சிலரைப் பார்த்தாலே நமக்கு மிகவும் பிடித்து விடும். ரொம்ப நாள் அவரிடம் பழகியதாக ஒரு எண்ணம் தோன்றும். ஒரு சில நாட்களிலேயே ஒருவருடன் நெருங்கிய தோழமை ஏற்பட்டுவிடும். ஆனால் ஒரு சிலரிடம் ஆண்டாண்டாக பேசிப் பழகினாலும், அவர் என் நண்பர் என்று கூட நம் மனம் ஏற்றுக் கொள்ளாது.
இதற்குக் காரணம்? ஆம், ஒரு நபர் பழகுவதற்கு இனிமையானவரா? அவரது நடவடிக்கைகள் மற்றவருக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்துகிறதா? ஒருவருடன் நாம் நட்பு பாராட்ட வேண்டும் என்று மனதிற்குள் தோன்றுகிறதா என்பதைக் கொண்டே அவருடனான நட்பு அமைகிறது.
எப்போதும் சிடுசிடுவென மூஞ்சியை வைத்துக் கொண்டிருப்பவர்களை யாருக்கும் பிடிக்காது. கலகலப்பாக பேசிப் பழகுபவர்களையும், மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுபவர்களையும்தான் எல்லோருக்கும் பிடிக்கும்.
உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசுபவர்களை பொதுவாக யாருக்குமேப் பிடிக்காது. ஒரு நண்பர்கள் குழு உருவாகிறது என்றால், அங்கு அனைவருமே ஒரே மாதிரியான கருத்துடையவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்குள் ஏதோ ஒன்று ஒத்துப்போயிருக்கும். அந்த ஒத்துமைதான் அவர்களது நட்புக்கு அடிப்படையாக அமையும். அதுபோன்றதொரு நட்பு வட்டம் உங்களுக்கு இருக்குமாயின் நீங்களும் பழகுவதற்கு இனிமையானவராகத்தான் இருப்பீர்கள்.
கலகலவெனப் பேசுபவர்களுக்குத்தான் நண்பர்கள் கிடைப்பார்கள் என்றில்லை. அமைதியாக இருப்பவர்களுக்கும் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். கலகலவெனப் பேசுபவர்களின் பேச்சையும் யாராவது கேட்டுத்தானே ஆக வேண்டும். அப்படி உருவாகிறது இதுபோன்ற நட்பு.
அதேப்போல, நன்கு படிப்பவரும், அடி முட்டாளும் கூட நல்ல நண்பர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. படிக்கும் போது தன்னுடன் தனது நண்பனை வைத்துக் கொண்டு அவனது முன்னேற்றத்திற்கு உதவும் நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நட்புக்கு ஏழை, பணக்காரன் என்ற பேதமும், ஜாதியும் குறுக்கே வராது.
நான் பணக்காரன், நான் யாரிடமும் சென்று பேச மாட்டேன். அவர்களே வந்து பேச வேண்டும் என்று பந்தா செய்யும் யாரிடமும் நண்பர்கள் நெருங்க மாட்டார்கள். அப்படியே நெருங்குபவர்களும், அவனது பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளத்தான் நினைப்பார்களேத் தவிர, நல்ல நண்பர்களாக இருக்க எண்ண மாட்டார்கள்.
எப்போதும் நீ பெரியவனா, நான் பெரியவனா என்பது போன்ற சிந்தனை நட்பு வட்டாரத்திற்குள் வரவேக் கூடாது. ஒரு நண்பர், மற்றொருவருடன் சண்டை போட்டால், நாம் அங்கே சென்று சமாதானம் செய்து அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும். அதை விடுத்து சண்டையை பெரிதாக்கக் கூடாது.
சிலர் யாரையாவது தன் வசம் இழுக்க வேண்டும் என்று கருதி, மிகவும் கலகலப்பாக பேசுவது போல நடிப்பார்கள். இது நண்பர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேப்போல, ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் குறை சொல்வது நட்பு வட்டாரத்திற்கு இழுக்கு. மற்றவரைப் பற்றி என்னிடம் குறை கூறும் நீ, என்னைப் பற்றி மற்றவரிடம் குறை கூற மாட்டாயா என்ற எண்ணத்தை உருவாக்கிவிடும். எனவே எந்தக் குறையாக இருந்தாலும் நேருக்கு நேர் கூறுவது நல்ல நட்புக்கு அழகு.
நட்பு வட்டத்தில் ஆண், பெண் என பலரும் இருக்கலாம். சில வட்டத்தில் ஒரு ஆணும், பெண்ணும் காதலிக்கத் துவங்கியதும், நட்பு வட்டத்தில் இருந்து விலகிச் செல்வதும், காதலை நண்பர்களுக்கு தெரிவிக்காமல் இருப்பதும் நட்பிற்கு செய்யும் தவறாகும்.
நட்பு என்பது தினமும் சந்தித்து பேசி, சிரித்து மகிழ்வது மட்டுமல்ல.. எங்கிருந்தாலும், நமக்காக நமது நண்பன் இருக்கிறான் என்ற எண்ணத்தை உருவாக்குவதே. அந்த எண்ணம் உங்கள் மனதில் வந்துவிட்டால், பல ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் இருந்தாலும் உங்கள் நண்பன் உங்கள் நண்பனாகவ இருப்பான்.
உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால், பல ஆண்டுகால நட்புகளையும் நீங்கள் தவறாமல் புதுப்பித்துக் கொள்கிறீர்கள் என்றால், உங்கள் நண்பர்களுக்கு இடையே ஒரு வட்டம் இருக்குமானால் நீங்கள் பழகுவதற்கு இனிமையானவர்தான்.
No comments:
Post a Comment