரு தாய்க்கு பிறந்தவர்கள் என்பதால். அவர்களை வைத்து ஆடினாய் போலும். ஏன் பார்த்தனையும், பீமனையும் வைத்து ஆடவில்லை?' என சகுனி தருமனைத் தூண்டினான்.
'சூதாட்டத்தில் நாட்டை இழந்தாலும். எங்கள் ஒற்றுமையை யாரும் குலைக்க முடியாது' என்ற தருமர். அடுத்தடுத்து அர்ச்சுனனையும், பீமனையும் இழந்தார். துரியோதனனோ மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான். சகுனி தருமரை நோக்கி. 'வேறென்ன பந்தயப் பொருள்?' எனக் கேட்க. தருமரோ தம்மைத் தாம் பணயம் என்றார். மீண்டும் சகுனி வென்றார்.
துரியோதனனின் மகிழ்ச்சியைக் கண்ட சகுனி தந்திரத்துடன். அவனிடம்..'துரியோதனா. புண்ணை கோல் கொண்டு குத்தாதே. அவர்களே நொந்துப் போய் உள்ளனர். இவர்கள் உன் சகோதரர்கள். அவர்கள் நாணும் படி பேச வேண்டாம். இவர்கள் வெற்றி பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது. கடைசியாக ஒரு பொருள் இவர்களிடம் இருக்கிறது. அதை வைத்து ஆடினால். தோற்ற பொருள் அனைத்தும் மீண்டும் பெறலாம். 'என திரௌபதியை வைத்து ஆட தருமரைத் தூண்டினார்.
துரியோதனனும். 'இந்த யோசனை அருமை' என மகிழ்ந்தான். சிறிதும்..சிந்தனையின்றித் திரௌபதியை அந்த கொடியவர் அவைக்களத்தில் பணயமாக வைத்தார் தருமர். திரௌபதியும் சூதில் வீழ்ந்தாள். கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஆணவத்துடன் துரியோதனன் விதுரரைப் பார்த்து 'திரௌபதியிடம் சென்று நம் மனையில் பணி புரிய அழைத்து வருக' என கட்டளையிட்டான்.
விதுரர் சினம் கொண்டு 'மூடனே! பாண்டவர் நாளை பழி தீர்த்துடுவர். தரை மீது மாண்டு நீ கிடப்பாய். தனக்குத்தானே அழிவைத் தேடுவதுதான் ஆண்மையா? நொந்தவர் மனம் வருந்த சொல்லும் சொல். அவர் நெஞ்சில் நீண்ட நாட்கள் அகலாது. அது நம்மை நரகத்தில் சேர்த்துவிடும். உன் நன்மைக்கே இதைச் சொல்கிறேன்' என்றார். 'கௌரவர்களே! பேராசை கொண்டு பிழைகள் பல செய்கிறீர். பாண்டவர் பாதம் பணிந்து. அவர்கள் இழந்ததை அவரிடமே கொடுத்து விடுங்கள். இதனை நீங்கள் மேற்கொள்ளவில்லையெனில் மகாபாரதப்போர் வரும். நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்" என்றும் கூறினார்.
விதுரர் சொல் கேட்டு துரியோதனன் 'ஏப்போதும் எம்மை சபித்தல் உம் இயல்பு.' என்று கூறிவிட்டு. தேர்ப்பாகனை கூப்பிட்டு. 'நீ பாஞ்சாலி இருக்குமிடம் சென்று, எமது ஆணையைக் கூறி. அவளை இங்கு அழைத்து வா. ' என்றான்.
28.திரௌபதி அவைக்கு வர மறுத்தல்
தேர்ப்பாகன் பாஞ்சாலி வாழ் இடத்திற்குச்சென்றான். அவளிடம் 'அம்மா தருமர் .மாமன் சகுனியிடம் மாயச்சூதாடி பொருளைஎல்லாம் இழ்ந்து .நாட்டையிழந்து தம்பியரை இழந்து, பந்தைய பொருளாக வைத்து தம்மையும் இழந்தார் தாயே! உன்னையும் பணயம் வைத்து தோற்றார். எல்லோரும் கூடியிருக்கும் அவைக்கு உன்னை அழைத்து வருமாறு எம் அரசன் என்னை பணித்தான்' என்றான்.
தேர்பாகன் கூறிய வார்த்தைகளைகேட்ட பாஞ்சாலி .'சூதர் சபையில் மறக்குலத்து மாதர் வருதல் மரபோ .? யார் கட்டளையால் என்னை அழைத்தாய்..'என்றாள், அதற்கு அவன், 'துரியோதன மன்னன் கட்டளை'என்றான்.
'நீ சென்று நடந்ததை என்ன என்று கேட்டு வா சகுனியிடம்.. சூதாடியபோது ...தர்மர். என்னை முன்னே கூறி இழந்தாரா? அல்லது தம்மையே முன்னம் இழந்து பின் என்னைத் தோற்றாரா? இச்செய்தி தெரிந்து வா'என்று திரௌபதி தேர்பாகனை திருப்பி அனுப்பினாள். தேர்ப்பாகனும் சபை சென்று 'அரசே. 'என்னை முதலில் வைத்திழந்த பின்பு மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற பின்னர் எனைத்தோற்றாரா? என்று பேரவையில் கேட்டு வரச்சொல்லி அப்பொன்னரசி பணித்தாள். அதன்படி இங்கு வந்துள்ளேன்' என்றான்.
இது கேட்டு பாண்டவர் மனம் நொந்தனர்.மற்ற மன்னர்களும் ஊமையராயினர். பாகன் உரைத்ததைக் கேட்டு துரியோதனன் சினத்தில் சீறினான். 'என் பெருமையை அறியா தேர்ப்பாகனே, அவள் சொன்னதை இங்கு வந்து உளறுகிறாய். அந்தப் பாஞ்சாலி இங்கு வந்து பேசட்டும். 'என்றான்.
தேர்ப்பாகனும் மீண்டும் பாஞ்சாலியிடம் சென்றான். ஆனால் திரௌபதியோ 'தர்மர் தன்னை இழந்த பின்னால் என்னை இழந்திருந்தால் அது தவறு அதற்கு அவருக்கு உரிமையில்லை நீ மீண்டும் சென்று அதற்கான பதிலை அறிந்து வா என்றாள்.
வருத்தத்துடன் தேர்ப்பாகன் 'எனனைக் கொன்றாலும். இதற்கான விளக்கம் தெரியாது. நான் திரும்ப இங்கே வரப்போவதில்லை'என உறுதி கொண்டான். துரியோதனனிடம் நடந்ததைக்கூறியதுடன். பாஞ்சாலி மாதவிடாயிலிருக்கிறாள் என்ற செய்தியையும் சொன்னான். செய்தி கேட்ட துரியோதனன் 'மீண்டும் போ...அவளை ஏழு கணத்தில் அழைத்துவா 'என்றான்.
தேர்ப்பாகன் தெளிவாக சபைக்குக்கூறினான் .'நான் இதுநாள்வரை மன்னன் கட்டளையை மீறியதில்லை. அம்மாதரசி கேட்ட கேள்விக்கு ஆறுதலாக ஒரு சொல் சொன்னால் சென்று அழைத்து வருகிறேன்' என்றான். பாகனின் மொழி கேட்ட் துரியோதனன் துச்சாதனனை நோக்கி. இவன் பீமனைப் பார்த்து பயந்து விட்டான். இவன் அச்சத்தை பிறகு போக்குகிறேன். இப்போது நீ சென்று அவளை அழைத்து வா. 'என ஆணையிட்டான்
29-திரௌபதி நீதி கேட்டல்
தீய எண்ணத்தில் அண்ணனை விஞ்சிய துச்சாதனன் பாஞ்சாலி இருக்குமிடம் நோக்கி விரைந்தான். பாஞ்சாலி அவனைக் கண்டு ஒதுங்க. 'அடீ. எங்கே செல்கிறாய்?' என கூச்சலிட்டான். திரௌபதியும் 'நான் பாண்டவர் மனைவி. துருபதன் மகள். இதுவரை யாரும் இதனை மறந்ததில்லை.. ஆனால். தம்பி...நீயோ வரம்பின்றி பேசுகிறாய்' என்றாள்.
அதற்கு துச்சாதனன். 'இனி நீ பாண்டவர் தேவியும் அல்ல .பாஞ்சாலத்தான் மகளும் அல்ல, என் அண்ணனின் அடிமை. மன்னர் நிறைந்த அவையில் எங்கள் மாமனுடன் சூதாடி உன்னை தருமன் இழந்துட்டான். இனி உன்னை ஆள்பவன் துரியோதனனே. அம்மன்னன். உன்னை அழைத்து வருமாறு சொல்ல வந்தேன். பேடி மகனான பாகனிடம் உரைத்தது போல என்னிடமும் சொல்லாது புறப்படு'என்றான்.
அவன் சொல் கேட்ட பாஞ்சாலி 'மாதவிலக்கு ஆதலால் ஒராடையுடன் இருக்கிறேன். மன்னர் அவைக்கு என்னை அழைத்தல் முறையல்ல. மேலும் உடன்பிறந்தார் மனைவியை சூதில் வசமாக்கி. ஆதரவை நீக்கி. அருமையை குலைத்திடுதல் மன்னர் குல மரபா? உன் அண்ணனிடம் என் நிலையைஸ் சொல்' என்றாள்.
இதுகேட்ட துச்சாதனன். கோபம் தலைக்கேற.. பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றி இழுத்தான். 'ஐயோ' என அவள் அலற. அந்தக் கருங்கூந்தலை கரம் பற்றி இழுத்துச்சென்றான். வழிநெடுக மக்கள் வாய் மூடிப் பார்த்திருந்தனர். அவைக்கு இழுத்து வரப்பட்ட பாஞ்சாலி விம்மி அழுதாள். பாண்டவரை நோக்கி 'அம்மி மிதித்து. அருந்ததி காட்டி வேதஸ் சுடர்த்தீ முன் விரும்பி மணம் செய்து கொண்டீரே. இன்று இதைப்பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே. இது தகுமா ' என்றாள்.
பார்த்தனும். பீமனும். செயலற்று இருந்தனர். தருமர் தலை குனிந்தார். பாஞ்சாலி மேலும் கூறுகிறாள் 'இப்பேரவையில் சான்றோர் பலர் இருக்கின்றன்ர். வேத விற்பன்னர்கள் உள்ளனர். வேறுபல சிறப்புமிக்க மேலோர் உள்ளனர். ஆயினும் வெஞ்சினம் கொண்டு யாரும் வாய்திறக்கவில்லையே' என்றவள் துச்சாதனனை நோக்கி ;அற்ப புத்தியுடையவனே. மன்னர் அவையில் என்னை பிடித்து இழுத்து ஏசுகிறாயே. உன்னைப் பார்த்து 'நிறுத்துடா'எனக்கூற அவையில் யாரும் இல்லையே' என புலம்பினாள்.
வெறிகொண்ட துச்சாதனனோ. 'நீ இப்போது வெறும் தாதி' என தீதுரைகள் பல சொன்னான். கர்ணன் சிரிக்க. துரியோதனன் ஆணவசிரிப்பு சிரிக்க சகுனி மனம் மகிழ. அவையினரோ வாளாயிருக்க. பிதாமகன் பீஷ்மரோ எழுந்து பேச ஆரம்பித்தார்.
30-பீஷ்மர் உரை....திரௌபதி மறுப்பு
பீஷ்மர் எழுந்து திரௌபதிக்கு கூற ஆரம்பித்தார் .'தருமன் சூதாட்டத்தில் உன்னை இழந்து விட்டான். நீயோ அவன் செய்கையை மறுக்கின்றாய். சூதிலே சகுனி தருமனை வென்றான். பின் உன்னை பந்தயமாக்கி தருமன் இழந்தான். அப்படி தருமன் தன்னை இழந்தபின் உன்னை வைத்து ஆடியது குற்றம் என்கிறாய். விதிப்படி அது நியாயம். ஆனால் பழைய காலத்தில் ஆணுக்குப் பெண் நிகரானவள் என்றே கருதினர். ஆனால் பிற்காலத்தில் அக்கருத்து மாறிவிட்டது.
'இப்போதுள்ள நீதி சாஸ்திரங்களை நோக்குகையில் ஆணுக்கு இணையாகப் பெண்ணை கருதமுடியாது. ஒருவன் தன் தாரத்தை தானம் என வழங்கிடலாம். தருமன் தன்னை அடிமை என விற்ற பின்னும் உன்னை பிறர்க்கு அடிமையாக்க உரிமையுண்டு. சாத்திரத்தில் சான்று உள்ளது. ஆனால் உண்மையில் இது அநீதி தான். ஆனாலும் நீதி சாத்திரத்தில் இதற்கு இடமிருக்கிறது. உன் சார்பில் சாத்திரம் இல்லை. தையலே. முறையோ என நீ முறையிட்டதால். இதனை நான் சொன்னேன். இன்று தீங்கை தடுக்கும் திறமில்லாதவனாக இருக்கிறேன்' என்று கூறி தலை கவிழ்ந்தார்.
'பிதாமகரே தர்ம நெறியை நன்கு உரைத்தீர்.ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்தபின் .சான்றோர் நிறைந்த சபையில் அச்செய்தியைக் கூறியபோது 'நீ செய்தது சரி என்றனராம். அதைப்போலவே இருக்கிறது இந்த அவை. பேய் ஆட்சி செய்தால், பிணத்தைத் தின்பதை போற்றும் சாத்திரங்கள்.
என் கணவரை சூதாட வற்புறுத்தியது தவறல்லவா. அது நேர்மையா. திட்டமிட்ட சதி அல்லவா. .மண்டபம் ஒன்று அமைத்து அதைக்காண அழைத்து. நாட்டைக்கவர நினைப்பது முறையா? பெண்களுடன் பிறந்த உங்கள் செய்கை பெண்பாவம் அல்லவா' என்று கையெடுத்து கும்பிட்டு அழுது துடித்தாள் பாஞ்சாலி.
அழும் பாஞ்சாலியை நோக்கி,துச்சாதனன் தகாதா வார்த்தைகளை உரைத்தான். அவள் ஆடை குலைய நின்றாள். துச்சாதனன் அவள் குழல் பற்றி இழுத்தான். இது கண்டு பீமன் கோபம் அடைந்தான். தருமரை நோக்கி'அண்ணா. மாதர்குல விளக்கை ஆடி இழந்துவிட்டாய். தருமத்தை கொன்றுவிட்டாய். சக்கரவர்த்தி என்ற மேலான நிலை பெற்ற நம்மை. ஒரு கணத்தில் தொலைத்துவிட்டாய் .துருபதன் மகளையும் அடிமையாக்கினாய் 'என்று கனல் கக்க பேசி தம்பி சகாதேவா 'எரி தழல் கொண்டுவா-அண்ணன் கையை எரித்திடுவோம்' என்றான்.
பீமன் உரையை மறுத்தான் பார்த்தன்(அரிச்சுணன்).'சினம் என்னும் தீ உன்அறிவை சுட்டெரிக்கிறது.
'தருமத்தின் வாழ்வுதனைஸ் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்..'என்றும்
கட்டுண்டோம்..பொறுத்திருப்போம்.காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்'
என்றும் பீமனிடம் கூறினான் பார்த்தன்.
31.திரௌபதியின் பிரார்த்தனையும், கண்ணன் அருளும்.
அர்ச்சுனனின் பேச்சைக்கேட்டு பீமன் அமைதியானான். அப்போது விகர்ணன் எழுந்து பேசலானான். 'திரௌபதிக்கு பீஷ்மர் கூறிய பதிலை நான் ஏற்கமாட்டேன். பெண்களை விலங்குகள் போல கணவன்மார்கள் எதுவும் செய்யலாம்'என்றார் பீஷ்மர். 'நம் மூதாதையர் மனைவியை விற்றதுண்டோ? இதுவரை சூதாட்டத்தில் அரசியரை யாரும் இழந்ததில்லை. சூதாட்டத்தில் அடிமைகளைக் கூடப் பணயமாக வைத்து யாரும் இழந்ததில்லை. தன்னையே தருமர் சூதாட்டத்தில் இழந்து அடிமையான பின் வேறு உடமை ஏது? திரௌபதிக்கு பாட்டனாரின் விடை பொருந்தாது' என்றான்.
விகர்ணனின் பேச்சைக் கேட்டு அவனுக்கு ஆதரவாக சில வேந்தர்கள் குரல் கொடுத்தனர். 'சகுனியின் கொடிய செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு நாளும் உலகு இதை மறக்காது. செவ்வானம் படர்ந்தாற் போல் இரத்தம் பாயப் போர்களத்தில் பழி தீர்க்கப்படும் என்றனர்.
விகர்ணனின் சொல் கேட்டு கர்ணன் ஆத்திரமடைந்தான். 'அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறாய். ஆற்றலற்றவனே. அழிவற்றவனே. இப்பெண்ணின் பேச்சால் தூண்டப்பட்டு ஏதோதோ பிதற்றுகிறாய்' என்றவன், ஒரு பணியாளனை நோக்கி. 'அடிமைகள் மார்பிலே ஆடை உடுத்தும் வழக்கம் இல்லை. ஆதலால் பாண்டவர் மார்பில் உள்ள துணியை அகற்று! பாஞ்சாலியின் சேலையையும் அகற்று' என்றான்.
அப்பணியாள் தங்களை நெருங்குவதற்கு முன் பாண்டவர் தம் மாாபில் உள்ள ஆடையை வீசி எறிந்தனர்.பாஞ்சாலியோ செய்வது அறியாது மயங்கினாள். அந்நிலையில் துச்சாதனன். பாஞ்சாலியின் துகிலை உரியலுற்றான். பாஞ்சாலி கண்ணனை நினத்து இருகரம் கூப்பி தொழுதாள். 'கண்ணா.. அபயம் .. அபயம்..என்றாள். உலக நினைவிலிருந்து விலகித் தெய்வ நினைவில் ஆழ்ந்தாள்.
அன்று..முதலையிடம் சிக்கிய யானைக்கு அருள் புரிந்தாய். காளிங்கன் தலை மிசை நடம் புரிந்தாய். கண்ணா..உன்னை நம்பி நின் அடி தொழுதேன்..என் மானத்தை காத்து அருள்புரி..உன்னை சரண் அடைந்தேன் என்றாள்.
கண்ணபிரான் அருள் கிடைத்து ..துச்சாதனன் துகில் உரிய உரிய சேலை வளர்ந்து கொண்டே இருந்தது. ஒரு நிலையில் துச்சாதனன் மயங்கி கீழே விழுந்தான்.
'தீங்கு தடுக்கும் நிலையில் இல்லை' என்று முன்னர் உரைத்த பீஷ்மர் எழுந்து கை தொழுது வணங்கினார்... துரியோதனன் தலை கவிழ்ந்தான்.
32- வனவாசம் கிளம்புதல்
பீமன் எழுந்தான். 'விண்ணவர் மேல் ஆணை.. பராசக்தி ஆணை..கண்ணன் மேல் ஆணை.. எங்கள் மனைவி திரௌபதியை...தொடை மீது உட்கார் என்று கூறிய துரியோதனனை போர்க்களத்தில் தொடையைப் பிளந்து உயிர் மாப்பேன். சேலை பிடித்து இழுத்த துச்சாதனனின் தோள்களைப் பிளப்பேன்' என்று சபதம் செய்தான்.
அர்ச்சுனன் எழுந்து 'பாஞ்சாலியின் சேலையை அகற்றச் சொன்ன கர்ணனை போரில் மடிப்பேன்.. இது கண்ணன் மீதும்... திரௌபதி மீதும் .. காண்டீபம் என்னும் என் வில் மீதும் ஆணை' என்று சபதம் செய்தான்.
பாரதப்போரில் சகுனியின் மகனான உலூகனைக் கொல்வேன் என்றான் நகுலன்.
சகுனியின் தலையை துண்டிப்பேன் என்றான் சகாதேவன். பாஞ்சாலியோ...துச்சாதனன், துரியோதனன் இவர்கள் ரத்தத்தை கூந்தலில் தடவி குளித்து பின்னரே கூந்தல் முடிப்பேன்..என்றாள்.
அவளது சூளுரையைக் கேட்டு ..விண்ணகம் மலர் மாரி பொழிந்தது. மண்னகம் அதிர்ந்தது. திருதிராட்டிரன் நடுங்கினான். பின்..திருதிராட்டிரன் துரியோதனனையும், துச்சாதனனையும் கண்டித்தான். பின் திரௌபதியிடம் வேண்டும் வரம் தருவதாகக் கூறினான்.
தருமரையும்...எனைய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்றாள் திரௌபதி. சரி என்று அவர்களை விடுவித்த திருதிராட்டிரன். நடந்தவற்றை கெட்டக் கனவாகக் கருதி மறந்துவிடச் சொன்னான். இந்திரப்பிரஸ்தத்தைப் பாண்டவர்களுக்கு திருப்பி அளித்தான். அனைவரும் இந்திரப்பிரஸ்தம் திரும்பினர்.
துரியோதனன் தந்தையின் முடிவுக் கண்டு அதிர்ச்சியுற்றான். 'எப்படியும் பாண்டவர்கள். தங்களை பலப்படுத்திக் கொண்டு நம்மை அழிப்பர். ஆதலால் அவர்களை மீண்டும் சூதாட அழைக்க வேண்டும்' என திருதிராட்டிரனிடம் புலம்பினான்.
அவன் கூற்றில் உண்மை இருக்கக்கூடும் என எண்ணிய. திருதிராட்டிரன். பாண்டவர்களை மீண்டும் சூதாட அழைக்க ஒப்புக் கொண்டான். துரியோதனன் பாண்டவர்களிடம் சென்று. இதைத் தெரிவித்து. தருமரை மீண்டும் சூதாட ஒப்புக் கொள்ளவைத்தான்.
விதி...இது விதியின் செயல் என்றுதான் கூற வேண்டும்.
துரியோதனன் இம்முறை ஒரு சூழ்ச்சி செய்தான். 'சூதாட்டத்தில் தோற்பவர். துறவு பூண்டு 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும். ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் (மறைந்து வாழுதல்) செய்ய வேண்டும்' என்றும். 'இந் நிபந்தனையை நிறைவேற்றிய பின்னரே தோற்றவர்க்கு நாடு திருப்பி அளிக்கப் படும்' என்றும், நிபந்தனை தவறினால் மீண்டும் 13 ஆண்டுகள் இதே முறையில் செல்ல வேண்டும்' என்றும் கூறினான்.
இம்முறையும் சகுனி வெல்ல. நாடு, நகரங்களை இழந்த பாண்டவர்கள். பீஷ்மர் முதலியவர்களிடம் விடைபெற்று காடு செல்ல தீர்மானித்தனர். வயதாகி விட்டதால் குந்தி விதுரர் வீட்டில் தங்கினாள்.
பாண்டவர் வனவாச சேதி அறிந்து. அஸ்தினாபுர மக்கள் அழுது. துடித்தனர். அவர்களுடன் காடு செல்லவும் முயன்றனர். தருமர் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார்.
(சபா பருவம் முற்றும்...இனி அடுத்து வனபருவம்)
33.மைத்ரேயர் சாபம்
கானகத்தில் அவர்களைக்காண ரிஷிகளும், மற்றவர்களும் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு எப்படி உணவு அளிப்பது என அறியா தருமார் சூரியனை நோக்கி முறையிட்டார். உன் அட்சய பாத்திரம் கிடைத்தது. அதில் சிறிதளவு உணவை இட்டாலும் பெருகி. எத்தனை பேர் வந்தாலும் அனைவருக்கும் உணவு கிடைத்தது. எல்லோரும் உணவு அருந்திய பின் பாஞ்சாலி உணவு கொள்வாள். பிறகு பாத்திரம் காலியாகி விடும். அன்று உணவு பெறும் சக்தி அவ்வளவு தான்.மீண்டும் மறுனாள்தான். இப்படியே வனவாசம் கழிய அருள் கிடைத்தது.
பான்டாவர்கள் காடு சென்றதும் திருதிராட்டினன் மனம் சஞ்சலம் அடைந்தது.குற்ற உணர்வு அவனை வறுத்தியது.விதுரரை அழைத்து மக்கள் மனநிலை எப்படி என் வினவினார்.
'மக்கள்'துயரால் வாடுகின்றனர் என்றும் அவர்களைத்திரும்ப அழித்துக்கொள்ளுதலே சிறந்தது என்றும் இல்லையேல் துரியோதனன் முதலானோர் அழிந்து போவார்கள்'என்றும் விதுரர் கூற..அதை திருதிராட்டிரன் ஏற்காது விதுரர் மீது சீறிப்பாய்ந்தான். என்னால் நாட்டைவிட்டு துரத்தப்பட்ட பாண்டவர்களிடத்தில் தான் உனது உள்ளம் இருக்கிறது நீயும் அவர்களிடத்தில் சென்று தங்கு இனி அரண்மணையில் இருக்கவேண்டாம்' என்றார்.
விதுரர் உடன் வனத்திற்குச்சென்று பாண்டவர்களுடன் சேர்ந்திருந்தார். செய்தி அறிந்த பீஷ்மர் திருதிராட்டிரனிடம் சென்று ' விதுரரை நீ காட்டுக்கு அனுப்பவில்லை. அறத்தை நாட்டைவிட்டு அனுப்பிவிட்டாய். இனி அஸ்தினாபுரத்தில் இருல் சூழும்'என்றார்.
திருதிராட்டினன் மீண்டும் நாட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு அனுப்ப விதுரர் திரும்பினார். விதுரர் காடு சென்று திரும்பியது அறிந்த துரியோதனன். அவர்கள் ஏதோ சமாதான முயற்சியில் ஈடுபடுவதாக எண்ணி. திருதிராட்டினிடம் சென்று'பாண்டவர்கள் இங்கு திரும்பி வந்தால். நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்றான்.
அப்போது வியாசர் தோன்றி திருதிராட்டிரனிடம் 'துரியொதனனின் தீய செயல்களை தடுத்து நிறுத்தாவிடின் பேரழிவு ஏற்படும் என எச்சரித்து மறைந்தார்.
மைத்ரேய மாமுனிவர் காட்டில் சந்தித்தார்.சூதாட்டத்தில் தான் இந்த விலை என உணர்ந்தார். பீஷ்மர், விதுரர், துரோணர், கிருபர் ஆகியோர் இருந்தும் இந்த கொடுமை எப்படி நேர்ந்தது என வியந்தார். மனம் வருந்தினார்.நாடு சென்று துரியோதனனை சந்தித்து அவனை வன்மையாகக் கண்டித்தார். ஆனால் துரியோதனனோ அவரை எதிர்த்து பேசினான். கோபமுற்ற முனி. 'பீமனால் மாண்டு தரையில் கிடப்பாய். இது உறுதி'என்றார்.
துவாரகையில் கண்ணனுக்கு வனம் சென்ற செய்தி எட்டியது. அவர் காட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார். 'பகைவரிடம் க்ஷத்திரியர் இப்படி அடங்கிக்கிடப்பதா. அவர்களிடம் மோதி அழித்திடவேண்டாமா'என சகோதரர்கள் எண்ணினர். திரௌபதியும் இக்கருத்தைக் கொண்டிருந்தாள். ஆனால் தருமர். தாம் கொண்ட கொள்கையில் இருந்த மாறுபட விரும்பவில்லை. 'உயிர் போவதாய் இருந்தாலும் சத்தியத்திலிருந்து பிறழப்போவதில்லை. பெரியப்பாவின் கட்டளையை 13 ஆண்டுகள் நிறைவேற்றியே தீரவேண்டும். 'என தம்பியரிடம் உறுதியாகக்கூறினார். நிபந்தனைக்குறிய காலம் முடிந்தபின் என்ன செய்வது எனத்தீர்மானிப்போம்' என அவர்களை அமைதிப்படுத்தினார்
34.அர்ச்சுனன் தவம்
தருமர் சமாதானம் செய்து கொண்டிருந்த போது.வியாசர் அங்கு தோன்றினார். பாரதத்தில் சிக்கல் தோன்றும் போதெல்லாம் வியாசர் தோன்றி அதனை விலக்கியுள்ளார். அதுபோல இப்பவும் வந்து சில ஆலோசனைகளைக் கூறினார்.
'இந்தப் பதிமூன்று ஆண்டுக்காலத்தில் துரியோதனன் தன் பலத்தைப் பெருக்கிக்கொள்வான்.ஏற்கனவே.பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலியோர் அவன் பக்கம் இருக்கிறார்கள். இந்நிலையில் வெறும் தவக்கோலம் பூண்டு காட்டில் இருப்பதால் பயன் இல்லை. நீங்களும் உங்களைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். நான் 'பிரதிஸ்மிருதி' என்னும் மந்திரத்தை சொல்லித் தருகிறேன். அர்ச்சுனன் இமயம் சென்று. இம் மந்திரத்தை உச்சரித்துச் சிவபெருமானையும், தேவேந்திரனையும், திக்குப் பாலகர்களையும் வேண்டித் தவம் செய்வானாக. சிவபெருமான் பாசுபதக்கணையை நல்குவார். அவ்வாறே பிறரும் சக்தி வாய்ந்த கருவிகள் பலவற்றை அளிப்பார்கள்'என்று கூறி மறைந்தார்.
உடன் அர்ச்சுனன். இமயமலையில் இருக்கும் இந்திரகிலம் பகுதியை அடைந்து தவம் மேற்கொண்டான். அவனைச் சுற்றி புற்று வளர்ந்தது. ஆனாலும் அவன் அசையாது தவத்தில் இருந்தான்.
அவனது தவத்தின் கடுமை அறிந்த சிவன் உமாமகேஸ்வரியிடம் 'அர்ச்சுனன் தவத்தை அறிந்துக்கொண்ட துரியோதனன் அதை குலைக்க மூகாசுரனை ஏவுவான். அந்த அசுரனை. என் ஒருத்தனால் மட்டுமே கொல்ல இயலும். அந்த அசுரன் காட்டுபன்றி வடிவம் தாங்கி..அர்ச்சுனனை கொல்ல வருவான். நான் வேடனாகப்போய் அவனைக் காப்பாற்றுவேன்'என்றார்.
அதே போல மூகாசுரன் காட்டு பன்றியாய் வந்தான்.
அர்சுனன் மீது அக்காட்டுப் பன்றி மோதியது. அர்ச்சுனன் தவக்கோலம் நீங்கி தற்காப்புக்காக ஒரு அம்பு கொண்டு அவ்விலங்கை தாக்கினான். அப்போது ஒரு வேடன் தன் அம்பை அந்த பன்றியின் மேல் செலுத்த பன்றி வீழ்ந்தது. யாருடைய அம்பால் அப்படி நேர்ந்தது என்று சர்ச்சை எழ. இருவரும் விற்போரில் ஈடுபட்டனர். அர்ச்சுனன் தோற்றான். உடன் மண்ணால் ஒரு சிவலிங்கத்தை அமைத்து பூமாலை ஒன்றை அணிவித்து பூஜித்தான். ஆனால் அம்மாலை வேடன் கழுத்தில் இருப்பதை அறிந்த அர்ச்சுனன் வேடனாக வந்தது சிவனே என்று அறிந்து வணங்கினான். சிவனும் அவனுக்கு பாசுபதக் கணையை வழங்கினார்.அந்த அற்புதக் காட்சியைக் கண்ட தேவர்கள் பல்வேறு கருவிகளை அர்ச்சுனனுக்கு அளித்தனர்,
தன் மைந்தனின் பெருமை அறிந்த தேவேந்திரன் அவனைத் தேவர் உலகத்திற்கு அழைத்தான். இந்திரன் கட்டளையால் அவனது சாரதி மாதலி அர்ச்சுனனை தேரில் நட்சத்திர மண்டலங்களைக் கடந்து அமராவதி நகருக்கு அழைத்துச் சென்றான்.
இந்திரன். தன் மகனை அரியணையில் அமர்த்தி சிறப்பு செய்தான். தெய்வீகக்கருவிகளைப் பயன்படுத்தும் முறை பற்றி அறிய ஐந்து ஆண்டுகள் தங்கியிருக்கவேண்டும் என கட்டளையிட்டான் இந்திரன். நுண்கலைகளான நடனம்,இசை ஆகியவற்றிலும் அர்ச்சுனன் ஆற்றல் பெற அவனைசித்திரசேனனிடம் அனுப்பி வைத்தான்.
அனைத்துக் கலைகளிலும் பயிற்சி பெற்று நிகரற்று விளங்கினான் தனஞ்செயன்.
35.பார்த்தனின் ஆன்ம பலம்
அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கிய அர்ச்சுனன் ஆன்ம பலத்திலும் சிறந்தவன் ஆனான்.
அவன் மன வலிமையைச் சோதிக்கக் கருதிய சித்திரசேனன் ஊர்வசியை அனுப்பி அவனை மயக்குமாறு கட்டளையிட்டான். ஆனால் அழகிய அந்த தெய்வமங்கையின் சாகசம் அர்ச்சுனனிடம் எடுபடவில்லை.அவளால் அவனை வசப்படுத்த முடியவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அவள்..'பேடியாகப் போவாய்' என சாபமிட்டாள்.தனக்கு நேர்ந்த துர்பாக்கிய நிலையை இந்திரனிடம் கூறிப் புலம்பினான் அர்ச்சுனன்.
ஊர்வசியின் சாபத்தை முழுவதுமாக விலக்க முடியாது என அறிந்த இந்திரன். அதில் சிறிது மாற்றம் செய்தான். அந்த சாபம் ஓராண்டுக்கு மட்டும் நிலைத்திருக்கும். அதனை அர்ச்சுனன் தன் நன்மைக்காக அஞ்ஞாத வாசத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினான்.
தீமையும் நன்மையே என அமைதியானான் அர்ச்சுனன்.
அர்ச்சுனன் அங்கு இருந்த போது கடல் நடுவே வசித்துவந்த அசுரர்கள் மூன்று கோடி பேர் தேவர்களுக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை அழிக்குமாறு இந்திரன் அர்ச்சுனனுக்குக் கட்டளையிட்டான். மாதலி தேர் செலுத்த அசுரர்களுடன் போரிட்டான் அர்ச்சுனன். அசுரர்கள் விஷம் போன்ற கருவிகளை அர்ச்சுனன் மேல் பொழிய அவன் எதிர்த்து நின்றான்.
தனி மனிதனாக அத்தனை பேரையும் கதி கலங்கச் செய்தான். அசுரர்கள் இப்போது மாயப்போரில் ஈடுபட்டனர். ஆனால் தனஞ்சயனோ அனைவரையும் அழித்தான். நிவாத கலசர்களான அந்த அசுரர்களை வென்று வெற்றியுடன் திரும்புகையில் விண்ணகத்தே ஒரு நகரத்தை கண்டான். மாதலியை அதுபற்றி வினவினான்.
'பூலோமை, காலகை என்னும் அரக்கியர் இருவர் கடும் தவம் செய்து பிரமதேவன் அருளால் வரம் பெற்றனர். அந்த வர பலத்தால் பிறந்த புதல்வர்களான காலகேயர்கள் இந்த நகரத்தில் வாழ்கின்றனர். இதன் பெயர் இரணியபுரம் என்பதாகும். இந்த காலகேயர்களால் தேவர்கள் மிகவும் துன்பம் அடைகின்றனர்' என்றான் மாதலி.
அர்ச்சுனன் அவர்களை அவர்களது நகரத்துடன் பாசுபதக் கணையை ஏவி அழித்தான். வெற்றி வீரனான மகனை இந்திரன் ஆரத்தழுவினான். யாராலும் பிளக்க மிடியா கவசத்தையும், மணிமகுடத்தையும், தேவதத்தம் எனும் சங்கையும் பரிசாக அளித்தான்.
இந்நிலையில்..காட்டில் மற்ற சகோதரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
36- பீமன்...அனுமன் சந்திப்பு
தருமர் தன் மூத்த சகோதரர்களுடன் நான்கு திசைகளிலும் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார். 'கடத்தற்கரிய வழியில் அனைவரையும் நான் தூக்கிச் செல்வேன்' என்றான் பீமன். ஆனாலும்...நடைப்பயணத்திலேயே ..கந்தமாதன மலை மேல் அவர்கள் சென்றபோது இடியும், மின்னலும், மழையும் படாதபாடு படுத்தின.
திரௌபதி மயங்கி விழுந்தாள். அப்போது கடோத்கஜன் தோன்றி திரௌபதியை தூக்கிச் சென்றான். கடோத்கஜனுடன் வந்த மற்ற அசுரர்கள்...தருமர்,நகுலன்,சகாதேவனை தூக்கி உரிய இடத்தில் சேர்த்தனர்.
அனைவரும் கயிலைமலை சென்று கடவுளை வணங்கினர் .பத்ரிகாச்ரமத்தை அடைந்து சித்தர்களை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது ஒருநாள் திரௌபதி அங்கு காணப்பட்ட ஆயிரம் இதழ்களுடன் கூடிய மணம் மிக்க 'சௌகந்திகம்' என்ற மலரின் எழிலில் மனத்தை பறிகொடுத்தாள். அது போன்ற மலர்கள் வேண்டும் என பீமனிடம் வேண்டினாள். அம்மலர்கள் குபேரன் நாட்டில் மட்டுமே உள்ளது என அறிந்து பீமன் குபேரபுரி நோக்கி நடந்தான்.
பீமன் செல்லும் வழியில் குரங்கு ஒன்று பெரிய உருவத்துடன் வாழை மரங்களிடையே படுத்திருப்பதைக் கண்டான். அதை எழுப்ப பேரொலி செய்தான். கண் விழித்த குரங்கு 'இங்கு தேவர்களும் வர அஞ்சுவர். இதற்குமேல் உன் பயணத்தைத் தொடராது திரும்பிப் போ' என்றது.
இது கேட்ட பீமன் 'என்னையா. திரும்பிப்போகச் சொல்கிறாய். நான் பாண்டுவின் மைந்தன். உன் வாலை மடக்கி. எனக்கு வழி விடு' எனக் கூச்சலிட்டான். உடன் குரங்கு 'உன் ஆணவப் பேச்சை நிறுத்து. உனக்கு வலிமை இருந்தால். .என்னைத் தாண்டிச் செல்' எனக்கூற. 'முதியோரை அவமானப்படுத்த நான் விரும்பவில்லை' என்றான் பீமன்.
அப்படியானால் என் வாலை ஒரு புறமாக நகர்த்தி விட்டுப் போ .என்றது குரங்கு. ஆனால்...பிமனால்...குரங்கின் வாலை அசைக்க முடியவில்லை. பீமன் தன் இயலாமையை எண்ணி வருந்தினான். 'என்னைத் தோல்வியுறச் செய்த நீர் யார்? சர்வ வல்லமை படைத்த நாராயணனா? அல்லது சிவபெருமானா?' என பீமன் கேட்டான்.
விரைந்து எழுந்த மாருதி...பீமனை ஆரத்தழுவி...'தம்பி...நானும் வாயுவின் குமரந்தான்..' என அனுமன் தன்னைப் பற்றிக் கூறினான். ராமாவதாரக் காலத்தில்..அஞ்சனைக்குப் பிறந்த வாயுமகன் அனுமன்...தன் தம்பி முறையான பீமனை தழுவிக் கொண்டான். பீமன் புதியதோர் ஆற்றல் பெற்றான்.
'உன் எதிரிகளால்..உன்னை ஒன்றும் செய்ய முடியாது.' என்று அனுமன் ஆசி கூற பீமன் மலர்களுக்கான பயணத்தைத் தொடர்ந்து...குபேரனது தோட்டத்தில் அம்மலர்களைக் கண்டு..அதைப் பறிக்க முயன்ற போது...அங்கிருந்த அரக்கர்கள் அவனை தடுக்க...அனைவரையும் பீமன் தோற்கடித்தான்.
குபேரனுக்கு தகவல் பறந்தது.
37-பீமனும் மலைப்பாம்பும்
தம்மைப் பிரிந்து சென்ற பீமன் வராததால் தருமர் கவலையில் மூழ்கினார்.பீமனின் மகன் கடோத்கஜனை நினைக்க அவன் தருமர் முன் தோன்றினான். 'உன் தந்தை இருக்குமிடத்திற்கு எங்களையும் அழைத்துப் போ'என்று அவர் கூற. கடோத்கஜன் அனைவரையும் தன் தந்தை இருக்குமிடம் தூக்கிச்சென்றான்.தம்பியைக் கண்ட தருமர் அமைதியானார்.
அவர்களைக் காண குபேரன் தானே மலர்களுடன் வந்து சேர்ந்தான்.
பின் அனைவரும் பத்ரிகாச்ரமத்திற்குத் திரும்பினர். சடாசரன் என்னும் அரக்கன் திரௌபதியைக் கவரும் எண்ணத்துடன் அவர்களிடம் வந்தான். ஒரு சமயம் பீமன் வெளியே சென்றபோது. அவ்வரக்கன் தன் சுயரூபத்தை எடுத்துக்கொண்டு தருமர், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோரைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.அப்போது வந்த பீமன் இது கண்டு அவனுடன் போர் புரிந்து அவைத் தூக்கித்தரையில் எறிந்து தேய்த்துக் கொன்றான்.
சடாசுரனை வதைத்தபின். பாண்டவர்கள். முனிவர்களுடன் இமய உச்சியை அடைந்தனர். அங்கு சாரணர்,சித்தர் ஆகியவர்களைக் கண்டு வணங்கினர். அப்போது ஐந்து நிறமுடைய அழகிய மலரை திரௌபதி கண்டாள். இது போன்று மலர் வேண்டும் என்று கேட்க. இதுவும் குபேரனின் நாட்டில்தான் கிடைக்கும் கொண்டுவருகிறேன்'என பீமன் புறப்பட்டான்.
அங்கு மணிமான் என்ற யட்சத்தளபதியுடன் போரிட்டு...மணிமானை வீழ்த்தினான்.தம்பியைக் கண்டு தருமர் குபேரன் பகை தேவையற்றது எனக் கூறினார்.
இதற்கிடையே மானுடன் ஒருவனால் மணிமான் கொல்லப்பட்ட செய்தியறிந்து குபேரன் அங்கு வர. அவரை வணங்கிய தருமரைக்கண்டு குபேரன் சீற்றம் தணிந்தான்.'மணிமான் மரணம் பண்டை சாபத்தால் நேர்ந்தது 'என அறிந்த குபேரன் தருமருக்கு பல பரிசுபொருட்களைக் கொடுத்து வழி அனுப்பினான்.
பீமன் ஒருநாள் காட்டுக்குச்சென்றான். புதர்களைக் காலால் மிதித்து அழித்தான். அப்போது ஒரு மலைப்பாம்பு பீமனைப் பற்றிஸ் சுற்றிக்கொண்டது. பீமனால் விடுபட முடியவில்லை. பராசுராமனையும், இடும்பனையும் ஜராசந்தனனையும் கிர்மீரனையும், மணிமானையும் வீழ்த்தியவனுக்கு அப்போதுதான் தெளிவு பிறந்தது, மனிதனின் ஆற்றலை விட விதியின் வலிமை புரிந்தது.
அப்போது பீமனைத் தேடி வந்த தருமர். பீமன் இருக்கும் நிலை கண்டார். பின் பாம்பினை நோக்கி'நீ யார்..? தேவனா? அசுரனா? என்றார். உடன் பாம்பு...'நான் நகுஷன் என்னும் மன்னன்.அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாகியுள்ளேன். நீ என்னுடன் விவாதம் செய். அதுவே என் சாப விமோசனம்'என்றது.
தன் முன்னோருள் ஒருவர் தான் நகுஷன் என அறிந்த தருமர் அப்பாம்பை வணங்க .சாப விமோசன நேரமும் வந்ததால். நகுஷன் தருமரை ஆசீர்வதித்துவிட்டு விண்ணுலகு சென்றார்.
பீமன். .தருமருடன்..மனித வாழ்க்கை அனுபவங்களைப்பேசிய படியே தங்கும் இடம் வந்து சேர்ந்தான்.
38-மார்க்கண்டேயர் வருகை
அர்ச்சுனனை பிரிந்த சகோதரர்கள் அவரை மீண்டும் எப்போது காண்போம் என்றிருந்தனர். அப்போது இந்திர உலகத்திலிருந்து ஒரு தேர் வந்தது. அதில் வந்திறங்கிய அர்ச்சுனன் ...தன் தேவலோக அனுபவங்களை ...சிவபெருமானிடம் பாசுபதக்கணை பெற்றது...நிவாத கவசர்களைக் கொன்றது..காலக்கேயர்களை அழித்தது என எல்லாவற்றையும் சொன்னான். அனைவரும் மகிழ்ந்தனர்.
இந்நிலையில் வனவாசம் பத்து வருடங்கள் ஓடிவிட்டது..மீதம் இரண்டு ஆண்டுக்காலம் அவர்கள் காம்யகம் முதலிய வனங்களில் சஞ்சரித்தனர்.
அப்போது அவர்களைச் சந்திக்க சத்திய பாமாவுடன் கண்ணன் வந்தார்.அனைவரும் வணங்கி மகிழ்ந்தனர். பாண்டவர்கள்.. பாஞ்சால நாட்டில் இருக்கும் உப பாண்டவர்களின் நலனையும். துவாரகையில் இருக்கும் சுபத்திரை...அபிமன்யு நலத்தையும் கிருஷ்ணரிடம் கேட்டு அறிந்தனர்.
அத்தருணத்தில் ...தவ முனிவர் மார்க்கண்டேயர் வந்தார்...தொடர்ந்து நாரதரும் வந்தார். மார்ககண்டேயர் புண்ணியக் கதைகளைக் கூறினார்.'ஒவ்வொரு உயிரும் தான் செய்த நல்வினை ...தீவினைப் பயன்களை அனுபவிக்கின்றன. வினையின் பிடியிலிருந்து யாருமே தப்பிக்க இயலாது. எத்தனை பிறவி எடுத்தாலும் வினைப்பயன் தொடர்ந்து வந்து பயனைத் தரும்.
வரும் காலத்தில் பன்னிரு சூரியர்களின் வெப்பத்தைத் தாங்காது உயிரினங்கள் துன்புறும் கடல் நீர் நிலைகள்.. அனைத்தும் வற்றிவிடும். புல் பூண்டு .. மரம் ஆகியவை அனைத்தும் தீயால் கருகி விடும். ஓயாது மழை பொழியும். ஊழிக்காற்று எழுந்து பிரளயத்தை ஏற்படுத்தும்.. உலகு அழியும்.பின் கண்ணபிரான் மீண்டும் உலகையும் உயிரினங்களையும் படைப்பார். காப்பார்.
மறுபடியும் ஒரு ஊழிக்காலத்தில் உலகை அழிப்பார். இப்படிப் படைப்பதும்.. காப்பதும்.. அழிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதுதான் இறைவனின் மகிமை'என பல கதைகளைக் கூறினார். எல்லாவற்றையும் கேட்டு அனைவரும் இன்பம் அடைந்தனர். எல்லோரும் அறநெறியில் நிற்கவேண்டும் என மார்க்கண்டேயர் எடுத்துரைத்தார்.
காம்யக வனத்தில் பல நாட்கள் தங்கியிருந்தபின் கிருஷ்ணர் பாண்டவர்க்கு நல்லாசி வழங்கிச் சத்தியபாமாவுடன் துவாரகை திரும்பினார். மார்க்கண்டேயரும் விடைபெற்றார்.
பல திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய அந்தணன் ஒருவன்...காம்யக வனத்தில் பாண்டவர்களை சந்தித்து அவர்களது நிலைமையை அறிந்தான். அவன் அஸ்தினாபுரம் சென்று திருதிராட்டினனைக் கண்டு பாண்டவர்களின் மேன்மையைக் கூறினான்.
39-கௌரவர் மானபங்கம்
அந்தணன் கூற்றைக்கேட்ட திருதிராட்டிரன்...பாண்டவர்கள் மேன்மேலும் சிறப்புறுவது நல்லதல்ல..என எண்ணினான். வெளிப்பார்வைக்கு பாண்டவர் நன்மையை விரும்புவது போல பேசினாலும்.உள்ளத்தால் வெறுத்தான். காட்டில் பாண்டவர் நிலை அறிந்த துரியோதனன் கவலையுற்றான்.பதின்மூன்று ஆண்டுகளில் செயலிழந்து போவார்கள் என எண்ணியது தவறு என எண்ணினான்.
சகுனி..துரியோதனனிடம்..'நாமும் காட்டிற்குச் சென்று பாண்டவர் நிலையறிந்து. நம் செல்வச் சிறப்பையும் காட்டி வருவோம்' என்றான். திருதிராட்டினனிடம்.. 'பசுக்குலங்கள் காட்டில் கொடிய மிருகங்களால் அவதிப்படுகின்றன. அவற்றைக் காக்க கானகம் போகிறோம்' என்றான் துரியோதனன்.
பின் துரியோதனன் முதலானோர். மனைவி மக்களுடன். உயர்தர ஆடை..அணிகலன்கள். அணிந்து பாண்டவர் இருக்குமிடம் அருகே கூடாரம் அமைத்து தங்கினர். அருகில் இருந்த தடாகத்தில். கூட்டம் கூட்டமாக கந்தர்வர்கள் வந்து நீராடுவது. கௌரவர்களுக்கு இடையூறாக இருக்க. கந்தர்வர்களை உடனடியாக விலகுமாறு..துரியோதனன் கட்டளையிட்டான்.
இதனால். கந்தர்வர்களுக்கும். .துரியோதனன் கூட்டத்திற்கும் இடையே போர் மூண்டது. சித்திர சேனன் தலைமையில்.. கந்தர்வர்கள் போரிட..சித்திரசேனனும் மாயப்போரில் ஈடுபட..கர்ணனின் தேர் உடைந்தது. அவன் போர்க்களத்தை விட்டு ஓடினான்.துரியோதனின் தம்பியரும் புறமுதுகிட்டனர். எஞ்சிய. துரியோதனன்..மற்றும் சிலரை..கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர் கந்தர்வர்கள்.
கௌரவர்களின் எஞ்சிய வீரர்கள் சிலர். தர்மரிடம் வந்து. 'துரியோதனனைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டனர். ஆனால் பீமனோ 'அவர்கள் தீவினையின் பலனை அனுபவிக்கிறார்கள். அனுபவிக்கட்டும்' என்றான். தம்பி..ஆபத்தில்..யார் இருந்தாலும் உதவ வேண்டுவது உலக இயல்பு.. மேலும் இப்போது நம் சகோதரர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை உடனே காப்பாற்ற வேண்டும்..என்றார் தருமர்.
இப்படி.. இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது...துரியோதனனின்..அபயக் குரல் கேட்டது. 'சகோதரர்களே..எங்களையும்..எங்கள் மனைவியரையும். கந்தர்வர்கள் கட்டி இழுத்துச் செல்கிறார்கள். உடனேவந்து காப்பாற்றுங்கள்'
உடன்...பாண்டவர்கள். கந்தர்வர்களை தடுத்தி நிறுத்தி..பலரை அழித்தனர். அப்போது...அர்ச்சுனனுக்கு...சித்திரசேனன்..தனக்கு..இந்திர லோகத்தில்..பல நுணுக்கங்களை போதித்தவன் என்ற உணர்வு வர..அவன் பாதம் பணிந்து...நடந்த விவரங்களை அறிந்தான்.
'அர்ச்சுனா...இந்த துரியோதனன்..உங்களை அவமானப் படுத்த வந்தான். அதை அறிந்த தேவர்கோமான்... அவன் கூட்டத்தை கட்டி இழுத்துவர என்னைப் பணித்தான்' என்றான் சித்திரசேனன். பின்னர் தருமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க. துரியோதனன் கூட்டம் விடுவிக்கப்பட்டது.
போரில். இறந்த கந்தர்வர்களை. இந்திரன் மீண்டும் உயிர் பிழைக்க வைத்தான். நாணித் தலைக்குனிந்திருந்த துரியோதனனை நோக்கி தருமர் 'நகரம் சென்று நல்லாட்சி செய்வாயாக' என்றார். புறங்கொடாப் போர் வீரன் என்ற பெருமித வாழ்வு பறிப்போக. கர்ணனிடம் துரியோதனன் புலம்பினான். பின்..துச்சாதனனை நோக்கி'தம்பி..நீ ஆட்சியை மேற்கொள்..நான் உயிர் துறக்கப்போகிறேன்' என்றான்.
பதிலுக்கு, கர்ணன்'இதுவா க்ஷத்திரியர் இயல்பு..நாம் இப்போது சந்தித்தது..இறுதிப்போர் அல்ல' என்றான். கர்ணன்..மேலும் துரியோதனனுக்கு..உற்சாகம் ஊட்டினான். போரில்..அர்ச்சுனனை தான் கொல்வேன் என்றான். அசுரர்களும்...போரில்.. தேவர்கள் பாண்டவர்களுக்கு உதவினால்.. அசுரர்கள் துரியோதனனுக்கு உதவுவதாகக் கூறினர்.
இதனால்...துரியோதனன் மனம் மாறி..அஸ்தினாபுரம் வந்தான். காட்டில்..நடந்தவற்றை அறிந்த பீஷ்மர். துரியோதனனிடம். .'இனியும் கர்ணனைப் போன்றோரை நம்பாதே.தான் தப்பித்தால் போதும் என கந்தர்வப் போரில் உன்னை விட்டு ஒடியவன் அவன். அர்ச்சுனனே உன்னை வந்து காத்தான்' என்றார். ஆனால்...துரியோதனன்..அவர் பேச்சை புறக்கணித்தான்.
40-கர்ணன் சபதம்
தருமர் முன் செய்த ராஜசூயயாகம் போல ஒரு யாகம் செய்ய விரும்பிய துரியோதனன் அதை கர்ணனிடம் தெரிவித்தான்.
ராஜசூயயாகம் செய்ய ஒரு நிபந்தனை உண்டு.பல நாட்டு மன்னர்களும் அந்த யாகம் செய்பவரது தலைமையை ஏற்க வேண்டும். அதன்படி பல நாடுகளுக்குச் சென்று. அம்மன்னர்களை வென்று. உன் தலைமையை ஏற்கச் சொல்கிறேன் என துரியோதனனிடம் கூறிவிட்டு. கர்ணன் புறப்பட்டான்.
அங்கம்,வங்கம்,கலிங்கம் ஆகிய நாடுகளை வென்றான். துருபதன், சுகதத்தன் ஆகியோரை அடக்கினான். நான்கு திசைகளிலும் மன்னர்களை வென்றான்.வெற்றி வீரனாக திரும்பிய கர்ணனை துரியோதனன் ஆரத்தழுவி வரவேற்றான். ஆனால் புரோகிதர்கள். ராஜசூயயாகம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் முன்னர் அந்த யாகத்தைச் செய்த தருமர் இன்னமும் இருக்கிறார். அந்த யாகம் செய்த ஒருவர் உயிருடன் இருக்கையில் வேறு ஒருவர் செய்வது மரபல்ல. மேலும் தந்தை திருதிராட்டினன் முன் மகன் அதைச் செய்யக்கூடாது என்றும் கூறினர்.
ஆனால். அதற்கு பதிலாக வைஷ்ணவ வேள்வி செய்யலாம்.என்றனர். பொன் கலப்பையால் நிலத்தை உழுது இயற்றும் வேள்வி அது. இவ் வேள்வியில் கலந்துக் கொள்ள பல மன்னர்களுக்கு அழைப்பு அனுப்பினார்கள்.துரியோதனன். பாண்டவர்களிடமும் தூதுவனை அனுப்பினான்.
பதின்மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னரே அஸ்தினாபுரம் திரும்புவோம் என தூதுவனிடம் தருமர் உரைத்தார். ஆனால். பீமனோ.. 'எங்கள் வனவாசம் முடிந்ததும் நாங்கள் செய்யும் வேள்வியில் துரியோதனன் முதலானோர் ஆஹூதி (வேள்விப்பொருள்) களாகப் பயன்படுவார்கள்' என்றான். விதுரர் முதலியோர் கலந்துக் கொள்ள வைஷ்ணவ வேள்வியை சிறப்பாகச் செய்தான். துரியோதனன். மேலும் அதற்கு கர்ணனே காரணம் என துரியோதனன் எண்ணினான்.
துரியோதனன் கர்ணனை நோக்கி 'கர்ணா..நீ எனக்கு மற்றொரு உதவியும் செய்ய வேண்டும். .பாண்டவர்கள் போரில் மடிந்ததும்..எனக்காக நீ ராஜசூயயாகத்தை நிறைவேற்ற வேண்டும். அப்போது என் புகழ் மேலும் உயரும்' என்றான். கர்ணன் அப்போது ஒரு சபதம் செய்தான்..
'மன்னா..அர்ச்சுனனை கொல்லும் வரை..நான் மது, மாமிசங்களைத் தீண்டமாட்டேன்..இல்லை என்பார்க்கு இல்லை எனக் கூறமாட்டேன்' கர்ணனின் இந்த சபதம். தருமர் காதுக்கும் எட்டியது. கவச குண்டலங்களுடன் பிறந்த கர்ணனை வெல்வது அரிதாயிற்றே என அவர் கவலையுற்றார். அப்போது வியாசர் தோன்றி. தான தர்மப் பலன் பற்றி தருமரிடம் விரிவாக எடுத்துரைத்து மறைந்தார்.
41-அட்சயபாத்திரம்
பாண்டவர்களது வனவாசம் முடிவுக்கு வரும் காலம் நெருங்குவதை உணர்ந்த துரியோதனன் அவர்களை எப்படி அழிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான். அப்போது துர்வாசர் பத்தாயிரம் சீடர்களுடன் துரியோதனன் இருக்கும் இடம் வந்தார். துர்வாசரின் மந்திர சக்தி அனைவரும் அறிந்ததே. அவர் அருளிய மந்திர சக்திதான் கன்னிப்பருவத்தில் குந்தி கர்ணனை பெற்று எடுக்க காரணமாய் அமைந்தது.
அவருக்கு அருளும் சக்தியும் உண்டு. பிறரை மருளச் செய்யும் சக்தியும் உண்டு.
தன் சூழ்ச்சிக்கு துர்வாசரை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் துரியோதனன். அதனால் அவரை நன்கு உபசரித்து வணங்கினான், அவனது உபசரிப்பைக் கண்டு மகிழ்ந்தவர் 'உனக்கு வேண்டும் வரம் கேள்' என்றார். துர்வாசர் சினம் கொண்டால் அதைத் தடுத்து நிறுத்தவும் யாராலும் முடியாது.
தவமுனிவரே! நீங்கள் பாண்டவர் இருக்குமிடம் செல்ல வேண்டும்.அங்கு அவர்கள் அனைவரும் உணவு உண்டபின் செல்ல வேண்டும்'' என வேண்டினான்.(எல்லோரும் உணவு உண்டதும் சென்றால். அட்சயபாத்திரத்தில் உணவு பெருகாது. துர்வாசருக்கு உணவு அளிக்கமுடியாது. அதனால் அவர் சினம் கொண்டு அவர்களுக்கு சாபமிட்டு அழித்து விடுவார் என எண்ணினான்.)
துர்வாசரும். பாண்டவர் இருக்குமிடம், தன் சீடர்களுடன் சென்றார். அவர்களை பாண்டவர்கள் முறைப்படி வரவேற்றனர். நீராடிவிட்டு வருவதாகக் கூறிவிட்டு,சீடர்களுடன் தடாகம் சென்றார் அவர். 'அட்சயபாத்திரத்தில்..இனி உணவு பெருகாதே' என திரௌபதி கலக்கமுற்றாள்.கண்ணனை பிரார்த்தித்தாள்.கண்ணனும் அவள் முன் தோன்றி..தன் பசியை போக்கக் கோரினார். திகைத்தாள் திரௌபதி.
கண்ணன் அந்த அட்சயபாத்திரத்தை கொண்டுவருமாறு பணித்தார்.
அதில் ஒன்றும் இல்லை என்றவாறு..அப்பாத்திரத்தை கொணர்ந்தாள் பாஞ்சாலி. ஆனால் அதன் மூலையில். ஓரத்தில்..ஒரு சோற்று பருக்கை இருந்தது. அதை எடுத்து கண்ணன் வாயில் போட..பாரதம் முழுதும்..பசி அடங்கியது. நீராட சென்ற முனிவருக்கும். பரிவாரங்களுக்கும் அவர்கள் இதுவரை சுவைத்தறியா உணவு உண்ட திருப்தி ஏற்பட்டது.
அப்போதுதான்..முனிவரும்..காலமில்லா காலத்தில் தருமரின் ஆசிரம் சென்று, அவர்களை சோதனைக்கு உட்படுத்தியது தவறு என உணர்ந்தார். இப்படியாக..துரியோதனனின் இம் முயற்சி தோல்வி அடைந்தது.
42-ஜயத்ரதனின் தவம்
காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றனர். திரௌபதி சில பணியாளர்களுடன் தனித்து இருந்தாள். அப்போது சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் சால்வ தேசத்தை நோக்கி அக்காட்டு வழி சென்றான். அவனுடன் கோடிகாச்யன் முதலிய அரசர்களும் சென்றனர்.
ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை ஜயத்ரதன் கண்டான்.கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான். திரௌபதி ..அது கொடிய செயல் என்றும்..தனது வரலாற்றையும் கூறினாள். 'தருமர் வடக்கேயும், பீமன் தெற்கேயும், அர்ச்சுனன் மேற்கேயும், நகுல,சகாதேவர்கள் கிழக்கேயும் வேட்டைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் வருவதற்குள் இந்த இடத்தை விட்டு சென்றுவிடு .இல்லையேல் அவர்களால் உனக்கு ஆபத்து ஏற்படும்.' என்றாள்.
அந்த முரடன் எதையும் கேட்பதாய் இல்லை..காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான்.அவளது மேலாடையைப்பற்றி இழுத்து தேர் மீது ஏற்ற நினைத்தான். அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.
வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஓரிடத்தில் கூடினர்.அப்போது..'ஆச்ரமத்தில் ஏதோ ஆபத்து நேர்ந்ததற்கான அபசகுனம் தோன்றுகிறது' என்றார் தருமர். விரைவில் ஐவரும் ஆச்ரமத்திற்கு விரைந்தனர். ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர். தேர் சென்ற சுவடை வைத்து. சென்று..ஜயத்ரதனுடன் போரிட்டனர். அவனுடன் வந்த அரசர்கள் தோற்று ஓடினர். ஓட முயன்ற ஜயத்ரதனை பீமன் கடுமையாக தாக்கினான். அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன்.
'தம்பி..இவனை விட்டு விடு. இவன் நமக்கு மைத்துனன். துரியோதனின் தங்கையான துச்சலையின் கணவன்' என்றார். நாணித்தலைக் குனிந்து திரும்பிய ஜயத்ரதன்..கங்கைக் கரைக்குச் சென்று கடும் தவம் இருந்தான்.
சிவன் காட்சியளித்து..'என்ன வரம் வேண்டும்?' என்றார். பாண்டவர்களைக் கொல்லத்தக்க வலிமையை எனக்கு அருள வேண்டும்..என வேண்டினான்.
'கண்ணனின் துணையிருப்பதால். உன்னால் பாண்டவர்களை வெல்ல முடியாது. ஆனாலும் அவர்களை ஒரு நாள் எதிர்த்து நிற்குமாற்றலை உனக்கு அளிக்கிறேன். ஆனால்..அதனால் அவர்களை அழித்தொழிக்கமுடியும் என எண்ணாதே..' என்று கூறி மறைந்தார்.
அதுவே போதும் என்ற ஜயத்ரதன்..நகரம் போய்ச் சேர்ந்தான். இந்த ஜயத்ரதன் தான் 13ம் நாள் போரில் மாவீரன் அபிமன்யுவைக் கொன்றவன்.
43-யட்சன்
பன்னிரண்டு கால வனவாசம் நெருங்கியது. அதற்குள் பாண்டவர்களுக்கு ஒரு சோதனை வந்தது. வேள்விக்கு உதவும். அரணியுடன் கூடிய கடைகோல் ஒன்றை முனிவர் ஒருவர் இழந்தார். அது ஒரு மானின் கொம்பில் ஒட்டிக்கொள்ள...மருண்ட மான்..அதனுடன் ஓட்டம் பிடித்தது.தமது வேள்வி தடைபடாமல் இருக்க..அதை மீட்டுத்தரும்படி..பாண்டவர்களை அம்முனிவர் கேட்டார்.
மானைத் தொடர்ந்து..பாண்டவர்களும் ஓடினர்.ஆயினும் மானைப் பிடிக்க இயலவில்லை.மானும் ஓடி மறைந்தது. முனிவருக்கு உதவ முடியவில்லையே..ஏன் இந்த இழிவு நமக்கு..என பாண்டவர்கள் எண்ணினர். பாஞ்சாலியை அவையில் அவமானப் படுத்தினவனை ..அன்றே கொன்றிருக்க வேண்டும்..அதனால்தான் இந்த இழிவு...என்றான் பீமன்.
அன்று நாக்கில் நரம்பின்றி பேசினானே கர்ணன். அவனை அன்றே கொன்றிருக்க வேண்டும். அதனால்தான் இந்த இழிவு என்றான் பார்த்தன். சகுனி மாயச் சூதாடும்போது. அப்போதே அவனை கொன்றிருக்க வேண்டும். அதனால் தான் இந்த இழிவு என்றான் சகாதேவன்.
இந்நிலையில் தாகம் ஏற்பட. நகுலனை தண்ணீர் எடுத்துவரக் கூறினார் தருமர். தண்ணீரைத் தேடி அலைந்த நகுலன். வெகு தொலைவில். ஒரு தோப்புக்கு நடுவே ஒரு குளம் இருப்பதைக் கண்டான். அதன் அருகே சென்று. நீரை மொண்டு பருக ஆரம்பிக்கையில் 'நில்' என்ற குரல் கேட்டது. அதை அலட்சியம் செய்துவிட்டு. நகுலன் நீரைப் பருக அவன் சுருண்டு வீழ்ந்து மாண்டான். நீண்ட நேரம் ஆகியும் நகுலன் வராததால். சகாதேவனை. தருமர் அனுப்ப..அவனுக்கும்..நகுலனுக்கு ஆன கதியே ஆயிற்று.
பின்னர் அனுப்பப்பட்ட பார்த்தன் .பீமன் ஆகியோரும் இக்கதிக்கு ஆளாகினர். நீண்ட நேரம் எவரும் திரும்பாததால்..தருமர்..அனைவரையும் தேடிச் சென்றார்.
அவர்களுக்கு ஆனக் கதியை எண்ணி..புலம்பி..அழுதார். நாக்கு வரண்டது. தண்ணீர் அருந்த நினைத்த போது...'நில்' என்றது ஒரு குரல்.. இத் தடாகம் என்னுடையது. என் அனுமதியின்றி இவர்கள் இறங்கியதால்..இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. என் கேள்விகளுக்கு பதில் தராவிடின்... உன் முடிவும் இப்படித்தான் ஆகும்.நான் கேட்கும் கேள்விகளுக்கு...தகுந்த விடை அளித்தால்...நீ நீர் பருகலாம்' என்றது.
இது யட்சன் குரல் என அறிந்த தருமர்.. 'கேளுங்கள்..என்னால் இயன்றவரை பதில் தருகிறேன்' என்றார்.
மஹாபாரதம் - விரிவாக பகுதி - 2
SUNDAY, 27 JANUARY 2013 03:10 ADMINISTRATOR E-mail Print PDF
44 - யட்சன் கேள்வியும்..தருமர் பதிலும்
யட்சன்- சூரியனை உதிக்கச் செய்வது யார்?
தருமர்-பிரம்மா
சூரியன் எதில் நிலைத்து நிற்கிறான் - சத்தியத்தில்
ஒருவன் எதனால் சிறப்படைகிறான் - மன உறுதியால்
சாதுக்களின் தருமம் எது - தவம்
உழவர்களுக்கு எது முக்கியம் - மழை
விதைப்பதற்கு எது சிறந்தது - நல்ல விதை
பூமியைவிட பொறுமை மிக்கவர் யார் - தாய்
வானினும் உயர்ந்தவர் யார் - தந்தை
காற்றினும் விரைந்து செல்லக்கூடியது எது - மனம்
புல்லைவிட அதிகமானது எது - கவலை
ஒரு மனிதனுக்கு உயிர் போன்றவர் யார் - மகன்
மனிதனுக்கு தெய்வத்தால் கிடைத்த நன்மை எது - மனைவி
ஒருவன் விட வேண்டியது எதனை - தற்பெருமையை
யார் உயிர் அற்றவன் - வறுமையாளன்
எது தவம் - மன அடக்கம்
பொறுமை என்பது எது - இன்ப துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்
உயர்ந்தோர் என்பவர் யார் - நல்லொழுக்கம் உடையவர்
மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார் - கடன் வாங்காதவர்
தூங்கும் போது கண்களை மூடாமல் இருப்பது எது - மீன்
45 - யட்சன் கேள்வியும்..தருமர் பதிலும் (தொடர்ச்சி)
யட்சன்-இதயம் இல்லாதது எது - தர்மர்-கல்
உலகம் எங்கும் செல்பவனுக்கு உற்ற துணை எது - கல்வி
வேகம் மிக்கது எது - நதி
நோய் உடையவனின் நண்பன் யார் - மருத்துவர்
உயிர் விடுபவனுக்கு உற்ற துணை யார் - அவன் செய்த நல்லறம்
எது அமிழ்தம் - பால்
வெற்றிக்கு அடிப்படை எது - விடா முயற்சி
புகழ் வாழ்க்கை எதனால் அடையலாம் - இல்லாதவர்க்கு ஒன்றைத் தருவதால்
உலகில் தனியாக உலா வருபவன் யார் - சூரியன்
உலகில் மிகச் சிறந்த தர்மம் எது - கொல்லாமை
உலகெங்கும் நிறைந்திருப்பது எது - அஞ்ஞானம்
முக்திக்கு உரிய வழி எது - பற்றினை முற்றும் விலக்குதல்
யாரிடம் கொண்ட நட்பு மேன்மை உடையது - சாதுக்களிடம் கொண்ட நட்பு
நாட்டுக்கு உயிர் போன்றவன் யார் - அரசன்
எது ஞானம் - மெய்ப்பொருளை (கடவுள்) அறிவதே ஞானம்
ஒருவனுக்கு பகையாவது எது - கோபம்
முக்திக்கு தடையாக இருப்பது எது - 'நான்' என்னும் ஆணவம்
பிறப்புக்கு வித்திடுவது எது - ஆசை
எப்போதும் நிறைவேறாதது எது - பேராசை
யார் முனிவர் - ஆசை அற்றவர்
எது நல்வழி - சான்றோர் செல்லும் வழி
எது வியப்பானது - நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்ட போதும்..தனக்கு மரணம் இல்லையென்று மனிதன் கருதுகின்றானே அதுதான் வியப்பானது
மீண்டும் பிறவி வராமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும் - எப்போதும் நல்லறமே செய்தல் வேண்டும்.
46 - வனபர்வம் முடிந்தது
தருமரின் பதில்களில் திருப்தியடைந்த யட்சன் 'தருமரே..உமது தம்பியரில் யாருக்கேனும் உயிர் தருகிறேன்..யாருக்கு வேண்டும்?' எனக் கேட்க...தருமர்..'நகுலன் உயிர் பெற வேண்டும்' என்றார்.
உன் உடன் பிறந்த மகாவீரர்களான..அர்ச்சுனன், பீமனை விடுத்து..நகுலன் உயிரை ஏன் விரும்புகிறாய்..என்ற யட்சனுக்கு..தருமர்..'என் தந்தைக்கு குந்தி,மாத்ரி என இரு மனையியர்.இருவருமே எங்களுக்கு தாயார்கள் தான்..ஆயினும்..இருவரும் புத்திரர் உள்ளவராக விரும்புகிறேன்' என்றார்.
தருமரின்..பரந்த மனதைப்பாராட்டிய யட்சன்..'எல்லோரும் உயிர் பெறட்டும்' எனக் கூற...உறங்கி எழுவது போல அனைவருமெழுந்தனர்.
பின்னர் தன்னை பல கேள்விகள் கேட்ட யட்சனை தருமர் ஒரு கேள்வி கேட்டார். 'யாராலும் வெற்றி கொள்ள முடியாத...என் தம்பியரை..மாய்த்துப் பின் உயிர் பெறச் செய்த தாங்கள் யார்'என்றார்.
'மகனே! நான் தர்ம தேவதை..நான் உனக்கு தேய்வீகத் தந்தை.நீ உனது கொள்கையில் எவ்வளவு தீவிரமாய் இருக்கிறாய் என பரீட்சித்தேன்..உனக்கு வேண்டும் வரம் கேள்' என்றார்.
'தரும தேவதையே!முனிவருக்கு அரணியுடன் கூடிய கடைகோலை தர வேண்டும்' என்றார் தருமர்.
'மானாக வந்து அதைக் கவர்ந்தது நான்தான்..இந்தா' என தர்ம தேவதை..திருப்பிக் கொடுக்க தருமர் பெற்றுக் கொண்டார்.
'இன்னும்..என்ன வரம் வேண்டும்..கேள்' என்றது தர்ம தேவதை.
'பன்னிரெண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்த வனவாசம் போல..ஓராண்டு அஞ்ஞாதவாசமும் அமைய வேண்டும்' என்றார் தருமர்.
"உங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது..நீங்கள் வெற்றி வீரராக திகழ்வீர்கள்' என அருளி தர்ம தேவதை மறைந்தது.
பாண்டவர்கள் பின் ஆச்ரமத்தை அடைந்து..கடைகோலை முனிவரிடம் கொடுத்து வணங்கினர்.
பின் ஓராண்டு அஞ்ஞாத வாசம் பற்றி திட்டமிட்டனர்.வனவாசத்தின் போது உடன் இருந்த முனிவர்களையும், மற்றவர்களையும்...அஞ்ஞாதவாசம் இருக்கும் போது உடன் இருக்க முடியாது என்பதால்....அனைவரும் தருமரின் வேண்டுகோளை ஏற்று பிரிந்து சென்றனர்.இனி அட்சயபாத்திரத்தின் தேவையும் இருக்காது என்றாயிற்று.
வன பர்வம் முற்றியது..
47-விராட நாட்டு நிகழ்ச்சிகளைக் கூறும் விராட பர்வம். யார்..யார்..எப்படி..?
ஓராண்டுகால அஞ்ஞாத வாசத்தை எப்படி நிறைவேற்றுவது என ஆலோசித்த பாண்டவர்கள்..அதற்கு விராட நாடே ஏற்றது என முடிவு செய்தனர்.
அப்போது அர்ச்சுனன் தருமரிடம்..'அண்ணா.., தாங்கள் ராஜசூய யாகம் செய்த மன்னர்..அங்கு போய் விராடனுக்கு பணிந்து எப்படி இருக்க முடியும்?'என்றான்.
அப்போது தருமர்..'தம்பி வருந்தாதே..கங்கன் என்னும் பெயருடன் துறவுக் கோலம் பூண்டு..விராட மன்னனுக்கு ஆசி கூறும் உயர் நிலையில் இருப்பேன்' என்றார்.
பின் ஒவ்வொருவரும் எப்படி மாறுவேஷத்தில் இருப்பது எனப் புலப்படுத்தினர்.
தான் சமையல்கலையில் வல்லவன் என்றும்..மடைப்பள்ளியைச் சார்ந்து வல்லன் என்னும் பெயருடன் சுவையான உணவு மன்னனுக்கு அளிக்கும் பணியில் ஈடுபடுவேன்...என்றான் பீமன்.
தான் இந்திரலோகத்தில் பெற்ற சாபத்தை பயன்படுத்திக் கொள்ளப் போகதாகவும்..அதன்படி 'பேடி'வேஷம் தாங்கி..பிருகன்னளை என்ற பெயருடன்..அரசகுமாரிக்கு நடனம், இசை ஆகியவை கற்றுத் தரும் பணியில் ஈடுபடப் போவதாக அர்ச்சுனன் கூறினான்.
தான் குதிரை இலக்கணங்களை அறிந்திருப்பதால்..தாமக்கிரந்தி என்ற பெயரில்..குதிரைகளை பாதுகாப்பாக வளர்க்கும் பணியில் ஈடுபடப் போவதாக நகுலன் கூறினான்.
தான் தந்திரிபாலன் என்ற பெயரில்..மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் ஈடுபடப்போவதாக சகாதேவன் உரைத்தான்.
தான் சைரந்தரி என்னும் பெயருடன் மன்னன் மனைவிக்கு ஒப்பனை
செய்யும் பணியில் ஈடுபடுவேன் என்றாள் திரௌபதி.
பின்...தங்கள் ஆடை..மற்றும் ஆயுதங்களை வைக்க இடம் தேடி..மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு சுடுகாட்டில்..ஓங்கி வளர்ந்த ஒரு வன்னி மரத்தின்..உச்சியில் இருந்த பொந்தில் அனைவற்றையும் வைத்தனர்.
பின்னர் தருமர் துர்க்கையை நோக்கி தியானம் செய்ய..துர்க்கையும் காட்சி அளித்து..அஞ்ஞாத வாசம் நல்லபடி நடந்தேறும் என்றும்..பின் போரில் வெற்றியும் கிடைக்கும் என்றும் வரம் அளித்து மறைந்தது.
தருமருக்கு..பின் தெய்வீகத் தந்தையின் அருளால் துறவிக் கோலம் தானாகவே வந்தமைந்தது.காவியும்,கமண்டலமும் ஏந்தித் தூய துறவியாகவே காட்சியளித்தார்.
அதைப்போலவே..மற்றவர்கள் தோற்றமும்..அவரவர்கள் நினைத்தபடி மாறின.
48 - வேலையில் அமர்ந்தனர்
தருமர்..சாத்திரச் சுவடியும்..தர்ப்பைப் புல்லும் கொண்டு கங்கன் எண்ணும் பெயருடன் விராடனைச் சந்தித்தார்.விராடனும்...அவரது நட்பு தனக்குத் தேவை என அவரை தன்னிடமே இருக்க வேண்டினான்.
பின் பீமன் ஒருநாள் வந்து..தன் பெயர் வல்லன் என்றும்..தனக்கு சமையல் வேலை தெரியும் என்றும்..யுதிஷ்டர் இடத்தில் சமையல்காரனாய் இருந்ததாகவும் கூறினான்.அவன் பேச்சில் நம்பிக்கை ஏற்பட..விராடனும் அவனை..அரண்மனை சமையல்காரர்களுக்கு தலைவனாக இருக்க கட்டளையிட்டான்.
திருநங்கை வடிவில் வந்த அர்ச்சுனனோ..தன் பெயர் பிருகன்னளை என்றும்..தான் ஆடல் பாடல்களில் பயிற்சி பெற்றுள்ளதாகவும்..மன்னரின் மகளுக்கு..நல்லிசையும் , நாட்டியமும் கற்றுத்தத் தயார் என்றான்..வாய்ப்பும் கிட்டியது.
பின் வந்த நகுலன்...'தாமக்கிரந்தி' என்பது தன் பெயர் என்றும்...குதிரைகள் இலக்கணம் தனக்குத் தெரியும் என்றும்...யுதிஷ்டரின் குதிரைகளை அடக்கிய அனுபவம் உண்டு என்றும் கூற...விராடன்..குதிரைகளை காக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான்.
சகாதேவன்..தந்திரிபாலன் என அங்கு வந்தான்.தான் பாண்டவர்களின் பசுக்கூட்டத்தை அக்கறையுடன் கவனித்துக் கொண்ட அனுபவத்தைக் கூற மன்னனும்..அந்தப் பணியை அவனுக்குக் கொடுத்தான்.
திரௌபதியோ...சைரந்திரி என்ற பெயருடன் வந்தாள்.தன்னை ஒரு வேலைக்காரி என்று ராணியார் சுதேட்சணையிடம் அறிமுகம் செய்துக் கொண்டால்.தனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்கள் என்றும் ஒரு சாபத்தால் பிரிந்திருப்பதாகவும் உரைத்தாள்.இந்த பிரிவு ஓராண்டுகள் மட்டுமே என்றாள்.
ஆனால்..அரசமாதேவியோ 'பெண்ணே!..உன் அழகு..பிற ஆடவரால்..உன் கற்புக்கு பங்கத்தை ஏற்படுத்தி விடுமோ என அஞ்சுகிறேன்..'ஏன்றாள்.
'அரசியாரே!..தாங்கள் கவலைப்பட வேண்டாம்..என் கணவர்கள் வெளித்தோற்றத்திற்கு தெரியமாட்டார்களே தவிர..என்னை உயிர்போல் பாதுகாப்பர்.எவனாவது..என்னிடம் முறைதவறினால் கொல்லப்படுவார்கள்' என திரௌபதி உரைத்தால்.
பாண்டவர் தேவிக்கு..ஒப்பனை செய்த அனுபவம் உண்டு என்றும்..அரசிக்கு அப்பணியை செய்வதாகவும் உரைத்தாள்.
அரண்மனையில் வேலைக்காரர்களாக அனைவரும் இருந்தது..விதியின் கொடுமை என்றாலும்...மேற்கொண்ட பணியை நன்கு செய்து முடித்தார்கள்.
49 - கீசகன் வதம்
விராட நாட்டில் விழாக்கள் நடக்கும்.விழாக்காலங்களில் பல விளையாட்டுகள் நடைபெறும்.வடக்கே இருந்து ஜீமுதன் என்ற மல்லன் வந்தான்.அவன் விராட நாட்டு மன்னர்களை எளிதாக வென்றான்.பின்னர்..'என்னுடன் மற்போர் புரிபவர் யாரும் இல்லையா?' என அறைகூவல் விடுத்தான்.
யாரும் வரவில்லை.மன்னன் மனம் வருந்த,கங்கர்..'அரசே..புதிதாக சேர்ந்திருக்கும் வல்லன் என்னும் சமையற்காரன்..போர் புரிவதில் வல்லவன் என நினைக்கிறேன்..அவனை அழையுங்கள்' என்றார்.
மன்னனும் அவ்வாறே செய்ய..வல்லனும்...ஜீமுதனும் மோதினர்.வடநாட்டு மல்லன் தோற்று ஓடினான்.
பத்து மாதங்கள் அஞ்ஞாத வாசம் கழிந்தது.பின் ஒரு நாள்..அரசி சுதேட்சணைக்கு தம்பி ஒருவன் இருந்தான்.அவன் பெயர் கீசகன்.அவன் அந்த நாட்டு படைத்தளபதியும் ஆவான். அவன் ஒரு நாள்..அரசியைக் காண வந்த போது..சைரந்தரியைக் கண்டான்.ஆசைக் கொண்டான்.தன் இச்சைக்கு பணியுமாறு கேட்டான்.
வீண் தொல்லை தராதே! என் கந்தர்வக் கணவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்' என சைரந்தரி எச்சரித்தாள்.
காதல் மயக்கம் தீராத அவன்..அரசியிடம் சென்று..அவ்வேலைக்காரியை எனக்கு பணியச் சொல் என்றான்.
தம்பி..அவள் அடைக்கலமாய் வந்தவள்..அவளுக்கு தீங்கு இழைத்தால்..அவளின் கந்தர்வக் கணவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள்' என்றாள்.
ஆனால் அவன் பயப்படவில்லை..காதல் நோயால் மயங்கினான்.வேறு வழி தெரியாத அரசி..சைரந்தரியிடம் கீசகன் வீட்டிற்கு உணவு கொண்டு செல்ல பணித்தாள்.
'நீ தான் போக வேண்டும்" என அரசி கடுமையாக ஆணையிட்டாள்.
சைரந்தரியும் சென்றாள்.அவள் கையைப் பிடித்து இழுத்து..அவளை கீசகன் அணைக்க முயன்றான்.ஓடிய அவளை எட்டி உதைத்தான்.அரசமண்டபத்திற்கு வந்துவிட்டார்கள் அவர்கள்."இந்த அநீதியைக் கேட்பார் இல்லையா?' என கதறினாள்.விராட மன்னன் உட்பட அனைவரும் வாளாயிருந்தனர்.
பீமன் அவளை தனியாக சந்தித்து ஒரு யோசனைக் கூறினான்.அதன்படி சைரந்தரியும்...கீசகன் ஆசைக்கு இணங்குவது போல நடித்து..அவனை நடனசாலைக்கு வரச் சொன்னாள்.
கீசகனும் வந்தான்...கட்டிலில் போர்வை போர்த்தி படுத்திருப்பது அவள்தான் என எண்ணி ஆசையோடு அணைக்கப் போனான்.வீறு கொண்டு எழுந்த பீமன்..அவனைத் தாக்கி காலில் இட்டுத் தேய்த்துக் கொன்றான்.
கீசகன் கொல்லப்பட்ட சேதி கேட்ட அவன் சகோதரர்கள் சைரந்தரியைக் கொல்லவர ..பீமன் அவர்களையும் கொன்றான்.
பொழுது விடிந்ததும்..அவர்களை கந்தர்வர்கள் தான் கொன்றார்கள்..என விராடான் உட்பட அனைவரும் நம்பினர்.
விராடன்..இதற்கெல்லாம் சைரந்தரிதான் காரணம்..என அவளை வெளியேற்றி விடுமாறு அரசியிடம் கூறினான்.
சைரந்தரி, அரசியிடம் இன்னும் ஒரு மாதம் பொறுத்திருக்கக் கூறினாள்.'கந்தர்வர்களால் இனி யாருக்கும் தீங்கு நேராது..நன்மையே நடக்கும்..இது சத்தியம்' என்றாள்.அரசியும் சரி என அனுமதித்தாள்.
50-விராடப் போர்
பதின்மூன்று ஆண்டுக்காலம் முடியும் நேரம் நெருங்கியதும் துரியோதனன் கலக்கம் அடைந்தான்.எப்படியாவது பாண்டவர்களைக் கண்டுபிடித்தால் அவர்கள் நிபந்தனையை நிறைவேற்றவில்லை என மீண்டும் வனவாசம் அனுப்பி விடலாம் என எண்ணினான்.ஒற்றர்களை அனுப்பினான்..அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறைந்த சூரியன்போல் பாண்டவர்கள் வருவார்கள்..'என்றார் பீஷ்மர்.
அப்போது ஒரு ஒற்றன் புது செய்தி கொண்டுவந்திருந்தான்.விராட நகரில்..கீசகன் பெண் ஒருத்தியின் காரணமாக கந்தர்வனால் கொல்லப்பட்டான் என்பதே அச்செய்தி.
உடனே துரியோதனன்'அந்தப் பெண்..திரௌபதியே என்றான்.கீசகனைக் கொன்றவன் பீமனாகத்தான் இருக்க வேண்டும் என்றான்.பாண்டவர்கள் மாறு வேடத்தில் விராட நகரிலேதான் இருக்கிறார்கள்.
நாம் விராட நாட்டு மன்னனை முற்றுகையிட்டால்...அவனைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள்.கண்டுபிடித்து விடலாம்.மீண்டும்..நிபந்தனைப்படி பன்னிரண்டு காலம் வனவாசம் அனுப்பிவிடலாம்' என்றான்.
அப்போது..விராடனிடம் கொண்ட பழைய பகமைத் தீர்த்துக் கொள்ள இதுவே தருணம் என எண்ணிய..திரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மா அவர்கள் உதவிக்கு வந்தான்.தெந்திசைத் தாக்குதல் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.வடதிசைத் தாகுதலை துரியோதனன் மேற்கொண்டான்.ஏற்கனவே கீசகனை இழந்து விராட நாடு வலுவிழந்திருக்கும் என துரியோதனன் எண்ணினான். முதலில் பசுக்கூட்டத்தை கவர்வது அவன் திட்டம்.அப்போது பசுக்களைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள் என்பது அவன் கணிப்பு.
போர் தொடங்கியது.
விராடனுக்கு உதவியாக அவனது சகோதரர்கள்..சதானிகன்.மதிராட்சன் ஆகியோரும் புறப்பட்டனர்.கங்கர்..தாமும் வல்லனும்,தாமக்கிரந்தியும்,தந்திரி பாலனும் உதவிக்கு வரலாமா? என்றார்.மன்னன் அனுமதித்தான்.ஆனால் மன்னன் சுசர்மா..விராடனை சிறைப் பிடித்தான்.விராடன் படை வீரர்கள் சிதறி ஓடினர்.அப்போது கங்கர்..வல்லனுக்கு சைகை செய்தார்.பீமன் உடன் ஆவேசத்துடன்..ஒரு மரத்தை வேருடன் பிடுங்கச் சென்றான்.கங்கர்..'இது பச்சை மரம்' என்றார்.(பீமன் தனது இயல்பான போர்முறையைக் காட்டக் கூடாது...சாதாரண வீரனைப் போல் போரிட வேண்டும்.ஏனெனில்..இன்னும் சில தினங்கள் அவர்கள் மறைந்திருக்க வேண்டியிருந்தது).பின் பீமன் ..வேறு முறையில் போரிட்டு சுசர்மனைத் தோற்கடித்தான்.விராடன் மீட்கப்பட்டான்.திரிகர்த்த நாட்டு மன்னனை கங்கர் மன்னித்து விட்டு விட்டார். ஆனால்...நாட்டின் வடக்குப் பக்க நிலை வேறாக இருந்தது.
51-அர்ச்சுனன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளல்
துரியோதனன் தனக்குத் துணையாகப் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,துச்சாதனன்,கர்ணன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பெரும் படையுடன்..விராட நாட்டின் வடக்குப் பக்கம் இருந்த பசுக்களைக் கவர்ந்தான்.அரண்மனையில் இருந்த அரசகுமாரன் உத்தரனுக்கு செய்தி போயிற்று. 'எனக்கு நல்ல சாரதி கிடைத்தால் அர்ச்சுனனைப் போல் போரிட்டு பகைவனை வெல்வேன்'என்றான்.அதனைக் கேட்ட சைரந்தரி..'பிருகன்னளை ஆடல் பாடலில் மட்டுமல்ல..தேரோட்டுவதிலும் வல்லவள்.இவளை சாரதியாகக் கொண்டு போருக்குப் போகலாம்' என்றாள்.
போருக்கு கிளம்பிய உத்தரன்..கௌரவர் சேனையைக் கண்டு திகைத்தான்.தேரினின்று குதித்து ஓடினான்.அவனை விரைந்து பிடித்த பிருகன்னளை..அவனுக்கு ஊக்கம் பிறக்கும் வண்ணம் உரையாடினாள்.இதை துரோணர் கண்டார்.
'சாரதியாக இருப்பவள்..பேடி அல்ல..அர்ச்சுனன் என நினைக்கிறேன்' என்றார்.கர்ணன் அதை மறுத்தான்.
பிருகன்னளை உத்தரனிடம்..'நீ தேரை செலுத்து..நான் போரிடுகிறேன்..'என்றாள்.உத்தரன் ஒப்புக் கொண்டான்.மரத்தின் பொந்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்கள் எடுத்துவரச் செய்தாள்.காண்டீபம் என்னும் வில்லை உத்தரனுக்குக் காட்டினாள்.அது அர்ச்சுனனுடையது. அதனால் அவன் தேவாசுரர்களை வென்றான்.
முதன் முதலில் இவ்வில்லை பிரமதேவர் வைத்திருந்தார்.பின்..சிவ பெருமான் வைத்திருந்தார்,பின் சந்திரனிடம் இருந்தது.அதன் பின் வருணன் சில ஆண்டுகள் வைத்திருந்தார்.அவரிடமிருந்து அக்கினி தேவன் கைக்கு வந்தது.அக்கினி தேவன் அர்ச்சுனனுக்கு கொடுத்தான்.மற்ற கருவிகளைப் பற்றியும்..பிருகன்னளை அர்ச்சுனனுக்கு விளக்கினாள்.அவை தருமர்,பீமன்,நகுலன்,சகாதேவன் ஆகியோருக்கு உரியவை என்றார்.
இவற்றைக் கேட்ட உத்திரன்..'பாண்டவர்கள் இப்போது எங்கே?" என்றான்.அப்போது பிருகன்னளை தான் அர்ச்சுனன் என்றும்...மற்றவர்கள் பற்றியும் விளக்கி, 'நாங்கள் ஓராண்டு மறைந்திருக்க வேண்டி..உங்கள் அரண்மனையில் அடைக்கலம் புகுந்தோம்..சில நாட்களில் எங்களை வெளிப்படுத்திக் கொள்வோம்.அது வரை எல்லாம் ரகசியமாக இருக்கட்டும்.உன்னைச் சார்ந்தவர்களீடம் கூட இதை வெளியிடாதே' என்றான்.
உடன் உத்திரன் வியப்படைந்தான்.'இனி நான் யாருக்கும் அஞ்சேன்..நானே உனக்கு பாகன்' என்றான் மகிழ்வோடு.
52- கௌரவர்கள் ஓடினர்.
பின் அர்ச்சுனன் ஊர்வசியை நினைத்துத் தனது பேடி உருவம் நீங்கினான்.தேரில் இருந்த சிங்கக் கொடியை இறக்கிக் குரங்கின் சின்னக் கொடியை ஏற்றினான்.
வருவது..அர்ச்சுனன் என்பதை அனைவரும் அறிந்தனர்.'யாரானால் என்ன..போர் தொடரட்டும்' என்றான் துரியோதனன்.
'நானே அர்ச்சுனனைக் கொல்வேன்' என்றான் கர்ணன்.
அர்ச்சுனன் இரண்டு அம்புகளை ஒரே சமயத்தில் செலுத்தினான்.அவற்றுள் ஒன்று..துரோணரின் பாதத்தில் விழுந்து குரு வணக்கம் செலுத்தியது.மற்றொன்று அவர் காதோரம் சென்று..போரிட அனுமதியும், ஆசியும் வேண்டியது.முதல் கடமையாக பசுக்களை மீட்க..சரமாரியாக அம்பெய்தினான்.பேரொலி கேட்ட பசுக்கள் பகைவரின் பிடியிலிருந்து தப்பி ஓடித் தங்கள் பண்ணையை அடைந்தன.கிளர்ந்து எழுந்த கௌரவ வீரர்களைக் கடந்து..கர்ணனைத் தாக்கினான், அர்ச்சுனன்.எதிர் நிற்க முடியாது..போர்க்களத்தை விட்டு கர்ணன் ஓடினான்.பின்னர் துரோணர்..அஸ்வத்தாமன் ,கிருபாச்சாரியார்..ஆகியோர் எதிர்க்கமுடியாது தலைக் குனிந்தனர்.
பின்னர்..பீஷ்மருடன் அர்ச்சுனன் போரிட்டான்.பிதாமரும் சோர்ந்து திரும்பினார்.பின்..துரியோதனனும் சிறிது நேரமே போர் புரிந்தான்.பின் தோற்று ஓடினான்.
துரியோதனா..நில்..நீ ஒரு வீரனா?உனக்கு மானம் இல்லையா? என அவன் மான உணர்ச்சியைத் தூண்டினான் பார்த்திபன்.பின் மோகனாஸ்திரத்தால்..அர்ச்சுனன் அனைவரையும் மயங்கச் செய்தான்.பின் அர்ச்சுனன் பீஷ்மரைத் தவிர மற்றவர்கள் அணிந்திருந்த பட்டுத் துணிகளை கவர்ந்து வருமாறு உத்திரனிடம் கூறினான்.அவனும் அவ்வாறே செய்தான்.
மோகானாஸ்திரத்தால் மயங்கி விழுந்தவர்கள்..மயக்கம் தெளிந்து எழுந்தவர்கள்..தோல்வியால் மனம் உடைந்தனர்.வெட்கத்தோடு அஸ்தினாபுரம் திரும்பினர்.
வெற்றி வீரர்களாக விஜயனும்..உத்தரனும் விராட நகரம் வந்தார்கள்.வரும் வழியில்..முன்பிருந்தபடியே ஆயுதங்களை ஒளித்துவைத்தனர்.அர்ச்சுனன் மீண்டும் பிருகன்னளையாகி தேர் ஓட்டிச்சென்றான்.
தென்திசையில்..திரிகர்த்த மன்னன் சுசர்மாவைத் தோற்கடித்து..வெற்றிவாகை சூடிய மன்னனை வரவேற்க விராட நகரம் தயாராகயிருந்தது.அப்போதுதான் தன் மகன் உத்தரன் காணப்படாததைக் கண்டு..விராட மன்னன் வினவ..அவன் வடதிசையில் கௌரவர்களை எதிர்க்கச் சென்றுள்ளான் என்ற செய்தி கேட்டு மன்னன் திகைத்தான்.'அங்கு மாவீரர்களான பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ஆகியோரை எப்படி என் மகன் வெல்வான்?' எனக் கவலையுற்றான்.
அப்போதுதான் மகனின் வெற்றிச் செய்தி மன்னனுக்கு எட்டியது.மிகச் சிறந்த வரவேற்புக்கு ஏற்பாடு செய்தான்.
53-விராட பருவம் முடிந்தது
விராட மன்னன்..கங்கருடன் சூதாடிக் கொண்டிருந்த போது..'பீஷ்மர் முதலானோரை வென்ற என் மகன் போல் உம்மை நான் வெல்வேன்' என்ரான்.
ஆனால்..அதற்கு கங்கர் 'பிருகன்னளையின் உதவியால்தான் உன் மகனுக்கு வெற்றி கிடைத்திருக்க வேண்டும்' என்றார்.இதனால்..கோபம் கொண்ட விராடன்..கையில் இருந்த பகடையை கங்கர் மீது வீசினான்.அவர் அவர் நெற்றியிலும்..வலது காதிலும் பட்டு ரத்தம் கொட்டிற்று.அருகில் இருந்த சைரந்தரி..பதறி..தன் மேலாடையால்..அந்த ரத்தத்தைத் துடைத்து..அதனை பிழிந்து ஒரு பாத்திரத்தில் ஏந்தினாள்.அச்செயல் மன்னனுக்கு அருவருப்பை ஏற்படுத்த..உடன் சைரந்தரி'இவர் ஒரு மகான்.இவர் ரத்தம் பூமியில் பட்டால்..மழை பொழியாது..உனக்குக் கேடு வரும்' என்றாள்.
இந்நிலையில்..உத்தரனும்..பிருகன்னளையும் வர 'உத்தரன் மட்டும் வரட்டும்' என்றார் கங்கர்.உள்ளே வந்த உத்தரன் கங்கரைக் கண்டான்.நேற்றியில் இருந்த காயத்தைப் பார்த்து 'இந்த கொடுமையை இழைத்தது யார்? என்றான்.மன்னன் அலட்சியமாக அது தன்னால் நேர்ந்தது என்றான்.
அவரின் காலில் விழுந்து மன்னனை மன்னிப்புக் கேட்கச் சொன்னான் உத்தரன்.பின் அவர்கள் யார் என்பதைக் கூறினான்.
பெரு மகிழ்ச்சியுற்ற மன்னன்..தன்னை மன்னிக்குமாறு கூறினான்..'என் நாட்டையே உங்களுக்குத் தருகிறேன்' என்றான்.அர்ச்சுனனை நோக்கி..'மாவீரனே..என் மகளுக்கு ஆடலும்..பாடலும் கற்பித்தவனே..என் மகள் உத்தரையை உனக்குத் தர விரும்புகிறேன்' என்றான்.
உடன் அர்ச்சுனன் 'மன்னா..ஒராண்டுக் காலம் உம் மகளை என் மகளாகவே நினைத்தேன்..அந்த மனநிலையை என்னால் மாற்ரிக் கொள்ள முடியாது.ஆகவே..என் மகன் அபிமன்யுவிற்கு அவளை மணம் செய்வியுங்கள்' என்றான். மன்னனும் ஒப்புக் கொண்டான்.
அப்போது..அஸ்தினாபுரத்திலிருந்து..துரியோதனனின் ஒற்றன் ஒருவன் வந்தான்.'ஒப்பந்தபடி 13ஆம் ஆண்டு முடிவிற்குள் நாங்கள் அர்ச்சுனனைப் பார்த்து விட்டோம்..ஆகவே நீங்கள் மீண்டும் வனவாசம் போக வேண்டும்' என்ற செய்தியுடன்.
அதற்கு தருமர்..'பதின்மூன்று ஆண்டுகள் மட்டுமின்றி மேலும் 5 மாதங்கள் கழித்தே நாங்கள் வெளிப்பட்டோம்.இக்கணக்கை பீஷ்மரேஉரைத்துள்ளார்' என்ற பதிலை அனுப்பினார்.
பாண்டவர்கள் வெளிப்ப்ட்ட செய்தி கேட்டு கண்ணன்,சுபத்ரை,அபிமன்யு ஆகியொர் விராட நாடு வந்தனர்.
திட்டமிட்டபடி..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிற்கும்..உத்தரைக்கும் மணம் நடந்தது.
(விராட பருவம் முற்றும்..இனி உத்தியோக பருவம்)
54-கிருஷ்ணன் யார் பக்கம்
அபிமன்யுவிற்கும் உத்தரைக்கும் திருமணம் நடந்த மறுநாள் பாண்டவர்களுடன்..திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த மன்னர்கள் வந்திருந்தனர்.தவிர..பலராமர்,கிருஷ்ணர்,துருபதன் ஆகியோரும் இருந்தனர்.எதிர்கால திட்டம் பற்றி கண்ணன் பேசினார்..
'துரியோதனன் வஞ்சனையால் நாட்டை கவர்ந்ததுடன்..பாண்டவர்களுக்கு நிபந்தனை விதித்தான்.அவற்றை பாண்டவர்கள் நிறைவேற்றிவிட்டனர்.இனி துரியோதனன் கருத்து அறிய ஒரு தூதுவனை அனுப்பி..நாட்டில் பாதியை ப் பாண்டவர்க்குத் தர கூற வேண்டும்' என்றார்..
ஆனால்..கண்ணனின் இக்கருத்தை பலராமர் ஏற்கவில்லை.'சூதாட்டத்தில் தோற்ற நாட்டை திரும்பவும் தருமாறு வற்புறுத்துவது நியாயமில்லை.தூதுவன் நயமாக பேசிப்பார்க்கலாம்.கொடுத்தால் பெறலாம்.ஆனால் அதற்காக போர் கூடாது' என்றார்.
'இந்த முக்ய பிரச்னையில் பலராமரின் கருத்து ஏற்றத்தக்கதல்ல.பலநாட்டு மன்னர்களின் உதவி பெற வேண்டும்.முதலில் கேட்போர்க்கே உதவுதல் மன்னரின் இயல்பாகும்.ஆகவே உடன் செயல்பட வேண்டும்.துரியோதனனிடம் செல்லும் தூதுவன் திறை வாய்ந்தவனாய் இருக்க வேண்டும்' என்றார் துருபதன்.
துருபதனின் கருத்து ஏற்கப்பட்டது.
பிற மன்னர்களின் உதவியைப் பெறுவதில்..துரியோதனன் முனைப்புக் காட்டினான்.கண்ணனைப் பார்க்க துவாரகைக்குச் சென்றான்.அதே நேரம் அர்ச்சுனனும் சென்றான்.அப்போது கண்ணன் உறங்கிக் கொண்டிருந்தார்.கண்ணனின் தலைப்பக்கம் துரியோதனனும்,கால் பக்கம் அர்ச்சுனனும் அமர்ந்திருந்தனர்.கண்விழித்துப் பார்த்த பரமன் கண்களில் முதலில் அர்ச்சுனனே தென்பட்டான்.அர்ச்சுனன் பரமனின் உதவியைக் கேட்டான்.துரியோதனனும் அதே சமயம் கேட்டான்.'நானே முதலில் வந்தேன்' என்றான் துரியோதனன்.'ஆனால் நான் பார்த்தனைத்தான் முதலில் பார்த்தேன் என்றார் கண்னன்.ஆயினும் என் உதவி இருவருக்கும் உண்டு.என் உதவியை இரண்டாகப் பிரிக்கிறேன்.ஆயுதம் இல்லா நான் ஒரு பங்கு..ஆயுதம் ஏந்தி கடும் போர் புரியும் அக்குரோணிப்படைகள் ஒரு பங்கு.அர்ச்சுனன் இளையவனாக இருப்பதால்..அவன் விரும்பியது போக எஞ்சியது உனக்கு'என்றார் கண்ணன்.
அர்ச்சுனன் கண்ணன் மட்டுமே போதும் என்றான்.தனக்குக் கிடைத்த படைப் பெருக்கம் குறித்துப் பெரிதும் மகிழ்ந்தான்..துரியோதனன்.
பின்..பலராமரிடம் செண்ரு உதவிக் கோரினான் துரியோதனன்.பலராமரோ'கண்ணனுக்கு எதிராக என்னால் செயல் பட முடியாது.அதே சமயம் நான் பாண்டவர் பக்கம் போக மாட்டேன்.நடுநிலைமை வகிப்பேன்.போர் நடக்கையில் தீர்த்தயாத்திரை செல்வேன்'என்று கூறிவிட்டார்.
55-சல்லியன் யார் பக்கம்
மத்ர தேச மன்னன் சல்லியன் நகுல,சகாதேவர்களின் தாய் மாமன்.பாண்டவர்கள் அவனை தங்கள் பக்கம் இருக்க வேண்டினர்.அவனும் அதையே விரும்பினான்.பெரும் படையுடன்..பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றான்.
அவன் செல்லும் வழியெல்லாம்..பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.படைவீரர்களுக்கு சிறந்த உணவு தரப்பட்டது.இவை யாவும்..துரியோதனன் ஏற்பாடாகும்.இது அறியா சல்லியன்..இவை த்ருமரால் செய்யப்பட்டது என எண்ணினான்.இது துரியோதனனுக்கு தெரிய வந்தது.அவன் ஓடோடி வந்து..சல்லியனிடம்'எங்கள் வரவேற்பை ஏற்றமைக்கு நன்றி' என்றான்.
துரியோதனின் சூழ்ச்சி வேலை செய்தது.. சல்லியன்'இவ்வளவு உபசரிப்பு அளித்தமைக்கு என்ன கைமாறு செய்வேன்' என்றான்.
வரும் போரில் தாங்கள் எங்களுக்கு உதவிட வேண்டும்..என்றான் துரியோதனன்.சல்லியன் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டான்.ஆயினும்..துரியோதனனுக்கு தன் ஆதரவு உண்டு என்றான்.
பாண்டவர்களை திட்டமிட்டபடி சந்தித்த சல்லியன், இடை வழியில் நடந்தவற்றைக் கூறினான்.பாண்டவர்கள் அதிச்சியுற்றனர்.
என்ன செய்வது என அறியாத தருமர்..ஒருவாறு மனம் தேறி, சல்லியனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.வரவிருக்கும் போரில் கர்ணனுக்கு தேரோட்டும் நிலை ஏற்படின்..அர்ச்சுனனின் பெருமையை..அவ்வப்போது அவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே அவ்வேண்டுகோள்.பதினேழாம் நாள் போரில் சல்லியன் இதை நிறைவேற்றியதை பின் காண்போம்.
பாண்டவர்களின் தூது
பாண்டவர்களின் தூதுவன்..பாஞ்சால நாட்டுத் துருபதனின் புரோகிதன் அஸ்தினாபுரம் அடைந்தான்.பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள்..காட்டிலும்..நாட்டிலும்..நிபந்தனைப்படி வாழ்ந்து விட்டனர்.அவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதே சரியான நீதியாகும்.அப்படி அளிக்காவிடின் யுத்தம் தவிர்க்கமுடியாது..என்றான்.
தூதுவன் உரை கேட்டுக் கர்ணன் கோபமுற்றான்.பாண்டவர்களை வெற்றிக் கொள்ளத் த்ன்னால் முடியும் என்றான்.
கர்ணன் சொன்னதை பீஷ்மர் ஏற்கவில்லை.திருதிராட்டிரன் தூதுவனை திரும்பிப் போக பணித்தான்.
56-சஞ்சயன் தூது
பின்..திருதிராட்டிரன் கௌரவர்கள் கருத்தை பாண்டவர்களுக்குத் தெரிவிக்க சஞ்சயனை தூதுவனாக பாண்டவர்களிடம் அனுப்பினான்.'இந்திரப்பிரஸ்தத்தை மட்டுமல்ல..ஒரு கையளவு நிலம் கூட பாண்டவர்க்கு தரமுடியாது.போர் வருமேயாயின்..பாண்டவர் தோல்வியைத் தழுவுவர்.' என்றான் சஞ்சயன் பாண்டவர்களிடம்.
போரில் தருமருக்கு விருப்பமில்லை..ஆனாலும்..நாட்டைத் திருப்பித் தராவிடின்..போர் தவிர வேறு வழியில்லை என அறிந்துக்கொண்ட சஞ்சயன் அதை திருதிராட்டிரனிடம் வந்து தெரிவித்தான்.
திருதிராட்டிரன்..விதுரரை அழைத்து அவர் கருத்தைக் கேட்டான்.விதுரர் நீதிகளைக் கூறினார்.பாண்டவர்களை வீரம் மட்டும் காக்கவில்லை..அவர்கள் போற்றும் தர்மம்தான் அவர்களின் உன்னத படை என்றார்.மேலும்..துரியோதனனிடம்..அது இல்லை என்றும்..அவன் மகத்தான துன்பம் அடையப் போகிறான் என்றும் உரைத்தார்.
திருதிராட்டிரன்..விதுரர் கூறியது உண்மை என்பதை அறிந்தாலும்..புத்திரப் பாசத்தால் மதி இழந்து தடுமாறினார்.
அடுத்த நாள் சபையில் இது தெரிவிக்கப் பட்டது.
பீஷ்மர்..'இன்னமும் காலம் கடத்தாமல் பாண்டவர்களின் நாட்டை திருப்பிக் கொடுங்கள்.இல்லையேல் யுத்தத்தில் அனைவரும் மாண்டுவிடுவோம்' என்றார்.
வழக்கம் போல பீஷ்மரை கர்ணன் பழித்தான்.'இவர் நம்முடன் இருந்தாலும்..இவர் மனம் பாண்டவர் வசமே உள்ளது. யுத்தம் வந்தால் நான் ஒருவனே பகைவர்கள் அனைவரையும் அழிப்பேன்' என்றான்.
கர்ணனைக் கண்டித்தார் பீஷ்மர்.'உன் வீரம் அனைவருக்கும் தெரியும்..வெட்டித்தனமாய் பேசாதே' என்றார்.
'எப்போதும்..எனக்கு எதிராய் பேசுவது இவரின் இயல்பு.அர்ச்சுனன் பற்றி இவர் பெரிதாக நினைக்கிறார்.இவர் அர்ச்சுனனிடம் தோல்வி அடையும் வரை நான் போரில் இறங்க மாட்டேன்.பின் அர்ச்சுனனை நான் போரில் கொல்வேன்'என்று கூறிவிட்டு..சபையிலிருந்து வெளியேறினான் கர்ணன்.
துரியோதனனிடம்..பிடிவாதத்தை விடுமாறு திருதிராட்டிரன் கூறியும்..அவன் கேட்கவில்லை.
'தந்தையே! நான் அனைத்து விஷயமும் அறிந்தவன்.இந்த பாண்டவர்கள் சூதாடித்தோற்ற போதே ஏன் போருக்கு கிளர்ந்து எழவில்லை.அவர்களுக்கு மான உணர்ச்சி கிடையாது.சபதம் என்ற பெயரில் வீரவாதம் புரிந்தனர்.தருமர் ஒரு முறை சூதில் தொலைத்தவர்..மீண்டும் இரண்டாம் முறை ஏன் சூதாட வேண்டும்.கிருஷ்ணனின் துணை இப்போது இருப்பதால்..இப்போது போரிடத் தயார் என்கிறார்கள்.போர் தொடங்கட்டும் பார்ப்போம்.என்னிடம் 11 அக்ரோணி படை உள்ளது..அவர்களிடம் 7 மட்டுமே உண்டு.அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என நான் எண்ணவில்லை.அதனால்தான் 5 ஊர்கள் போதும் என கெஞ்சிக் கேட்கிறார்கள்.தந்தையே..5 ஊசிமுனை அளவு நிலம் கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன்' என்று கூறிக் கர்ணனைப் போல் அவனும் அவையை விட்டு வெளியேறினான்.
57-கண்ணன் தூது
சஞ்சயன் தூதாக வந்து சென்றபின்..தருமர்..எதற்கும் துரியோதனனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்றார்.அதற்கு கிருஷ்ணன் தயாரானார்.
ஆனால் பீமன் கொதித்து எழுந்தான்..'சமாதானம் வேண்டாம்..போர்தான் வேண்டும்' என்றான்.அர்ச்சுனன்,நகுலன்,சஹாதேவனும் சமாதான முயற்சியை விரும்பவில்லை.திரௌபதியும்..அழுதவாறே துரியோதனன் சபையில் தான் பட்ட வேதனையை நினைவூட்டினாள்.
கிருஷ்ணர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார்.இதை அறிந்த திருதிராட்டினன்..மகிழ்வது போல நடித்தான்..விதுரரை அழைத்து 'தேர்,யானை,குதிரை ஆகியவற்றையும் ரத்தினக் குவியல்களையும் பகவானுக்கு பரிசுப் பொருள்களாக வழங்க வேண்டும்.என் நூறு புத்திரர்களும் கண்ணனை எதிர்கொண்டு அழைக்க வேண்டும்.வரவேற்பு பிரமாதமாக இருக்க வேண்டும்' என்றெல்லாம் கூறினான்.
அவன் கருத்தை அறிந்த விதுரர்..'இத்தகைய ஆடம்பரங்களை கண்ணன் விரும்ப மாட்டார்' என்றான்.
அஸ்தினாபுரத்தை அடைந்த கண்ணனும்..இவ் வரவேற்புகளை பொருட்படுத்தாது..திருதிராட்டினன் மாளிகைக்கு சென்றார்.விதுரரின் வீட்டிற்குச் சென்றார்.அங்கிருந்த குந்தி அவரை வரவேற்றாள்.
துரியோதனன் கண்ணனை தன் மாளிகைக்கு விருந்தினராக வந்து மகிழ்விக்குமாறு வேண்டினான்.ஆனால் கண்ணன் சம்மதிக்கவில்லை.காரியம் நிறைவேறுவதற்குள்..தூதுவர் பகைவர் வீட்டில் உண்பது வழக்கமில்லை என்றார்.
கௌரவர்,பாண்டவர் இருவருக்கும் நடுநாயகமாக விளங்கும் தாங்கள் ஏன் எங்களை பகைவராய் எண்ணுகிறீர்கள்? என துரியோதனன் கேட்டான்.
அதற்கு கண்ணன்'பாண்டவர்கள் தர்மத்தை போற்றி நடக்கிறார்கள்.நீ..அந்த தர்மவான்களை அழிக்க எண்ணுகிறாய்.நான் எப்போதும் தர்மத்தின் சார்பில் இருப்பவன்.தர்மத்திற்கு எதிரி..எனக்கும் எதிரி.அந்தவகையில்..நீயும் எனக்கு பகைவன்.ஆகவே உன் விருந்தை நான் ஏற்கமாட்டேன்' என்றார்.
துரியோதனனின் விருந்தை கண்ணன் மறுத்தாலும்..அவனது அவைக்கு தூதுவராய் சென்றார்..
திருதிராட்டினனை நோக்கி..துரியோதனனுக்கு அறிவுரைக் கூறி..அவன் அழிவைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால்..திருதிராட்டிரன்..தன் இயலாமையைக் கூறினான்.
பின் கண்ணன் துரியோதனனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.
"உனது தந்தையும்,மற்றும் அனைத்து சான்றோரும்..நீ பாண்டவர்களுடன் சேருவதையே விரும்புகின்றனர்.அதைக் கேளாத நீ பெரும் துன்பமடைவாய்.பீமனையும்,அர்ச்சுனனையும் வென்றாலே..உனக்கு உண்மையான வெற்றி கிட்டும்.ஆனால்..அவர்களை வெல்ல உன் பக்கம் யாரும் இல்லை.குலத்தை அழித்த பழி உனக்கு வேண்டாம்.பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுத்துவிட்டு..அவர்களுடன் இணைந்து வாழ்வாயாக' என்றார்.
(கிருஷ்ணன் தூது..அடுத்த பதிவிலும் தொடரும்)
58-கண்ணன் தூது (2)
துரியோதனன் பழைய பல்லவியையே திரும்ப பாடினான். கூர்மையான ஊசி அளவு நிலம் கூட தரமுடியாது என்பதில் உறுதியாய் இருந்தான்.'விதுரர்,பீஷ்மர்,துரோணர் ஆகியோர் எனக்கே அறிவுரை கூறுகின்றனரே..நான் பாண்டவர்க்கு அப்படி என்ன தீது செய்தேன்?'என்றான்.
'துரியோதனா..நீ செய்த தீமை ஒன்றா..இரண்டா.அவர்களை வற்புறுத்தி சூதாடவைத்தாய்..அவையில்..திரௌபதியின் ஆடையை களைய முற்பட்டாய்.வாரணாவதத்தில் தாயுடன் சேர்த்து அவர்களை எரிக்க முயன்றாய்.பீமனைக் கட்டிப் போட்டதும்,விஷம் கொடுத்ததும் ஆகிய கொடுமைகள் செய்தாய்.இப்படி பாவங்களையே செய்த நீ..என்ன தீது செய்தேன் என்கிறாய்..நல்லவன் போல நடிக்கிறாய்.சான்றோர்..உரையையும் நீ மதிக்கவில்லை.சமாதானத்தை விரும்பாத நீ போர்க்களத்தில் அழிவது உறுதி' என்றார் மாதவன்.
இதுகேட்ட..துரியோதனன் கடும் சினம் கொண்டான்.கண்ணனை கைதியாகப் பிடித்துச் சிறையில் வைக்க முயன்றான்.அதைக் கண்டு நகைத்த கண்ணன் தன் விஸ்வரூபத்தை அனைவரும் காணச் செய்தார்.அவரிடமிருந்து எல்லா தேவர்களும் மின்னல் போல் காட்சி அளித்தனர்.எங்கெங்கு நோக்கினும் கண்ணன் தான்.ஒரு கோடி சூரியன் உதயமாயிற்றோ என அனைவரும் திகைத்தனர்.சங்கு,சக்கரம்,கதை,வில்,கலப்பை என எல்லாக் கருவிகளும் அவர் கரங்களில் ஒளி வீசின.
கண்ணனை பீஷ்மர்,விதுரர்,துரோணர்,திருதிராட்டிரன்,அசுவத்தாமா,விகர்ணன் ஆகியோர் கரம் குவித்து வணங்கி வழி அனுப்பினர்.கண்ணன் குந்தியைக் காணச் சென்றார்.அவையில் நடந்தவற்றை அத்தையிடம் கூறினார்.பிறகு கர்ணனைச் சந்தித்து அவனது பிறப்பின் ரகசியத்தைக் கூறினார்.தனது பிறப்பின் ரகசியத்தை..யுத்தத்திற்கு முன் வெளியிட வேண்டாம் என்றான் கண்ணன்.துரியோதனனுடன் ஆன நட்பை யாரும் பிரிக்க முடியாது என்றும் உரைத்தான்.
பின்..தாய் குந்தி தேவி கர்ணனை சந்தித்து..கர்ணன் பிறந்த சூழலை உரைத்தாள்.பின் தாயிடம் கர்ணன்'அர்ச்சுனனைத் தவிர,,மற்ற நால்வருடன் போரிட மாட்டேன்'என உறுதி அளித்தான்.பின்'தாயே!அர்ச்சுனனுடன் ஆன போரில்..யாரேனும் ஒருவர் மடிவோம்..அப்படி நான் மடிந்தால்..என் தலையை தங்கள் மடியில் வைத்து..மகனே எனக் கதறி அழுது..நான் உன் புதல்வன் என்பதை உலகிற்கு உணர்த்து..நான் வெற்றி பெற்றாலும்..என் மூத்த மகன் வென்றான் என உண்மையைத் தெரிவி..ஆனால் எக்காரணம் கொண்டும் போருக்கு முன் என் பிறப்பின் ரகசியத்தை யாருக்கும் அறிவிக்க வேண்டாம் 'என்றான்.
பின்..கண்ணன்..தருமரை சந்தித்து..நடந்த விஷயங்களைக் கூறி..யுத்தத்தை தவிர வேறு வழி இல்லை என்றார்.எல்லாம் விதிப்படி நடக்கும் என்ற தருமர்..தனக்கு துணைக்கு வந்த ஏழு அக்ரோணி படைக்கு..முறையே..துருபதன்,திருஷ்டத்துய்மன்,விராடன்,சிகண்டி,சாத்யகி,சேகிதானன்,திருஷ்டகேது..ஆகியவரை சேனாதிபதியாக நியமித்தார்.அத்தனைப் பேருக்கும் பிரதம தளபதியாக அவர்களில் ஒருவனான திருஷ்டத்துய்யனை நியமித்தார்.
துரியோதனன் சார்பில்..பதினோரு அக்ரோணிப் படைக்கு..கிருபர்,துரோணர்,ஜயத்ரதன்,சல்லியன்,சுதட்சிணன்,கிருதவர்மா,அசுவத்தாமா,கர்ணன்,பூரிசிரவா,சகுனி,பாகுலிகன் ஆகியோர் சேனாதிபதிகளாக நியமிக்கப் பட்டனர்.பிரதம தளபதியாக பீஷ்மர் நியமிக்கப்பட்டார்.
இரு திறத்துப் படைகளும்..அணி வகுத்துக் குருக்ஷேத்ரப் போர்க்களத்தை நோக்கிச் சென்றன.
பலராமர்..முன்னரே..சொன்னபடி..குருக்ஷேத்ரப் போர்க்கால அழிவைப் பார்க்க விரும்பாமல்..தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டார்.
(உத்தியோக பருவம் முற்றும்)....
59 - அர்ச்சுனனின் மனகலக்கம்
பீஷ்ம பருவம் (பீஷ்மரின் வீழ்ச்சியை உரைப்பது)
குருக்ஷேத்திரத்தில் இரு திறத்துப் படைகளும் அணி வகுத்து நின்றன.தனக்குச் சாரதியாக இருக்கும் கண்ணனை நோக்கி அர்ச்சுனன் 'பரந்தாமா! தேரை விரைவாகச் செலுத்து..என் எதிரில் போர் செய்வது யார் என்பதை தெரிந்து கொள்ள வெண்டும்.துரியோதனனுக்கு துணையாக வந்திருப்போரைக் காணவேண்டும்' என்றான்.
பார்த்தசாரதியும்..தேரினை கௌரவர் படைமுன் செலுத்தினார்.அப்போது பீஷ்மரையும்,துரோணரையும்,துரியோதனனையும்,அவன் தம்பியர்களையும்,நண்பர்களையும்,எண்ணற்ற வீரர்களையும் அர்ச்சுனன் கண்டான்.உள்ளம் கலங்கினான்.'பாட்டனார் பீஷ்மரையா கொல்லப் போகிறேன்..குரு துரோணாச்சாரியாரையா கொல்லப் போகிறேன்..துரியோதனன் முதலியோர் என் பெரியப்பா மகன்கள்..என் சகோதரர்கள் ..இவர்களையா கொல்ல வேண்டும்..இந்த இரக்கமற்ற பழியையையும்..பாவத்தையும் ஏற்கவா பிறந்தேன்?' என்றான்.
'கண்ணா..என் உடல் நடுங்குகிறது..உள்ளம் தளர்கிறது..என்னால் நிற்க முடியவில்லை..கால்கள் நடுங்குகின்றன..காண்டீபம் கை நழுவுகிறது.போரில் சுற்றத்தாரைக் கொன்று பழியுடன் வரும் நாட்டை நான் விரும்பவில்லை...உறவினரையா கொல்வது'
துரியோதனன் பாவிதான்..அவனைக் கொல்வதால் என்ன பயன்..சுற்றத்தைக் கொல்லும் பாதகத்தை என்னால் எண்ண முடியவில்லை.உறவினர்கள் பிணமாகக் கிடக்கும் போது..நாம் இன்பம் காண முடியுமா?என்னால் இந்த போரை ஏற்க முடியவில்லை.'
என்றெல்லாம் கூறியவாறு..கண்ணீர் மல்க ..தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டான்..காண்டீபன்.
அர்ச்சுனனின் குழப்பத்தை உணர்ந்த கண்ணபிரான்..'அர்ச்சுனா..இந்த நேரத்திலா கலங்குவது? வீரர்க்கு இது அழகா..பேடியைப் போல நடந்துக் கொள்ளாதே!மனம் தளராதே! எழுந்து நில்' என்றார்.
அர்ச்சுனன்' பீஷ்மரையும்..துரோணரையும் எதிர்த்து எவ்வாறு போரிடுவேன்?அதைவிட பிச்சை எடுத்து வாழலாம்..இவர்களை எல்லாம் இழந்தபின்..ஏது வாழ்வு?அதனால் பெருமை இல்லை..சிறுமைதான்..
எனக்கு எது நன்மையை உண்டாக்கும்..உன்னை சரணடைந்தேன்..நல்வழி காட்ட வேண்டும்' என்றான்.
கண்ணன் அர்ச்சுனனிடம் கூற ஆரம்பித்தார்...
60 - கண்ணனின் அறவுரை ( பகவத்கீதையின் ஒரு பகுதி)
அர்ச்சுனன் மனக் கலக்கம் கண்டு கண்ணன் கூறலானார்.
'அர்ச்சுனா..வருந்தாதே..தகுதி இல்லாதவரிடம் இரக்கம் காட்டாதே! ஞானிகள்..இறந்தவர்களுக்காகவோ, இருப்பவர்களுக்காகவோ துயரம் கொள்வதில்லை.இங்கு உள்ளவர்களும் உடல் அழிந்தாலும் இருப்பார்கள்.அவர்கள் உயிர் அழிவதில்லை.இந்தப்பிறவியில் உயிருடன் கூடிய உடம்புக்கு இருக்கும் இளமை,அழகு,முதுமை மீண்டும் மறுபிறப்பிலும் ஏற்படும்.இப்படி தோன்றுவதும்..மறைவதும் உயிர்களின் இயல்பு என்பதை உணர்.இதுவே உலக இயற்கை என்ற தெளிவு பெற்றால்..இன்ப துன்பங்கள் யாரையும் நெருங்காது.இதை உணர்ந்தவர் எதற்கும் கலங்குவதில்லை.
அர்ச்சுனா..உடல் அழிவுக்கு கலங்காதே..உயிர் அழியாது.தனது புண்ணிய பாவ செயல்களுக்கு ஏற்ப மறுபிறவி அடையும்.ஆத்மா கொல்வதும் இல்லை...கொல்லப்படுவதும் இல்லை.ஆகவே கலங்காது..எழுந்து போர் செய்.கடமையை நிறைவேற்று.
ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை..இறப்பும் இல்லை.இது எப்போதோ இல்லாதிருந்து பிறகு திடீரென பிறந்ததன்று.இது என்றும் இறவாதது.என்றும் பிறவாதது.அதாவது உடல் கொல்லப்பட்டாலும்..உயிர் கொல்லப்படுவதில்லை.
நைந்து போன ஆடைகளை விடுத்து..புது ஆடைகளை உடுத்துவது போல் உயிர் நைந்து போன உடல்களை விட்டுப் பிரிந்து புதிய உடலைப் பெறுகிறது.எந்த போர்க்கருவியும் உயிரை வெட்டாது.உடலை எரிக்கும் தீ உயிரை எரிப்பதில்லை.வெட்டினாலும்,குத்தினாலும்,தரதர என இழுத்துப் போனாலும் உயிருக்கு ஒரு துன்பமும் இல்லை.ஆகவே மாளப்போகிறவர்களுக்காக நீ ஏன் அழுகிறாய்?அவர்கள் வினைப் பயனை அவர்கள் விதிப்படி அடைவர்.
பிறந்தவர் இறப்பதும்..இறந்தவர் பிறப்பதும் இயல்பு.அதற்காக ஏன் வருத்தம்.இவ்வுலக நியதியை யாராலும் மாற்ற இயலாது.ஆகவே நீ உன் கடமையை ஆற்று.
இந்த ஆன்மாவின் செயல் விந்தையானதுதான் எனினும் மாற்றமுடியா தன்மைத்து.எல்லார் உடம்பிலும் உள்ள ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது.ஆகவே ..நீ யாருக்கும் வருந்த வேண்டாம்.தவிர்க்க இயலா போர் வந்து விட்டது.வீரர்களை வரவேற்க சொர்க்கவாசல் தயாராய் விட்டது.சிறந்த வீரர்கள் அங்கு செல்ல உன் கடமையைச் செய்.இது தர்மயுத்தம் என்பதை நினைவில் கொள்.இங்கு நீ தயக்கம் காட்டினால்..புகழை இழப்பாய்.அத்துடன் மட்டுமின்றி..அது உனக்கு பழியும் தரும்.
இரக்கத்தால் நீ போரிடவில்லை என பகைவர்கள் எண்ணமாட்டார்கள்.போரிட அஞ்சுகிறாய் என சிறுமைப்படுத்துவர்.உனக்கு அந்த இழுக்கு வரலாமா?இதைவிடப் பெருந்துன்பம் எதுவுமில்லை.வென்றால் இந்த மண்ணுலகம்..வீர மரணம் அடைந்தால் விண்ணுலகம்.இதனை மறக்காது துணிந்து போர் செய்..
வெற்றி..தோல்வி பற்றியோ..இன்ப துனபம் பற்றியோ..இலாப நஷ்டம் பற்றியோ கருதாமல் ஊக்கத்துடன் போர் செய்.பழி,பாவம் உன்னைச் சாராது.புகழும்,புண்ணியமும் உனக்குக் கிடைக்கும்' என கண்ணன் தமது உரையை முடித்தார்.
கண்ணனின் அறவுரைக் கேட்டதும்..பார்த்தனின் மனக்குழப்பம் தீர்ந்தது.அவன் கண்ணனை வணங்கி..'அச்சுதா..என் மயக்கம் ஒழிந்தது.என் சந்தேகங்கள் தீர்ந்தன.இனி உன் சொல் படி நடப்பேன்' எனக்கூறி போரிடத் தயாரானான்.
61 - முதலாம்..இரண்டாம் நாள் போர்
விதிமுறைகளுக்கு உட்பட்டுப் போர் தொடங்கும் நேரம்..தருமர்..தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார்.போருக்குரிய கவசங்களை நீக்கினார்.எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார்.இதைப் பார்த்தவர்கள் வியந்தனர்.
பீஷ்மர்..முதலியவர்களிடம் ஆசி பெறவே தருமர் செல்வதாக கண்ணன் நினைத்தார்.துரியோதனன் பக்கம் இருந்தவர்கள்..அவர் சரணடைய வருவதாக எண்ணினர்.
ஆனால் தருமர்..பீஷ்மரிடம் சென்று அவரை வணங்கி அவருடன் போரிட அனுமதி வேண்டினார்.அதுபோலவே.துரோணர்,கிருபர் ஆகியோருடனும் அனுமதி வேண்டிப் பெற்றார்.பிறகு தமது இடம் சென்று..போர்க்கோலம் பூண்டார்..
முதலாம் நாள் போர்
முதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப் படுகிறது.ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் முறை கெடப் போரிடல் 'சங்குல யுத்தம்' ஆகும்.இருதிறத்துப் படைகளும் மோதின.வீரர்கள் சிங்கம் போல கர்ஜித்தனர்.யானைப்படையும்..குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன.அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது.வீரர்கள் ஈட்டி,கத்தி,கதை,வளைதடி,சக்கரம் முதலியக் கொண்டு போரிட்டனர்.பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து..எண்ணற்ற வீரர்களைக் கொன்றார்.சுவேதனுடன் அவர் போர் பயங்கரமாய் இருந்தது.பீஷ்மரால் அவன் கொல்லப்பட்டான்.அவன் மரணம் பாண்டவ வீரர்களை நடுங்க வைத்தது.கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இரண்டாம் நாள் போர்
முதலாம் நாள் போரில் உத்தரனும்..சுவேதனும் கொல்லப்பட்டதால்..அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன.கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால்..அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர்.துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான்.தருமர் பின் புறத்தில் நின்றார்.திருஷ்டத்துய்மனும்,பீமனும் சிறகுகளாக இருந்தனர்.
அந்த வியூகத்தை..எளிதில் உடைத்து உள்ளே சென்று போரிட்டார் பீஷ்மர்.கண்ணபிரான் தேரை ஓட்ட..அர்ச்சுனன்..பாட்டனாரைப் பயங்கரமாக தாக்கினான்.பீஷ்மர் ..அர்ச்சுனன் மீது எழுபத்தேழு அம்புகளை செலுத்தினார்.மற்றொரு புறம்..துரோணரும்,திருஷ்டத்துய்மனும் கடும் போர் புரிந்தனர்.திருஷ்டத்த்ய்மனுக்கு..உதவியாக பீமன் வந்தான்,அவனைத் தடுத்து நிறுத்த துரியோதனன்..கலிங்கப் படையை ஏவினான்.ஆனால் பீமன் ..அப்படையைக் கதிகலங்க வைத்தான்.அப்படைக்கு உதவ பீஷ்மர் வந்தார்.அவரை அபிமன்யூவும்..சாத்யகியும் சேர்ந்து தாக்கினார்.அவர்களது தாக்குதலால்..பீஷ்மரின் தேர்க் குதிரைகள் நிலை குலைந்து தாறுமாறாக ஓடின.இதனால்..அர்ச்சுனனை..எதிர்ப்பார் இல்லை.அவன்..விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான்.அவன் யாராலும் வெல்ல முடியாதவனாகக் காட்சியளித்தான்.அப்போது சூரியன் மறைய..அன்றைய போர் முடிவுற்றது.
62-மூன்றாம் நாள் போர்
இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது.அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார்.படைகளை கருட வியூகமாக அமைத்தார்.அதன் தலைப்பக்கம் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,அஸ்வத்தாமா,சல்லியன்,பகதத்தன் ஆகியோர் பொருத்தமான இடத்தில் நின்றனர்.துரியோதனன்..அவ்வியூகத்தின் பின் புறத்தில் நின்றான்.அதை முறியடிக்கும் விதத்தில் பாண்டவர்களின் தளபதியான திருஷ்டத்துய்மன் தன் படைகளை பாதி சக்கர வியூகமாக அமைத்தான்.அவன் வலப்பக்கமாக நின்றான்.அதன் இரண்டு பக்கங்களிலும் பீமனும்,அர்ச்சுனனும் நின்றனர்.தர்மர் இடையில் நின்றார்.மற்றவர்கள் பொருத்தமான இடங்களில் நிறுத்தப்பட்டனர்.
உச்சக்கட்டம் அடைந்தது அன்றைய போர்.அர்ச்சுனன் அம்பு மழை பொழிந்து கௌரவர் படையை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான்.பீமன் ,துரியோதனன் மார்பில் அம்பை செலுத்தினான்.ரத்தம் பீரிட துரியோதனன் பீஷ்மரிடம் சென்று 'உண்மையில் நீங்கள் முழு பலத்தையும் காட்டி போரிடவில்லை.இது நியாயமா? பாண்டவரிடம் நீங்கள் கருணை காட்டினால்..என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாம்' என்றான்.
அது கேட்டு நகைத்த பீஷ்மர்..'உனக்கு நான் பலமுறை சொல்லியுள்ளேன்.பாண்டவர்களை யாரும் கொல்ல முடியாது.என் ஆற்றல் முழுதும்..ஆயினும் உனக்கே தருவேன்..'என்று கூறி போர்க் களம் சென்று சங்கநாதம் செய்தார்.கௌரவர் படை உற்சாகம் அடைந்தது.பாண்டவர் படையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.அர்ச்சுனன் உள்பட அனைவரும்..தளர்ந்து காணப்பட்டனர்.
கண்ணன் அர்ச்சுனனிடம்' அர்ச்சுனா ..என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும்,துரோணரையும் வெல்வேன் என்றாயே..அதை மறந்து விட்டாயா?'என்றார்.
உற்சாகம் அடைந்த அர்ச்சுனன் தனது ஒரு அம்பால்..பீஷ்மரின் வில்லை முறித்தான்.பீஷ்மர் வேறு அம்பை எடுத்தார்.எட்டு திசைகளிலும் அம்புகளைச் செலுத்தி மறைத்தார்.பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன.ஆனால்..அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கண்ணன் உணர்ந்தார்.
பீஷ்மர் மீது கொண்ட அன்பினால்..அப்படி இருப்பதாய் எண்ணிய கண்ணன்..தானே பீஷ்மரைத் தாக்க எண்ணி..தேரை நிறுத்தி..ஆயுதம் ஏந்தி அவரை நோக்கி போனார்.சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தினார்.இதைக் கண்ட பீஷ்மர் ஆனந்தம் அடைந்தார்.''கண்ணன் கையால் மரணமா?அதை வரவேற்கிறேன்' என்று தூய சிந்தனை அடைந்தார்.
அர்ச்சுனன் ..கண்ணனின் செயல் கண்டு மனம் பதறி...ஓடோடி கண்ணனிடம் சென்று..காலைப் பிடித்துக் கொண்டு..'நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும்.நான் போரிடேன் என்ற உங்கள் சபதம் என்னவாயிற்று? என்னை உற்சாகப் படுத்த இச் செயலா?அப்படியாயின் இதோ புறப்பட்டேன்..சினம் வேண்டாம்'என வேண்டினான்.
கண்ணனின் ஆவேசம் தணிந்தது.பின் அவனின் காண்டீபம் இடியென முழங்கியது.யானைகள் சாய்ந்தன..குதிரைகள் வீழ்ந்தன..காலாட் படையினர் சரிந்தனர்.
மாலை நெருங்க..அன்றைய போர் முடிவுக்கு வந்தது.
63-நான்காம்,ஐந்தாம் நாள் போர்
நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார்.ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார்.அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் ..அவ்வனுமானின் பேராற்றலுடன் போரிட்டானர்ச்சுனன்.அபிமன்யு போர் முனைக்கு வந்தான்.அவனைப் பூரிசிரவசு,அஸ்வத்தாமா,சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர்.ஒரு புறம் பீமன்..துரியோதனின் தம்பியர் எண்மரைக் கொன்றான்.தன் கதையால் யானைகளை வீழ்த்தினான்.பீமனின் மைந்தன் கடோத்கஜன் வெற்றி மேல் வெற்றி பெற்றான்.துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர்.பலர் மாண்டனர்.
தம் மக்கள் மாண்டது குறித்து திருதிராட்டினன் மனம் கலங்கியது.
நான்காம் நாள் போர் நின்றது.பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன்'நீங்களும்,துரோணரும்,கிருபரும் இருந்தும் என் தம்பியர் மாண்டனரே!பல வீரர்கள் உயிர் இழந்தனரே1பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'என்றான்.
'இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன்.பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என வற்புறுத்தி இருக்கிறேன்.எங்கு கண்ணன் உள்ளாரோ..அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது.இப்போதும் காலம் கடந்து விடவில்லை.போரைக் கைவிட்டு அவர்களுடன் இணை.இல்லையேல் மீளாத்துயரில் ஆழ்வாய்'என்றார் பீஷ்மர்.
துரியோதனன் இணங்கினான் இல்லை.
ஐந்தாம் நாள் போர்
பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார்.வடிவத்தில் இது முதலைப்போல் இருக்கும்.திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான்.இது பருந்து போன்றது.பல ஆயிரம் பேர் மாண்டனர்.துரியோதனன் துரோணரைப் பார்த்து' குருவே நீர் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள்.உம்மையும்,பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன்' என்றான்.
அதற்கு துரோணர் 'பாண்டவரிடம் பகை வேண்டாம்..என ஏற்கனவே பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை.ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன்' என்றார்.
சாத்யகியும்,பீமனும் துரோணருடன் சண்டையிட..அர்ச்சுனன் அஸ்வத்தாமாவுடன் போரிட்டான்.அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான்.கிருபர் தன் தேரை பாதுகாப்பாக வேறிடம் கொண்டு சென்றார்.
சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது.
64-ஆறாம் .ஏழாம், எட்டாம் ..நாட்கள் போர்
ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் மகர வியூகம் அமைத்தான்.பீஷ்மர் கிரௌஞ்ச வியூகம் அமைத்தார்.ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர்.பீமன் அன்று சிறப்பாக போரிட்டான்.பகைவர்களக் கொன்று
குவித்தான்.துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான்.அதைக் கண்ட பீமன் 'துரியோதனா..நீ இங்குத்தான் இருக்கிறாயா?உன்னைப் போர்க் களம் எங்கும் தேடி அலைந்தேன்..இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது' என்று கூறி அவன் தேர்க் கொடியை அறுத்துத் தள்ளினான்.பெரும் போருக்குப் பின் துரியோதனன் சோர்ந்து வீழ்ந்தான்.சூரியன் மறைய அன்றைய போர் நின்றது.
ஏழாம் நாள் போர்
ஆறாம் நாள் போரில் மயங்கி விழுந்த துரியோதனன் மயக்கம் தெளிந்து பீஷ்மரிடம் முறையிட்டான்.'எனது அச்சமும்..சோர்வும் என்னைவிட்டு அகவில்லை.உங்கள் உதவி இல்லையேல் எப்படி வெற்றி பெறுவேன்'எனக் கெஞ்சிக் கேட்டான்.பீஷ்மர்..தன்னால் முடிந்த அளவிற்கு போரிடுவதாகக் கூறி பாண்டவர்களை எதிர்த்தார்.துரியோதனன்..உடலெங்கும் புண்பட்டு வருந்தினான்.
துரோணருக்கும் விராடன் மைந்தனுக்கும் நடந்த போரில் அம் மைந்தன் மாண்டான்.ஒரு புறம் நகுலனும்,சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர்.அவன் மயக்கம் அடைந்தான்.பழைய பகையைத் தீர்த்துக் கொள்ளக் கருதிய சிகண்டி பீஷ்மருடன் போரிட்டான்.கடுமையாய் இருந்த போர் ..சூரியன் மறைய முடிவுக்கு வந்தது.அன்று இரவு கிருஷ்ணருடைய வேணுகானம் புண்பட்ட வீரர்க்கு இதமாக இருந்தது.
எட்டாம் நாள் போர்
பீஷ்மர் மகர வியூகம் அமைத்தார்.அது கடல் போல் காட்சி அளித்தது.நாற்சந்தி போன்ற சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான்.இது வலுவானது.பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது.பீமன் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான்.அது கண்டு துரியோதனனும்,திருதிராட்டிரனும் வருந்தினர்.கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது.
அன்று நடந்த போரில் பீமன் யனைப் படையை அழித்தான்.கடோத்கஜன் வீரர்கள் பலரைக் கொன்றான்.துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து,,அவன் தேரை அழித்தான்.அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான்.ரத்தம் பீரிட்டது.ஆயினும் துரியோதனன் கலங்காது நின்றான்.கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் முதலானோர் கடோத்கஜனைத் தாக்கினர்.பீமன் தன் மகனுக்கு உதவிட விரைந்தான்.பீமன் மேலும் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான்.இதுவரை..பீமன் துரியோதனன் தம்பியர் இருபத்தினான்கு பேரைக் கொன்றிருந்தான்.இரவு வர அன்றைய போர் நின்றது.
65-ஒன்பதாம் நாள் போர்
பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார்.பாண்டவர்களும் அதற்கேற்ப ஒரு வியூகம் வகுத்தனர்.பார்த்தனின் சண்டைமுன் கௌரவர் படை பரிதாபமாக காட்சி அளித்தது.அபிமன்யூவும் போரில் பல வீரர்களைக் கொன்றான்.திரௌபதியின் புதல்வர்கள் ஐவரும் அபிமன்யூவுடன் சேர்ந்து அவனுக்கு துணை நின்றனர்.அனைவரும் அலம்புசன் என்பவனுடன் போர் புரிந்தனர்.அவனோ மாயப்போர் புரிந்தான்.எங்கும் இருள் சூழும்படி அம்பு மழை பொழிந்தான்.அபிமன்யூ மாற்றுப் படையால் மாயையை விலக்கி அலம்புசனைத் தாக்கினான்.அலம்புசன் போர்க்களம் விட்டு ஓடினான்.
துரோணருக்கும்..அர்ச்சுனனுக்கும் போர் மூண்டது.குருவும் சீடன் என எண்ணவில்லை..சீடனும் குரு என எண்ணவில்லை.பின்..பாண்டவர்கள் ஒன்று கூடிப் பாட்டனாராகிய பீஷ்மரை எதிர்த்தனர்.ஆயினும் பீஷ்மரை அசைக்க முடியவில்லை.
பாண்டவர்கள் முயற்சி..தளர்ச்சி ஆனதை அறிந்து கண்ணன் சக்கரத்தை கையில் ஏந்தினார்.பீஷ்மரை வீழ்த்த எண்ணம் கொண்டார்.தம்மை நோக்கி பரந்தாமன் வருவதுக் கண்டு பீஷ்மர் 'கண்ணா..என் உடலிலிருந்து உயிரைப் பிரித்து அப்புறப்படுத்த வேண்டுகிறேன்.'என வேண்டிக் கொண்டார்.
பரமனைத் தொடர்ந்து ஓடிய பார்த்தன்..'போர்க்களத்தில் ஆயுதம் ஏந்த மாட்டேன்..என்ற கண்ணனின் பிரதிக்ஞையை நினைவூட்டினான்.
சூரியன் சாய..அன்றைய போர் முடிந்தது.
அன்று இரவு பாண்டவர்கள் கண்ணனை வணங்கி..இதுவரை நடைபெற்ற போரில் பீஷ்மரை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை வெளியிட்டனர்.நீண்ட யோசனைக்குப் பின்..அவரை வெல்வது குறித்து அவரையேக் கேட்க முடிவெடுத்தனர்.பின் பீஷ்மர் இருக்குமிடம் சென்று வணங்கினர்.பீஷ்மர் அனைவரையும் அன்புடன் தழுவிக் கொண்டார்.பின் அர்ச்சுனன்'பிதாமகரே! போர் தொடக்கத்திற்கு முன் "உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்" என வாழ்த்தினீர்கள்.தங்களை வென்றால்தானே எங்களுக்கு வெற்றி?தங்களைத் தோற்கடிப்பது எப்படி?' என்றான்.
அதற்கு பீஷ்மர்..'நான் போரில் புறமுதுகு காட்டி ஓடுபவரோடோ,ஆயுதம் இல்லாதவரோடோ,பெண்ணோடோ,பேடியினிகளிடனோடோ போரிட மாட்டேன்.பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியை முன் நிறுத்தி நாளை என்னுடன் போரிடு.சிகண்டியின் முன்..என் ஆயுத பலனன்றி போய்விடும்.அப்போது நீ என்னை எதிர்த்துப் போர் செய்.வெற்றி கிட்டும் 'என்றார்.
கங்கை மைந்தன் கூற்றைக் கேட்டு..பாண்டவர்கள் அமைதியாகப் பாசறைக்குத் திரும்பினர்.
66-பத்தாம் நாள் போரும்..பீஷ்மர் வீழ்ச்சியும்
பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது.கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க...பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர்.சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது. சிகண்டியின் அம்புகள் பீஷ்மர் மார்பில் பாய்ந்தன. விரதப்படி பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை.ஆயுதம் ஏதும் கையில் இல்லை.அர்ச்சுனன் அம்பு செலுத்தி..பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தான்.வில்லை முறித்தான்.அவரின் வேலாயுதத்தையும்,கதாயுதத்தையும் தகர்த்தான்.அர்ச்சுனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன.
தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். இரு தரப்பாரும் பீஷ்மரின் வீழ்ச்சிக் கண்டு திகைத்தனர். கீழே வீழ்ந்தவரின் உடல் தரையில் படவில்லை.உடம்பில் தைத்திருந்த அம்புகள்..அவர் உடல் பூமியில் படாது தடுத்தன. அவரைக் கௌரவிக்க..கங்காதேவி.. பல ரிஷிகளை அனுப்பினாள்.அன்னப் பறவை வடிவம் தாங்கி அவர்கள் பீஷ்மரிடம் வந்து பணிந்து சென்றனர். அவர் உத்தராயண புண்ணிய காலம் வரை உயிருடன் இருக்கத் தீர்மானித்திருந்தார்.இப்படி மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து பெற்றிருந்தார்.
அவர் உடல் பூமியில் படவில்லையாயினும். தலை தொங்கி இருந்தது.அருகில் இருந்தோர் தலயணைக் கொணர்ந்தனர்.ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ச்சுனனைப் பார்த்தார்.அர்ச்சுனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான்.அவை..நுனிப்பகுதி மேலாகவும்,அடிப்பகுதி தரையில் பொருந்துமாறும் அமைந்து பீஷ்மரின் தலையைத் தாங்கின.பீஷ்மர் புன்னகை பூத்தார்.
பீஷ்மருக்கு தாகம் எடுத்தது.பல மன்னர்கள் தண்ணீர் கொணர்ந்தனர்.பீஷ்மர் அர்ச்சுனனை நோக்கினார்.குறிப்புணர்ந்த அர்ச்சுனன்..அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான்.கங்கை மேலே பீரிட்டு வந்தது.கங்கை மைந்தன் அந்த நீரைப் பருகினார்.
பீஷ்மர்..பின் துரியோதனனைப் பார்த்து..'அர்ச்சுனனின் ஆற்றலைப் பார்த்தாயா?தெய்வ பலம் பெற்றவன் இவன்.இவனிடம் சிவனின் பாசுபதக் கணையும் உள்ளது.விஷ்ணுவின் நாராயணக் கணையும் உள்ளது.அது மட்டுமின்றி..அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும்.இப்போதேனும் நீ சமாதானமாய் போய் விடு.அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு.இப்போர் என்னுடன் முடியட்டும்' என்றார்.அவரின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை.
எல்லோரும் பிரிந்து சென்றதும்..நள்ளிரவில் கர்ணன் ஓடிவந்து அவர் பாதங்களில் வீழ்ந்து அழுதான்.;'ராதையின் மைந்தனான நான்..சில சமயங்களில் தங்களுக்கு மரியாதைத் தர த்தவறிவிட்டேன்.என்னை மன்னித்து விடுங்கள்' என்றான்.
அது கேட்ட பீஷ்மர்..'கர்ணா..நீ ராதையின் மகன் அல்ல.குந்தியின் மைந்தன்.சூரிய குமரன்.இதை வியாசர் எனக்குக் கூறினார்.காரணமின்றி நீ பாண்டவர்களை பகைத்ததால்..நானும் உன்னிடம் கோபமாக நடந்துக் கொண்டேன்.பாண்டவர்கள் உன் தம்பியர்.நீ அவர்களுடன் சேர்ந்து தருமத்தைப் போற்று' என்றார்.
கர்ணன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.'துரியோதனனுக்கு எதிராகப் போர் புரிவதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.மன்னியுங்கள்' என்றான்.
கர்ணா..அறம் வெல்லும்.நீ விரும்பியப்படியே செய் என்று கூறிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தார் பிதாமகன்.
67-பதினொன்றாம் நாள் போர் - துரோண பருவம்
பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.பீஷ்மர் வீழ்ச்சிக்குப் பின் யார் தலைமை ஏற்று போர் தொடர்வது என்ற சிந்தனை எழுந்தது.துரோணர் தளபதியாக
நியமிக்கப்பட்டார்.அவரிடம்..துரியோதனன்'எப்படியாவது தருமரை உயிருடன் பிடித்து என்னிடம் ஒப்படையுங்கள்'என வேண்டினான்.
தருமரை உயிருடன் பிடித்து விட்டால்..அவரை மீண்டும் சூதாட வைத்து..தோற்கடித்து..ஆயுட்காலம் முழுதும் வனவாசம் என்று அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன்.
இந்த் செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களை எட்டியது.அதனால்..தருமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.துரோணர் சகட வியூகம் வகுத்தார்..பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர்.
அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது.அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான்.துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் தருமர் மீதே குறியாக இருந்தார்.இதை உணர்ந்து அர்ச்சுனன் தருமர் அருகே வந்தான்.பீமனும் தருமரை காப்பதில் ஈடுபட்டான்.
அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.அவன் துரியோதனனின் மகன் லட்சுமணனைத் தாக்கி அவனைப் பிடித்துத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு திரும்பினான்.இதனை அறிந்த சல்லியன் அபிமன்யூவைத் தடுத்து நிறுத்திப் போரிட்டான்.சல்லியனின் வில்லையும் தேரையும் முறித்தான் அபிமன்யூ.
அர்ச்சுனனின் தாக்குதலைத் துரோணரால் சமாளிக்க முடியவில்லை.கௌரவர்கள் நடுங்க ஆரம்பித்தனர்.துரோணரும் சோர்ந்து போனார்.இந்நிலையில் சூரியன் மறைந்தான்.போர் நின்றது.
68-பன்னிரண்டாம் நாள் போர்
தருமரை..உயிருடன் பிடிக்க வெண்டுமெனில்..அர்ச்சுனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது.போரை வேறு திசைக்கு மாற்றி அர்ச்சுனனை அங்கு இழுக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டினர் கௌரவர்கள்.திரிகர்த்த வேந்தனாகிய சுசர்மனும் அவனது சகோதரர்கள் சத்தியரதன்,சத்தியவர்மன்,சத்தியகர்மன் ஆகியோரும் தென்திசையிலிருந்து அர்ச்சுனனுக்கு சவால் விட்டனர்.அர்ச்சுனன் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் தருமரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திரிகர்த்த மன்னனையும் அவருடைய சகோதரர்களையும் எதிர்த்துச் சென்றான்.
மும்மரமாக நடைபெற்ற போரில் கண்ணனின் திறமையால் அர்ச்சுனன் தேர் எல்லா இடங்களிலும் சுழன்றது.பகைவர்களும் அவனுடன் 'வெற்றி அல்லது வீரமரணம்' என்று போரிட்டனர்.திரிகர்த்தவேந்தனுக்குத் துணையாக அவனுடன் அவன் சகோதரர்களையும் தவிர்த்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும் சேர்ந்து போரிட்டனர்.அர்ச்சுனன் வாயுவாஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான்.சுசர்மன் மட்டும் தப்பினான்.
தென்திசைப்போரை முடித்துக் கொண்டு பார்த்திபன் தருமரைக் காக்கும் பொருட்டுத் துரோணரை எதிர்த்தான்.ஆனால் துரோணரோ தருமரை உயிருடன் பிடிப்பதில் குறியாய் இருந்தார்.அன்றைய போரில் துரோணரின் திறைமையும் அனைத்துப்பேரையும் கவர்ந்தது.துரோணரை முறியடிக்க திருஷ்டத்துய்மன் முயன்றான்.தனது மரணம் இவனால்தான் என்பதை அறிந்த துரோணர் அவனைத் தவிர்க்கப் பார்த்தார்.அப்போது துரியோதனனின் தம்பியருள் ஒருவனான் துர்முகன் திருஷ்டத்துய்மனைத் தாக்கி போரிட்டான்.
அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமையைக் காட்டி தருமரைக் காக்க முற்பட்டான்.அவனுக்கும், துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாய் இருந்தது.துரோணர் மீது பல அம்புகளைச் செலுத்தினான் அவன்.அதனால் கோபமுற்ற துரோணர் விட்ட அம்பு ஒன்று அவன் தலையைக் கொய்தது.சத்யஜித்தின் மரணம் கண்ட விராடனின் தம்பி சதானீகன் துரோணரை எதிர்க்க..அவனையும் அவர் கொன்றார்.
துரோணர் தருமரை சிறைப்பிடித்து விடுவாரோ என்னும்பயம் ஏற்பட..பீமன் அங்கு வந்தான்.அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன்.அவைகளை பந்தாடினான் பீமன்.அபிமன்யூவும்..பாண்டவர்களின் குமாரர்களும் கௌரவர் படையை எதிர்த்து போராடினர்.
அப்போது ப்ராக்ஜோதிஜ மன்னனான பகதத்தன் சுப்ரதீபம் என்னும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான்.அந்த யானை பீமனின் தேரை தகர்த்தது.பின் பீமனை தன் துதிக்கையால் பற்றி தூக்கி எறிய முற்பட்டது.பீமன் அதன் பிடியிலிருந்து தப்பி..அதன் மர்மஸ்தானத்தை தாக்கினான்.அந்த வேதனையிலும் அது பீமனை மிதித்துத் தள்ளப் பார்த்தது.ஆயினும் பீமன் அதனிடமிருந்து தப்பினான்.பின் அந்த யானை அபிமன்யூவின் தேரைத் தூள் தூளாக்கியது.சாத்யகியின் தேரும் அதே நிலையை எட்டியது.யானையின் அட்டகாசத்தை அறிந்த அர்ச்சுனன் விரைந்து வந்தான்..அதனைக் கொல்ல.
அர்ச்சுனன் பகதத்துடன் கடும் போர் புரிந்தான்.அப்போது பீமன் அந்த யானையின் மீது சிங்கம் போல பாய்ந்தான்.அப்போது அர்ச்சுனன் ஒரு அம்பை எய்த ..அது யானையின் கவசத்தைப் பிளந்து மார்பில் ஊடுருவியது.யானை வீழ்ந்து மாண்டது.பின் அர்ச்சுனன் செலுத்திய ஓர் அம்பு மாவீரன் பகதத்தனைக் கொன்று வீழ்த்தியது.
பின்னர் அர்ச்சுனன் திருதிராட்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன்,விகுஷன் ஆகியோரைக் கொன்றான்.சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான்.அர்ச்சுனன் ஒளிமய கணை ஒன்றால் அந்த இருளைப் போக்கினான்.சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான்.தருமரை..பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவு தகர்ந்தது.கௌரவர்கள் கலங்க..பாண்டவர்கள் மகிழ அன்றைய போர் முடிவுக்கு வந்தது.
அன்றைய போர் கண்டு சினம் கொண்ட துரியோதனன்..துரோணரிடம் சென்று கடுமையாகப் பேசினான்.'தருமரைப் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்கள்.வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர்.நீர் சொல்வது ஒன்று..செய்வது ஒன்று'என்றான்.
இதனால் துரோணர் கோபம் அடைந்து'துரியோதனா..உனக்கு பலமுறை சொல்லியுள்ளேன்.அர்ச்சுனனைப் போரில் வெல்ல முடியாது.போர்க்களத்தில் அவன் எப்படி தருமரைப் பாதுகாத்தான் என்று பார்த்தாயா?எப்படியும் நாளை நான் உன்னத போர் முறை ஒன்றைக் கையாளப் போகிறேன்.அர்ச்சுனனை நீ எப்படியாவது வெளியே கொண்டு செல்' என்றார்.
துரோணரின் பேச்சில் நம்பிக்கை வர துரியோதனன் சென்றான்.
69-பதின்மூன்றாம் நாள் போர்
படைகள் அணிவகுத்து நின்றன.துரோணர் பத்மவியூகம் அமைத்தார்.முகப்பில் அவர் இருந்தார்.துரியோதனன் நடுவில் நின்றான்.பத்மவியூகத்தை உடைத்துச் செல்வது கடினம்.அந்த அமைப்புக் கண்டு தருமர் கலக்க முற்றார்.அபிமன்யூவிடம் ஒரு தனி ஆற்றல் இருந்தது.அவனால்..பத்மவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல்லமுடியும்.இந்த பயிற்சியைப் பெற்றிருந்த அபிமன்யூ வெளியே வரும் பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை.ஆயினும்..அவனுக்குத் துணையாக பல்லாயிரக் கணக்கில் வீரர்கள் உள்ளே புகுந்தால்..கௌரவர் படை சிதறி ஓடும் என தருமர் எண்ணினார்.அபிமன்யூவும் துணிச்சலாக உள்ளே சென்று தாக்கினான்.ஆனால் மற்ற வீரர்கள் உள்ளே செல்லுமுன் வியூகம் மூடிக் கொண்டது.ஜயத்ரதன் யாரையும் உள்ளே நெருங்க விடவில்லை.
ஆகவே..துரோணர்,அசுவத்தாமா,கர்ணன் ஆகியோருடன் தனித்து நின்று போரிட்டான் அபிமன்யூ.அவன் வீரம் கண்டு துரோணர் கிருபரிடம் 'இவன் வீரத்தில் அர்ச்சுனனைவிட சிறந்து காணப்படுகிறான்'என்று வியந்து பாராட்டினார்.இதைக் கண்ட துரியோதனன்..'எதிரியை புகழும் நீர் செய்வது நம்பிக்கைத்துரோகம்..இதனால் நம் படையின் உற்சாகம் குறையும்' என்றான்.
அவனுக்கு பதில் அளிக்கும் விதத்தில் போரில் வீரம் காட்டினார் துரோணர்.எப்படியாவது அவனை வீழ்த்த எண்ணி..அதரும யுத்தத்தில் ஈடுபலானார்.கர்ணன் யுத்த நெறிக்குப் புறம்பாக பின்னால் இருந்து அபிமன்யூவின் வில்லை முறித்தான்.பின்புறமிருந்து தாக்கியவன் யார் என அபிமன்யூ திரும்பி பார்த்தபோது..துரோணர் அவனின் தேர்க் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார்.ஆனால்..இதற்குத் தளராத அபிமன்யூ வாளைக் கையில் ஏந்தி ..தேரிலிருந்து குதித்து பல நூறு வீரர்களை வெட்டி வீழ்த்தினான்.
உணர்ச்சிவசப்பட்ட துரோணர் மீண்டும் புறம்பாக பின்புறத்திருந்து வாளைத் துண்டித்தார்.அதேமுறையில் கர்ணன் அவனது கேடயத்தைத் தகர்த்தான்.
மாவீரன் அபிமன்யூ தேரையும்,வில்லையும்,வாளையும்,கேடயத்தையும் இழந்தாலும்..வீரத்தை இழக்கவில்லை.ஒரு கதாயுதத்தைக் கையில் ஏந்தி அசுவத்தாமாவை விரட்டினான்.பல வீரர்களைக் கொன்றான்.
முன்னர் திரௌபதியை தூக்கிச் செல்ல முயன்று தோல்வியுற்று, பாண்டவர்களால் அவமானப்பட்ட ஜயத்ரதன், பாண்டவர்களை பழிதீர்த்துச் சிவனை நோக்கித் தவம் செய்து , அர்ச்சுனனைக் கொல்ல இயலாது எனினும் ஒரு நாள் மற்றவர்களை சமாளிக்கக்கூடும் என்னும் வரத்தை பெற்றிருந்தான் அல்லவா?அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.பீமன்,நகுலன்,சகாதேவன் ஆகியோர் அபிமன்யூவிற்கு உதவி செய்யாதவாறு த டுத்தான்.கையில் ஆயுதமும் இன்றி..துணைக்கும் யாருமின்றி போர் செய்த சிங்கக்குட்டியை (நரிகள் ஒன்று சேர்ந்து )மாவீரனான அபிமன்யூவைக் கொன்று விட்டனர்.
தென்திசையில் சம்சப்தர்களை ஒழித்துத் திரும்பிய அர்ச்சுனன் காதில் இச் செய்தி விழ..அவன் மயங்கி விழுந்தான்.அவன் துயரத்தை எழுத்தில் வடிக்க இயலாது.மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜயத்ரதன் என அறிந்தான்.பின்'ஜயத்ரதனை நாளை மாலைக்குள் கொல்வேன்..அல்லாவிடின்..வெந் நரகில் வீழ்வேன்' என சூளுரைத்தான். அதன் அறிகுறியாக தன் காண்டீபத்திலிருந்து ஒலி எழுப்பினான்.அவ்வொலிக் கேட்டு அண்ட கோளங்களும் அதிர்ந்தன.பூமி நிலை குலைந்தது.இந்நிலையில் அன்றைய போர் நிறைவுப் பெற்றது.
70-பதினான்காம் நாள் போர்
அர்ச்சுனனின் சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன்..போர்க்களத்தை விட்டு ஓடிவிடலாமா..என யோசித்தான்.அது வீரர்க்கு அழகன்று என மற்றவர்கள் தடுத்தனர்.அர்ச்சுனனை எண்ணி துரோணர் கலங்கினார்.அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார்.அதற்கேற்ப பத்மவியூகம்,சகடவியூகம் என வியூகங்களை வகுத்தார்.
எங்கே அர்ச்சுனன்? என ஆர்ப்பரித்த கௌரவர்கள்..துரியோதனனின் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ச்சுனனை நோக்கி அனுப்பினர்.அப்போது கண்ணன் தேரை ஓட்ட..காண்டீபத்துடன் உள்ளே வந்தான் பார்த்தன்.அனுமக்கொடியுடன்..ஆக்ரோஷத்துடன் வந்த அர்ச்சுனனைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினான் துர்மர்ஷணன்.அவன் ஒட்டத்தைக் கண்ட துச்சாதனன் கடும் சினம் கொண்டு அர்ச்சுனனை எதிர்த்தான்.பின் முடியாமல் திரும்பினான்.
அர்ச்சுனன்..துரோணரைச் சந்தித்து போரிட்டான்.ஆனாலும் அவருடனான போர் நிலைக்கவில்லை.ஏனெனில்..அர்ச்சுனனுக்கு அன்றைய இலக்கு ஜயத்ரதன்.
ஜயத்ரதனை நோக்கி வந்த அர்ச்சுனனைக் கண்டு துரியோதனன் மிகவும் கோபம் கொண்டு..துரோணரைக் கடிந்துக் கொண்டான். 'அவனை ஏன் உங்களைக் கடந்து ஜயத்ரதனை நோக்கி செல்ல அனுமதித்தீர்.உங்கள் அன்பும்..பரிவும் எப்போதும் பாண்டவரிடம்தான்' என்றான்.
"துரியோதனா..என் திட்டம் என்ன தெரியுமா? அர்ச்சுனனை வேறு பக்கம் போக வைத்தால்..தருமரை பிடித்து விடலாம்.என்னிடம் மந்திர சக்தி வாய்ந்த கவசம் இருக்கிறது.உனக்குத் தருகிறேன்.அதை யாரும் பிளக்க முடியாது.முன்னர் சிவபெருமான் இதை இந்திரனுக்கு அளித்தார்.அவன் ஆங்கீசரருக்குக் கொடுத்தான்.அவர் அவர் புதல்வன் பிரகஸ்பதிக்கு அருளினார்.பிரகஸ்பதி அக்னியேச்யருக்குக் கொடுத்தார்.அவர் எனக்குத் தந்தார்.அதை உனக்கு நான் தருகிறேன்..இனி உனக்கு வெற்றியே..போய் அர்ச்சுனனுடன் போரிடு' என்றார் துரோணர்.
மகிழ்ச்சியுடன்..அக்கவசத்தை அணிந்து..அர்ச்சுனனைத் தாக்கினான் துரியோதனன்.அர்ச்சுனனின் அம்புகள் கவசத்தைத் துளைக்க முடியவில்லை.ஆகவே அர்ச்சுனன் கேடயம் இல்லாத இடமாக அம்புகளைச் செலுத்தினான்.துரியோதனன் வலி பொறுக்காது..வேறு பகுதிக்கு நகர்ந்தான்.
பின்..அர்ச்சுனன் துரியோதனனிடமிருந்து விலகி ஜயத்ரதனை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.அர்ச்சுனன் ஜயத்ரதனைக் கொல்லாதபடி..பூரிசிரவஸ் தாக்கினான்.உடன் சத்யகி அர்ச்சுனனின் உதவிக்கு வந்து பூரிசிரவஸைத் தாக்கத் தொடங்கினான்.சாத்யகியை கீழே தள்ளினான் பூரிசிரவஸ்..காலால் மார்பில் உதைத்தான்..மயக்கம் அடைந்தான் சாத்யகி...உடன் அவன் தலையை துண்டிக்க முயற்சித்தான் பூரிசிரவஸ்.உடன் அர்ச்சுனன் அவன் கையை வெட்டினான்.அந்த கை வாளுடன் வீழ்ந்தது...பூரிசிரவஸ் அர்ச்சுனனைப் பார்த்து'நான் வேறு ஒருவருடன் போரிடும் போது அறநெறிக் கெட்டு கையை வெட்டினாயே..தருமரின் தம்பி நீ அதர்மம் செய்யலாமா?' என்றான்.
'நேற்று என் மகன் அபிமன்யூ மீது தர்ம வழி மீறி போரிட்டவன் நீயும் அல்லவா?' என்றான்.உடன் பூரிசிரவஸ் தன் செயல் குறித்து நாணினான்.பரமனை எண்ணி தியானம் செய்தான்.அப்போது மயக்கம் தெளிந்த சாத்யகி தியானத்தில் இருந்தவன் தலையை வெட்டினான்.
மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.பலரையும் வென்றவாறு..அர்ச்சுனன் ஜயத்ரதனை நெருங்கினான்.அக்கணத்தில் ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து..'நீங்கள் அனைவருக்கும் விற் பயிற்சி அளித்தீர்..ஆனால் அர்ச்சுனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன்?' என்றான்.
அதற்கு துரோணர்,'அர்ச்சுனன் தவ வலிமை உடையவன்..ஆகவே மேம்பட்டு விளங்குகிறான்' என்றார்.
பின் அர்ச்சுனனை ஜயத்ரதன் தாக்கத் தொடங்கினான்.கண்ணபிரான்..சூரியன் மறைந்தாற் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்.சூரியன் மறைந்ததா எனப் பார்க்க ஜயத்ரதன் மேற்குத் திசையை நோக்கினான்...'அர்ச்சுனா..அம்பை செலுத்து'எனக் கூறி இருளைப் போக்கினார் கண்ணன்.அர்ச்சுனன் உடனே தன் பாசுபதாஸ்திரத்தை செலுத்தினான்.அது ஜயத்ரதனின் தலையை துண்டித்தது.அப்படி துண்டித்த தலை தவம் செய்துக் கொண்டிருந்த ஜயத்ரதனின் தந்தை விருத்தாட்சத்திரன் மடியில் போய் விழுந்தது.அதை ஏதோ என நினைத்தவன்...தன் கையால் தள்ளிவிட அது தரையில் விழுந்தது..ஜயத்ரதனின் தந்தையின் தலையும் சுக்கல் சுக்கலாகியது.தன் மகனின் தலையைத் தரையில் வீழ்த்துபவர் தலை சுக்கலாக வேண்டும்..என அத்தந்தை பெற்ற வரம்..அவருக்கே வினையாயிற்று.ஜயத்ரதன் மறைவு அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால்..துரியோதனனோ பெரும் கவலை அடைந்தான்.துரோணரிடம்..'இன்று என் தம்பியர் பலர் மாண்டனர்.பீமனும் சாத்யகியும் செய்த போரில் வீரர் பலர் இறந்தனர்.ஜயத்ரதனும் மாண்டான்.அர்ச்சுனனின் வல்லமையை யார் வெல்ல முடியும்..இனிப் பேசிப் பயனில்லை..வெற்றி அல்லது வீர மரணம்' என்று புலம்பினான்.
இவ்வாறு..ஒரு தரத்திற்கு மகிழ்ச்சியும்..மற்றவருக்கு சோகமுமாக அன்றையப் போர் பகல் போர் முற்றுப் பெற்றது.
71-பதினான்காம் நாள் இரவுப் போர்
துரியோதனனின் மன வேதனையை உணர்ந்த துரோணர்..தன் முழு ஆற்றலையும் செலுத்திப் போரிடத் துணிந்தார்.பகைவரை ஒழித்தப் பின்தான் கேடயத்தை கழட்டுவேன் என்று சவால் விட்டு..மாலை மறைந்தும்..இரவுப் போரைத் தொடர்ந்தார்.தன்னை எதிர்த்து வந்த சிபி என்னும் மன்னனின் தலையைக் கொய்தார்.தன்னை எதிர்த்த திருஷ்டத்துய்மனின் மைந்தரைக் கொன்றார்.
பீமன் வேறு புறத்தில் துரியோதனனின் தம்பியரான துர்மதனையும்,துஷ்கர்ணனையும் கொன்றான்.சாத்யகி சோம தத்தனை எதிர்த்தான்.சகுனி சோம தத்தனுக்கு உதவினான்.
கடோத்கஜன் ஒரு புறம் கடும் போர் புரிந்தான்.அவன் மகன் அஞ்சனபர்வா அஸ்வத்தாமாவை எதிர்த்து போரிட்டான்.ஆயினும் அம்மகன் கொல்லப்பட்டான்.மகனை இழந்த ஆத்திரத்தில்..அஸ்வத்தாமாவுடன் கடும் போரிட்டான் கடோத்கஜன்.இருவரும் சளைக்கவில்லை.பின்னர் கர்ணனிடம் வந்தான் கடோத்கஜன்.அவனது பேராற்றலைக் கண்ட துரியோதனன் நடுங்கினான்.பயம் மேலிட்டதால்..சக்தி மிகுந்த சக்தி ஆற்றலை கர்ணன் கடோத்கஜன் மீது செலுத்த வேண்டியதாயிற்று.அது இந்திரனிடம் இருந்து கர்ணனால் பெறப்பட்டது.அந்த சக்தி ஆயுதம் ஒருமுறை மட்டுமே பயன் படும்.அதை அர்ச்சுனனைக் கொல்ல கர்ணன் வைத்திருந்தான். கடோத்கஜன் யாராலும் வெல்ல முடியாதபடி போர் புரிந்ததால்..அதை அவன் மீது செலுத்தி கடோத்கஜனைக் கொன்றான்.
ஆயினும்..இனி எப்படி அர்ச்சுனனைக் கொல்வது என கவலையில் மூழ்கினான் கர்ணன்.
பாண்டவர்களோ பதின் மூன்றாம் நாள் போரில் அபிமன்யூவை இழந்ததற்கும்..பதினான்காம் நாள் போரில் கடோத்கஜனை இழந்ததற்கும் வருந்தினர். இந்த அளவில் போர் நின்றது.
72-பதினைந்தாம் நாள் போர் - (துரோணரின் முடிவு)
தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன் நம்பிக்கையை இழக்கவில்லை.துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான்.துரோணரும் கடுமையாகப் போரிட்டார்.போரின் உக்கிரத்தைக் கண்டு கண்ணன் ஆழ்ந்து சிந்தித்தார்.அறநெறிப்படி துரோணரை வெல்ல முடியாது என உணர்ந்தார்.பிரமாஸ்திரத்தையும் துரோணர் பயன்படுத்தக் கூடும் என எண்ணினார்.
ஏதேனும் பொய் சொல்லித் துரோணரின் கவனத்தைத் திருப்பினாலன்றி வெற்றி கிடைக்காது என எண்ணினார் கண்ணன்.ஒரு முனையில் யுத்தகளத்தை கலக்கிக் கொண்டிருந்தான் பீமன்.'அசுவத்தாமன்'என்ற புகழ் மிக்க யானையைக் கதாயுதத்தால் கடுமையாக தாக்கினான்.அது சுருண்டு விழுந்தது.அசுவத்தாமன் என்ற அந்த யானை இறந்ததில் அசுவத்தாமனே இறந்தாற்போல..உணர்ச்சி
வயப்பட்ட பீமன், 'அசுவத்தாமனை கொன்றுவிட்டேன்' என கத்தினான்.இது துரோணர் காதில் விழுந்தது..தலையில் இடி விழுந்தாற் போல ஆனார்.ஆனால் பின் மனம் தெளிந்தார்.அச் செய்தி பொய்யாய் இருக்கும் என எண்ணினார்.ஆற்றல் மிக்க தன் மகன் அசுவத்தாமனை யாராலும் கொல்லமுடியாது என நினைத்து போரைத் தொடர்ந்தார்.ஆயிரக்கணக்கான குதிரைகளையும்,வீரர்களையும்,யானைகளையும் கொன்று குவித்தார்.ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது.போர்க்களம் ரத்தக் கடல் போல் காட்சியளித்தது.
துரோணர்..விண்ணுலகம் செல்லும் காலம் வந்ததை உணர்ந்த வஷிஷ்டர் முதலான ரிஷிகள் அவரிடம் வந்தனர்.'சாந்த நிலை அடையுங்கள்' என வேண்டினர்.முனிவர்கள் கூற்றும்..சற்று முன்னர் பீமன் கூற்றும் அவரது போர்ச்செயலை அறவே நிறுத்தின.உண்மையில் மகன் கொல்லப்பட்டானா? என்ற வினா உள்ளத்தை வாட்ட, சத்தியமே பேசும் தருமரிடம் கேட்டால் உண்மை தெரியும் என அவரை அணுகினார்.
இதற்கிடையே..ஒரு நன்மையின் பொருட்டு..பொய் சொல்லுமாறு தருமரிடம் கண்ணன் கூறினார்.தருமர் மறுத்தார்.'அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது உண்மைதானே! அதையாவது சொல்லுங்கள் 'என கண்ணன் வற்புறுத்த ,தருமரும் சரியென அதை அவர் கூற முற்பட்டபோது 'அசுவத்தாமன் இறந்தான்' என்ற செய்தி மட்டும் காதில் விழுமாறும்..மற்றவை விழாதவாறும் சங்கை எடுத்து முழங்கினார் கண்ணன்.தருமரின் கூற்று பொய்யாய் இராது என துரோணர் ஆயுதங்களைத் தூக்கி எறிந்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.அந்த நேரம் பார்த்துத் திருஷ்டத்துய்மன் வாள் கொண்டு துரோணரின் தலையைத் துண்டித்தான்.அவரது தலை தரையில் உருள, உடலிலிருந்து கிளம்பிய ஜோதி விண் நோக்கிச் சென்றது.
அசுவத்தாமன் கொல்லப்பட்டான் என்பதை சொல்ல கண்ணன் வற்புறுத்திய போது..அதில் உள்ள சூழ்ச்சியை தருமர் உணர்ந்தார்.பின்னரும் அப்படிச் சொல்ல உடன்பட்டது அவரின் பண்பில் நேர்ந்த குறை என்று இன்றும் விவாதிப்பவர்கள் உண்டு.
துரோணரின் வீழ்ச்சியோடு பதினைந்தாம் நாள் போர் முடிந்தது.
73-பதினாறாம் நாள் போர்
பிஷ்மர்,துரோணர்,ஜயத்ரதன் ஆகியோர் வீழ்ச்சிக்குப் பின் கௌரவர் படை கலகலத்தது.துரியோதனனின் தம்பியர் பலர்,உதவிக்கு வந்த அரசர்கள் பலர் கொல்லப்பட்டனர்.ஆயினும்..துரியோதனன் மாறவில்லை.எப்படியாவது பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்றே குறியாய் இருந்தான்.அசுவத்தாமன் ஆலோசனைப் பேரில் கர்ணன் தளபதியாக நியமிக்கப் பட்டான்.
போர் தொடங்கும் போது மகர வியூகம் அமைத்தான் கர்ணன்.திருஷ்டத்துய்மன் அர்த்த சந்திர வியூகம் அமைத்தான்.போர் ஆரம்பித்தது.முதலில் நகுலனை எளிதில் வென்றிடலாம்..என கர்ணன் அவனுடன் போரிட்டான்.எழுபத்து மூன்று அம்புகளை அவன் மீது செலுத்தினான்.அவன் வில்லை ஒடித்தான்.தேரை அழித்தான்.வாளை துணித்தான் .கேடயத்தைச் சிதைத்தான்.கதையைப் பொடியாக்கினான்.அவன் நகுலனை எளிதாகக் கொன்றிருப்பான்..ஆனால் தாய் குந்திக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அவனை கொல்லாது விடுத்தான்.ஒரு புறம் கிருபருக்கும்..திருஷ்டத்துய்மனுக்கும் கடும் போர் மூண்டது.கிருதவர்மா சிகண்டியைத் திணற அடித்தான்.அர்ச்சுனன் பலரைவீழ்த்தினான்.
துரியோதனனுக்கும் தருமருக்கும் போர் மூண்டது.தருமர் அவன் தேரை அழித்தார்.வில்லை முறித்தார்..தமது சக்தி ஆயுதத்தால் துரியோதனனின் உடம்பெங்கும் புண்ணாக்கினார்.பின் ஒரு அம்பை எடுத்து அவன் மீது எய்தார். அச்சமயம்..துரியோதனனைக் கொல்வேன் என்ற பீமன் சபதம் ஞாபகம் வர..அதை திரும்பிப் பெற்றார்.ஆகவே அன்று அவன் தப்பித்தான்.அன்றைய போர் அத்துடன் முடிந்தது.அனைவரும் பாசறைக்குத் திரும்பினர்.
கர்ணனின் செயல் துரியோதனனை வருத்தியது.அவன் நகுலனையாவது கொன்றிருக்கலாம் என எண்ணினான்.கர்ணனிடம் சென்று..தன் வாழ்வு அவனிடம்தான் இருப்பதாகக் கூறி..எப்படியேனும் அடுத்த நாள் அர்ச்சுனனை போர்க்களத்தில் கொன்றுவிடுமாறு கேட்டுக் கொண்டான்.
கர்ணன் மனம் திறந்து துரியோதனனுடன் பேசினான்.'பல விதங்களில் நான் அர்ச்சுனனைவிட ஆற்றல் மிக்கவன்.அம்பு எய்வதில் அவன் என்னைவிட சிறந்தவன் அல்ல.விஜயம் என்னும் எனது வில் சக்தி வாய்ந்தது.இந்த வில்லால்தான் இந்திரன் அசுரர்களை மாய்த்தான்.தெய்வத்தன்மை வாய்ந்த இந்த வில்லை இந்திரன் பரசுராமருக்குக் கொடுத்தான்.பரசுராமன் எனக்கு அளித்தார்.அர்ச்சுனனிடம் இரண்டு அம்புறாத் தூணிகள் உள்ளன..அவை போன்றவை என்னிடம் இல்லை.எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு கண்ணன் தேர் ஓட்டுகிறான்.அத்தகைய சாரதி எனக்கு இல்லை.ஆயினும்..சல்லியன் என் தேரை ஓட்டுவானானால்..நான் நிச்சயம் அர்ச்சுனனைத் தோற்கடிப்பேன்" என்றான்.
துரியோதனன் உடன் சல்லியனிடம் சென்று..'நீர் தேரை ஓட்டுவதில் கண்ணனைவிட சிறந்தவர்..ஆகவே கர்ணனுக்கு தேரோட்டியாய் இருந்து தனக்கு வெற்றியை பெற்றுத் தர வேண்டும்' என வேண்டினான்.
சல்லியன் ஒரு நிபந்தனையுடன் கண்ணனின் தேரைச் செலுத்தச் சம்மதித்தான்.போரில் கர்ணன் தவறிழைத்தால் தனக்கு அவனை கண்டிக்கும் உரிமைவேண்டும்..என்பதே நிபந்தனை.துரியோதனன் அந்த நிபந்தனையை ஏற்றான்.
74-பதினேழாம் நாள் போர்
போர் ஆரம்பிக்கையிலேயே கர்ணனுக்கும், தேரோட்டியான சல்லியனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. 'இன்று பாண்டவர்களை வெல்வது உறுதி' என்றான் கர்ணன்.உடன் சல்லியன் 'உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு'என்றான் சல்லியன்.
'தேவாதி தேவர்களையும், அசுரர்களையும் வென்ற எனக்கு அர்ச்சுனனை வெல்வது எளிது' என்றான் கர்ணன்.
'வீண் தற்பெருமை வேண்டாம்..உன் வீரம் நான் அறிவேன்.சிவனுடன் போர் புரிந்தவன் அர்ச்சுனன்.சித்திரசேனன் என்னும் கந்தர்வனுடன் போரிட்டு துரியோதனனை மீட்டவன் அவன்.அப்போது, கர்ணா..நீ எங்கே போனாய்?விராட நகரில் ஆநிரைகளை மீட்ட போது அர்ச்சுனனுக்கு பயந்து ஓடியவன் நீ.உத்தரன் தேரோட்டிய போதே கங்கை மைந்தனையும்,துரோணரையும் வென்றவன்..கண்ணன் தேரோட்டும் போது..சற்று எண்ணிப்பார்.உன் ஆணவப் பேச்சை நிறுத்தி..ஆற்றலை செயலில் காட்டு ' என்றான் சல்லியன்.
துரியோதனன் இருவரையும் அமைதிப் படுத்தினான்.போர்ப் பறை முழங்கியது.போர் ஆரம்பித்தது.துச்சாதனன் பீமனைத் தாக்கினான்.போரின் ஆரம்பத்தில் பீமன் தன் முழு ஆற்றலைக் காட்டவில்லை.பின் தன் சபதம் நிறைவேறும் தருணம் நெருங்கிவிட்டது உணர்ந்து..தன் ஆற்றல் வெளிப்படும் வகையில் போரிட்டான்.துச்சாதனனின் வலிமை மிக்க தோள்களைப் பிடித்து அழுத்தி..'இந்த கைதானே திரௌபதியின் கூந்தலைத் தொட்டு இழுத்தது' என அவன் வலக்கையைப் பிய்த்து வீசினான்..'இந்தக் கைதானே..பாஞ்சாலியின் ஆடையைப் பற்றி இழுத்தது' என இடக்கையை பிய்த்து எறிந்தான்.அவன் சினம் அத்துடன் அடங்காமல் துச்சாதனன் மார்பைப் பிளந்தான்..துச்சாதனன் மாண்டு தரையில் கிடந்தான்.பீமனின் சபதத்தில் பாதி நிறைவுப் பெற்றது.(மறு பாதி துரியனைக் கொல்வதாகும்)
தருமர் கர்ணனை எதிர்த்தார்.வச்சிரம் போன்ற கருவியைக் கர்ணன் மீது எறிந்தார்.கர்ணன் அதன் வேகத்தை தடுக்க முடியாது மயங்கினான்.பின் எழுந்த கர்ணன் தருமரின் தேரை முறித்தான்.தருமர் உள்ளம் தளர்ந்து பாசறைக்குத் திரும்பினார்.
தருமரைக் காண கவலையுடன் அர்ச்சுனன் கண்ணனுடன் பாசறைக்கு வர..அவன் கர்ணனைக் கொன்றுவிட்டு வந்ததாக மகிழ்ந்தார் தருமர்.அது இல்லை என்றதும் கோபம் மேலிட'அவனைக் கொல்லாமல் ஏன் இங்கு வந்தாய்..பயந்து ஓடி வந்து விட்டாயா?உன்னைப்போல ஒரு கோழைக்கு வில் வேண்டுமா?அந்தக் காண்டீபத்தைத் தூக்கி எறி' என்றார்.
தருமரின் எதிர்பாரா இப்பேச்சைக் கேட்ட அர்ச்சுனன்..உணர்ச்சி வசப்பட்டு தருமரை நோக்கி'நீயா வீரத்தைப் பற்றிப் பேசுவது?நீ எந்த போர்க்களத்தில் வென்றிருக்கிறாய்..சூதாடத்தானே உனக்குத் தெரியும்? அதில் கூட நீ வென்றதில்லை.இவ்வளவு துன்பங்களுக்கு நீயே காரணம்' என்றவாறே அவரை கொல்ல வாளை உறுவினான்.
உடன் கண்ணன் அவன் சினத்தைப் போக்க இன்சொல் கூறினார்.தன் தவறுணர்ந்த அர்ச்சுனன்..மீண்டும் வாளை உறுவினான்..ஆனால்..இம்முறை தனைத்தானே மாய்த்துக் கொள்ள.தருமரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.தருமரும்..தன் இயல்புக்கு மாறாக நடந்துக் கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.அர்ச்சுனன்'அண்ணா, கர்ணனைக் கொன்று திரும்புவேன்'எனக் கிளம்பினான்.
கர்ணனும், அர்ச்சுனனும் போரில் இறங்கினர்.அம்புகள் பறந்தன.கர்ணனின் விஜயம் என்ற வில்லும்..காண்டீபமும் ஒன்றை ஒன்று மோதின.அர்ச்சுனனுக்கு தான் வைத்திருந்த சக்தி என்னும் வேல் இப்போது இல்லையே என கர்ணன் வருந்தினான்.(அதை கடோத்கஜனைக் கொல்ல கர்ணன் உபயோகித்து விட்டான்)பின் நாகாஸ்திரத்தை எடுத்து எய்தான்.அது மின்னல் வேகத்தில் பார்த்தனை நெருங்கியது.தேவர்கள் திகைக்க, மக்கள் கத்த..அந்த நேரம் பார்த்துப் பார்த்தஸாரதி தேர்க்குதிரைகளை நிறுத்தித் தேரைத் தம் காலால் மிதித்து ஓர் அழுத்து அழுத்தினார்.தேர் சில அங்குலங்கள் பூமிக்குள் இறங்க..அந்த நாகாஸ்திரம் அர்ச்சுனனின் முடியைத் தட்டிச் சென்றது.
யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாமல் இருந்தது..ஆனால் அச்சமயம் கர்ணனின் தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டது.தனக்கு பாதுகாப்பாக இருந்த கவச, குண்டலங்களைக் கர்ணன் முன்னமேயே இந்திரனுக்குத் தானமாக வழங்கி விட்டான்.அந்த இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதமும் இல்லை..நிராயுதபாணி ஆன அவன்,,'தருமத்தின் பெயரில் கேட்கிறேன்..தேரை சேற்றிலிருந்து எடுக்க சற்று அவகாசம் கொடு' எனக் கெஞ்சினான்.
அப்போது கண்ணன்..'கர்ணா..நீயா தர்மத்தைப் பேசுகிறாய்.துரியோதனன், சகுனியுடன் சேர்ந்து தீமைக்குத் துணைப்போனாய்.அப்போது உன் தர்மம் என்ன ஆயிற்று..மன்னர் நிறைந்த அவையில்..பாஞ்சாலியின் உடையைக் களைய நீயும் உடந்தைதானே..அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்..பாண்டவர்கள் பதின்மூன்று காலம் வன வாசம் முடித்து வந்ததும்..நீ தர்மப்படி நடந்துக் கொண்டாயா..அபிமன்யூவை தர்மத்திற்கு விரோதமாக பின்னால் இருந்து தாக்கினாயே..அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்' எனக் கேட்டார்.
கர்ணன் பதில் பேச முடியாது நாணித் தலைக் குனிந்தான்.ஆயினும்..அர்ச்சுனனின் கணைகளை தடுத்து நிறுத்தினான்.இறுதியாக அர்ச்சுனன் தெய்வீக அஸ்திரம் ஒன்றை எடுத்து 'நான் தர்மயுத்தம் செய்வது உண்மையெனின் இது கர்ணனை அழிக்கட்டும்'என கர்ணன் மீது செலுத்தினான்.தர்மம் வென்றது.கர்ணனின் தலை தரையில் விழுந்தது.தன் மகனின் முடிவைப் பார்த்து சூரியன் மறைந்தான்.துரியோதனன் துயரம் அடைந்தான்
75-பதினெட்டாம் நாள் போர்
கௌரவர்கள் பக்கம் மீதம் இருந்தது சில வீரர்களே..இந்நிலையில், துரியோதனன் வேண்டுகோளை ஏற்றுச் சல்லியன் அன்றைய போருக்குத் தளபதி ஆனான்.கர்ணன் போர்க்களத்தில் இறந்தால் தானே போர்க்களம் சென்று கண்ணனையும், அர்ச்சுனனையும் கொல்வதாகக் கர்ணனிடம் கூறிய உறுதிமொழியை மனதில் கொண்டான்.சல்லியனை எதிர்த்து போராட தருமர் முன் வந்தார்.
இரு திறத்துப் படை வீரர்களும் போர்க்களம் அடைந்தனர்.இதுவரை நடந்த போரில் ஏராளமான உயிர்ச் சேதம்,பொருட் சேதம் ஏற்பட்டிருந்தது.தவிர யானைப்படை, தேர்ப்படை, காலாட் படை, குதிரைப் படை என்ற நால்வகைப் படைகளின் அழிவு பேரழிவுதான்.
சல்லியன் சிறு வியூகம் வகுத்தான்.அதற்கேற்பப் பாண்டவர்களும் வியூகம் அமைத்தனர்.நகுலன் கர்ணனின் புதல்வன் சித்திரசேனனுடன் போரிட்டான்.இருவரும் கடுமையாக போரிட்டனர்.இறுதியில் சித்திரசேனன் இறந்தான்.கர்ணனின் மற்ற இரு மைந்தர்களும் நகுலனுடன் போரிட்டு மாண்டனர்.சல்லியனின் புதல்வனைச் சகாதேவன் கொன்றான்.சல்லியனை எதிர்த்து..தருமர் போரிட்ட போது..பீமன் தருமருக்குத் துணையாக வந்தான்.அவனை சல்லியன் தாக்கினான்.தருமருக்கும்,சல்லியனுக்கும் விற்போர் நீண்ட நேரம் நடந்தது.கடைசியில்..தருமர் சீற்றம் கொண்டு..ஒரு வேலைச் செலுத்த அது சல்லியனை கொன்றது.
பின்..சகுனி போருக்கு வந்தான்.அவனைச் சகாதேவன் எதிர்த்து போரிட்டான்.சகுனியின் மகன் உலூகனுக்கும் நகுலனுக்கும் போர் நேர்ந்தது.உலூகன் நகுனனால் கொல்லப்பட்டான்.அதை அறிந்த சகுனி..பல பாண்டவ வீரர்களைக் கொன்றான்.ஆனால்..சகாதேவனை எதிர்த்து நீண்ட நேரம் அவனால் போரிட முடியவில்லை.அப்போது சகாதேவன்..'அடப்பாவி..உன்னால் அல்லவா இந்தப் பேரழிவு..குல நாசம் புரிந்த கொடியவனே! இது சூதாடும் களம் அல்ல..போர்க்களம்..இங்கு உன் வஞ்சம் பலிக்காது' என்றபடியே சகுனியின் தலையை ஒரு அம்பினால் வீழ்த்தினான்.பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் செய்த சபதம் நிறைவேறியது.
துரியோதனன் படைகள் அழிய,தளபதிகள்,உடன் பிறந்தோர் என பலரை இழந்தான்.போர்க்களத்தை உற்று நோக்கினான்.தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.ஒரு கதையை எடுத்துக்கொண்டு நடந்தான்.தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் 'நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு' என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான்.பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர்.அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.
அவன் இருக்குமிடம் வந்த தருமர் 'துரியோதனா..சத்ரியனான நீ போர்க்களத்தை விட்டு ஒடி வந்து பதுங்கிக் கொண்டாயே..அதுவா வீரம்..எழுந்து வெளியே வந்து போர் செய்' என்றார்.அதற்கு துரியோதனன்..'தருமரே..நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய்வேன்.எனக்குரிய நாட்டை தருமமாகத் தருகிறேன் .பெற்றுக்கொள்' என்றான்.
நடுவே புகுந்த பீமன்..'வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா' என்றான்.வேறுவழியின்றி துரியோதனனும் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது.போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.
அப்போது கண்னன்..யுத்த நெறிக்கு மாறாகப் போர் செய்தால்தான் அவனை வீழ்த்தமுடியும் என்பதை உணர்ந்து..அவன் தொடையைப் பிளக்க வேண்டும்..என அர்ச்சுனனிடம் குறிப்பால் தெரிவிக்க..அர்ச்சுனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையைத் தட்டிக்காட்டினான்.குறிப்பறிந்த பீமன்..தனது கதாயுதத்தால் துரியோதனனின் இரு தொடைகளையும் முறித்தான்.நிற்கவும் இயலாது துரியோதனன் கீழே வீழ்ந்தான்.ஆத்திரமும், சினமும் கொண்டு'பீமா இதுவா போர் முறை?இதுவா சத்திரிய தர்மம்?' என்றான். (தொடரும்)
76-பதினெட்டாம் நாள் போர் (தொடர்ச்சி)
துரியோதனனின் கூற்றைக் கேட்ட பீமன் கூறுகிறான்..
'துரியோதனா நீயா தர்மத்தைப் பற்ரிப் பேசுகிறாய்?அன்று ஒருநாள் எனக்கு விஷம் கொடுத்தாயே அது தர்மமா?
கொடிகளால் கட்டி நதியில் வீசினாயே..அது தர்மமா?
அரக்கு மாளிகையில் எங்களைத் தங்கவைத்து தீயிட்டாயே..அது தர்மமா?
பாஞ்சாலியை மன்றத்தில் பலர் முன்னிலையில் துகில் உரிந்து மான பங்கம் செய்தாயே..அது தர்மமா?
எங்கள் குலக்கொழுந்தான அபிமன்யூவை நிராயுதபாணியாக்கி..மூலைக்கு ஒருவராக நின்று கொன்றீர்களே..அது தர்மமா?
பாவத்தின் மொத்த வடிவமான நீயா தர்மத்தைப் பற்றியும்..வீரத்தைப் பற்றியும் பேசுகிறாய்? என்றவாறு பீமன் அவனை எட்டிக் காலால் உதைத்துக் காலை அவன் தலையின் மீது வைத்து அழுத்தினான்,.
ஆனால் தருமர் பீமனின் இச் செயலை விரும்பவில்லை..'வீழ்ந்து கிடப்பவன் தலையில் காலை வைத்து அழுத்துதல் தர்மம் அன்று'என பீமனைக் கண்டித்தார்.பலராமனும் பீமனைக் கண்டித்தார்.
ஆனால்..துரியோதனன் தன் தவறுகளுக்கு வருந்தவில்லை.உலகெலாம் ஒரு குடைக்கீழ் ஆண்ட வீரமும், சத்திரிய தர்மத்தின்படி போர்க்களத்தில் போரிட்ட பெருமிதமும் தோன்ற உயிர் துறப்பேன் என்றான்.
பின்னர்..கண்ணன்..அர்ச்சுனனை தேரில் உள்ளக் கருவிகளை எடுத்துக் கொண்டு தேரில் இருந்து இறங்கச் சொன்னார்.அவர்கள் இறங்கியதுமே..தேர் பற்றியெரிந்தது. உடன் கண்ணன் 'பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ஆகியோர் செலுத்திய அம்புகளால் முன்னமே தேர் எரிந்திருக்கும்.நான் அதில் இருந்ததால் அழிவு ஏற்படவில்லை.நான் இறங்கியதும்..அம்பு தாக்கிய வெப்பத்தால் தேர் எரிந்து விட்டது' என்றார்.பாண்டவர்கள் கண்ணனை வணங்கி நன்றி கூறினர்.
திருதிராட்டினனுக்கும்..காந்தாரிக்கும் கண்ணன் ஆறுதல் கூறினார்.'உங்கள் துயரத்திற்கு துரியோதனனே காரணம்.அவன் சன்றோர்களின் அறிவுரையை ஏற்கவில்லை.'தான்' என்னும் ஆணவத்தால் அழிந்தான்.அவனால் பாண்டவர்கள் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது.காந்தாரி ஒருமுறை உன் மகன் துரியோதனனிடம் நீ என்ன கூறினாய் "மகனே..தர்மம் எங்கு உண்டோ அங்கு வெற்றி உண்டு '
என்றாயே...அஃது அப்படியே நிறைவேறியது.எல்லாம் விதி.எனவே பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம்.' என்ற கண்ணபிரானின் அறிவுரையைக் கேட்ட காந்தாரி சற்று ஆறுதல் அடைந்தாள்.கண்ணன் பின் பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றார்.
77-அஸ்வத்தாமனின் அடாத செயல்
தொடைகள் முறிந்ததால் நகர முடியாது துரியோதனன் துயரமுற்றான்.தான் அணு அணுவாக செத்துக் கொண்டிருப்பதை அறிந்தான்.அப்போது கிருபர்,கிருதவர்மா,அஸ்வத்தாமா ஆகியோர் அவனைக் கண்டு வேதனைப் பட்டனர்...அவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் பொழுது விடிவதற்குள் பாண்டவர்களை கொன்று வருவேன் என அஸ்வத்தாமன் கூறினான்.சாகும் நிலையில் இருந்தும் துரியோதனன் மனம் மாறவில்லை.அஸ்வத்தாமனுக்கு ஆசி வழங்கி அவனை தளபதி ஆக்கினான்.
பாண்டவர் பாசறை நோக்கிச் சென்ற மூவரும் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.அந்த மரத்தில் இருந்த பல காகங்களை ஒரு கோட்டான் கொன்றதை அஸ்வத்தாமன் கவனித்தான்.அதுபோல உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும்..பாஞ்சாலியையும் கொல்ல வேண்டும் எனக் கருதினான்.ஆனால் கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை.
ஆனால் அஸ்வத்தாமன் பாண்டவர் பாசறையில் நுழைந்தான்.அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.அவன் திரௌபதியிம் புதல்வர்களான உபபாண்டவர்களைக் கொன்றான்,தன் தந்தையைக் கொன்ற திருஷ்டத்துய்மனைக் கொன்றான்.சிகண்டியையும் கொன்றான்.அப்போது பாண்டவர்களும்,கண்ணனும் அங்கு இல்லை.அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான்.பின் அவன் உயிர் பிரிந்தது.வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை.
செய்தி அறிந்து பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தன் மைந்தர்கள் மாண்டு கிடப்பதைக் கண்ட பாஞ்சாலி மயங்கினாள்.அஸ்வத்தாமனை யாராலும் கொல்ல முடியாது என அவள் அறிவாள்.'அவன் தலையில் அணிந்திருக்கும் மணியைக் கவர்ந்து அவனை அவமானப் படுத்த வேண்டும்..இல்லையேல் பட்டினி கிடந்து இறப்பேன்' என சூளுரைத்தாள்.
உடன் பீமன் தேரில் ஏறி கிளம்பினான்.
அவனை எளிதில் பிடிக்க முடியாது என்பதால் கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.கங்கைக் கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனைக் கண்டனர்.பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான்.அஸ்வத்தாமன் பிரமாஸ்திரத்தை செலுத்த..அர்ச்சுனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான்.இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும்,நாரதரும் உலகைக் காக்க நினைத்தனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ச்சுனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான்.
ஆனால் அஸ்வத்தாமனுக்கு..திரும்ப அழைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை.அந்த அஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும்.அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி'பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும்;' என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான்.ஆனால் கண்ணனின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது.
சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கண்ணன் பழித்தார்.தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான்.'அறிவிலியே..நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டுக் காட்டில் தன்னந்தனியாய்ப் பல ஆயிரம் ஆண்டுகள் தவிப்பாயாக' என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர்.
உத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்றும் கூறினார்.சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்குச் சென்றான்.பாசறைக்குத் திரும்பிய கண்ணனும்,பீமனும்,அர்ச்சுனனும் திரௌபதியிடம் அஸ்வத்தாமனின் மணியைக் கொடுத்து ஆறுதல் கூறினர். (சௌப்திக பருவம் முற்றும்)
78-வாழ்க்கை ஒரு காடு
அஸ்தினாபுரமே துயரக் கடலில் ஆழ்ந்திருந்தது.போரில் இறந்தவர்கள் வீடுகள் எல்லாம் துயரத்தில் மூழ்கி இருந்தது.மைந்தரை இழந்த திருதிராட்டிரன்,காந்தாரி இருவரும் வேரற்ற மரமாய் வீழ்ந்து வேதனையில் துடித்தனர்.விதுரர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.இவை உலக மக்களுக்கு உரைத்த பொன்மொழிகளாக எண்ணலாம்.
விதுரர் - 'யாருக்குத்தான் மரணமில்லை.மரணத்திற்கு வயது வரம்பு கிடையாது.மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் நிகழலாம்.போர்க்களத்தில்..போரில் ஈடுபடுவோர் பிழைப்பதும் உண்டு..வீட்டில் பலத்த பாதுகாப்போடு இருப்பவர் இறப்பதும் உண்டு.பழைய உடையை நீக்கிவிட்டு புதிய உடையை உடுத்துவது போல உயிர்கள் இந்த உடலை விட்டு வினைப்படி வேறு உடலை எடுத்துக் கொள்கிறது. வினைப்பயன் யாரையும் விடாது பற்றும் தன்மை உடையது.நாம் விதைக்கும் விதை முளைப்பது போல நாம் செய்த வினைப்பயன் நம்மை வந்து அடையும்.
மேலும் அவர் கூறுகிறார்..ஒருவன் ஒரு கொடிய காட்டை அடைந்தான்.அங்கு சிங்கம்,புலி முதலிய கொடிய விலங்குகள் அவனைத் துரத்தின.அவன் தப்பித்து ஓடினான்.ஓட..ஓட..ஒரு புலி அவனை துரத்தியது.விரைந்து அவன் ஒரு மரத்தின் மீது ஏறும் போது தவறிப் பாழுங் கிணற்றில் வீழ்ந்தான்.பாதிக் கிணற்றில் கொடிகளைப் பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்கினான்.கிணற்றுக்கடியில் இருந்த கரும்பாம்பு சீறியது.கிணற்றுக்கருகில் இரண்டு முகமும் ஆறு கொம்புகளும் பன்னிரெண்டு கால்களும் உடைய யானை ஒன்று பயங்கரமாகச் சுற்றித் திரிந்தது.ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த கொடிகளை கருப்பும், வெள்ளையுமான இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருக்கின்றன.அப்போது மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டு சொட்டாகத்..துளித் துளியாகச் சிந்தியது.அவனோ தன்னைச் சூழ்ந்திருக்கும்..புலி,பாழுங்கிணறு,யானை,பாம்பு,எலிகள் ஆகிய ஆபத்துகளை மறந்து சிந்தும் தேன் துளியைச் சுவைத்திருந்தான்.அந்த ஆபத்திலும் உயிர் வாழ்க்கையை விரும்பினான்..
என்ற விதுரர் இந்த உருவகத்தை மேலும் விளக்கினார்..
மனிதன் சென்றடைந்த காடுதான் சம்சார வாழ்க்கை.நோய்கள் தாம் கொடிய விலங்குகள்.துரத்தி வந்த புலிதான் யமன்.ஏற முயன்ற மரம் தான் முக்தி.நரகம் தான் பாழுங்கிணறு.பற்றி பிடித்த கொடிகள் தாம் ஆசையும், பற்றும்.யானையின் இரு முகங்கள் அயணங்கள் (தக்ஷிணாயனம்,உத்தராயணம்).ஆறு கொம்புகள் ஆறு பருவங்கள்.பன்னிரெண்டு கால்கள் பன்னிரெண்டு மாதங்கள்.வருடமே யானை.காலபாசம் தான் கரு நாகம்.கொடிகளைக் கடிக்கும் கருப்பு,வெள்ளை எலிகள் இரவு பகல்கள்.அவை மனிதனின் வாழ்நாளை குறைத்துக் கொண்டே இருக்கின்றன.அவன் பெறுகின்ற தேன் துளி போன்ற இன்பமே இந்த உலக வாழ்வு.எனவே ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை உணர வேண்டும்.இறுதியில் மரணம் என்பது யாவராலும் தவிர்க்க முடியாததாகும்!
என நாளும் நாளும் மனிதன் சாகின்றான் என்பதை விதுரர் தெளிவாக விளக்கினார்.
79-இரும்புப் பதுமைத் தூண்
வியாசரும்..திருதிராட்டிரனுக்கு ஆறுதல் கூறினார்.ஆயினும் அவன் சினம் அடங்கவில்லை.கண்ணன் தருமரை அறிமுகப் படுத்த சாதாரணமாக தழுவிக் கொண்ட திருதிராட்டிரன்..பீமனைத் தழுவும்போது அறிவிழந்தான்.அவன் மனநிலையை அறிந்திருந்த கண்ணன் பீமனைப் போன்ற இரும்பாலான ஒரு பதுமையைக் காட்டினார்.திருதிராட்டிரன் அந்த இரும்பு பதுமையை இறுகத் தழுவி பொடியாக்கினான்.'இன்னுமா உன் வெறுப்பு தீரவில்லை? இந்த கெட்ட எண்ணமே உன் குலநாசம் அடையக் காரணம்' எனக் கண்ணன் கூற நாணித் தலைக் குனிந்தவன், மனம் தெளிந்து பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் ஆகியோரை தழுவிக் கொண்டான்
பாண்டவர்கள் காந்தாரியைக் காணச் சென்றனர்.காந்தாரியின் சினம் கண்ட வியாசர் 'நீ கோபப்படுவதால் பயன் இல்லை.நீ போருக்கு முன் துரியோதனனிடம் கூறியது என்ன..தருமம் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம் என்றாய்..பாண்டவர்கள் பக்கம் தருமம் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர்.அவர்களை வாழ்த்துவாயாக..'என்றார்.
'பாண்டவர்களும் என் மக்கள் தான்..ஆயினும் பீமன் மீது எனக்குக் கோபம் உண்டு.நெறிகெடத் துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்தினான்.துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தான்.இந்த கொடுமைகளை எப்படி மன்னிப்பேன்?' என்ற காந்தாரிக்கு பீமன் பதிலளித்தான்.
'தாயே! துரியோதனன் எங்களுக்கு இழைத்த கொடுமைகளை நீங்கள் அறிவீர்கள்.உச்சக் கட்டமாக..பாஞ்சாலியைத் தன் தொடைமீது வந்து அமரும்படிக் கூறினான்.துச்சாதனன் அவளின் ஆடையைக் களைய முற்பட்டான்..ஆனாலும் நான் மேற்கொண்ட சபதப்படி அவன் ரத்தத்தைக் குடிக்கவில்லை.பல்லுக்கும்,உதட்டுக்கும் கீழே செல்லவில்லை ரத்தம்.அதனை உமிழ்ந்து விட்டேன்.விகர்ணனைப் பொறுத்தவரை நான் எவ்வளவோ..கேட்டுக் கொண்டும் அதனை செவி சாய்க்காமல் போரிட்டு மாண்டான்' என்றான்.
பின் காந்தாரியின் அருகில் வந்து தருமர் வணங்கினார்.கட்டியிருக்கும் துணி வழியே தருமரின் கால் விரல்களின் நகங்களைக் கண்டாள்.அவை சினத் தீயால் கருத்து விகாரம் அடைந்தன.அது கண்டு அர்ச்சுனன் அச்சம் கொண்டான்.பின் ஒருவாறு காந்தாரி சாந்தம் அடைந்தாள்.
பாண்டவர்கள் பின் பெற்ற தாயான குந்தியைக் காணச் சென்றனர்.
வியாசரின் அருளால் காந்தாரி இருந்த இடத்திலிருந்து போர்க்களத்தைக் கண்டாள்.துரியோதனன் தரைமீது மாண்டுக் கிடப்பதுக் கண்டு..கதறி அழுதாள்.கண்ணனைப் பார்த்து..'உன்னால்தான் எல்லாம்..சகோதரர்களிடையே பூசலை அவ்வப்போது தடுத்து நிறுத்தியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்காது..என் குலம் நாசம் அடைந்தாற் போல உன் குலமும் நாசம் அடைவதாக' என சபித்தாள்.அவளுக்கு நல்லுணர்வு ஏற்படுமாறு கண்ணன் ஆறுதல் அளித்தார்.
இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் நேரம் வர..குந்தி..கர்ணன் தன் மூத்த மகன் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினாள்.
பின்..முறைப்படி ஈமச் சடங்குகள் நடை பெற்றன.
ஸ்திரீ பருவம் முற்றிற்று..அடுத்து சாந்தி பருவம்..தருமரின் மனக்குழப்பமும்,தெளிவும்,பீஷ்மரின் உபதேசமும்..அடுத்து வரும் பதிவுகளில்..
80-தருமரின் துயரம்
போர்க்களத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களை எண்ணி தருமர் சோகமாகக் காணப்பட்டார்.சகோதரர்களையும்,சுற்றத்தாரையும் இழந்து பெற்ற பயன் என்ன என ஏங்கினார்.அர்ச்சுனனைக் கூப்பிட்டு தருமர் சொல்ல ஆரம்பித்தார்.
'நாம் காட்டிலேயே இருந்திருந்தால் துயரம் இருந்திருக்காது. நம் சகோதரர்களைக் கொன்றதால் என்ன நன்மை..வனத்தில் இருந்த போது நம்மிடம் பொறுமை இருந்தது.அடக்கம் இருந்தது,அஹிம்சை இருந்தது.இவையே தருமம்.அறிவின்மையாலும்,ஆணவத்தினாலும்,பொருளாசையாலும் அரசாட்சியில் உள்ள கஷ்டத்தை விரும்பி துயரத்தை அடைந்தோம்.எல்லோரையும் கொன்றுவிட்டு கேவலமாக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.நம்மால் கொல்லப்பட்டவர்கள் மரணம் என்னும் வாயிலில் புகுந்து யமனின் மாளிகையை அடைந்து விட்டார்கள்.நன்மைகளை விரும்பும் தந்தைகள் அறிவுள்ள மக்களைப் பெற விரும்புகின்றனர்.தாய்மார்கள் விரதங்களும், தெய்வ வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.மகனையோ,மகளையோ பெற்று அவர்கள் நல்லபடியாக கௌரவத்துடனும்,செயல்திறனுடனும் புகழுடன் வாழ்வார்களாயின் தமக்கு இம்மையிலும்,மறுமையிலும் நற்பேறு கிட்டும் என பெற்றோர் எண்ணுகின்றனர்.இங்கே அவர்கள் நனவு கனவாயிற்று.அவர்கள் வாழ்க்கையும் பாலைவனம் போல் ஆயிற்று.அவர்களின் பிள்ளைகள் நம்மால் கொல்லப்பட்டார்கள்.அவர்கள் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமை நம்மால் தடுக்கப்பட்டது.
ஆசையும், சினமும் மிக்கவர்கள் வெற்றியின் பயனை அடைய முடியாது.இதில் கௌரவர்களும்..நாமும் ஒன்றுதான்.இந்த பூமியின் பயனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை.ஆசைவயப்பட்ட நம்மால் மட்டும் இதன் பயனை அனுபவிக்க முடியுமா?எண்ணிப்பார்த்தால் துரியோதனனால் அலைக்கழிக்கப்பட்ட நாமே இந்த உலகின் அழிவுக்கும் காரணமானோம்.நம்மிடம் பகைக் கொண்டு நம்மை அழிப்பதே அவன் லட்சியமாக இருந்தது.நமது பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட அவன் உடல் வெளுத்துக் காணப்பட்டான்.இதை சகுனியே திருதிராட்டிரனிடம் சொல்லி இருக்கிறான்.துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் யார் பேச்சையும் கேட்காமல் துரியோதனன் மனம் போனபடி போக வழிவிட்டார்.பீஷ்மரின் பேச்சையும் விதுரருடைய பேச்சையும் கேளாமல் மகனின் மனம் போல செயல்பட்டார்.
கெட்ட புத்தியுள்ள துரியோதனன் பழிபட செயல் புரிந்து உடன்பிறந்தவர்களைக் கொல்வித்தான்.தாய்,தந்தையரைச் சோகத்தில் ஆழ்த்தினான்.கண்ணனை கடுஞ்சொற்களால் ஏசினான்.
யார் செய்த பாவமோ..நாடு அழிந்தது.பல்லாயிரம் வீரர்கள் மடிந்ததும்..நம் கோபம் அகன்றது.ஆனால் இப்போது சோகம் வாள் கொண்டு பிளக்கிறது.நாம் செய்த பாவம்தான்..சகோதரர்கள் அழிவுக்குக் காரணமோ என அஞ்சுகிறேன்.இந்தப் பாவம் தவத்தினால் போகக்கூடியது என ஆகமங்கள் கூறுகின்றன.ஆதலால் நான் தவக்கோலம் பூண்டு காட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்.இல்லறத்தில் இருந்துக் கொண்டு நாம் செய்யும் செயல்கள் மீண்டும் பிறப்பு, இறப்புக் காரணம் என அற நூல்கள் கூறுகின்றன.ஆகவே சுக துக்கங்களைத் துறந்து சோகமில்லா ஓரிடத்தை நாடிச் செல்ல விழைகிறேன்.தவம் ஒன்றே நம் பாவங்களை சுட்டெரிக்கும் என உணர்கிறேன்.ஆகவே அர்ச்சுனா..இந்த பூமியை நீயே ஆட்சி செய்..எனக்கு விடை கொடு..' என்றார்.
81- தருமருக்கு அர்ச்சுனனின் பதில்
தருமரின் மொழிகளைக் கேட்ட அர்ச்சுனன் பதில் கூற ஆரம்பித்தான்..
'செயற்கரிய செயலை முடித்து..அதனால் பெற்ற செல்வத்தை இழக்கக்கூடாது.உமது துயரம் என்னை வியக்க வைக்கிறது.பகைவரைக் கொன்று தருமத்தால் கிடைத்த பூமியை எப்படி விட்டுப் போவது?அஃது அறிவீனம்.பயமும்,சோம்பலும் உடையவர்க்கு ஏது அரச செல்வம்?உலகில் ஒன்றும் இல்லாதவன் தான் பிச்சை எடுத்து உண்பான்.அவன் முயற்சியால் செல்வத்தை பெற மாட்டான்.மிகப் பெரிய அரச செல்வத்தை விட்டு விட்டு பிச்சை எடுத்து தவம் மேற்கொள்ளப் போகிறேன் என்ற உமது பேச்சை யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? எல்லா நம்மைகளையும் விட்டு விட்டு அறிவிலி போல் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?அரும்பாடு பட்டு வெற்றி கொண்ட பின் ஏன் காடு நோக்கி செல்ல வேண்டும்?ஒன்றும் இல்லாமல் இருப்பது சாதுக்களுக்கு தருமம்.ஆனால் அரச தருமம் அல்ல.அரச தருமம் என்பது பொருளால் நடைபெறுவது.அரச தருமம் மட்டுமல்ல சாது தருமம் கூட பொருள் இல்லாது போனால் நிலைகுலைந்து விடும்.சாதுக்கள் சாது தருமத்தைக் காக்க இல்லறத்தார் துணை செய்வர்.பொருள் இல்லையெனில் இல்லறத்தாரால் எவ்வாறு சாதுக்களுக்கு உதவ முடியும்.எனவே உலகில் பொருள் இல்லாமை பாவம் ஆகும்.பல்வேறு வகைகளில் திரட்டப் படும் செல்வமே எல்லா நன்மைகளும் பெருக காரணமாகிறது.அண்ணலே..பொருளிலிருந்து இம்மை இன்பம் கிடைக்கிறது.தருமம் பிறக்கிறது.இறுதியில் மறுமை இன்பமும் கிடைக்கிறது.
உலக வாழ்க்கை பொருள் இல்லாது மேன்மையுறாது.பொருளற்றவனின் முயற்சி கோடைகால நீர்நிலை போல் வற்றிப் போகும்.ஒரு பயனும் தராது.எவனிடம் பொருள் உண்டோ அவனிடம் நண்பர்கள் இருப்பார்கள்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனுடன் நெருங்கிய சுற்றத்தார்கள் இருப்பர்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனே சிறந்த அறிஞன்.அவனே தலைவன்.ஆகவே..யானையைக்கொண்டு யானையைப் பிடிப்பது போலப் பொருளைக் கொண்டு பொருளை சேர்க்க வேண்டும்.மலையிலிருந்து நதிநீர் பெருகுவதுப் போல பொருளில் இருந்து தான் தருமம் பெருகுகிறது.உண்மையில் உடல் இளைத்தவன் இளைத்தவன் அல்ல.பொருளற்றவனே இளைத்தவன் ஆவான்.
பகை அரசரின் நாட்டைக் கவர்வது அரச நீதி.அரச வம்சத்தை ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.ஒரு காலத்தில் இந்தப் பூமி திலீபனுடையதாக இருந்தது.பின் நகுஷன் கைக்குப் போனது.பின் அம்பரீஷனுடையதாகியது.பின் மாந்தாவுக்குச் சொந்தம் ஆனது.தற்போது உம்மிடம் உள்ளது.எனவே முன்னோர்களைப் போல அரச நீதி உணர்ந்து நீர் ஆட்சி புரிய வேண்டுமேயன்றிக் காட்டுக்குப் போகிறேன்..என்று சொல்லக் கூடாது' என்று அர்ச்சுனன் சொல்லி முடித்தான்.
82-தருமரின் உறுதி
அர்ச்சுனன் கூறிய காரணங்களை கேட்டும் தருமர் மனம் மாறவில்லை.துறவு மேற்கொள்ள இருக்கும் தன் முடிவில் மாற்றமில்லை என்றார்.அவர் அர்ச்சுனனிடம்..'நான் சொல்வதை உன் ஐம்புலன்களையும் ஒருமுகப் படுத்தி நான் சொல்வதைக் கேள்.அப்போது நான் சொல்வதில் உள்ள நியாயம் உனக்குப் புரியும்.முனிவர்கள் சேர்க்கையால் நான் மேலான நிலைமையை அடையப் போகிறேன்.நீ சொல்வதால் அரசாட்சியை நான் மேற்கொள்ளப் போவதில்லை.நான் காட்டுக்குச் செல்லப் போவது உறுதி.கானகம் சென்று கடுந்தவம் இருக்கப் போவது உறுதி.தவிர்க்க இயலாது.உலகப் பற்று நீங்கி முனிவர்களுடன் கூடி ஆத்ம சிந்தனையில் திளைப்பேன்.உடலை சாத்திரப்படி உண்ணாவிரதத்தால் இளைக்கச் செய்வேன்.இரண்டு வேளையும் நீராடுவேன்.காட்டில் உள்ள பறவை,விலங்குகளின் இனிய ஒலிகளைக் கேட்டு மனம் மகிழ்வேன்.தவம் செய்வோர் மேற்கொள்ளும் சாத்திர விதிப்படி பின்பற்றுவேன்.விருப்பு,வெறுப்பு,இன்ப துன்பம்,மான அவமானம் ஆகியவற்றிலிருந்து விலகி எப்போதும் தியானத்தில் இருப்பேன்.எனக்கு இனி நண்பரும் இல்லை..பகைவரும் இல்லை.
வாள் கொண்டு ஒருவர் கையை அறுத்தாலும் சரி,சந்தனத்தால் ஒருவர் அபிசேகம் செய்தாலும் சரி இருவருக்குமே தீங்கையோ, நன்மையையோ நினைக்க மாட்டேன்.இவ்வளவு நாள் இந்த புத்தி இல்லாமல்தான் சகோதரர்களைக் கொன்றேன்.பிறப்பு,இறப்பு,மூப்பு,நோய்,வேதனை இவைகளால் பீடிக்கப் படும் மனித வாழ்க்கையில் ஒரு பயனும் இல்லை.நிலையில்லா உலகில் தோன்றும் அற்ப ஆசைகளால் ஒரு அரசன் மற்ற அரசனைக் கொல்கிறான்.இவ்வளவு நாட்கள் அறிவு தெளிவற்றுக் கிடந்த நான் இப்போது தெளிந்த ஞானத்துடன் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்..என்றும் நிலைத்து நிற்கக் கூடிய முக்தியை அடையத் துணிந்து விட்டேன்' என்றார்.
பீமன் சத்திரியர் துறவு மேற்கொள்ளக்கூடாது என்றும் தருமர் அரசாட்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறியவை அடுத்த பதிவில்...
83-பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்
பீமன் தருமரைப் பார்த்து 'நீங்கள் உண்மையை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை..ராஜ தர்மத்தையே கொச்சைப் படுத்துகிறீர்.ராஜ தருமத்தில் உங்களுக்கு ஏன் அருவெறுப்பு? இப்படி நீங்கள் சொல்வீர்கள் எனத் தெரிந்திருந்தால்..நாங்கள் போர்க்கருவிகளையே எடுத்திருக்க மாட்டோம்.யாரையும் கொன்றிருக்கமாட்டோம்.இந்தப் போரே நடந்திராது.காலமெல்லாம் நாம் பிச்சை எடுத்திருப்போம்.இவ்வுலகு வலிமையுள்ளவர்களுக்கே சொந்தம் என மேலோர் கூறியுள்ளனர்.நம்ம பகைவர்களைத் த்ரும நெறிப்படி கொன்றோம்.வெற்றி பெறற நாட்டை அனுபவித்தல்தான் முறை.
பெரிய மரத்தில் ஏறி அரும்பாடுப்பட்டு கொணர்ந்த தேனைப் பருகாது..மரணம் அடைவது போல இருக்கிறது உமது செயல்.பகைவனைக் கொன்றுவிட்டு..தற்கொலை செய்துக் கொல்வது போல இருக்கிரது உங்க செயல்.உம்மைச் சொல்லிக் குற்றமில்லை.மந்த புத்தியுள்ள உங்கள் பேச்சைக் கேட்ட நாங்கள்தான் நிந்திக்கத் தக்கவர்கள்.ஆற்றல் மிக்கவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் சீரிய சிந்தனை மிக்கவர்களான நாங்கள் ஆற்றல் அற்றவர்களைப் போல ஆண்மை அற்ற உம்முடைய சொற்களுக்கு கட்டுப்பட்டுக் கிடக்கின்றோம்.துறவு என்பது முதுமைக் காலத்தில் நிகழ்வது..க்ஷத்திரியர்கள் துறவு மேற் கொள்வதை மேலோர் விரும்புவதில்லை.போர்க்களமே அவர்கள் மோட்ச உலகம்.
உண்மை இவ்வாறு இருக்க உமது செயல் க்ஷத்திரிய தருமத்தை நிந்திப்பது போல இருக்கிறது.பொருளற்றவர்களே துறவறத்தை நாடுவர்.துறவு மேற்கொள்பவர்கள் மேலும் பிறர் துன்பத்தை சுமப்பதில்லை தமது சுற்றம்,விருந்தினர்,ரிஷிகள் இவர்களைக் கவனிக்காமல் காடுகளில் திரிந்து சுவர்க்கம் அடைய முடியுமானால் ..காட்டிலேயே பிறந்து..காட்டிலேயே வளர்ந்த விலங்குகள் ஏன் சுவர்க்கம் அடையவில்லை.இரண்டுவேளை நீராடினால் முக்தி கிடைக்குமெனில்..எந்நேரமும் நீரில் கிடக்கும் மீன்கள் ஏன் முக்தியை அடையவில்லை?ஒரு பொருளிலும் பற்றற்று அசையாது நிறபதன் மூலம் முக்தி அடையலாம் என்றால் உயர்ந்த மலைகளும்..ஓங்கி வளர்ந்த மரங்களும் ஏன் முக்தி அடையவில்லை?ஒவ்வொருவரும் தன் கடமைகளை செய்ய வேண்டும்.தம் கடமையை மறந்தவனுக்கு முக்தி கிடைக்காது' என்றான்.
பின் மீண்டும் அர்ச்சுனன் தருமரைப் பார்த்து..'துறவறம் சிறந்ததா..இல்லறம் சிறந்ததா என்பதை அறிந்து கொள்ள முன்பு ஒரு புறாவிற்கும்,துறவிகளுக்கும் நடைபெற்ற உரையாடலைச் சான்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர்.நல்ல குலத்தில் பிறந்த சிலர் துறவு வாழ்க்கை மேலானது எனக் கருதித் தாய் தந்தையரையும்,சுற்றத்தாரையும்,பிறந்த வீட்டையையும்,உடமைகளையும் துறந்து காடு சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டனர்.அவர்களிடம் கருணை கொண்ட இந்திரன் ஒரு புறா உருவில் வந்தான்.விகசத்தை (ஹோமம் செய்து பிறருக்குக் கொடுத்தபின் மீதியிருக்கும் உணவு)உண்பவர்களே முக்தியடைவர் என்றது புறா.ஆனால் அந்த துறவிகள் விகசம் என்றால் காய்கறிகள் என தவறாகப் புரிந்து கொண்டனர்.
துறவிகளும்..தாங்கள் சரியான பாதையில் செல்வதாக மகிழ்ந்து 'பறவையே! உன் பாராட்டுக்கு நன்றி' என்றனர்.
உடன் புறா 'உங்களை நான் புகழவில்லை.நீங்கள் மூடர்கள்..நீங்கள் தெளிவு பெறச் சிலவற்றைக் கூறுகிறேன்.நாற்கால் பிராணிகளுள் சிறந்தது பசு..உலோகங்களில் தங்கம் சிறந்தது.ஒலிகளுள் வேதம் சிறந்தது..இரண்டுகால் பிராணிகளுள் வேதத்தை அறிந்தவன் சிறந்தவன்.ஒவ்வொருவனுக்கும் பிறப்பு முதல் இறப்புவரை பருவத்திற்கேற்பப் பல கருமங்கள் உள்ளன.தனக்குரிய கருமத்தைச் செய்பவன் புண்ணியப் பேறு பெறுவான்.குடும்பத்தில் தாய்,தந்தையர்,மனைவி,மக்கள்,விருந்தினர் ஆகியோரைக் கவனிக்க வேண்டும்.அவர்கள் உண்ட பின் எஞ்சிய உணவை உண்ன வேண்டும்.இந்த இல்லறக் கடமையை ஒழுங்காக நிறைவேற்றிய பின்னரே தவம் பற்றிய எண்ணம் வர வேண்டும்.அதன்பின் தேவகதி முதலான கதிகளைப் படிப்படியாகக் கடந்து இறுதியில் பிரம பதவி அடைய முடியும்.எனவே அறவோர் போற்றும் இல்லறக் கடமைகளை முதலில் மேற்கொள்வீராக' என்று கூறியது.
உண்மை உணர்ந்த துறவிகள் இல்லற தருமத்தை மேற்கொண்டனர்.ஆதலால் உமக்குரிய அரச தருமத்தை மேற்கொண்டு நல்லாட்சி புரிவீராக' என அர்ச்சுனன் கூறினான்.
தருமரின் உறுதி
அர்ச்சுனன் கூறிய காரணங்களை கேட்டும் தருமர் மனம் மாறவில்லை.துறவு மேற்கொள்ள இருக்கும் தன் முடிவில் மாற்றமில்லை என்றார்.அவர் அர்ச்சுனனிடம்..'நான் சொல்வதை உன் ஐம்புலன்களையும் ஒருமுகப் படுத்தி நான் சொல்வதைக் கேள்.அப்போது நான் சொல்வதில் உள்ள நியாயம் உனக்குப் புரியும்.முனிவர்கள் சேர்க்கையால் நான் மேலான நிலைமையை அடையப் போகிறேன்.நீ சொல்வதால் அரசாட்சியை நான் மேற்கொள்ளப் போவதில்லை.நான் காட்டுக்குச் செல்லப் போவது உறுதி.கானகம் சென்று கடுந்தவம் இருக்கப் போவது உறுதி.தவிர்க்க இயலாது.உலகப் பற்று நீங்கி முனிவர்களுடன் கூடி ஆத்ம சிந்தனையில் திளைப்பேன்.உடலை சாத்திரப்படி உண்ணாவிரதத்தால் இளைக்கச் செய்வேன்.இரண்டு வேளையும் நீராடுவேன்.காட்டில் உள்ள பறவை,விலங்குகளின் இனிய ஒலிகளைக் கேட்டு மனம் மகிழ்வேன்.தவம் செய்வோர் மேற்கொள்ளும் சாத்திர விதிப்படி பின்பற்றுவேன்.விருப்பு,வெறுப்பு,இன்ப துன்பம்,மான அவமானம் ஆகியவற்றிலிருந்து விலகி எப்போதும் தியானத்தில் இருப்பேன்.எனக்கு இனி நண்பரும் இல்லை..பகைவரும் இல்லை.
வாள் கொண்டு ஒருவர் கையை அறுத்தாலும் சரி,சந்தனத்தால் ஒருவர் அபிசேகம் செய்தாலும் சரி இருவருக்குமே தீங்கையோ, நன்மையையோ நினைக்க மாட்டேன்.இவ்வளவு நாள் இந்த புத்தி இல்லாமல்தான் சகோதரர்களைக் கொன்றேன்.பிறப்பு,இறப்பு,மூப்பு,நோய்,வேதனை இவைகளால் பீடிக்கப் படும் மனித வாழ்க்கையில் ஒரு பயனும் இல்லை.நிலையில்லா உலகில் தோன்றும் அற்ப ஆசைகளால் ஒரு அரசன் மற்ற அரசனைக் கொல்கிறான்.இவ்வளவு நாட்கள் அறிவு தெளிவற்றுக் கிடந்த நான் இப்போது தெளிந்த ஞானத்துடன் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்..என்றும் நிலைத்து நிற்கக் கூடிய முக்தியை அடையத் துணிந்து விட்டேன்' என்றார்.
பீமன் சத்திரியர் துறவு மேற்கொள்ளக்கூடாது என்றும் தருமர் அரசாட்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறியவை அடுத்த பதிவில்...
84-நகுலனின் பேச்சு
அர்ச்சுனனின் பேச்சைத் தொடர்ந்து நகுலன் தருமரிடம் கூறலானான்
"இல்லறக் கடமைகளை ஒழுங்காகச் செய்ததால்தான் தேவர்களுக்கு அந்த பிறப்புக் கிடைக்கிறது.இன்றும் அவர்களுக்கு மண்ணில் வாழ்வோர் மீது உள்ள அக்கறையைப் பாருங்கள்.இங்கு இருக்கும் உயிர்களின் உணவிற்காக மழையைத் தருகிறார்கள்.அதுபோல உலக உயிர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்.அர்ச்சுனனால் கூறப்பட்ட அந்தப் பிராமணர்கள் வேத நெறியைக் கைவிட்ட நாத்திகர்கள்.வேதத்தில் கூறப்பட்ட இல்லறக் கடைமைகளைத் துறந்து விட்டு யாரும் பிரமலோகத்தை அடைய முடியாது.இல்லற தருமம் மற்றெல்லா தருமத்தையும் விட சிறந்தது என உயர்ந்தோர் சொல்கின்றனர்.இல்லறம் துறந்து காடு செல்பவன்..வேறு ஒரு சமயத்தில் வீட்டைப் பற்றி எண்ணுவானானால் அவனை விட வேடதாரி இல்லை எனலாம்.
அறவழியில் பெற்ற செல்வத்தைப் பல யாகங்கள் மூலம் தானம் செய்பவனே..உண்மையில் மனதை வென்றவன்.அவனே உண்மையான தியாகி.இல்லற தருமம் என்னும் இத் தருமத்தில் தான் அறம்,பொருள்,இன்ப