Sunday, November 3, 2013

குழந்தைக்குப் பெயர் வைப்பவர் யார்?

வசிஷ்டரின் பெருமை - சுகி.சிவம்

எந்தக் கூட்டணியும் ரொம்ப நாள் நீடிப்பதில்லை. உண்மைதான்! எலும்பு, நரம்பு, சதை... இப்படி உதிரிக் கட்சிகள் 'உயிர்’ என்கிற தனிக் கட்சியுடன் வைத்திருக்கும் கூட்டணிதான் நாம். நாம் எவ்வளவு நாள் நீடிக்க முடியும்?

உடம்பையும் உயிரையும் பிரித்து, இந்தக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க, 'மரணம்’ என்கிற எதிர்க்கட்சி தவியாகத் தவிக்கிறது. எப்படியும் ஜெயிக்கிறது! ஆனால், மரணம் ஜெயிக்கிற வரை, உடம்பு ப்ளஸ் உயிர் கூட்டணி ஆட்சி நடக்கத்தான் செய்கிறது! இந்தக் கூட்டணி ஆட்சிக்கு - அதாவது, மனிதனுக்கு ஏதாவது ஒரு பேர் வைக்க வேண்டியுள்ளது!

ராமசாமி, கிருஷ்ணசாமி, பிரமிளா, ஜானகி... இப்படி ஏதாவது பெயர் வைத்தாக வேண்டி உள்ளது. பெயர் வைக்காமல், காருக்கு நம்பர் பிளேட் போடுகிற மாதிரி மனித ஜென்மங்களுக்கு நம்பர் போட முடியாது!

இந்துக்கள் கெட்டிக்காரர்கள். பரப்பிரம்மமாகிய கடவுள்தான், இப்படி மனித வடிவத்தில் பிறந்து, வாழ்க்கை நாடகம் நடத்துகிறார் என்று முடிவு கட்டி, 'பரம்பொருளுக்குப் பெயர் வைக்கிறோம்’ என்ற எண்ணத்தில், இறைவன் நாமாக்களையே பெயர்களாக வைத்தனர்.

விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் லலிதா சகஸ்ரநாமத்திலும் உள்ள பெயர்களைச் சூட்டும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. பகவானின் நாமத்தை உச்சரிக்க, இதுவும் ஒரு வாய்ப்பு என்ற எண்ணத்தால் செய்தவர்கள் சிலர். 'மனிதன் பரப்பிரம்மத்தின் துளி’ என்று உணர்ந்து செய்தவர்கள் சிலர்.

இப்போதெல்லாம் கதை மாறிவிட்டது! 'பப்லு, ஷம்மி’ என்று நாகரிகமாக நாய்க்குட்டிகள் மாதிரி பெயர் வைத்தால்தான் பலருக்குப் பிடிக்கிறது.

முன்பெல்லாம் ஒருவர் பெயர் சொன்னால், உடனே நட்சத்திரம் சொல்லிவிடலாம். சு, சே, சோ - என்கிற எழுத்துக்களில் பெயர் ஆரம்பமானால் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருப்பார். அ, இ, உ, எ - என்றால் கிருத்திகை. தி, து, தெ, தொ - என்றால் விசாகம் என்று ஒரு பட்டியல் உண்டு.
முன்பு பல குழந்தைகள் பெற்றதால், எல்லா தாத்தா, பாட்டி பெயர்களையும் வைக்க வசதியாக இருந்தது. இப்போது ஒன்றிரண்டு என்பதால், எந்த தாத்தா, பாட்டி பேர் என்பது முதல் பிரச்னை! தாத்தா, பாட்டி பேர் வைத்தால், ஏன்  வைத்தாய் என்று குழந்தைகள் வளர்ந்ததும் படுபிரச்னை.

ஆண் குழந்தைக்கு 'சிவசாமி’ என்று தன் அப்பா பேர் வைக்க, தகப்பனார் ஆசைப்பட்டார். 'கிருஷ்ணசாமி’ என்ற தன் அப்பா பேர் சூட்ட, மனைவி ஆசைப்பட்டார். ஆசை, சண்டை வரை போனது. எதிர்வீட்டுக்காரர் உள்ளே வந்தார். பிரச்னைக்குத் தீர்வு சொன்னார். 'சிவராமகிருஷ்ணன் என்று பேர் வைத்தால் சிவசாமி, கிருஷ்ணசாமி இரண்டு சாமியும் வந்துவிடுவார்கள்!’ என்றார். ஒரே சந்தோஷம்!

ஒரு வாரம் கழித்து கணவன் - மனைவி பேசிக்கொண்டிருந்தபோது, 'சிவராமகிருஷ்ணன்’ என்ற பேரைப்பற்றி ஆராயத் தொடங்கினார்கள்.
''சிவசாமி எங்க அப்பா. கிருஷ்ணசாமி உங்க அப்பா. நடுவுல ராமசாமி வந்துட்டாரே? அவரு...'' என்று கணவர் இழுத்தார்.

''அதுவா... ராமசாமி, எங்க அப்பா!'' என்று எதிர் வீட்டுக்காரர் உள்ளே வந்தார்.
ஒரு குழந்தைக்கு யார் பேர் வைக்கலாம்? அப்பா-அம்மா பேர் வைக்கலாம். அல்லது அப்பா-அம்மாவைப் பெற்ற அவர்கள் அப்பா-அம்மா பேர் வைக்கலாம். அல்லது அவர்கள் ஸ்தானத்தில் இருக்கிற மாமா, பெரியப்பா, சித்தப்பா பெயர் சூட்டலாம். கண்டவனும் பெயர் வைக்கலாமோ?

பெற்றவர்களைத் தவிர வேறு யார் பேர் வைக்கலாம் என்றால், அவர்களின் குரு, குலகுரு, ஆச்சார்யர்களுக்கு இந்த உரிமை உண்டு.

உயிர் அல்லது ஆன்மாவை நமக்குப் புரிய வைப்பவர் குரு, ஆச்சார்யர். 'உயிர் இறைவனே’ என்று உணர்த்தி, முக்திக்கு வழிகாட்டும் குரு, இந்தக் கூட்டணிக்குப் பெயர் வைக்கத் தகுதி உடையவர்.

உடம்பு ப்ளஸ் உயிர் சேர்ந்த கூட்டணிக்கு, உடம்புக்கு உரிமை உடைய பெற்றோர் அல்லது உயிருக்கு உடைமை உடைய குரு... இவர்கள்தான் பெயர் வைக்கலாமே ஒழிய, தெருவில் போகிற, வருகிறவர் எல்லாம் பெயர் வைப்பது நல்ல கலாசாரமாகத் தோன்றவில்லை.

ராமாயணத்தில் ராமனுக்குப் பேர் வைத்தவர் யார் தெரியுமோ? வசிஷ்டர். பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என்று தசரதன் பிள்ளைகளுக்குக் குலகுரு வசிஷ்டர்தான் பேர் வைத்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? அரசியல் தலைவனுக்குக்கூட குருதான் பேர் வைக்க வேண்டும் என்று தெரியவில்லையா?

இராமன் எனப் பெயர் ஈந்தான்...
பரதன் என்று பன்னினான்...
இலக்குவன் என்று இசைத்தனன்...
சத்ருகனன் என்று சாற்றினான்...
என்கிறது கம்ப ராமாயணம்.

நான்கு வேதம் மாதிரி பிறந்த நான்கு அரச குடும்பத்துத் தலைவர்களுக்கும் நான்மறை பயின்ற குலகுரு வசிஷ்டர் பேர் வைத்தார். அதனால்தான், இன்றுவரை அந்தப் பெயர்கள் நிலைத்து நின்றுள்ளன.
ஞானம், தவம், சீலம், நிறைநலம் மிக்க குருமார்கள், பிறந்த சிசுக்களைத் தீண்டி, செவிவழி உரக்கச் சொல்லி, உடம்பும் உயிரும் சேர்ந்த கூட்டணிக்குப் பெயர் வைக்கும் பாரத மரபைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

No comments:

Post a Comment