மனிதர்களின் குறிக்கோள் மற்றும் அதை அடையும் விதம் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. போர்டு (Ford) அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற ஆராய்ச்சியின் மூலம் கீழ் வரும் செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
23 சதவீதத்தினர் வாழ்வில் தனக்கு என்ன வேண்டும் என்பது பற்றி எந்த சிந்தனையும் இல்லாதவர்கள். எனவே அவர்கள் எதையும் அடைவதில்லை.
67 சதவீத மக்கள் தமக்கு என்ன தேவை என்பது பற்றிய மேலோட்டமான எண்ணம் உடையவர்கள். ஆனால் அதை அடைய திட்டமிடல் எதுவும் இல்லாததால் எதையும் அடைவதில்லை.
10 சதவீத மக்கள் மட்டுமே குறிப்பிடும்படியான நல்ல தெளிவான இலட்சியங்களை உடையவர்கள். இந்த பத்தில் ஏழு பேர் தங்கள் இலக்குகளை அடைந்துள்ளனர். அதுவும் சில நேரங்களில் மட்டுமே!
மீதமுள்ள 3 சதவீதத்தினர் தங்கள் இலக்குகளைப் பல நேரங்களில் அடைந்தாலும் நிரந்தரமாக அடைந்ததில்லை.
இந்தக் கணக்குப் படி பார்த்தால் 90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர்களால் சிறந்த வாழ்வையோ அல்லது மன அமைதியையோ பெற முடியாது.
வாழ்வில் சிறந்த திட்டமிடல் இல்லையென்றால் கவலை, மன அழுத்தம், பயம், படபடப்பு, சிக்கல் மற்றும் சுயபச்சாதாபம் போன்றவைதான் மிஞ்சும். வாழ்க்கை அலைகடலில் சிக்கிய மரத்துண்டு போல அலைகழிக்கப்படும்.
அறிவியல் அறிஞர் லூயிஸ் பாஸ்டர், “என் இலட்சியத்தில் நான் வெற்றியடைந்ததற்கான இரகசியம், என்னுடைய சிதறாத கவனம்” என்று கூறுகிறார்.
இந்த கவனத்தை எப்படி வளர்த்துக் கொள்வது?
‘என்ன இலக்கு? எப்படி அடைவது? எப்போது அடைவது? எவ்வாறு அடைவது?’ போன்ற கேள்விகளைக் கேளுங்கள்.
ஒரு இலக்கை அடைய பல்வேறு வழிகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏற்ற வழியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த வழி உங்களை நிச்சயமாக எங்காவது கொண்டு சேர்க்கும். எங்குமே போக முயற்சி செய்யாமல் இருப்பதை விட இது மேல்தானே!
சூரிய ஒளியின் கதிர்களை, பூதக் கண்ணாடியின் மையப் பகுதியில் செலுத்துவதன் மூலம் மிகுந்த வெப்பத்தை உற்பத்தி செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே! இதைப் போல் உங்களுடைய கவனம் முழுவதும் சிறந்த இலக்குகளை, அடையாளம் கண்டு அதை அடைவதிலேயே இருக்க வேண்டும்.
உங்கள் மனம் முழுமையாக உங்கள் இலக்கினை ஏற்றுக்கொண்டால்தான், உடலில் உள்ள ஆற்றல் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்படும். இதுவும் ஒரு தவம் போலத்தான்! இதனால் உங்கள் மனமும் உடலும் ஒரு சேர வலிமை பெறுகின்றன. எனவே, உங்கள் இலக்கினை அடைய மற்றவர்களின் துணை தேவையற்றதாகி விடுகின்றது.
No comments:
Post a Comment