தமிழர்கள் எங்கே வாழ்ந்தார்கள் என ஆராய்வதை விடவும், அவர்கள் ஐந்து வகையான நில அமைப்பில் பரந்து வாழ்ந்திருந்தனர் என கொள்ளலாம். ஆதியில் வேட்டை சமூகமாய் புலால் உண்பவர்களாய் இருந்தாலும், காலப் போக்கில் சமவெளி மற்றும் ஆற்றங்கரை நாகரீகமாய் தலையெடுத்த பின்னர் காய், கனி மற்றும் கிழங்குகளை தங்கள் உணவில் இணைத்துக் கொண்டதற்கான குறிப்புகளை காண முடிகிறது.
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசி, தினை, தேன், காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் சாமை, வரகு, வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் செந்நெல், வெண்நெல், கடலும் கடல் சார்ந்த பகுதியில் மீனும் முக்கியமான உணவாக இருந்திருக்கின்றன. இந்த தகவல்ளை நாம் தொல்காப்பியத்தின் வழியே அறிய முடிகிறது.
இவை தவிர கால்நடைகளில் இருந்து கிடைத்த பாலில் இருந்து வெண்கட்டி, ஏடு, தயிர், மோர், நெய், ஆகியவற்றை தயாரித்து பயன் படுத்தியதற்கான குறிப்புகளும் உள்ளன.
உணவை சமைக்க ஆரம்பித்த காலத்தில் தமிழர்களின் உணவு அவித்தல், வேகவைத்தல், வறுத்தல் என்பதாகவே இருந்தது. பிற்காலத்தில் நெய் சேர்த்து பொரித்ததாக குறிப்புகள் கூறுகிறது. இறைச்சியில் நெய் சேர்த்து மிளகு தூவி பொறித்து உண்டதாக ஒரு பாடல் கூறுகிறது.
முதன்மையான உணவாக அரிசியே இருந்திருக்கிறது. நெல்லை வேக வைத்து புழுங்கல் அரிசியாக பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. தொன்று தொட்டு பயிரிட்டு வந்த பாரம்பரிய நெல் வகைகள் பலவும் இன்று முற்றாக அழிந்து விட்டதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். சோறுடன், குழம்பு, கூட்டு, பொறியல் என உணவை பல ருசிகளில் சமைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
உணவை இலையில் வைத்து உண்ணும் பழக்கம் ஆதியில் இருந்து இன்று வரை தொடர்வது தமிழர்களின் தனிச் சிறப்பு. தாமரை இலை, மந்தாரை இலை, வாழை இலை என பல்வேறு இலைகளை இதற்குப் பயன் படுத்தியிருக்கின்றனர். உண்வை எல்லோரும் கூடியிருந்து உண்ணும் வழக்கமும் இருந்திருக்கிறது. இதனை "சிறுஞ்சோற்று நிலை”, “பெருஞ்சோற்று நிலை” என குறிப்பிட்டிருக்கின்றனர்.
இவை தவிர கள் போன்ற மது வகைகளும் பழந்தமிழரின் வாழ்வில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் தமிழகத்தில் பக்தி இயக்கம் எழுச்சி பெற்ற போதுதான் பிற இனக் குழுக்களின் உணவுக் கலாச்சாரம் தமிழர்களிடையே ஊடுருவி இருக்கிறது.
No comments:
Post a Comment