தலைவராவதற்கு எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் தலைமை தாங்குவது எளிதான விஷமல்ல. ஒரு பெரும் சுமையை லாவகமாகத் தூக்கிச் சுமக்கும் திறன். தலைமைப் பண்புகள் என்பவை என்ன. அவற்றை எப்படி வளர்த்துக்கொள்வது. ஒரு நல்ல தலைவரின் பொறுப்புகள் என்னென்ன. நாட்டை வழி நடத்துபவர் தேசத் தலைவர், குடும்பத்தை வழி நடத்துபவர் குடும்பத் தலைவர், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரை வழி நடத்துபவரை மாணவர் தலைவர் என்கிறோம். அவர்கள் மற்றவர்களை வழிநடத்தும் தலைமைப் பண்பை பெற்றிருப்பதால் தலைவராக இருக்கிறார்கள்.
வெறும் அறிவு மட்டுமே இருந்தால் ஒருவருக்கு தலைமைப் பண்பு இருக்கின்றது என்று கருத முடியாது. அறிவு அனுபவம் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகியவற்றையும் கொண்டவரையே தலைமைப் பண்பு கொண்டவர் என்று கூறலாம். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’, என்பார்கள்.
சந்திரகுப்தர் குழந்தைப் பருவத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவரை கவனித்துக்கொண்டிருந்த சாணக்கியர், சந்திர குப்தரிடம் அரசராகும் தலைமைப் பண்புகள் இருப்பதாக கணித்துக் கூறினார்.
ஒவ்வொருவரும் அவரவருக்குள் இருக்கும் தலைமைப் பண்பை உணரத் தொடங்கும்போது அவர் தலைவராவதற்கான முதல் படிக்கட்டில் ஏறிவிட்டார் என்று கருதலாம். புத்திசாலித்தனமாக அல்லது விவேகத்துடன் நடந்துகொள்ளுவது சிறந்த தலைவருக்குத் தேவையான ஒன்று ஆகும். வழி நடத்தும் பொறுப்பில் இருப்பதால் தலைவருக்கு அனுபவ அறிவு மிகவும் இன்றியமையாதது.
அதுவும் அனுபவம் சார்ந்த புரிதலுடன் கூடிய அறிவே சிறந்தது. தலைவர் என்பவர் காலமாற்றங்களுக்கேற்ப புதிய உத்திகளையும், அணுகுமுறைகளையும் துணையாகக் கொண்டு முடிவுகளை எடுத்து வழிநடத்துபவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாண்புடன் நடந்துகொள்ளும் குணநலன்களில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது.
சிறந்த தலைவராக செயல்பட தேவையான குணநலன்களாவன.
பயிற்சியாளர்
நல்ல தலைவர் என்பவர் ஒரு சிறந்த பயிற்சியாளர். குழு உறுப்பினர்கள் தங்களது திறமையை முழுமையாக பயன்படுத்த வாய்ப்பளித்து தங்களது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட உதவுபவரே சிறந்த தலைவர்.
தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் புதிதாக ஒரு முயற்சியில் இறங்கும்போது ஏதாவது தடை அல்லது இடர்பாடுகளை எதிர்கொண்டால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனை வழங்கி வழி நடத்துபவரே தலைவர்.
இயக்குனர்
தலைவர் ஒரு இயக்குனர் போன்றவர். எந்த நோக்கத்துடன் எந்த இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை குழுவை வழி நடத்தும் தலைவர் தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.
எந்தவொரு தடையும் இல்லாமல் அல்லது தடைகள் வந்தாலும் அவற்றையும் எதிர்கொண்டு இலக்கை அடையும் வாய்ப்புகள் உள்ளன என்று உறுதியுடன் செயலை தொடங்குபவராக நல்ல தலைவர் இருப்பார்.
குழு உறுப்பினர்களுக்கு தெளிவாக நோக்கத்தை புரிய வைத்து இலக்கை அடைய வழி வகுப்பவராக இருப்பார். தேவைப்பட்டால் தானே நேரடியாக அனுபவ களத்தில் இறங்கி செயல்பட்டு முன்மாதிரியாக நடந்துகொண்டு வழி நடத்துவார்.
தாக்கத்தை உருவாக்கும் ஆற்றல்
சிறந்த தலைவரானவர் பிறரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி திறமையாக செயல்பட வைக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார். இதுவரை வெளிப்படுத்தாமலிருந்த திறமைகளையும் குழு உறுப்பினர்களிடம் இருந்து வெளிக்கொணரும் வகையில் இவர்களது செயல்பாடு அமையும். இவர்களது அணுகுமுறையும், செயல்பாடுகளும் பிறரையும் சிறப்பாக செயல்பட தூண்டும் வகையில் இருக்கும்.
அதிகாரியாக செல்படுதல்
மற்றவர்கள் பாராட்டும் வகையில் திறமையுடன் செயல்படும் திறன், அதிகாரம் செலுத்தி பிறரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் திறன், ஒருமுறை முடிவெடுத்து செயல்படத் தொடங்கிவிட்டால் சற்றும் தயக்கம் காட்டாமல் முயற்சியிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடன் செயல்படுதல், எந்தவித பாகுபாடும் இல்லாமல், பய உணர்ச்சியுமில்லாமல் நடந்துகொள்ளுதல், செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு செயல்படுதல், வெற்றி என்றாலும் சரி, தோல்வி என்றாலும் சரி அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற தலைமைப் பண்புகள் மற்றவர்கள் மத்தியில் மதிப்பையும் மரியாதையையும் அளிக்கும்.
தொலைநோக்காளர்
நீண்ட நாட்களுக்கு பயணளிக்க வேண்டும் என்று தொலை நோக்குடன் செயல்படுபவரே தலைவர். எதிர்கால விளைவு களை ஓரளவு அனுமானிக்கும் ஆற்றல் கொண்டவராக இருத்தல், பெரிய விஷயங்களை நன்கு கவனித்து செயல்படுத்தும் அதே வேளையில் சின்ன விஷயமாக இருந்தாலும் அக்கறை செலுத்தி கவனத்துடன் செயல்படும் பாங்கு.
மேலாளர்:
அனைத்து மேலாளர்களும் சிறந்த தலைவர்கள் கிடையாது. ஆனால் அனைத்து தலைவர்களும் சிறந்த மேலாளர்களே ஆவர். மேலாண்மை என்பது ஒரு விஞ்ஞானம். மேலாண்மைத் திறன் என்பது ஒவ்வொரு தலைவரிடம் உள்ள பண்பாகும்.
மேலாண்மைத் திறன் இல்லாத தலைவர் பிறர் பார்வையில் ஏளனத்திற்குரியவராக காட்சி அளிப்பார். ஒரு சிறந்த தலைவர் பிற மேலாளர்களையும், உதவியாளர்களையும் துணையாகக் கொண்டு திறம்பட மேலாண்மை செய்தாலும் தனக்கென்று தனி மேலாண்மைத் திறன் கொண்டவராகவே இருப்பார்.
No comments:
Post a Comment