நான்... எனது நான்...' என்பது ஆணவம். எனது என்பது அகங்காரம். நமக்கென்று இந்த பூமியில் எதுவுமே இல்லை. பிறக்கும் போது, உடலில் ஆடை கூட இல்லை. போகும்போது, சிதை சுட்டவுடன் முதலில் பொசுங்கிப்போவதும் ஆடை தான்!
எதையும் கொண்டு வரவுமில்லை. கொண்டு போகப் போவதுமில்லை. ஆனாலும், இந்த பூமியில் ஏதோ ஒன்றைத் தேடி நாம் படும் அல்லல் கொஞ்ச நஞ்சமல்ல. வாழ்க்கையின் சூட்சுமம் நமக்கு புரியவில்லை என்பதற்காக, அந்த ஆண்டவன் போடுவதை தப்புக்கணக்கு என்று சொல்லி கொண்டிருக்கிறோம்.
இப்படித்தான் இருந்தார் சுகதேவர் என்ற முனிவர். முனிவர் என்பவருக்கு எந்த வித கெட்ட குணமும் இருக்கக்கூடாது. ஆனால், இவருக்கு "பொறாமை' என்கிற கெட்ட குணம் இருந்தது. யார் மீது தெரியுமா? சீதையின் தந்தை ஜனகர் மீது.
""இந்த ஜனகரை எல்லாரும் "ராஜரிஷி' என்கிறார்களே! ராஜாவாக இருப்பவர் எப்படி ரிஷியாக முடியும்! அவரை சோதித்துப் பார்த்து விட வேண்டியது தான்,'' என்று மிதிலைக்கு கிளம்பி விட்டார்.
ஜனகர் அவரை மிகுந்த பணிவுடன் வரவேற்றார். ""சுகதேவரே! தங்கள் வருகையால் தேசம் பெருமை பெற்றது. தாங்கள், அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும். வாருங்கள் உணவருந்தலாம்,' 'என உ<பசரித்தார்.
அவர்கள் உணவருந்தி முடிக்கவும், ஒரு அமைச்சர் வந்தார். ஜனகரின் காதில் ஏதோ சொன்னார்.
""முனிவரே! தாங்கள் இளைப்பாறிக் கொண்டிருங்கள்! ஒரு பணியின் காரணமாக, நான் வெளியே செல்ல வேண்டியுள்ளது. வந்தவுடன், நான் தங்களுடன் உரையாடுகிறேன். தங்கள் அனுமதி வேண்டும்,'' என்றார். முனிவரும் அனுமதியளித்தார்.
சிறிது நேரம் கழித்து, ஜனகர் திரும்பினார். இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசியபடியே நடந்து கொண்டிருந்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில், அவர்கள் நீண்டதூரம் சென்று விட்டனர். அப்போது, குதிரையில் ஒரு வீரன் வேகமாக வந்தான்.
""மகாராஜா...மகாராஜா...தாங்கள் அவசரமாக அரண்மனைக்கு வர வேண்டும். அரண்மனையில் தீப்பிடித்து, தங்கள் உடமைகள் எரிந்து விட்டன,'' என்று பதட்டமாகச் சொன்னான்.
""எனது உடமைகளா! அப்படி ஏதும் அங்கு இல்லையே!'' என்று அமைதியாகச் சொன்னார் ஜனகர்.
சுகதேவரோ, ""ஐயையோ! தீப்பிடித்து விட்டதா! எனது கமண்டலத்தையும், ஆடைகளையும் அங்கே வைத்திருந்தேனே! அவை எரிந்திருக்குமே!'' என்று பதறினார். சற்றுநேரம் கழித்து நிதானித்தார்.
""ஆம்...நான் என்ன பதில் சொன்னேன்! சாதாரண கமண்டலத்திற்கும், உடைகளுக்குமே பதறிப்போனேன். இந்த மன்னரோ,
அரண்மனையே எரிந்தும் பதட்டமில்லாமல் இருக்கிறார். தனக்கென்று அங்கே எதுவுமில்லை என்கிறார். நிஜத்தில் இவர் தான் ரிஷி,'' என்று தன்னையறியாமலே மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
இப்படியெல்லாம் ஆட்சி நடந்த நம் பாரததேசத்தில்... இன்றைய நிலை...!
No comments:
Post a Comment