Tuesday, November 5, 2013

கவிப்பேரரசு கண்ணதாசன் கடைசிப்பக்கம் என்ற நூலிலிருந்து....

கவிப்பேரரசு கண்ணதாசன் கடைசிப்பக்கம் என்ற நூலிலிருந்து....

விவேகானந்தரின் 'ஞான தீப 'த்தை படித்துக்கொண்டிருந்த போது எனக்கொரு விஷயம் கிடைத்தது.

பகவான் ராமகிருஷ்ணரை காண வரும் இளைஞன் ஒருவன் எப்போதும் இந்து சாஸ்திரங்களையும், வேதங்களையும் கண்டித்துப் பேசிக் கொண்டிருப்பானாம். ஒருநாள் அவன் திடீரென்று பகவத்கீதையைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தானாம். அவன் போன பிறகு பகவான் சிரித்துக் கொண்டே சொன்னாராம்;

"ஏதோ ஓர் ஐரோபிய பண்டிதர் கீதையை புகழ்ந்திருப்பார் போலிருக்கிறது! அதுதான் இவனும் புகழ்கிறான்!" என்று.

இது நடந்தது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு.

முஸ்லிம்களும், ஆங்கிலேயர்களும் அடுத்தடுத்து வந்து வேரூன்றிய காலம் அது.

அப்போதைய இந்து தன் உணர்வு குறைந்தவனானான்.

பிற மதத்தினரது பழக்க வழக்கங்களால் கவரப்பட்டான்.

முஸ்லிம்களிடமிருந்து குருமாவையும், பிரியாணியையும் பெற்றுக் கொண்டான்; வெள்ளைக்காரர்களிடம் இருந்து விவஸ்தையற்ற கட்டுபாடற்ற சுகபோகத்தைக் கற்றுக் கொண்டான்.

தனக்கென்று ஒரு நாகரீகம் இருப்பதை மறந்துப் போனான்.

நாளடைவில் அந்த மறதி வளர்ந்ததே தவிர, குறையவில்லை.

வேறு எந்த மதமும் வாழ்க்கை நாகரீகத்தைப் போதித்ததில்லை; இந்து மதம் ஒன்றே போதிக்கிறது.

மேற்க்கத்திய நாகரீகம் மத நாகரீகமல்ல; அது மதம் பிடித்த நாகரீகம்.

ஆனால், ஓர் இந்துவின் நாகரீகம் தெய்வீக அடிப்படையில் அமைந்தது.

அது நமது குடும்பத்தை கோவிலாக்கிற்று; கணவனை தேவனாக்கிற்று; மனைவியை தேவியாக்கிற்று.

சுவாமி விவேகானந்தர் சொல்வது போல், "ஓர் இந்துவுக்கு சொந்த வீடு இருக்க கூடாது. அப்படி ஒரு வீடு இருக்குமாயின் அது அதிதிகளை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே "

பிறரை வரவேற்றுக் கருணை காட்டுவதே கோவில். ஆகவே, இந்துவின் குடும்பம் ஒரு கோவில்.

அவன் தினமும் பூஜை செய்கிறான். காரணம் அன்றைக்கு தன்னைப் புனிதப்படுத்திக் கொள்கிறான்.

அவன் விபூதியை 'திருநீறு' என்கிறான். நாமத்தை 'திருமண்' என்கிறான்.

காரணம் இந்த உடல் தீயில் வெந்து நீறாகப் போகிறது. அல்லது மண்ணில் புதைந்து மண்ணாகப் போகிறது என்பதைத் தினமும் நினைத்துக் கொள்வதற்காகவே.

அப்படி நினைத்துக் கொள்வதன் மூலம், "சாகப்போகிற இந்த உடல் தவறு செய்யக் கூடாது " என்று சத்தியம் பூணுவதற்க்காகவே.

அவன் நீராடி உடம்பைக் கழுவுகிறான்; பூஜை செய்து உள்ளத்தைக் கழுவுகிறான்.

நான் குறிப்பிடுவது-சரியான நல்ல இந்துவை.

இந்த நேரத்தில் இந்து பெண்கள் மறந்து போய் விட்ட ஒரு நாகரீகத்தை நான் நினைவுபடுத்தியாக வேண்டும்.

திருமணம் ஆகாத இந்து பெண்கள் சாந்து போட்டு வைக்க வேண்டும்; கை விரலில் மோதிரம் அணியக் கூடாது.

திருமணம் ஆன பெண் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்; மோதிரம் அணிய வேண்டும்.

காரணம், மங்கள விழாக்களில் ஒரு பெண்ணைக் காணுகிறவர்கள் அவள் திருமணம் ஆனவள், அல்லது ஆகாதவள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

யாரையுமே விசாரிக்காமலே, சாந்து பொட்டு வாய்த்த ஓர் அழகான பெண்ணைப் பார்த்து அவளை தன் மகனுக்கு மணம் பேசலாமா என்று பிள்ளையை பெற்றவர் நினைப்பதற்கு இது ஒரு வாய்ப்பு.

கோவிலில் ஒரு பெண் கையெடுத்து கும்பிடும் போது, விரலைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அவள் திருமணம் ஆனவளா இல்லையா என்று.

இதை நமது சமூகம் இப்போது பின்பற்றினால் என்ன?

நமது நாகரீகத்திற்கு ஒவ்வோர் அணுவிலும் உயர்ந்த நோக்கம் உண்டு. அது தர்மத்தில் முளைத்தெழுந்த கர்மம்-காரியம்.

இந்து நாகரீகம் குழந்தை பிறந்ததிலிருந்து சாகும் வரை அதற்கு வழி காட்டுகிறது.

எந்தந்த ராகங்களை எந்தந்த நேரங்களில் பாட வேண்டும் என்பதிலிருந்து, எந்தந்த ஆடைகளை எவ்வெப்போது அணிய வேண்டும் எனபது வரையில் சொல்லிக் கொடுக்கிறது.

சாப்பிடக் கூடியது எது, சாப்பிடக் கூடாதது எது என்பதையும் மதம் போதிக்கிறது.

ஒரு குடும்ப பெண் காலையில் எழுந்து தலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்கிறாள் என்றால், அவள் கணவனோடு உறவு கொண்டிருக்கிறாள்; ஆனால், கர்ப்பமடையவில்லை என்று பொருள். தலை குளிக்காமல் உடம்புக்கு மட்டும் தண்ணீர் ஊற்றினால் அவள் கர்ப்ப முற்றிருக்கிறாள் என்று பொருள்.

அதைதான் முழுகாமல் இருக்கிறாள் என்பார்கள்.

வெறும் வார்த்தைகளை கொண்டே ஓர் இந்து அதிலுள்ள ஆழமான பொருளைக் கண்டுபிடித்துவிட முடியும்.

No comments:

Post a Comment