"உன் நாட்டில் வரப்பு உயர்க!…
விளைநிலத்தின் வரப்பு உயர, நீர் உயரும்;
நீர் உயர, நெல் உயரும்;
நெல் உயர, குடி உயரும்;
குடி உயர, கோன் உயர்வான்."
– ஒளவையார்
இலக்கியத்தின் உயர்தர உவமைகளின் தன்மையே, அவற்றை நாம் வெவ்வெறு இடங்களில் பொருத்தி அழகு பார்க்கலாம், அறிவுரை நாடலாம் என்பதே. ஒளவை பிராட்டியின் வாழ்த்து, சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை அவரவர்களே எளிதாகத் திருத்தி, விசாலமாக, உயர்வுற, மதி நுட்பத்துடன் அமைக்க, வழித்துணையாக வகுத்துக் கொள்ளப் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. வழித்துணை நம்மை அழைத்துச் செல்ல, பாட்டையும் செவ்வனே அமையவேண்டும் அல்லவா.. கல்லும், முள்ளும் நிறைந்த பாலை எதற்கு? கண் குளிர நிழல் தரும் சோலை அல்லவா வேண்டும்! நல்ல கையேடுகள் கிடைக்குமானால், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பயணத்தை அவரவர்களே, ஆவலுடனும், துணிவுடனும் தொடங்க இயலும் என்று வரலாறு கூறுகிறது. அதன் பொருட்டு, ‘வாழ்க்கைத்தரம் என்ற வரப்பு’ என்ற சுயமுன்னேற்ற நூலை, நிலாச்சாரலில் ஒரு தொடராக எழுத முனைந்திருக்கிறேன். இது அறிமுகக்கட்டுரை. வாசகர்களிடமிருந்து வரவேற்பு இருக்குமானால், 24 கட்டுரைகள் என்பது தற்போதைய திட்டம்.
ஒளவை பிராட்டியின் உவமைகள் அடித்தளமாயின. மனித வாழ்வின் வரப்பு யாது? நாம் பிறந்து, வளரும் சமுதாய சூழ்நிலையை வரப்பு எனலாம். சில மனிதர்களின் வாழ்க்கை அமைந்த விதத்தைப் பார்ப்போம். அண்ணல் காந்தி பழங்காலத்துப் பண்புகளில் ஊறிப்போன இந்தியாவின் குறுநிலம் ஒன்றில் பிறந்து, பால்ய விவாகம் செய்து கொண்டவர். அந்த குறுகலான சமுதாயத்தில் புடவைக்கடை கணக்குப்பிள்ளையாகவே, அவர் தன் வாழ்நாளை கடத்தியிருக்கலாம். லட்சக்கணக்கான சராசரி மனிதர்கள் அப்படித்தான் காலத்தைக் கடத்தி, மடிந்து போனார்கள். அண்ணலோ உலகம் போற்றும் அளவுக்கு சமுதாயத்தைத் திருத்தி, நாட்டின் விடுதலைக்கு உழைத்து, இந்தியர்களின் மனோதிடத்தை பன்மடங்கு உயர்த்தி, என்றென்றும் புகழ் வானிலே திகழும் வரலாற்று மன்னராகி விட்டார். அவருடைய வாழ்வின் வரப்பு யாது?
அமெரிக்காவில் ஆப்ரஹாம் லிங்கன் என்ற ஜனாதிபதியின் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி சாலையை அவர் பிறந்த மண்ணில் மிகவும் நேர்த்தியாக அமைத்திருக்கிறார்கள். அதை தரிசிக்க சென்ற எனக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. அந்த அளவுக்குத் திகைத்துப்போய் நின்றேன். ஏனெனில், ஏதோ குக்கிராமத்தில் கல்விநெடி கூட அடிக்காத வறுமை குடும்பத்தில் பிறந்த அந்த மனிதர் தன் சொந்த முயற்சியில் படித்து முன்னேறினார்; வழக்கறிஞரானார்; நாட்டின் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்; சமூக விழிப்புணர்ச்சியை தக்கதொரு முறையில் கையாண்டு, தலைமுறை தலைமுறையாக கறுப்பு நிறத்தினர் அடிமையாகவே உழலும் அவலத்தை அமெரிக்காவில் அறவே ஒழித்தார். அதற்காக, எதிர்கொள்ள நேர்ந்த உள்நாட்டுப்போரையும் திறனுடனும், துணிவுடனும் நடத்திக் காட்டினார்; வாகை சூடினார். இன்று அமெரிக்காவின் ஜனாதிபதி அந்த இனத்தவர்.
தமிழ்நாட்டில் இவ்வாறு தோன்றி மறைந்த சான்றோர்கள் பலர். எண்ணில் அடங்கா. ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தள்ளம் என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற சொல்லுக்கிணங்க, தந்தையார் நடத்திய திண்ணைப்பள்ளிக்கூடத்தில்தான் ஆரம்பக்கல்வி. பல காரணங்களால் கல்லூரிப் படிப்பு அவருக்கு வாய்க்கவில்லை. தந்தையும் மறைந்தார். குமாஸ்தா வேலை. ஆனால், அவர் தமிழ் ஆசிரியராகவும், இதழாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், 55 நூல்களை எழுதிய இலக்கியகர்த்தாவாகவும் விளங்கினார். கல்லூரிவாசல் மிதியாத திரு.வி.க. அவர்களை, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் ஓய்வு பெற்றபின், அவரிடத்தில் பேராசிரியராக அமர்த்த நினைத்தார்கள். திரு.வி.க. அவர்களின் வரப்பு யாது?
தமிழ் சிறுகதை இலக்கியத்தின் சிற்பி என பெரும்பாலோரால் சுட்டிக்காட்டப்படும் ‘புதுமை பித்தன்’ என்ற சொ.விருத்தாசலம் அவர்கள் தனது குறுகிய கால வாழ்க்கை முழுதும் வறுமையில் உழன்றார். அவரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததா? இல்லையா? புதுமை பித்தன் அவர்களின் வரப்பு யாது?
இம்மாதிரி வரலாற்று நாயகர்கள் பலரை பட்டியலிட்டு, பாராட்டி எழுதலாம். நமது குறிக்கோள் அது அன்று. அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்து சுயமுன்னேற்றத்திற்கு, நமக்கு கிடைக்கும் பாடங்கள் யாவை?
சுருங்கச்சொல்லின், மேற்கூறியவர்களில், அண்ணல் காந்தி கருமமே கண்ணாயினார். ஆப்ரஹாம் லிங்கன் அடி மேல் அடி வைத்து தன் இலக்கை அடைந்தார். திரு.வி.க. அவர்கள் இடைவிடாமல் படித்து, எழுதி தன் இலக்கியப் பணியின் தரத்தை உயர்த்திக்கொண்டார்; அதை பகிர்ந்து கொண்டார். புதுமைபித்தன் வாடிப்போனாலும் மணம் வீசும் மலர். நால்வரும் சுயமுயற்சியினால் மட்டுமே அவரவருடைய வரப்புகளை உயர்த்திக்கொண்டனர். நால்வரும் வயது வந்த பின்னரும், இடைவிடாது படித்து பயன்பெறுவதை கடைபிடித்து வந்தனர்.
ஆக மொத்தம், அவரவர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முதலில் உயர்த்தப்படவேண்டியது கல்வி என்ற வரப்பு. ஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்கு கல்வியறிவின் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியரின்/பெற்றோரின் கடமை. பஞ்சாயத்திலிருந்து மத்திய அரசு வரை கல்விக்கடமைகள் இருந்தாலும், ஆசிரியரின்/பெற்றோரின் கடமைதான் பிரதானம். நம் யாவருக்கும், எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கும் அந்த கடமை இருக்கிறது. நாம் வாழும் கிராம/நகர பிராந்தியங்களில், நாமே பாடம் எடுக்கலாம். முதியோர் கல்வியை உரமிட்டு வளர்க்கலாம். சிறார்களுக்கு ஆர்வத்தைக்கூட்டலாம். விழிப்புணர்ச்சி பிரசாரம் செய்யலாம். அதற்கெல்லாம் மேலாக, எல்லாருமே திட்டமிட்டு கல்வி கற்பது தற்காலம் எளிது. ஆர்வமும், அன்றாட முயற்சியும், அதற்கான திட்டமும், அவரவர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள குளிகை மருந்து.
No comments:
Post a Comment