Tuesday, November 5, 2013

வெற்றி பெறவே மனிதர்கள் பிறந்தார்கள் தோற்க அல்ல..

வெற்றி பெறவே மனிதர்கள் பிறந்தார்கள் தோற்க அல்ல..

தமிழர் புது நம்பிக்கை பெறுவதற்காக தமிழ் அல்லாத மொழிகளில் இருந்து உலக நற்சிந்தனைகள்.

01. வேலை செய்வதே சோகத்தை வெல்ல வழி.. கண்ணீர் விடாது நம்பிக்கையுடன் வேலை செய்தவனே துர்நாற்றம் பிடித்த காடுகளை அழித்து, அழகான வயல்வெளிகளையும், பிரமாண்டமான நகரங்களையும் உருவாக்கினான்.

02. உடலில் உள்ள நேர்மறையான நிலையை, வேலை செய்யும் சக்தியை, தைரியத்தை வெற்றி தந்திருக்கிறது. வெற்றி வரவில்லையே என்று நாம் கவலைப்படக்கூடாது, மேலும் ரோஜாக்கள் வேண்டுமென்றால் நாம் மேலும் பல செடிகளை நடவேண்டும், இதுவே வெற்றிக்கு வழி.

03. ஒரு மனிதன் தான் செய்யும் வேலையில் சந்தோஷம் காண வேண்டும். எந்த வேலையையும் அனுபவித்து செய்தால்தான் சந்தோஷம் காணலாம்.

04. தன் கடமையைக் கண்டறிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகிறான். அவனுக்கு வேறு ஆசீர்வாதம் தேவையில்லை. உழைப்புத்தான் மகிழ்வான வாழ்வு.

05. உங்கள் கடமையில் இருந்து சந்தோஷத்தைப் பெறுங்கள். இல்லாவிட்டால் உண்மையான சந்தோஷம் என்னவென்று உங்களால் அறிந்து கொள்ளவே முடியாது. வாழ்வில் நம்பிக்கையற்று, திருப்தியற்று இருப்பவர்களுக்கு இதில் நல்ல செய்தி இருக்கிறது.

06. கடமையும் கூடவே பிறக்காமல் எந்த மனிதனும் உலகில் பிறப்பதில்லை.

07. ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டியது என்னவென்றால் தன் தொழிலில் முன்னேற முயல வேண்டும், கஷ்டப்பட வேண்டும். அப்போதுதான் தான் தேர்ந்தெடுத்த தொழிலில் சிறப்பான வெற்றி பெற முடியும்.

08. ஒவ்வொருவரும் தொழிலில் தம்மை அர்ப்பணித்து, இயல்பான திறமைகளை வளர்த்து, உச்சகட்ட வளர்ச்சியை அடைய வேண்டும். உன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வாழ்வாயாக என்பதே வாழ்வின் வேதம்.

09. உன் கையில் உளி இருக்கும்போது உனக்கு வேறு எதுவும் தேவையில்லை. ( வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம் )

10. உங்கள் கடமையை அன்போடு செய்யாது வெறுப்போடு செய்தால், ஒரு நாள் கோயில் வாசலில் இருந்து பிச்சை எடுக்க வேண்டிய நிலைதான் வரும்.

11. உலகில் நாம் பிறந்தது ஏனென்றால் இந்த உலகத்திற்கான கடமைகளை செய்வதற்குத்தான். அதைச் செய்யாவிட்டால் நாட்கள் மிதமிஞ்சி தேவையற்ற சிக்கலில் மாட்டுப்படுவோம்.

12. நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் பயணம் செய்யுங்கள், பயணம் செய்யுங்கள் இதுதான் கொலம்பஸ்கண்ட நம்பிக்கை மொழி. இருள், பசி, களைப்பு இவைகள் சூழ்ந்தாலும் பயந்துவிடாதே பணயம் செய்..! என்றார்.

13. புயலில் கப்பல் பழுதுபட்டுவிட்டது, மாலுமிகள் கலகம் செய்யப்போவதாக பயமுறுத்தினர், கப்பலின் சுக்கானும் முறிந்துவிட்டது. அத்தருணம் கொலம்பஸ் நடுக்கடலில் மனச்சோர்வு அடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மனம் தளரவில்லை பயணம் செய்தார் இலக்கை அடைந்தார், அமெரிக்காவை கண்டறிந்தார்.

14. பயணம் செல்! பயணம் செல் ! கடலின் ஆர்ப்பரிப்பு அவரின் காதுகளில் கேட்டது. சிதறிய திவலைகள் அவர் கன்னத்தில் தெறித்தன. கொலம்பஸ் என்ற மனிதனின் அசைக்க முடியாத உறுதிக்கு பின்னால் அனைவரும் கட்டுப்பட்டு நின்றனர்.

15. அவனுக்கு முன்னால் கரையற்ற கடல்..

நம்பி வந்தவர்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்தனர்..

வெளுத்து களைத்த மாலுமிகள் பிரேதம் போல ஆனார்கள்..

பயங்கரமான அந்தக் கடலில் இருந்து கடவுளும் விலகிவிட்டார்..

நம்பிக்கை போனால் நாம் என்ன செய்வது ?

பயணம் செய் ! பயணம் செய் ! பயணம் செய் !

அந்த இரவோ இரவுகளில் எல்லாம் இருண்டது !

பிறகு ஓர் ஒளி !

வெளிச்சம் ! வெளிச்சம் ! வெளிச்சம் !

கொலம்பஸ் அன்று உலகை வென்றான்

உலகுக்கு ஒரு பாடம் சொன்னான்..

பயணம் செல் தொடர்ந்து பயணம் செல்..

ஈழத் தமிழா நீயும் கலங்கிவிடாதே

பயணம் செல்..! தொடர்ந்து பயணம் செல்..!

நீயும் கொலம்பஸ்போல சுதந்திர மாலையுடன்

ஒரு நாள் உன் தாய் நாட்டைக் காண்பாய் !

16. தைரியமும் விடா முயற்சியும் இருந்தால் நீ உன் இலட்சியத்தை அடைவாய். எனவே உன் பாதையைத் தீர்மானித்து, அதில் தொடர்ந்து செல் ! என்ன நடந்தாலும் சரி கைவிடாதே.. ! தொடர்ந்து செல் விரைவில் நீ உன் இலட்சியத்தை அடைவாய். இதுதான் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க விரும்புவோர்க்கு கொலம்பஸ் சொன்ன நற்செய்தி.

17. பின்னால் உள்ள எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இப்போது செய்வதில் மூழ்கி உன் இலட்சியத்தில் முன்னேறு.

18. தைரியமும், விடா முயற்சியும் இரண்டு மந்திர தாயத்து போல நம்முள் செயற்பட்டு வரும் துன்பங்களையும் தடைகளைகளையும் அழிக்கின்றன.

19. தீர்மானமான தேவையற்ற வேகம் இல்லாமல் முன்னேறும் ஒருவனுக்கு எந்தப் பாதையும் நீண்டதில்லை. பொறுமையோடு வெற்றிக்காக தயார் செய்து கொண்டிருப்பவனுக்கு அது தொலைவில் இருப்பதும் இல்லை.

20. உறுதியால் அல்ல…! விடா முயற்சியால்தான் உயர்ந்த காரியங்கள் சாதிக்கப்படுகின்றன. ( ஒவ்வொரு ஈழத் தமிழரும் இந்த வரியைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும் )

21. தன் வாழ்நாள் முழுவதும் ஒரே இலக்கை நோக்கி உண்மையாகப் பாடுபட்ட ஒருவன், அதை அடையாமல் போனதாக சரித்திரம் இல்லை.

22. வெற்றிக்கான முழுமையான காரணி விடா முயற்சி.. கதவில் நீண்ட நேரம் ஓசை உண்டாகும்படி தட்டினால் நிச்சயம் ஒரு நாள் யாராவது வந்து திறப்பார்கள்.

23. காலையில் நீங்கள் எழுந்திருக்கிறீர்கள்.. என்ன ஆச்சரியம் உங்கள் கைகளில் மந்திரம் போல 24 மணி நேரம் நிரம்பி இருக்கிறது. அதுதான் உங்கள் செல்வங்களில் சிறந்த செல்வம்.

24. நேரம்தான் விலைமதிப்பற்ற பொருள், அதுதான் வாழ்வின் விலை மதிப்பற்ற சாறுள்ள தசையாகும்.

25. சுய ஒழுக்கமுள்ள கட்டுக்கோப்பான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, விலை மதிப்பற்ற நேரத்தை சிறிதும் வீணாக்காமல், முட்டாள்தனமாக மிதமிஞ்சி செலவு செய்யாமல், முன்னேற்ற முனைப்புடன் செயற்படுத்து. ஒவ்வொரு மணி நேரமும் ஓர் உபயோகமான நோக்கத்திற்கு பயன்பட வேண்டும்.

இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் வெறுமனே வாசித்துவிட்டுப் போகாது இதன்படி நம்பிக்கை மனிதர்களாக வாழ வேண்டும். போராட்டத்தின் சரி, தவறு, தோல்வி, வெற்றி எல்லாவற்றையும் தாண்டி உற்சாகமாக நடவுங்கள்.. ஏனென்றால் உங்கள் இதயத்தில் விடிவு வந்தால்தான் நாட்டில் விடிவின் ஒளி விழும்… அதற்கு நன்கு திட்டமிட்டு, நேரத்தை நாசமாக்காது, தொடர்ந்து பயணிக்க வேண்டும் கொலம்பஸ்போல..

No comments:

Post a Comment