01. புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்கள் உடலுக்கு ஓய்வும், மனதுக்கு தூக்கமும் தேவை என்று சொல்கிறார்கள். தூக்கம் வரவில்லை என்ற கவலையிலேயே பலர் தூங்காமல் கிடக்கிறார்கள்.
02. ஓய்வு என்பது மனதைப் பொறுத்த விடயம், நேரம் கிடைப்பதால் மட்டும் ஓய்வை உண்டாக்கிக் கொள்ள முடியாது. ஓய்வு கொள்வதற்கு ஏற்ற மனோபாவத்தை ஏற்படுத்துவது அவசியம்.
03. நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு வேலை செய்யலாம் ஆனால் இறுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வேலை செய்யக் கூடாது.
04. ஆழ்ந்து சுவாசியுங்கள்… உற்சாகமாக நடக்கப்பழகுங்கள்… எளிமையாக சாப்பிடுங்கள்… அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்… ஆழமாக சிந்தியுங்கள்.. உண்மையாக நடந்து கொள்ளுங்கள் இப்படி செய்தால் உங்கள் உணர்ச்சிகள் இயற்கை நிலையடைந்து நீங்கள் பூரண ஓய்வு பெறுவீர்கள்.
05. உன்னைக் கோபப்படுத்துகிறவன் உன்னை வெற்றி கொண்டுவிடுகிறான்.. நீங்கள் சரியாக இருந்தால் கோப்பட அவசியமே இல்லை.. நீங்கள் தவறானவராக இருந்தால் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை என்கிறார் மகாத்மா காந்தி.
06. கோப்படுவதற்கு நமக்கு உரிமை இருப்பதாக நாம் நம்புகிறபோதும்கூட, கோப்படுகிற சமயத்தில் நம்முடைய தகுதியை நாம் இழந்துவிடுகிறோம் என்ற உள்ளுணர்வும் நமக்கு இருக்கவே செய்கிறது.
07. கோபம் என்பது உஷ்ணமான உணர்ச்சி அது கொதிக்க முன்னர் அதைக் குளிர வைத்துவிடுங்கள். உஷ்ணம் கூடுகின்றபோது குளிர்ச்சியான எண்ணங்களை மனதில் உலாவ விடுங்கள்.
08. கட்டுக்கு அடங்காத கோபம் ஓங்கிய குரலாகத்தான் வெளிப்பட முயற்சிக்கும் அப்போது குரலைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். தாழ்ந்த குரலில் எவராலும் கோபத்தை வெளிப்படுத்த முடியாது.
09. நாற்காலியில் ஓய்வாக சாய்ந்து படுத்துவிட்டாலும், சாய்ந்து உட்கார்ந்து கொண்டாலும், அல்லது நீட்டிப் படுத்துவிட்டாலும் கோபம் அடங்கிவிடும்.
10. கோபம் வரும்போது ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணத் தொடங்குங்கள். அது கஷ்டமாக இருந்தால் கடவுளே இந்தக் கோபம் எனக்கு வேண்டாம் என்று மனத்திற்குள் எண்ணுங்கள்.
11. பொதுவாக சிறுசிறு பாதிப்புக்களால்தான் கோபம் உண்டாகிறது. அவற்றை சிறிய நிலையிலேயே கட்டுப்படுத்தும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டால் பெரியளவில் கோபம் ஏற்படாமல் தடுத்துவிடலாம்.
12. ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு நவீன வாழ்க்கை வாழ்பவனாக இருக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமான வாழ்க்கை வாழ்பவனாக இருக்கிறான். இதன் விளைவாக விரைந்து மன இறுக்கத்திற்கும் சோகத்திற்கும் ஆளாகிறான்.
13. விரைவு, பரபரப்பு என்று வாழும் இன்றைய நவீன மனிதன் இருபக்கமும் எரியும் ஒரு மெழுகுதிரியாக எரிந்து கொண்டிருக்கிறான்.
14. வேகத்தைக் குறைத்துக் கொள்வது ஒரு நல்ல மனோபாவம். இயற்கைக் காட்சிகளில் மனம் இலயிக்கிற பொழுது ஒரு சாந்த உணர்வும் கூடவே தோன்றிவிடுகிறது.
15. அழகான பூக்களை இரசிக்கின்ற போது, நண்பர்களிடம் மனம் விட்டு உரையாடுகின்றபோது, விருப்பமான பிராணிகளை தட்டிக் கொடுக்கின்றபோது, நல்ல புத்தகத்தில் இருந்து சில வரிகளை படிக்கின்றபோது மனம் சாந்தமடைகிறது.
16. வானுயர்ந்த மரத்தைப் பாருங்கள், மெதுவாக வளர்ந்துதான் அது அந்த உயரத்தை அடைந்திருக்கிறது. நிதானமான போக்கு, சாந்தமான மனதைக் கொடுக்கும் அதுவே உயர்ந்த இலட்சியங்களை எட்டித்தொட வைக்கும் என்பது இந்த மரம் தரும் உதாரணமாகும்.
17. கென்னடி, ஜவர்கர்லால் நேரு போன்றவர்கள் அமைதியுடனும், உற்சாகத்துடனும் செயற்பட்டதற்குக் காரணம், அவர்கள் தங்களுடைய வேலையைத்தவிர வேறு பல விஷங்களில் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்ததே காரணம் என்கிறார்கள்.
18. இயேசு பிரான் தன்னைச்சுற்றி நிகழ்ந்த எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டினார். அவர் சிறந்த மனோதத்துவ நிபுணராக இருந்தார், விவசாயம், பூச்செடிகள், உடல் அமைப்பு, பறவைகள், மிருகங்கள், மீன்பிடித்தல் ஆகியவற்றில் விசேட அக்கறை காட்டினார். எல்லாவற்றிலும் மேலாக மனிதன் அன்பு நிறைந்தவனாக மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான வழிமுறைகளைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார்.
19. கட்டிலை நீட்ட முடியாவிட்டாலும் அதில் படுத்துக் கொள்கிறோம், அதுபோலத்தான் வாழ்க்கையும் அதற்கேற்ப நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.
20. ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதுதான் வாழ்க்கை என்று தவறாகக் கருதிவிடக் கூடாது. தீய ஆசைகளை அடக்கியாளவில்லை என்றால் வாழ்வில் நின்மதியே இருக்காது.
No comments:
Post a Comment