Saturday, November 9, 2013

பேச்சுக்கலை வல்லுநர் ஆவதற்கான சாத்தியங்கள்

ஒரு நல்ல பணி வாய்ப்புகளைப் பெறுவதானாலும் சரி, நமது எண்ணங்களை தெளிவான முறையில் ரசிக்கும்படி வெளிப்படுத்துவதாக இருந்தாலும் சரி, ஆசிரியத் தொழிலில் மேம்பட்டு விளங்குவதாக இருந்தாலும் சரி, பேச்சுக்கலை என்பது முக்கியம்.

மைக் முன்பாக வந்து பேசுகையில், பலருக்கு கை, கால்கள் நடுங்கும், ஏன், குரலேக் கூட நடுங்கும். பேச வந்ததை மறந்து விடுவார்கள். சொதப்புவார்கள். சமூகத்தில் பிரபலமடைந்த பல நபர்கள்கூட, இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள்தான். ஏன், காந்தியடிகள்கூட இந்த சிக்கலை கடந்து வந்தவர்தான்.

எங்கே, நம்மை நிராகரித்து விடுவார்களோ அல்லது கிண்டல் செய்து விடுவார்களோ என்ற பயம்தான், பேச்சுக் கலையின்போதான பலரின் தடுமாற்றத்திற்கு பிரதான காரணம்.

உங்களின் பேச்சுக் கலையை மேம்படுத்திக் கொள்வதென்பது உடனடியாக நிகழ்ந்துவிடும் விஷயமல்ல. முறையான மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகளின் மூலமே, மேற்கூறிய திறனை ஒருவர் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, அதுதொடர்பான சில பயனுள்ள ஆலோசனைகளை இக்கட்டுரை அளிக்கிறது.

பிரபலங்களின் உரையைக் கேட்டல்

பல பிரபலங்கள் பங்கேற்றுப் பேசும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது மிகவும் நன்மை பயக்கும். அதுபோன்று பங்கேற்கையில் நீங்கள் செய்ய வேண்டியவை,

* பேசுவதை கவனத்துடன் கேட்க வேண்டும்.

* அவர்கள் எப்படி கோர்வையாக, பாயின்ட்டுகளை எடுத்துப் பேசுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

* அவர்களின் உடல்மொழியை அவதானிக்க வேண்டும்.

* பேசுகையில் எப்படி வாக்கியங்கள் மற்றும் சொற்களுக்கு நடுவே இடைவெளி விடுகிறார்கள் மற்றும் கவனத்தைக் கவரும் வகையில் எப்படி பொருத்தமான மற்றும் வலிமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை கூர்ந்து நோக்க வேண்டும்.

மொழியறிவு மேம்பாடு

வலுவான மொழியறிவு கொண்டவர்தான் நல்ல உரையையும் வழங்க முடியும் என்பது ஒரு அடிப்படையான உண்மை. தாராளமய உலகில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் பற்றி விளக்கி சொல்ல வேண்டியதில்லை. எனவே, ஆங்கில மொழியில் தேவையான புலமைப் பெறுவது அவசியம். அப்போதுதான், உங்களது பேச்சு அனைவரையும் கவரும்படியாக இருக்கும்.

ஆங்கில அறிவை வளர்க்கும் முறைகள்

* நல்ல ஆங்கில தினசரிகள் மற்றும் பத்திரிகைகளை தினமும் படித்தல்.

* சில முக்கிய வார்த்தைகளை குறிப்பெடுத்துக் கொள்ளவும் மற்றும் அவ்வப்போது பத்திகளை நன்றாக வாசித்துப் பழகவும்.

* ஒரு நல்ல அகராதியிலிருந்து(dictionary) தினமும் 3 முதல் 5 வார்த்தைகளை தினந்தோறும் படித்து, அதை நினைவில் நிறுத்துவதோடு, அதை உங்களின் பேச்சின்போது பயன்படுத்தவும்.

* ஆங்கில புத்தகங்களைப் படிக்கையில், முக்கியமான மேற்கோள்களை குறித்து வைத்துக்கொள்ளவும். மேலும், தத்துவம், அரசியல், இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய துறைகளைச் சார்ந்த பிரபலங்களின் மேற்கோள்கள் புகழ்பெற்றவை. எனவே, அவற்றை மனனம் செய்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது, பொருத்தமான இடத்தில், சரியான மேற்கோளை பயன்படுத்தினால், அது உங்களின் உரைக்கு அழகு சேர்க்கும்.

கேள்விகளை எதிர்கொள்ளல்

சில இடங்களில் உரையாற்றும்போது, பார்வையாளர்கள் பலதரப்பினராக இருப்பார்கள். அதுபோன்ற சமயங்களில், உங்களின் உரை முடிந்தவுடன், நீங்கள் அவர்களிடமிருந்து கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் எதைப்பற்றி பேசுகிறீர்களோ, முடிந்தளவு அதைப்பற்றி தெளிவாக படித்து செல்லுங்கள்.

அதேசமயம், சில இடங்களில், questioning session இல்லாதபோது, உங்களின் உரை பற்றிய feedback கேட்கப்படும். எனவே, அவற்றை எதிர்கொள்வதற்கான பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

குறிப்பெடுத்துக் கொள்ளல்

ஒரு பிரபலம் கலந்துகொண்டு பேசும் பொதுக்கூட்டத்திற்கோ அல்லது கருத்தரங்கிற்கோ சென்றால், வெறும் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது. குறிப்பெடுக்க தேவையான குறிப்பேடு மற்றும் பேனாவுடன் செல்ல வேண்டும்.

ஒரு பேச்சாளர், தான் உரையாற்ற வரும் முன்னதாக, பல விஷயங்களை படித்து, குறிப்பெடுத்துக் கொண்டே வந்திருப்பார். அதற்காக அவர் பல மணிநேரங்கள் செலவிட்டிருப்பார். எனவே, அவரிடமிருந்து வெளிப்படும் புள்ளி விபரங்கள் மற்றும் சில முக்கியப் பெயர்கள் மற்றும் ஆண்டு விபரங்களை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய விபரங்கள், உங்களின் எதிர்கால உரைக்கு பயன்படும் வாய்ப்புகள் அதிகம்.

உதாரணங்கள், குட்டிக் கதைகள்

உரையாற்றும்போது, பொருத்தமான இடங்களில், சரியான உதாரணங்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், சில இடங்களில் சுவையான குட்டிக் கதைகளையும் பயன்படுத்தலாம். அதேசமயம், உதாரணங்களோ அல்லது குட்டிக் கதைகளோ சொல்வதற்கு தகுந்த இடம் எது என்பதை அறிவது முக்கியம்.

வாய்ப்புகளை உருவாக்குதல்

சிலருக்கு பேசுவதற்கு வாய்ப்புகளே கிடைக்காத மாதிரி இருக்கலாம். ஆனால், அதற்காக முயற்சி செய்யாமல் இருந்துவிடக்கூடாது. உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே உருவாக்க முயல வேண்டும். அப்போதுதான், பேச்சுத்திறன் குறித்த அனுபவம் பெற்று, அத்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். இல்லையெனில், நஷ்டம் நமக்குத்தான்.

No comments:

Post a Comment